Thursday, January 26, 2017

போராட்டங்களும், காவல்துறையும், சித்திரவதைகளும், மனித உரிமைகளும் !

      மனிதர்களை சித்திரவதைக்குள்ளாக்குவதுவும், காணாமல் போகச் செய்வதுவும், சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்வதுவும் ஆட்சியில் நிலைத்திருக்க அவசியமானவை எனக் கருதுவதால் ஆட்சியிலிருக்கும் எல்லா அரசுகளுமே தமது ஆட்சியை எவர் தொந்தரவின்றியும் கொண்டு செல்வதற்காக இவற்றை பிரதானமாகப் பயன்படுத்துகின்றன. தாம் எதிர்க்கட்சியாக இருக்கும்போது இவற்றுக்கெதிராகக் குரல் கொடுக்கும் எல்லாக் கட்சிகளும், தாம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு, இவற்றையே தாமும் செய்கின்றன. கடந்த ஒவ்வொரு தசாப்த காலங்களிலும் மேற்சொன்ன நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டு வந்திருக்கிறதே ஒழிய குறையவில்லை.

       ஒருவர் ஒரு குற்றம் செய்தால், அதனை விசாரித்து தக்க தண்டனை வழங்க நீதிமன்றத்தாலேயே முடியும். ஆனால் அதற்கு முன்பாக அந்த அதிகாரத்தை, வேறு நபர்கள் தம் கரங்களில் எடுத்துக் கொள்வதாலேயே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளும் ஆரம்பிக்கின்றன. எனவே பொது மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையை, தமக்குப் பாதுகாப்பும் நியாயமும் தேடி நாடுவதற்குத் தயங்குகின்றனர் மக்கள். எனினும், ஆதரவு தேடி நாடிச் செல்ல காவல்துறையைத் தவிர வேறு இடங்களும் இல்லை. பொதுமக்களுக்கு காவல்துறை மூலம் கிடைக்கப்பெறும் மோசமான அனுபவங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கும் அனேக மக்கள் உள்ளனர். சிலர் மனித உரிமைகளைக் காக்கும் ஒருங்கமைப்புக்களை நாடுகின்றனர்.

 

    இங்கு மனித உரிமைகள் மீறப்படுமிடத்து, முறைப்பாடுகளைப் பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள், காவல்துறைக்கு எதிரான வழக்குகளுக்காக வாதாட துணிச்சலும் நம்பிக்கையுமுள்ள சட்டத்தரணிகளை தேடிக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள், முறையிடுபவரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பு குறித்த சிக்கல்கள் ஆகியனவே பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒருங்கமைப்புக்களுக்கும் பிரதானமான சிக்கல்களாக இதுவரை இருந்தன. தற்போது இவற்றோடு இன்னுமொரு சிக்கலும் புதிதாகச் சேர்ந்திருக்கிறது. அதாவது இவ்வளவு சிக்கல்களைத் தாண்டி ஒருவர் காவல்துறைக்கு எதிராக முறையிட்டு, அவ் வழக்கு விசாரணை, நீதிமன்றத்துக்கு வருமிடத்து, நீதிபதியால் அவ் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவது எனும் புதிய சிக்கல் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக எழுந்து நிற்கிறது.

         நான் இப்படிச் சொல்ல ஒரு வலுவான காரணம் இருக்கிறது. கடந்த காலங்களில் ஊழல்களையும், படுகொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் வன்முறைகளையும் செய்து மாட்டிக் கொண்ட அரசியல்வாதிகளுக்கெதிராக இருந்த அனேக வழக்குகள் நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகள் வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டார்கள். அத்தோடு சித்திரவதைகள் சம்பந்தமாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கெதிரான அனேக வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு, தொடர்ந்தும் குற்றவாளிகள் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 
    எனவே சித்திரவதைக்கு எதிராக எவ்வளவுதான் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அதிகாரத் தரப்பும், காவல்துறையும் தாம் பொதுமக்களுக்கு இழைக்கும் அநீதங்களைத் தாமாக உணரும் வரையில் சித்திரவதையை ஒழிக்கவே முடியாது. இந் நிலை தொடருமிடத்து, சித்திரவதை உள்ளிட்ட அனைத்து மனித உரிமை மீறல்களும் மென்மேலும் வளர்ச்சியடையும் என்பதோடு, மனித உரிமைத் திணைக்களங்களும் ஒருங்கமைப்புக்களும் தமது பெயரில் மட்டுமே மனித உரிமையை வைத்திருப்பதுவும் தொடரும். எனவே மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்ந்தும் சர்வ சாதாரணமாக நிகழும். துரதிஷ்டவசமான இந் நிலைக்கு நாளை நானும், நீங்களும் ஆளாகலாம். அந் நாளில் எமக்காகப் பேசவும் எவருமிருக்க மாட்டார்கள். 

- எம்.ரிஷான் ஷெரீப்

Monday, January 23, 2017

மிருக வதை

எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில், சிட்னியிலிருந்து கார்த்திக் எழுதிய 'மிருகவதை எனும் போலித்தனம்' எனும் கட்டுரைக்கான எனது பதில் கடிதம்.அன்பின் நண்பருக்கு,

'மிருக வதை எனும் போலித்தனம்' எனும் தலைப்பில் இன்று உங்கள் தளத்தில் வெளிவந்துள்ள கார்த்திக்கின் கட்டுரை பல நினைவுகளைத் தூண்டி விட்டது. நல்லதொரு பதிவு. அவரது பட்டியலில் இன்னும் சிலவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கனடா, அமெரிக்கா, நமீபியா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, ரஷ்யா, ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய ஒன்பது நாடுகளில் பிரசித்தமான கடல்வாழ் உயிரினங்களான சீல் பிராணிகளின் வேட்டை (Seal hunting) பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருவதும், விலங்குகளின் மீது திணிக்கப்படும் மிருக வதைகளில் மிகவும் முக்கியமானதும் ஆகும்.

மலையாள எழுத்தாளர் டி.டி.ராமகிருஷ்ணனின் ஆல்ஃபா நாவல், பேராசிரியர் குழுவொன்று ஒரு ஆராய்ச்சிக்காக ஆல்ஃபா எனும் தனித் தீவில் இருபத்தைந்து வருட காலம் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி சொல்கிறது. அப் பேராசிரியர் குழுவிலிருந்து உருவாகும் சந்ததிகளாக தீவில் எஞ்சிய நாற்பத்தெட்டு இளைஞர், யுவதிகள், சிறுவர், சிறுமிகள் தமது உணவுக்காக மீன்களை, பறவைகளை, விலங்குகளை வேட்டையாடி பச்சையாக உண்பதையும் ஒரு புனைவாக விபரித்திருப்பார் எழுத்தாளர். நம் ஆதி மனிதர்களும் அவ்வாறுதானே இருந்திருப்பர்? கற்காலத்தில் பசியின் தூண்டுதலில் சக விலங்கை வேட்டையாடிச் சுவைத்துப் பழகி, பசி நீங்கிய பின்னரும் வேட்டை என்பதே நடைமுறைப் பழக்கமாகி, பின்னர் அது தவிர்க்க முடியாததாக ஆகியிருக்கக் கூடும். அந்தப் பாரம்பரியத்தையே இந்த நூற்றாண்டிலும் கடல் சீல் பிராணிகளை, திமிங்கிலங்களை வேட்டையாடுவதன் மூலம் இன்றும் தொடர்கிறார்கள். அந்த வேட்டையை நியாயப்படுத்தும் சமூக நல ஆர்வலர்கள் இன்னும் இன்றும் இருப்பதுதான் ஆச்சரியமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கிறது.


அதைப் போலவே அண்மைக்காலமாக புதிதாக ஆனால் மிகவும் இலாபத்தைத் தரத்தக்க ஒரு வியாபாரமானது, இந் நூற்றாண்டில் தோன்றியிருக்கிறது. கர்ப்பிணிக் குதிரைகளின் குருதியை உறிஞ்சி (Pregnant horse blood trade) எடுத்து, ஐரோப்பிய மருந்துத் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்வது மிக இலாபம் தரும் தொழிலாக மாறியிருப்பதால், குதிரை வளம் கொண்ட அநேக நாடுகள் மறைமுகமாக இதனைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்காகவென்றே பண்ணைகளும் இருக்கின்றன.

ஆசிய நாடுகளில்தான் விவசாயத்துக்கென விலங்குகளை வளர்ப்பதுவும், பயிற்றுவிப்பதுவும் இன்னும் நடைமுறையிலிருக்கிறது. ஏனைய நாடுகளில் முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் இறைச்சிக்காகவும், பொழுதுபோக்குக்காகவுமே அவை வளர்க்கப்படுகின்றன. மத்திய கிழக்கு நாடுகளுக்கு வித விதமான செல்லப்பிராணிகள் இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. பல நிற வண்டுகள் முதற்கொண்டு கரடி வடிவிலான நாய்கள், கைக்கடக்கமான பூனைகள், சிறகு வெட்டப்பட்ட பேசும் கிளிகள், கழுகுகள் எனப் பலதும் அதில் அடங்கியிருக்கின்றன.

இங்கு இணைக்கப்பட்டுள்ள பனிக்கரடி வடிவத்தையொத்த நாய்க்குட்டி மூன்று மாத வயதுடையது. கார்த்திக் சொன்னதுபோல designer dog பிரிவில் இதனை உள்ளடக்கலாம். இதன் மயிர்கள் சுடப்பட்டு, தோலினூடாக வர்ணப் பூச்சுக்களையேற்றி பனிக்கரடியாக்கியிருக்கிறார்கள். வளர்ச்சிக்காக வேண்டி அதிக ஊட்டச்சத்துக்களும், ஊசி மருந்துகளும் ஊட்டப்படுகின்றன. ஒரு நாள் முழுவதுமாயினும், உடற்கழிவுகளை அகற்றாமலிருக்கப் பயிற்றுவிக்கப்படுகின்றன. பூனைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், அதன் எலும்புகளை முடங்கச் செய்யவும் சிறிய போத்தல்களில் போட்டு அடைத்து வைப்பதும் நடக்கிறது. சிட்டுக் குருவிகள் முதற்கொண்டு பல வகைப் பறவைகளையும் சிறகுகளை வெட்டி, கூட்டை விட்டு வெளியே விற்பனைக்காகக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறான நாய்களையும், பூனைகளையும், ஏனைய விலங்குகளையும் ஒரு விளையாட்டுப் பொருள் போல வாங்கிச் செல்லும் அரேபியர்களும், ஏனையவர்களும், பின்னர் அவற்றைப் பராமரிக்க இயலாமல் தெருவில் எறிந்து விடுவதுவும் இங்கு சர்வ சாதாரணமாக நடக்கிறது. திடீரென தெருவில் விடப்படும் சடை வளர்த்த நாய்களும், பூனைகளும் தமக்கான உணவைத் தேட இயலாமல், தெருவில் நடமாடத் தெரியாமல், ஏனைய வலிய விலங்குகளினதோ அல்லது வாகனங்களினதோ தாக்குதல்களுக்கு இலக்காகி வீதிகளில் மரித்துக் கிடக்கும். சுத்திகரிப்பாளர்கள் தெருவை, இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விடுவார்கள். அந்த நாளும், அந்தப் பிராணியின் வாழ்க்கையும் அத்தோடு முடிந்து விடும்.

ஆனால், முடியாத ஒன்று இருக்கிறது. மேற்படி விலங்குகளை, பறவைகளை கொடூரமாகப் பயிற்றுவிக்கும் வேலைகளில், சொற்ப சம்பளங்களோடு ஈடுபடுத்தப்படுவது நமது இலங்கை, இந்திய, நேபாள, பங்களாதேஷ் நாட்டு இளைஞர்கள். வருடக்கணக்காக இதையே தொழிலாகச் செய்யும்போது அவர்களது சக உயிர்கள் மீதான கருணையும், மனிதாபிமானமும் மரித்துப் போகத்தான் செய்யும். அவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்பும்போது அம் முரட்டுத்தனத்தை, அக் காருண்யமற்ற நடத்தைகளை அவர்கள் தம்மோடு தமது கிராமங்களுக்குக் காவி வருவது ஆபத்தானது. சாதாரணமாக விலங்குகள், பறவைகளைக் காணும்போது கூட அவர்கள் அதற்கு ஏதாவது தீங்கினைச் செய்து விடுகிறார்கள். அவர்களைப் பற்றிப் பேசுவதற்கோ,  அவ்வாறானவர்களின் மனப் பிறழ்வுகளை மாற்றியமைக்கும் சிகிச்சையளிப்பதற்கோ எந்த விலங்கு நல அமைப்புக்களும், சமூக நல ஆர்வலர்களும்  முன்வருவதில்லை என்பது இன்னும் மிக மிக ஆபத்தானது.

- எம்.ரிஷான் ஷெரீப்

(இக் கடிதத்தை எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்திலும் வாசிக்கலாம்.)

Sunday, January 8, 2017

'அடைக்கலப் பாம்புகள்' - சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

அன்பின் நண்பர்களுக்கு,

இந்த வருடத்தில், இந்த வாரம் சென்னை, சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளிவந்திருக்கும் எனது மற்றுமொரு புத்தகம் ‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு. 

பிரபல ‘வம்சி’ பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இத் தொகுப்பில், விருதுகள், பரிசுகளை வென்ற சிறுகதைகள் மற்றும் புதிய சிறுகதைகளுமாக எனது 25 சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இதில் அடங்கியுள்ள சிறுகதைகளைக் குறித்து, நூலின் பின்னட்டை வாசகங்கள் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.

இத் தொகுப்பையும், சென்னையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நடைபெறவிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில், 'வம்சி' பதிப்பக அரங்குகளில் (எண்:293,294) பெற்றுக் கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
08.01.2017

Saturday, January 7, 2017

எனது 'இறுதி மணித்தியாலம்'

அன்பின் நண்பர்களுக்கு,

எனது இந்த வருடத்தின் முதல் புத்தகமாக, இந்தியாவின் சிறந்த பதிப்பகங்களுள் ஒன்றான 'வம்சி' பதிப்பக வெளியீடாக 'இறுதி மணித்தியாலம்' எனும் மொழிபெயர்ப்புத் தொகுப்பு இந்த வாரம் வெளிவருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் சிங்கள மொழியில் சிறுபான்மை சமூகங்களுக்காக எழுதி வரும் சிறந்த சிங்களக் கவிஞர்கள், கவிதாயினிகளது முக்கியமான கவிதைகள் பலவும் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. தொகுப்பிற்கு காத்திரமானதோர் முன்னுரையை மதிப்பிற்கும், நேசத்திற்குமுரிய எழுத்தாளர் கருணாகரன் எழுதியிருக்கிறார். 

இத் தொகுப்பை சென்னையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில், 'வம்சி' பதிப்பக அரங்குகளில் (எண்:293,294) பெற்றுக் கொள்ளலாம். 

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப் 
07.01.2017