Tuesday, June 21, 2022

இலங்கையில் மக்கள் எழுச்சிப் போராட்டம்; வெற்றிகளும், வரவிருக்கும் ஆபத்துகளும் ! - எம். ரிஷான் ஷெரீப்

 

  இலங்கையானது தற்போது வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெறும் நிதியுதவிகளிலேயே தங்கியிருக்கிறது. பொருளாதார அபிவிருத்தி முழுமையாக அற்றுப் போய், பஞ்சமும் பட்டினியும் கோலோச்சியவாறு திவாலாகியுள்ள நாட்டில், அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்கு என்ன செய்வது என்பது குறித்து மக்களால் யோசித்துக் கூடப் பார்க்க முடியாதுள்ளது. அடுத்த நான்கைந்து மாதங்களுக்கு இந்த நெருக்கடி நிலைமை நீடிக்கும் எனவும், நாட்டில் பஞ்சம் இன்னும் தீவிரமடையும் என்றும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

    ஏற்கெனவே மின்சாரத் தடை காரணமாகவும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் பல தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள், போக்குவரத்து ஸ்தாபனங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கானோர் தமது தொழில்களை இழந்திருக்கிறார்கள். பட்டினியாலும், மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லாமலும் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். பொதுமக்கள் இவ்வாறு எல்லாப் புறங்களிலிருந்தும் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்காக அரசாங்கமானது பொருட்களின் விலைகளை அதிகரிப்பதையும், அதிகபட்ச வரிகளை விதிப்பதையும், கட்டணங்களை அதிகமாக அறவிடுவதையும் தொடர்ச்சியாக செய்து கொண்டிருப்பதானது மேலும் மேலும் அரசுக்கெதிராக மக்களைப் போராடத் தூண்டிக் கொண்டேயிருக்கிறது.

        இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்தியாவை அண்மித்துள்ள பிரதேசங்களில் வாழ்ந்து வரும் பொதுமக்கள் பலரும் இந்தியாவுக்குத் தஞ்சம் கோரி புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள். சிலர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறார்கள். இவ்வாறு தைரியமாகப் புறப்பட்டுச் செல்லும் ஒரு சிலரால் மாத்திரமே இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் பத்திரமாகப் போய்ச் சேர முடிகிறது. பலரும் இடைவழியில் இலங்கை மற்றும் வெளிநாட்டுக் காவல்துறைகளால் கைது செய்யப்படுகிறார்கள். தாய்நாட்டில் உயிர் வாழ வேறு வழியற்ற நிலைமையில் இவ்வாறு உயிராபத்து மிக்க பயணத்தைத் தொடரத் துணிபவர்களைக் குற்றம் கூற முடியாது.

 

   
கடந்த வாரமும் கூட இலங்கையில் எரிபொருட்களினதும், உணவுப் பொருட்களினதும் விலைவாசிகள் கணிசமான அளவு அதிகரித்திருக்கின்றன. வரிசைகளில் காத்திருந்த மக்கள் அவ்விடங்களிலேயே மரணித்து விழுந்திருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் மேலும் மேலும் விலைவாசிகள், வரிகள் மற்றும் கட்டணங்கள் அதிகரிப்படுவதற்கு எதிராகத்தான் நாடு முழுவதும் பொதுமக்கள் ஒன்றிணைந்து தெருவிலிறங்கி ஆர்ப்பாட்டங்களைச் செய்து வருகிறார்கள். ரம்புக்கனை எனும் பிரதேசத்தில் அவ்வாறு நடைபெற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது களமிறங்கிய காவல்துறை அவர்களைச் சுட்டுக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.

    இலங்கையில் அரசாங்கமும், அதிகார வர்க்கமும் மிகக் கொடூரமாகவும், குரூரமாகவும் மக்களை இவ்வாறு வேட்டையாடிக் கொண்டிருப்பதுதான் தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது. அரச வன்முறை எனப்படுவது இவ்வாறான பேரழிவு ஆயுதங்களால் நடத்தப்படுவது மாத்திரமல்ல. நாட்டில் பண வீக்கத்தை ஏற்படுத்தி, இலங்கை ரூபாயின் பெறுமதி அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருத்தல், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டேயிருத்தல், பட்டினியாலும், மருந்துகளின்மையாலும் மக்கள் மரணிப்பதற்கு எதிராக எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமலிருத்தல், தினந்தோறும் பல மணித்தியாலங்கள் மின்சாரத்தைத் துண்டித்தல், சமையல் எரிவாயு, டீசல், பெற்றோல் போன்றவற்றின் தட்டுப்பாட்டை இல்லாதொழிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமலிருத்தல் போன்ற குரூரமான, ஆயுதங்களற்ற வன்முறைகளையும் அரசாங்கமும், அதிகார வர்க்கமும் மக்கள் மீது பிரயோகிக்கலாம் என்பதற்கு தற்போது இலங்கை ஒரு அத்தாட்சியாகவிருக்கிறது.

        அவ்வாறே, ஆயுதங்களாலான வன்முறைகளும் இலங்கையில் பகிரங்கமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. கொழும்பின் தெருக்கள் அனைத்திலும், குறிப்பாக அலரி மாளிகை, பாராளுமன்றம், ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றைச் சூழவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவசர காலச் சட்டம் விதிக்கப்பட்டு, நாடு முழுவதிலுமிருந்தும் அதிகளவான காவல்துறையினரும், அதிரடிப் படையினரும் பேரூந்துகளில் அழைத்து வரப்பட்டு கொழும்பு நகரில் குவிக்கப்பட்டுள்ளதோடு, சாதாரணமாக மக்கள் எளிதில் கடந்து செல்ல முடியாத அளவு உயரமான காவல் அரண்கள் தெருக்களின் மத்தியில் எழுந்துள்ளன.

 

   
எனவே இலங்கையர்கள் மாத்திரமல்லாமல், இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்திருக்கும் வெளிநாட்டவர்களும் கூட தமது பணிநிமித்தமாக தெருவில் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. எவரையும் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லும் அனுமதி வழங்கப்பட்டுள்ள காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் ஆயுதந் தாங்கிய இராணுவ வாகனங்களோடு தெருக்களில் வலம் வருகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்ட பல வெளிநாடுகள் இலங்கைக்கு பயணம் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளதோடு, பல வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் இந்தக் காலகட்டத்தில் இலங்கையிலுள்ள தமது பிரஜைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விதிமுறைகளை விதித்திருக்கின்றன.

    பொதுமக்களுக்கு எதிராக இவ்வளவு உயிராபத்துகள் உள்ள போதிலும், ஏற்கெனவே நாடு பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் கடும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் காரணத்தால்தான் அதற்குக் காரணமான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவையும், அரசியல்வாதிகளையும் பதவி விலகுமாறு கோரி பொதுமக்கள் கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையிலும், அலரி மாளிகைக்கு முன்பும் நாடு முழுவதும் ஒன்றிணைந்து இரவு பகலாக மாதக் கணக்கில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்கள் எழுச்சி போராட்டத்தின் காரணமாக இலங்கை அரசியலில் தற்போது சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. எரிபொருள், உணவு, மருந்து மற்றும் டாலர் தட்டுப்பாடுகளுக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்கத் தேவையான பொருத்தமான தீர்வு இன்னும் கண்டறியப்படவில்லை. என்றாலும், மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் காரணமாக, நாட்டை சரியான பாதையில் திருப்பி நீண்ட கால தீர்வுகளைக் கண்டறிய, மக்களுக்கு அதிகாரம் அளிக்கக் கூடிய விதத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

        இந்த மக்கள் எழுச்சி போராட்டத்தின் மூலம், இலங்கை மக்கள், கடைசியில் தமது உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் பாரபட்சமின்றி ஒன்றிணைவதற்கான தைரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அரசியல் ரீதியாக சர்வ அதிகாரங்களும் படைத்த ஆட்சியொன்றை, ஒரு சில தினங்களிலேயே தம் முன்னே மண்டியிடச் செய்யும் அளவுக்கு பொதுமக்களின் அந்த ஒற்றுமை பலமடைந்திருக்கிறது. பொதுமக்களின் அந்த சாத்வீகமான போராட்டம் ஆனது, மூன்று தினங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த அமைச்சரவையையும் பதவி விலகச் செய்ய காரணமாக இருந்ததோடு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது பதவியை ராஜினாமா செய்வதற்குக் காரணமாகவும் அமைந்தது. தேர்தல்களின் போதும், மக்களின் ஆர்ப்பாட்டங்களின் போதும் உயிரிழப்புகள் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு நாட்டில் இது முக்கியமானதும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததுமான வெற்றிகளாகும்.


    பொதுமக்கள் போராட்டத்தின் அந்த வெற்றிகளைக் காணச் சகிக்காமல் அவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டார் மஹிந்த ராஜபக்ஷ. அந்த அண்மைய வன்முறைகளுக்குக் காரணமான மஹிந்த ராஜபக்‌ஷ மீதும், அவரது உத்தரவுகளை நிறைவேற்றிய அரசியல்வாதிகள் மீதும், காடையர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதனால், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்‌ஷவின் ராஜினாமா இலங்கை மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் ஒரு முக்கியமான வெற்றியென்றால், அவர் மீதான இந்தத் தடை மற்றுமொரு குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

    சீரற்ற காலநிலையில், உக்கிரமான வெயில் மற்றும் கடும் மழைக்கு மத்தியிலும் ஆர்ப்பாட்டக்காரர்களின் ‘கோட்டா கோ (Gota Go)’ கிராமத்தில் இதுவரை கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட பொதுமக்களினதும், ஊடகவியலாளர்களினதும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு அதற்கான நீதி கேட்கும் போராட்டமும் வலுத்து வருகிறது. வரலாற்றில் முதற்தடவையாக தமிழர்களோடு, சிங்களவர்களும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையில் கடந்த மே மாதம் பதினெட்டாம் திகதி நடத்தியிருக்கிறார்கள்.

    வழமையாக இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை அரசாங்கம் கடுமையாக எதிர்க்கும். அவற்றை நடத்துபவர்களைக் கைது செய்து சிறையிலடைக்கும். இப்போது கொழும்பில் ஜனாதிபதி செயலகம் முன்பே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும்போது அரசாங்கத்தால் எதுவுமே செய்ய இயலாதுள்ளது. இதுவும் இந்தப் போராட்டத்தின் மூலம் மக்கள் அடைந்துள்ள வெற்றிகளுள் குறிப்பிடத்தக்க ஒன்று.


    இவையனைத்தும் இலங்கை அரசியலில் பொதுமக்களின் எழுச்சி ஏற்படுத்தியுள்ள மிகப் பிரதானமான மாற்றங்களாகும். இலங்கை சுதந்திரம் பெற்றதற்குப் பிறகான அரசியலில், அரசியல் கட்சிகள் மக்கள் வாக்குகளோடு பாராளுமன்றத்தின் ஊடாக அதிகாரத்திற்கு வந்த போதிலும், நாட்டில் ஜனநாயக அரசியல் செயற்படவேயில்லை. அரச மற்றும் எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள் தமது சகாக்களோடு சேர்ந்து நாட்டின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதுதான் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    அவ்வாறே சிங்கள தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட இனவாத அரசியலானது, சிறுபான்மையினரை பாகுபடுத்தி அவர்களைத் தரம் குறைந்த குடிமக்களாக ஆக்கியுள்ளது. பல தசாப்தங்களாக தமிழர்கள் தமது உரிமைகளைக் கோரி ஜனநாயக ரீதியிலும், ஆயுதங்களைக் கொண்டும் நடத்திய போராட்டங்கள் குரூரமாக நசுக்கப்பட்டதோடு, அவர்களது பிரச்சினைகளும் இன்னும் தீர்க்கப்படவில்லை. இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் இருந்ததை விடவும், இன்று சிறுபான்மையினரின் உரிமைகள் மிக மோசமான முறையில் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்கள் தமது ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடிக் கொண்டிருந்த போதிலும் சிங்கள தேசியவாத அரசியலும், அதன் உதவியாளர்களும் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகள் பற்றி சிறிதளவும் சிந்திக்கவேயில்லை.

    தற்போதைய நெருக்கடி நிலைமையானது பொதுமக்களிடையே இவை தொடர்பான சிந்தனைகளைத் தோற்றுவித்துள்ளதோடு, தற்போது மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பொதுமக்களும் சகல இனத்தவர்களையும் ஒன்றுபோலவே கருதக் கூடிய விதத்தில் இலங்கையில் புதிய அரசியல் கலாசாரமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று தமது போராட்டங்களின் மூலமாக தைரியமாக கோரிக்கைகளை எழுப்பி வருகிறார்கள்.

 

   
சர்வாதிகாரம் மீதும், இலங்கையைத் தீவிரவாதத்திலிருந்தும், யுத்தங்களிலிருந்தும் மீட்டதாக மார் தட்டிக் கொண்டிருக்கும் ராஜபக்‌ஷேக்கள் எனும் அரசியல் குடும்பத்தின் மீதும் பொதுமக்களுக்கு இருந்த பேரச்சத்தை கடந்த பல மாதங்களாக இலங்கையில் உக்கிரமடைந்துள்ள நிதி நெருக்கடியானது முழுவதுமாக நீக்கியிருக்கிறது. பயம் நீங்கிய பொதுமக்கள் புதிய அரசியல் உத்வேகத்தையும், வலிமையையும் தற்போது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாகத் திரண்டெழுந்து பலம் வாய்ந்த அரசாங்கத்துக்கும், அதிகாரத்துக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் அத்திவாரத்தை அசைத்துப் பார்க்க அவர்களால் முடிந்திருக்கிறது.

         இவ்வாறாக அரசியல்ரீதியாக சுறுசுறுப்பாகவும், விழுப்புணர்வோடுமுள்ள குடிமக்களையே ஜனநாயகத்தின் நிஜ ஆதாரமாகவும், உரிமையாளர்களாவும் குறிப்பிடலாம். உண்மையில் தமது வாக்குகள் மூலம் பாராளுமன்றத்துக்கு ஆட்சியாளர்களை அனுப்பும் அவர்கள் வெறும் வாக்காளர்கள் மாத்திரமல்ல. வாக்களிப்பதோடு, நாட்டின் அரசியலில் பங்குகொள்ளும் உரிமையையும் அவர்கள் இவ்வாறாகக் கோருகிறார்கள். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் தமது கடமையைச் செய்யத் தவறும்போது தைரியமாகவும், நேரடியாகவும் அதனைத் தட்டிக் கேட்டு, பதவி விலகுமாறு அவர்களைக் கோருகிறார்கள்.

        பொதுமக்களின் கோரிக்கைகள் வலுத்ததைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ள போதிலும், தற்போது இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், இலங்கையின் நிலைமையில் பெரும் மாற்றம் ஏற்படக் கூடும் என்று கருத முடியாது. ஏற்கெனவே பிரதமராக ஐந்து தடவைகள் பதவி வகித்துத் தோற்ற அனுபவத்தைக் கொண்டுள்ள ரணிலின் இயலாமையினால், நாட்டில் பல பிரச்சினைகள் உக்கிரமானதை கடந்த கால அரசியல் வரலாறு எடுத்துக் கூறுகிறது. ராஜபக்‌ஷேக்களின் நெருங்கிய நண்பரான அவர், ராஜபக்‌ஷேக்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளான வன்முறைகளுக்குத் தூண்டியமை, ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள், போர்க் குற்றங்கள் போன்றவை மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதிலிருந்து ராஜபக்‌ஷேக்களைப் பாதுகாக்கவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவால் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலைமை மிகவும் பாரதூரமானது.

 

   
கடந்த வாரங்களில் மஹிந்த ராஜபக்‌ஷவால் உசுப்பி விடப்பட்ட காடையர்கள் கூட்டம் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்களை மிகக் கொடூரமாகத் தாக்கியது. அதனால், உந்தப்பட்ட பொதுமக்கள் ராஜபக்‌ஷேக்களின் பூர்வீக இல்லம், அவர்களது பெற்றோரின் கல்லறை ஆகியவை உட்பட ஏனைய ஊழல் அரசியல்வாதிகளினதும் வீடுகளையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கினார்கள். சிலவற்றுக்குத் தீ வைத்தார்கள். இவ்வாறாக அரசியல்வாதிகளின் சொத்துகளுக்கு ஏற்படுத்திய சேதங்கள் மூலமாக, ‘பொதுமக்கள் கொந்தளித்தால் என்னவாகும்?’ என்பதை அரசுக்குத் தெளிவுபடுத்தினார்கள். பொதுமக்கள் மூலமாக இவ்வளவு பின்னடைவுகளை அரசாங்கம் சந்தித்திருக்கும் நிலையிலும் அது இப்போதுவரை மௌனமாகவே இருப்பதுதான் யோசிக்க வேண்டிய விடயமாக இருக்கிறது.

        கடத்தல்களுக்கும், கொலைகளுக்கும், சித்திரவதைகளுக்கும் பெயர் போன ராஜபக்‌ஷேக்கள், பொதுமக்களால் தமது பூர்வீக சொத்துகளுக்கும், பெற்றோரின் கல்லறைகளுக்கும் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் மற்றும் தம்மால் வெளியே இறங்கி நடமாட முடியாமை போன்ற அவமானங்களைப் பொறுத்துக் கொண்டு வெறுமனே இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு ராஜ குடும்பமாக இலங்கையில் தமது ஆதிக்கத்தையும், சர்வாதிகாரத்தையும் நிலைநாட்டிய அவர்கள் பதவி விலக நேரும்போது அதற்குக் காரணமான பொதுமக்களைப் பழிவாங்காமல் வெறுமனே பதவி விலகிச் செல்வார்கள் என்றும் கருத முடியாது. அவர்கள் தமது கேவலமான நிலைக்குக் காரணமான பொதுமக்களுக்கு என்னவெல்லாம் தீங்கு செய்ய வேண்டும் என்ற திட்டங்களை இப்போதும் ஒளிந்திருந்தவாறு தீட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். அந்தத் திட்டங்களின் மூலம் நாட்டை மேலும் அதல பாதாளத்தில் வேறு எவருமே மீட்டெடுக்க முடியாத நிலைமைக்கு அவர்கள் தள்ளுவார்கள்.

    அதுவரையிலான ராஜபக்‌ஷேக்களின் இந்தக் கள்ள மௌனமானது, வெடித்துக் கிளம்பக் காத்திருக்கும் எரிமலைக்கு ஒப்பானது. அது எந்தளவுதான் உக்கிரமானதாக பொதுமக்களுக்கு ஆபத்துகளை விளைவித்தாலும் கூட, குரூரத்தையும், வன்முறைகளையும் கொண்டு சர்வாதிகார ஆட்சியை நிலை நாட்டிக் கொண்டிருக்கும் ராஜபக்‌ஷ குடும்பம் மொத்தமாகப் பதவி விலகி, நாட்டில் அவர்கள் கொள்ளையடித்த மக்களின் பணத்தைத் திருப்பிச் செலுத்தும்வரை பொதுமக்கள் போராடிக் கொண்டேதான் இருப்பார்கள். நாட்டின் எதிர்கால சந்ததிகளின் நலனுக்காக தாம் போராடிக் கொண்டிருக்கும் அந்தப் போராட்டம் நிச்சயமாக ஒருநாள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையே பஞ்சத்துக்கும், பட்டினிக்கும் மத்தியிலும் பொதுமக்களைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறது.

தொடர்புக்கு – mrishansh@gmail.com

நன்றி - உயிர்மை மாத இதழ் - ஜூன், 2022

 





Monday, June 6, 2022

தொடரும் இலங்கையின் நெருக்கடி நிலைமை; கண்காணிக்கப்பட வேண்டிய வெளிநாட்டு உதவிகள் - எம். ரிஷான் ஷெரீப்

 

    இலங்கையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. எரிபொருட்களுக்காகவும், உணவுகளுக்காகவும், மருந்துகளுக்காகவும் பொதுமக்கள் நாளாந்தம் நீண்ட வரிசைகளில் பல மணித்தியாலங்களாகக் காத்திருக்க வேண்டிய நிலைமை தொடர்ந்தும் நீடித்திருக்கிறது.

    சிறிய தனித்த தீவான இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த அதியுச்ச பொருளாதார நெருக்கடி, அதன் இயல்பு நிலையில் பெரும் தாக்கத்தைச் செலுத்தப் போவதை முன்பே கணித்த பொருளாதார வல்லுநர்கள் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அப்போது அரசுக்கு ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தார்கள். என்றபோதிலும், அரசியல் தலைமைகள் அந்த ஆலோசனைகளைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தன. அதன் பலனாக, இன்று பெருங்கடலில் பொருளாதார நெருக்கடி எனும் புயலில் சிக்கி ஓட்டை விழுந்த படகொன்றாக இலங்கை தத்தளித்து மூழ்கிக் கொண்டிருக்கிறது.

    இந் நிலையில் ஒரு ஒழுங்கான பொருளாதாரக் கொள்கை வரைவை முன்வைக்காத வரை இலங்கைக்கு தற்போதைக்கு நிதியுதவி எதுவும் வழங்கும் எண்ணம் இல்லையென்று உலக வங்கி தெரிவித்திருக்கிறது. அதனால் வாரக் கணக்கில் நிதியமைச்சர் ஒருவர் இல்லாமலிருந்த இலங்கையில் அந்தக் குறையை நீக்க நிதியமைச்சர் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டிருக்கிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க. பதவியேற்றதுமே அவர், நாட்டின் செலவுகளுக்கு மேலும் ஒரு டிரில்லியன் ரூபாய்கள் பணத்தை அச்சிட வேண்டும் என்றும் எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பண வீக்கமானது நாற்பது சதவீதத்தைத் தாண்டும் என்றும் வாழ்வின் மிக மோசமான காலகட்டத்தை எதிர்நோக்க மக்கள் தயாராக வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, நாட்டில் வறுமை நிலையும், வேலை வாய்ப்பின்மையும் மேலும் அதிகரிக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மக்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.


  இலங்கையில் விவசாயத் துறையும் உரத் தட்டுப்பாட்டால் பாரிய நெருக்கடியைச் சந்தித்திருப்பதன் காரணத்தால் கடந்த மாதங்களிலும், இந்த மாதத்திலும் எவ்வித விதைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே, வரும் மாதங்களில் மக்கள் அனைவரும் பாரிய உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்க வேண்டி வரும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்திருக்கிறார். நாட்டின் நெருக்கடிக்குத் தீர்வு கூற வேண்டிய, முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் இவர்கள் அனைவரும் இவ்வாறு ஒவ்வொரு காரணத்தைக் கூறி, மக்களைக் கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த விடயங்கள் அனைத்தும் மக்களைப் பேரச்சத்தில் தள்ளியுள்ளன.

    முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியிலிருந்த போது அவர் எவ்வாறு பண வீக்கத்துக்குக் காரணமாக, தொடர்ச்சியாக பணத்தை அச்சிட்டுக் கொண்டிருந்தாரோ அதே வழியில்தான் தற்போதைய பிரதமரும், நிதியமைச்சருமான ரணிலின் பாதையும் இருக்கிறது. எனவே, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பிறகு பொருளாதாரத்திலும், தமது வாழ்க்கையிலும் ஏதேனும் முன்னேற்றம் உருவாகலாம் என்று மக்களிடம் காணப்பட்ட சிறிய எதிர்பார்ப்பும் கூட முழுவதுமாக தற்போது பொய்த்துப் போயுள்ளது.

    இவ்வாறான நெருக்கடி நிலைமையில், இந்திய மக்களால் சேகரிக்கப்பட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அரிசி, பால்மா, மருந்துகள் உள்ளிட்ட 2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் இந்த வாரம் கொழும்பை வந்தடைந்தன. இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, மக்களிடம் பகிர்ந்தளிக்குமாறு கோரி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் அவற்றை மொத்தமாகக் கையளித்துள்ளார். ஏற்கெனவே 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான பொருளாதார உதவி உள்ளிட்ட நிறைய உதவிகளை இந்தியா செய்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ஜப்பான் அரசாங்கமும் உலக உணவுத் திட்டத்தின் ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. தற்போதைய நெருக்கடி நிலைமையில் இந்தியாவினதும், ஜப்பானினதும் இந்த உதவிகள் மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்திருக்கின்றன.



    என்றாலும், இந்த உதவிகள் உரிய விதத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் போய்ச் சேருகிறதா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். ஏனெனில், இவ்வாறாக வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் பெரும்பாலான பொதுமக்களுக்குப் போய்ச் சேருவதில்லை. சுனாமி, கொரோனா சமயங்களிலும் பல்வேறு நாடுகளிலிருந்தும் வழங்கப்பட்ட நிதியுதவிகளும், பொருளுதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்பதை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. வழமையாக அமைச்சர்களுக்கும், உயரதிகாரிகளுக்கும் நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் இவ்வாறான உதவிகளில் ஒரு சிலவற்றைப் பகிர்ந்தளித்து, புகைப்படங்களெடுத்து ஊடகங்களுக்குக் கொடுத்து மொத்த உதவிகளையும் பகிர்ந்தளித்து விட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தந்த நாடுகளுக்கு அறிவிக்கிறார்கள். ஆனால், உண்மையில் உதவி தேவைப்படும் எளிய மக்களுக்கு அந்த உதவிகள் போய்ச் சேருவதில்லை.

    ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் இந்திய உதவித் திட்டம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 11000 மெட்ரிக் டன் அரிசிக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இந்த மாதம் நடுப்பகுதியில் பொதுமக்கள் அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு தேடுதல்களை நடத்திய போது பல நூற்றுக்கணக்கான அரிசி மூட்டைகள், உர மூட்டைகள், எரிவாயு சிலிண்டர்கள் போன்றவை அந்த வீடுகளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

    அடுத்த முக்கியமான விடயம், வழமையாக கொழும்பில் மாத்திரம் பகிர்ந்தளிக்கப்படும் இவ்வாறான உதவிகளைப் பகிர்ந்தளிக்கும் விவகாரத்தில் இலங்கையிலுள்ள அனைத்துப் பிரதேசங்களையும் அரசாங்கம் கவனத்தில் கொள்வது அவசியம். தலைநகரமான கொழும்பிலிருந்து மிகத் தொலைவிலிருக்கும் வறிய மற்றும் கஷ்டப் பிரதேசங்கள் நெடுங்காலமாக கவனத்திலேயே கொள்ளப்படாத பல பிரச்சினைகளாலும், நெருக்கடிகளாலும் சூழப்பட்டிருக்கின்றன. அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலைமையில், அவற்றில் காணப்படும் பஞ்சமும், பட்டினியும், மருந்துத் தட்டுப்பாடுகளும் பல வருடங்களாக நீடித்திருக்கின்றன. கணக்கில் வராத அளவுக்கு மந்தபோஷணம், பட்டினி மற்றும் மருந்தின்மையால் ஏற்படும் மரணங்களும் அப் பகுதிகளில் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

    எனவே உதவிகள் தேவைப்படும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்கப்படாமல் தாம் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் அனைத்தும் பகிரப்படுகின்றனவா என்பதை, உதவியளித்த நாடுகள் கண்காணிப்பதில் தீவிரமாக இருக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் தமக்கு ஏதேனும் உதவிகள் செய்யும் என்ற மக்கள் நம்பிக்கை முழுமையாக அற்றுப் போயுள்ள நிலையில், மக்களின் இறுதி எதிர்பார்ப்பாக தற்போதைக்கு இவ்வாறான வெளிநாட்டு உதவிகளே உள்ளன. அவை ஒழுங்காகவும், நீதமான விதத்திலும் உரிய மக்களுக்குப் போய்ச் சேருவதிலேயே நிதியுதவிகளை அளித்த நாடுகள் குறித்த அபிமானமும், நல்லபிப்ராயமும் மக்கள் மத்தியில் தங்கியிருக்கிறது.

____________________________________________________

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 01.06.2022






Wednesday, June 1, 2022

யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம்

 

   
யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்த நபரொருவர் எனக்களித்த வாக்குமூலத்தை பல வருடங்களுக்குப் பிறகு நான் எழுதுகிறேன். இந்த நிகழ்வு குறித்து நான் தனிப்பட்ட பதிவேதும் எழுதவில்லை. எனினும் 2002 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்ட 'பிரபாகரன் நிரூபணம் குறித்த மனோவியல் ஆய்வு' எனும் தொகுப்பில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். 

    இந்த நபரை, 1994 ஆம் ஆண்டு நான் மாத்தளை வைத்தியசாலையில் கடமையாற்றிய காலத்தில் சந்தித்தேன். அவர் எனது பகுதி நேர நோயாளியாகவிருந்தார். பகுதி நேர நோயாளி என நான் குறிப்பிடுவது ஏனெனில், அவருக்கு ஆரம்பத்திலிருந்து சிகிச்சையளித்த வைத்தியர் நானல்ல. எனினும் அவரது உடல் ரீதியான வியாதிகள் சிலவற்றுக்கு நான் சில வைத்திய அறிவுரைகளைக் கூறியிருந்ததாலும், அவருக்கு சில மருந்துகளை இலவசமாகக் கொடுத்ததாலும் அவர் எனக்கு சினேகமாகியிருந்தார். நான் இங்கு குறிப்பிடப் போவது அந்த நபர் என்னிடம் கூறியதைத்தான். இந்தத் தகவல்கள் உண்மையானவை, பொய்யானவை போன்ற விடயங்களை வாசகர்களின் தீர்மானத்துக்கு விட்டு விடுகிறேன். (ஓய்வுபெற்ற சிரேஷ்ட போலிஸ் பிரதி காவலதிகாரி எட்வட் குணதிலகவால் முன்வைக்கப்பட்ட ‘ஆய்வறிக்கை’யின் பிரகாரம், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தது விடுதலைப்புலிகள் இயக்கத்தினரது செயல்பாடாகும். அதற்கு சிங்களவர்கள்தான் காரணம் எனக் காட்டி சர்வதேச மக்களின் அனுதாபத்தை வென்றெடுப்பதே அவர்களது நோக்கமாகும்.)

    இந்த வாக்குமூலத்தை அளித்த நபரது உத்தியோகம் என்னவாகவிருந்தது என்பதை நான் கூற மாட்டேன். காரணம் அது சர்ச்சைக்குரியதாகவும், ஈழ ஆதரவாளர்களால் இந்த விடயமும் கூட அவர்களது பிரசார தந்திரமாகப் பாவிக்கப்படக் கூடும் என்பதனாலுமாகும். எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அவர் வடக்கில்தான் இருந்திருக்கிறார்.

    ஒரு இலட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களோடு, ஆசியாவிலிருந்த விசாலமான நூலகங்களிலொன்றான யாழ்ப்பாண நூலகத்துக்கு 1981 ஆம் ஆண்டு, மே மாதம் 31 ஆம் திகதி தீ வைக்கப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் யாழ்ப்பாண அபிவிருத்திக் குழுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்ததோடு, கொழும்பிலிருந்து சென்றிருந்த காடையர்கள் யாழ்ப்பாணத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவாறு இருந்தனர். இந்த நிகழ்வானது இனவாதக் கலவரங்களின் திருப்புமுனையாக அமைந்தது.

    யாழ்ப்பாணத் தமிழர்களின் பெருமைக்குக் கொடுத்த அடியாகத்தான் யாழ்ப்பாண நூலகம் கொளுத்தப்பட்டதென அந்த நபர் கூறுகிறார். இதற்கு சில அரசியல்வாதிகளும் கூட அனுமதியளித்திருக்கின்றனர். அதை நியாயப்படுத்தும் விதமாக, விடுதலைப் புலி இயக்கத் தீவிரவாதிகள் இந் நூலகத்தில் வைத்துத்தான் ஒருவரையொருவர் சந்தித்து தாக்குதல் திட்டங்களைத் தீட்டுவதாகவும், அதனால் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடங்களை அழித்தொழித்து விட வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. அத்தோடு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் இறுதி பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்ற இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போலிஸார் இருவரை தீவிரவாதிகள் கொலை செய்திருந்ததால் இந்தக் குழுவினர் அமைதியற்று இருந்திருக்கின்றனர்.

    இந்த நபர் கூறும் விதத்தில், அவரும், அவருடனிருந்த குழுவினரும் முதலில் சாராய போத்தலொன்றில் பெற்றோலும், மணலும் நிரப்பி, புடைவைத் துண்டால் மூடி அதனைக் கொளுத்தி விட்டு நூலகத்தை நோக்கி எறிந்திருக்கின்றனர். அந்த போத்தலுக்குள் சதுர வடிவில் வெட்டப்பட்ட இறப்பர் செருப்பின் துண்டொன்றும் இருந்ததனால் பலமாகத் தீ பற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே குழுவிலிருந்த ஒருவர் 'நெருப்பு நெருப்பு' எனக் கத்தியிருக்கிறார். அத்தோடு முன்பே திட்டமிட்டிருந்தவாறு ஒரு குழுவினர் தீயை அணைக்க தண்ணீரை எரிவதைப் போல பெற்றோலையும், மண்ணெண்ணையையும் கொண்டிருந்த வாளிகளை தீயின் மீது எறிந்திருக்கின்றனர். அதனால் தீயானது கொழுந்து விட்டெரியத் தொடங்கியிருக்கிறது. நூலகத்திலிருந்த புத்தகங்களிலும் தீப்பிடித்துக் கொண்ட காரணத்தால் சொற்ப நேரத்துக்குள் யாழ்ப்பாண நூலகம் சாம்பலாகி விட்டிருக்கிறது. இருண்ட வானம் சிவந்து போயிருந்தது.

    தீ, அதிக வெப்பத்தையும் கக்கிக் கொண்டிருந்ததனால், தீ வைத்தவர்கள் சற்றுத் தூரமாகச் சென்று இக் காட்சியைக் கண்டு களித்தவாறு மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டிருந்திருக்கின்றனர். இதற்கிடையே யாழ்ப்பாணத் தமிழ் மக்கள், நூலகத்துக்கு அருகில் ஓடி வந்து தமது அக ஆன்மா எரிந்து கொண்டிருப்பதையும், அதற்குக் காரணமானவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்புவதையும் கண்டிருக்கிறார்கள். இந்த வாக்குமூலத்தைக் கொடுத்தவர் கூறுவதற்கேற்ப தீ வைப்பதில் பங்குகொண்ட சிலர் சாராய போத்தல்களைக் கையில் வைத்துக் கொண்டு, அவற்றைப் பருகியவாறு இன ரீதியான கோஷங்களை எழுப்பியிருக்கிறார்கள். மது போதையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு சவால் விடுத்திருக்கின்றனர். பின்னர் போலிஸார் வந்து மிகவும் மென்மையாக அக் காடையர்களை அங்கிருந்து நீங்கிச் செல்லப் பணித்திருக்கின்றனர்.

    மிகவும் அரிய கைப்பிரதிகளைக் கூடக் கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகம் அழிக்கப்பட்டதைக் குறித்து ‘Cultural Genocide’ அதாவது ‘கலாசார இனப்படுகொலை’ என பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்திருக்கிறார். யாழ்ப்பாண நூலத்தை எரிக்க இராணுவ அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருந்ததாக நான் நினைக்கவில்லை. காரணம் இராணுவ அதிகாரிகளான ஜெனரல் வஜிர விஜேரத்ன, கர்னல் வைத்தியர் ரஞ்சன செனவிரத்ன போன்ற இராணுவ அதிகாரிகள் கூட யாழ்ப்பாண நூலகத்தின் உறுப்பினர்களாக இருந்ததோடு, அவர்கள் கூட இச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். இந்தக் குற்றச் செயலைச் செய்ய காடையர்களைத் தூண்டி விட்ட அரசியல்வாதிகள்தான் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

    எவ்வாறாயினும், யாழ்ப்பாண நூலகத்தை எரித்த காடையர் குழுவிலிருந்த இந்த நபர் பின்னர் அதைக் குறித்து வருந்தத் தொடங்கியிருக்கிறார். அவரது ஒரே பிள்ளையும் கூட பதினாறு வயதாகும் முன்பு இறந்து விட்டிருந்தது. அதனால் வாழ்க்கை குறித்து வெறுப்படைந்திருந்த அவர் மதுபானத்திற்கு அடிமையாகியிருந்தார். அவரை நான் இறுதியாக 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தித்தேன். இப்போது அவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதை நான் அறியேன்.

- வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -

Monday, May 23, 2022

இலங்கையின் புதிய பிரதமரும், தொடரும் மக்கள் எழுச்சி போராட்டமும் - எம். ரிஷான் ஷெரீப்


    
கடந்த சில நாட்களில் இலங்கையில் மிக முக்கியமான அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, இரண்டு தினங்கள் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும் நாட்டில் வன்முறைகள் வெடித்தன. வீடுகளும், வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டதோடு, உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன. தெருக்களில் பல இராணுவ வாகனங்கள், ஆயுதந்தரித்த படையினரோடு உலா வந்து கொண்டிருந்ததோடு, அரச கட்டளைகளை மீறும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளும் அதிகாரம் இராணுவத்துக்கும், காவல்துறைக்கும் வழங்கப்பட்டிருந்தது. கொழும்பு காலிமுகத்திடல் ‘கோட்டாகோ’ கிராமத்தில் அமைதியாகப் போராடிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் உடனடியாக அவ்விடத்திலிருந்து நீங்க வேண்டும் என்று காவல்துறை ஒலிபெருக்கி வழியாக அறிவித்ததுமே, அருட்சகோதரிகளும், பௌத்த பிக்குகளும் பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்துகளும் நேராத வண்ணம் காவல்துறையும், இராணுவமும் பிரவேசிக்கக் கூடிய வழிகளில் காவல் தேவதைகளாக இரவு முழுவதும் அமர்ந்திருந்ததைக் காண முடிந்தது.

    அதிகபட்ச அதிகாரங்களையுடைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி, பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு, முப்படைகள் மற்றும் போலிஸ் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்டங்களை இயற்றும் திறன் ஆகிய அனைத்தையும் கைவசம் வைத்திருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தனது சகோதரரான மஹிந்த ராஜபக்‌ஷவால் ஏவி விடப்பட்ட அந்த வன்முறைகளைத் தடுக்க உடனடியாக எவ்வித முயற்சிகளையும் எடுக்காமலிருந்ததோடு, பொதுமக்களுக்கு ஆதரவாகவோ, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவோ எவ்வித உரையையும் ஆற்றாமல் மறைந்திருந்தார். பிறகு, எதிர்க்கட்சிகளினதும், சர்வதேசத்தினதும் அழுத்தம் காரணமாக இரண்டு நாட்கள் கழித்து தொலைக்காட்சி வழியாக மக்களுக்கு ஆற்றிய உரையில், புதிய பிரதமர் ஒருவரையும், புதிய அமைச்சரவையொன்றையும் தான் நியமிக்கப் போவதாகத் தெரிவித்தார். நாட்டை திவாலாக்கி, நெருக்கடிக்குள்ளும் பஞ்சத்துக்குள்ளும் தள்ளியதற்கும், அண்மைய வன்முறைகளுக்கும் எவ்வித வருத்தத்தையும், மன்னிப்பையும் ஒரு ஜனாதிபதியாக அவர் கோரவில்லை. வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் மீது, தான் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மாத்திரம் தெரிவித்தார்.

    என்றாலும், வன்முறைகளுக்கு முழுமையாகப் பொறுப்புக் கூற வேண்டிய அவரது சகோதரர் குடும்பத்தோடு திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருக்கிறார். அந்தக் குடும்பம் கப்பல் வழியாக வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முற்படுவதாக அறிந்து கொண்டதுமே நூற்றுக்கணக்கான மீனவர்கள் தமது படகுகளோடு கப்பலைச் சூழ்ந்து மறித்து நின்று அவர்களைத் தப்பிச் செல்லவிடாமல் செய்தார்கள். அதேவேளை, பொதுமக்கள் மீது வன்முறையை ஏவி விட்ட மஹிந்த ராஜபக்‌ஷ மீதும், அவரது கூலிப்படை மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் வரலாற்றில் முதற்தடவையாக மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும், பல அரசியல்வாதிகளுக்கும், பிரமுகர்களுக்கும் விசாரணைகள் முடியும்வரை வெளிநாடுகளுக்குச் செல்ல நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.



    நாட்டில் பிரதமர் இல்லாத நிலையில் இவ்வளவும் நடந்து கொண்டிருப்பதைக் கண்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் வேண்டுகோளுக்கிணங்க, மிக நீண்ட அரசியல் அனுபவத்தைக் கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க கடந்த பன்னிரண்டாம் திகதி இலங்கையின் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஜனாதிபதி, ரணிலைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இருக்கிறது. கடந்த ஆட்சியிலும் பிரதமராகப் பதவி வகித்துத் தோல்வியுற்றிருந்த ரணில், ராஜபக்‌ஷ குடும்பத்தின் மிக நீண்ட கால நெருங்கிய நண்பர் என்பதனால், என்னதான் வெளிப்பார்வைக்கு ராஜபக்‌ஷ குடும்பத்தின் குற்றங்கள் மீது, தான் உக்கிரமாக இருப்பது போல அவர் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்கிடையில் நட்பு ரீதியான மென்மையான அணுகுமுறையே இருந்து வருகிறது. இது ராஜபக்‌ஷ குடும்பத்துக்கே சாதகமாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
    
    எனவே, மக்களால் எப்போதும் தோல்வியுற்ற அரசியல் தலைவராகவே பார்க்கப்படும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இலங்கையின் மீட்பரென்றும், இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் அவர் தீர்த்து வைப்பார் என்றும் கருத முடியாது. அவர், இலங்கையின் சீரழிந்த அரசியலமைப்பில் நெடுங்காலமாக இருந்து வரும் ஒருவர் என்பது தவிர அவர் மீது பொதுமக்களுக்கு விஷேட வெறுப்போ, விருப்போ இல்லை. அவரையும், மஹிந்த ராஜபக்‌ஷவையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். என்றாலும், ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றதை பொதுமக்கள் கடுமையாக எதிர்க்காமல் இருப்பதற்கு முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன.

    அவசரமாகவும், காலம் தாழ்த்தாமலும், இலங்கையில் ஓர் அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்ற இக்கட்டான நிலைமை முதன்மையான காரணி. இலங்கையில் பிரதமரோ, அரசாங்கமோ இல்லாத நிலைமை நீடித்தால், உணவு, மருந்து, எரிபொருள், மின்சாரம் என இலங்கை மக்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள் அனைத்தும் இன்னும் தீவிரமடையும். நாடு முழுவதும் வன்முறைகள் மேலோங்கி எவரும் தமக்குத் தேவையானவற்றைக் கொள்ளையடிக்க முற்படும் வாய்ப்புகள் அதிகரித்ததால், மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை என்பது அடுத்த முக்கிய காரணியாக இருந்தது. எனவே இவ்வாறான இக்கட்டான நேரத்தில், திவாலாகிப் போயுள்ள நாட்டைப் பொறுப்பேற்க தைரியமாகவும், நம்பிக்கையோடும் முன்வரும் ஒருவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டிய கட்டாயம் உருவானது.



    இவ்வாறான நிலைமையில், நாட்டை மீண்டும் சாதாரண நிலைமைக்குக் கொண்டு வருவதை நாட்டிலுள்ள ஏனைய அரசியல்வாதிகளை விடவும் ரணிலால் மாத்திரமே சிறப்பாகச் செய்ய முடியும் என்பது மக்களின் நம்பிக்கையாகவிருக்கிறது. எதையும் பூசி மெழுகி மறைக்காமல், அடுத்த இரண்டு மாதங்களுக்கு நாட்டின் நெருக்கடி நிலைமை படுமோசமாக இருக்கும் என்று அவர் பதவியேற்ற பின்னர் மக்களுக்கு ஆற்றிய உரையில் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். அவருக்கு சர்வதேசத்திடமிருக்கும் வரவேற்பையும், நம்பிக்கையையும் பயன்படுத்தித்தான் அவர் இந்தச் சிக்கலைத் தீர்க்கக் கூடும். அனைத்து நாடுகளுடனும் நெருக்கத்தையும், சிறந்த நட்பையும் பேணி வரும் அவரால் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிடமிருந்தும் கடனுதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறான கடனுதவிகளாலும், அவசர மருத்துவ உதவிகளாலும் நாட்டைச் சில மாதங்களுக்குள் மீட்டு விட முடியும். அது இக்கட்டான இந்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க மிகப் பயனுள்ளதாக அமையும்.

    என்றாலும், இதன் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தற்காலிகத் தீர்வு மாத்திரமே கிடைக்கும் என்பதையும் மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். தற்போதும் இலங்கையைத் தாங்க முடியாதளவு சர்வதேசக் கடன்கள் அழுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இன்னுமின்னும் கடனாளியாக ஆவதும், நாட்டின் இடங்கள் வெளிநாடுகளுக்கு வழங்கப்படுவதும் தொடர்ந்தும் நீடித்துக் கொண்டேயிருந்தால் அது எதிர்காலத்தில் இலங்கைக்கு சாதகமாக அமையுமா என்பது குறித்தும் மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

    இலங்கையின் மீட்சிக்கு நிரந்தரத் தீர்வு வேண்டுமானால், நாட்டுக்குள் உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும். இலஞ்சம், ஊழல், இன மத பேதமற்ற அரசியல்வாதிகளாலும், சட்டத்தை மதித்து நேர்மையாக நடக்கக் கூடிய பொதுமக்களாலும் மாத்திரமே அதைச் செய்ய முடியும். அவ்வாறான நீண்ட காலத் திட்டத்தில், பிரதமர் ரணிலின் செயற்பாடுகளில்தான் ரணிலின் பிரதமர் பதவி நிலைப்பது தங்கியிருக்கிறது. எனவே, புதிய பிரதமர் வந்ததுமே மக்கள் எழுச்சிப் போராட்டம் கலைந்து விடும் என்ற அரசின் எதிர்பார்ப்பைப் பொய்ப்பிக்கும் வகையில் தற்போதும் தொடர்ந்தும் மக்கள் எழுச்சிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது.

______________________________________________________

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 19.05.2022






Tuesday, May 17, 2022

இலங்கை ஜனாதிபதி கோத்தாபயவுடன் ஜனாதிபதி முறையும் ‘Go Home’

இலங்கை ஜனாதிபதி கோத்தாபயவுடன், ஜனாதிபதி முறையும் ‘Go Home’
- காமினி வியங்கொட
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்


  இந்தத் தலைப்பில் பெரியதொரு பரிகாசம் இருக்கிறது. கோத்தாபயவுக்கு வீட்டுக்குச் செல்லுமாறு கோரி இப்போது தெருவிலிறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் அவரை ஜனாதிபதி பதவியிலிருந்து பதவி விலகுமாறு வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு, அவர் தனது வீடிருக்கும் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்ற கருத்தும் அதனூடு வெளிப்படுகிறது. இதற்கிடையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையும் அமெரிக்காவில்தான் பிறந்தது. கோத்தாபயவுடன் அந்த ஜனாதிபதி முறைமையும் தமது வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று கூறும்போது இருவரும் ஒரே நாட்டுக்குச் செல்லவிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

    இலங்கையில் தற்போது நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டங்கள் பரவியுள்ளன. கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு, நகரங்களில் குறிப்பாக மத்திய தர வகுப்பினரிடையே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதியான போராட்டங்கள் மிரிஹானை பிரதேசத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையருகே புதியதொரு பாதையில் பிரவேசித்தது. இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த அலுப்பைத் தீர்த்துக் கொள்வது போல அன்று அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெருந்தொகையான பொதுமக்கள் பேரோசையையும், வித்தியாசமான நடைமுறையொன்றையும் அதில் கலந்தார்கள். அந்தப் புள்ளியிலிருந்து, இனியும் அது நகரத்துக்கோ, மத்திய தர வகுப்பினருக்கோ மாத்திரம் வரையறுக்கப்பட்ட போராட்டமாக இல்லை. நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒன்றாகத் திரண்டெழுந்துள்ள ஒரு போராட்டக் களமாக இலங்கை தற்போது மாறியுள்ளது. இன்று அந்தப் போராட்டத்தின் பிரதான பங்குதாரர்களாக நாட்டிலுள்ள இளைய தலைமுறையினர் உள்ளார்கள். அது காலங்காலமாக பல்கலைக்கழக மாணவர் சமுதாயத்துக்குரிய இளைஞர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலிருந்து முற்றுமுழுதாக மாறுபட்ட இளைஞர் பங்களிப்புகளால் நிறைந்திருக்கிறது. பல்கலைக்கழக இளைஞர் தலைமுறை போராட்டங்கள் கட்சிகளாலும், அரசியல் நிகழ்ச்சி நிரல்களாலும்தான் இயக்கப்பட்டு வந்தன. இப்போதும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்று தெருவில் இறங்கியிருக்கும் இளைஞர் தலைமுறையானது அந்தக் கட்சிகளையும், அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும் புறந்தள்ளி விட்டு அவற்றுக்கு மேலாக எழுந்து வந்து ஒரு பரந்த வெகுஜன இயக்கமாக உருமாறியிருக்கிறார்கள்.

கோத்தாபய தனித்துவமானவர்

    கோத்தாபய ராஜபக்‌ஷ ‘தோல்வி’யடையாத ஒரே விடயம் இதுவாகும். இலங்கை சுதந்திரமடைந்ததன் பிறகு ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையை ஆட்சி செய்த எந்தவொரு அரசியல்வாதியாலோ அல்லது அரசியல் கட்சியாலோ வெற்றி பெற முடியாத ஒரு முக்கிய விடயம் இருந்தது. அதாவது, அவர்கள் முயற்சித்த எதையும் ஒட்டுமொத்த நாடும் ஏற்றுக் கொள்ளும்படி செய்ய அவர்களால் முடியாமலிருந்தது. உதாரணமாக, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முற்படும்போது நாட்டில் ஒரு தரப்பினர் அதை எதிர்த்தார்கள். 1977 இல் திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வந்த போது, நாட்டில் மற்றுமொரு தரப்பினர் அதை எதிர்த்தார்கள். 1978 இல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைக் கொண்டு வந்த போது அதை எதிர்க்கவும் நாட்டில் ஆட்கள் இருந்தார்கள். ஆனால் இன்றோ, ஜனாதிபதியையும், அவரது குடும்பத்தையும், அவர்களது கொள்கைகளையும் ஒன்றாக எதிர்க்கும் ஒட்டுமொத்த நாட்டையும், நாட்டு மக்கள் அனைவரையும் மிகக் குறுகிய காலத்துக்குள் தீவிரமாகக் கட்டியெழுப்ப கோத்தாபய ராஜபக்‌ஷ எனும் தலைவரால் முடிந்திருக்கிறது. இந்த பொதுமக்கள் போராட்டத்தில் கட்சி வேறுபாடுகள் இல்லை. வகுப்பு வேறுபாடுகள் இல்லை. இனவாதங்கள் இல்லை. மத பாகுபாடுகள் இல்லை. பாலின வேறுபாடுகள் இல்லை. அனைவரும் ஒரு விடயத்தில் ஒன்றுபட்டிருக்கிறார்கள், ஒன்று திரண்டிருக்கிறார்கள். அது ‘Gota Go Home’ (கோத்தா நீ வீட்டுக்குப் போ) என்பது. வேறு விதமாகக் கூறினால் கோத்தாபயவின் இந்தத் ‘தோல்வி’யானது முன்னொருபோதும் இல்லாத அளவில் சமூக உணர்வை உருவாக்கி, அந்த சமூக உணர்வை முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளது.



    இலங்கையின் தற்போதைய நெருக்கடியானது, உடனடித் தீர்வைக் கோரும் தருணமாக உருவெடுத்திருக்கிறது. நாட்டிலுள்ள பொதுமக்கள் அனைவரும் தெருவிலிறங்கிப் போராடுவது ஏன் என்ற கேள்வியைப் புரிந்து கொள்தல் அந்தச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வினை வழங்குவது குறித்த ஒரு எண்ணக் கருவை உருவாக்க உதவக் கூடும். அந்தச் சிக்கல்களை இவ்வாறு வகை பிரிக்கலாம்.

1. சமையல் எரிவாயு இல்லாமை.

2. பெற்றோல் – டீசல் இல்லாமை.

3. மின்சாரம் இல்லாமை.

4. இவற்றோடு ஏனைய அனைத்தும் ஒன்றுதிரண்டு, பெரும் பண வீக்கம் உருவெடுத்திருக்கின்றமை.

    இவையனைத்தும் பொருளாதாரம் சார்ந்தவை. அதாவது மக்களின் வயிற்றோடு சம்பந்தப்பட்டவை. ஆனால், ‘Gota Go Home’ எனும் கோரிக்கை அரசியல் ரீதியானது. கோத்தாபய ராஜபக்‌ஷவின் கொள்கைகளும், வேலைத்திட்டங்களும் மேற்கூறிய பொருளாதாரக் காரணிகளுடன் ஒன்றாகப் பின்னிப் பிணைந்துள்ளதால், பொதுமக்கள் அறிவுபூர்வமாக ‘Gota Go Home’ எனும் அரசியல் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். வேறு விதமாகப் பார்த்தால் இது தொடர்ச்சியானதும் தவறானதுமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி. ஆகவே (பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகிய) இந்த இரண்டு பிரச்சினைகளும் ஒரே நேரத்தில் தீர்க்கப்பட வேண்டும்.

    எதிர்வரும் வாரங்களில் முதற்கூறப்பட்ட மூன்று விடயங்களுக்குமான தீர்வை ஓரளவு பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவிடமிருந்தும், சீனாவிடமிருந்தும் 4-5 பில்லியன் டாலர்கள் அளவு கடன்கள் (பல்வேறு வடிவங்களில்) பெற்றுக் கொள்ளப்படவிருப்பதால் அந்தப் பிரச்சினைகள் ஓரளவு தீர்க்கப்படக் கூடும். பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு, பெற்றோல், டீசல், மின்சாரம் போன்றவற்றை வழங்குவதை மிகக் குறுகிய காலத்துக்கு அந்தப் பணத்தைக் கொண்டு செய்யலாம். ஆனால் அந்தக் குறுகிய காலகட்டத்துக்குள் கூட நான்காவது சிக்கலைத் தீர்க்க முடியாமலே இருக்கும். அதாவது விண்ணைத் தொட்டிருக்கும் பொருட்களினதும், சேவைகளினதும் விலைவாசிகளை மீண்டும் தரையிறங்கச் செய்ய முடியாது. இன்று, நாட்டின் பண வீக்க விகிதமானது 59% என சுயாதீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த விடயத்திலும் மக்களுக்கு மீண்டும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷதான் நினைவுக்கு வருகிறார். அவரது இந்தக் குறுகிய ஆட்சிக் காலத்துக்குள் புதிதாக அச்சடித்துள்ள ட்ரில்லியனுக்கும் (1000,000,000,000) அதிகமான ரூபாய்களுக்குச் சமமாக நாட்டின் உள்நாட்டு உற்பத்தித் திறன் அதிகரிக்கவில்லை என்பதால் மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்லப் பாடுபடும் இந்தப் போராட்டம் இன்னும் மோசமான திசைக்குத் திரும்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் அர்த்தம், சமையல் எரிவாயு வரிசை, பெற்றோல் வரிசை மற்றும் மின்சாரப் பிரச்சினை தற்காலிகமாகத் தீர்க்கப்பட்டாலும் கூட பிரச்சினைகள் தீர்ந்து விடாது என்பதுதான்.

நெருக்கடியின் அரசியல்

    தற்போதைய மக்கள் போராட்டத்தின் அரசியல் வீச்சு நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. முதல் பார்வையில், அது நெருக்கடியில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றலாம் என்றாலும் உண்மையில், தற்போதைய நெருக்கடிக்கான தீர்வானது, கட்சி - அரசியலின் திசையில் நகர்வது போலத் தெரிகிறது. ஒட்டுமொத்த படத்தைப் புரிந்து கொள்ள அவற்றில் சிலவற்றை மிக சுருக்கமாகக் கருத்தில் கொள்வது அவசியம்.

   அவற்றுள் முதலாவது இந்த நெருக்கடியானது 74 வருட சாபம் என்பது குறித்த கோஷம். அதன் அர்த்தம், இலங்கை சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு 74 வருட காலமும் நாட்டை ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளும் இந்த நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று எழுந்திருக்கும் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டு குறித்து எவரும் மறுக்க முடியாது. என்றாலும், அந்த விடயம் குறித்து மேலும் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. வாகன ஓட்டுநர்களால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம். ஒருபோதும் வாகனமொன்றை ஓட்டியே பார்த்திராத ஒருவரால் வாகன விபத்துகள் ஏற்படுவதில்லை. ஆனால் அனைத்து விபத்துகளுமே வாகன ஓட்டுநர்களின் தவறுகளால் மாத்திரம் நிகழ்வதில்லை என்பதை நாம் அறிவோம். வாகனத்தைச் செலுத்தும் பாதையின் இயல்பு, அந்தப் பாதையில் நடமாடும் ஏனையவர்களின் நடவடிக்கைகள், திடீரென்று (மாடுகள், நாய்கள் போன்ற) விலங்குகள் குறுக்கே பாய்தல் மற்றும் மழைவீழ்ச்சி போன்ற வாகன ஓட்டி மீது மாத்திரம் குற்றம் சுமத்த முடியாத பல்வேறு விடயங்கள் வாகன விபத்துகளுக்குக் காரணமாகின்றன. இந்த அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு வாகனத்தைச் செலுத்துமாறு வாகன ஓட்டுநருக்கு அறிவுறுத்துவது கட்டாயமாகும். அவ்வாறு அறிவுறுத்துவதால் மாத்திரம் ஏனைய காரணிகளைப் புறக்கணித்து விட முடியாது. அந்த வகையில் பார்க்கும்போது இவ்வளவு காலமும் நாட்டை ஆட்சி செய்தவர்கள் (வாகன ஓட்டுநர்கள்) மாத்திரமல்லாமல், அந்த ஆட்சியாளர்களை (ஓட்டுநர்களை) அதிகாரத்தில் ஏற்றி வைத்தவர்களும், உரிய சமயத்தில் அதிகாரத்திலிருந்து பதவியிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்காதவர்களும் என அனைத்தும் இந்த 74 ஆண்டு கால சாபத்துக்கு பொறுப்புக் கூற வேண்டும்.


    உதாரணத்துக்கு, ராஜபச்ஷேக்கள் வீட்டுக்குப் போக வேண்டும் என்று இப்போது நாங்கள் கூறிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் ராஜபக்‌ஷேக்கள் உருவான 2005 ஆம் ஆண்டை எடுத்துக் கொள்வோம். தனியொரு நபரால் அனைத்தும் ஆளப்படும் மற்றும் தனியொரு குடும்பத்தால் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும், கொள்ளையடிக்கப்படும் இன்றைய காலகட்டத்தை உருவாக்க 2005 ஆண்டில் ராஜபக்‌ஷேக்கு தோள்கொடுத்து உதவிய ஒரு கட்சி ‘மக்கள் விடுதலை முன்னணி’ கட்சி. மற்றுமொரு உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். இந்த நாட்டில் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண்பது தடைப்பட்டதில் அரசை உருவாக்கியவர்களது பங்கு மாத்திரமல்லாமல் (‘தேசிய சிந்தனை’ போன்ற) அரசுக்கு வெளியேயிருந்தவர்களது பங்களிப்பும் இருந்தது. இன்னுமொரு உதாரணத்தை முன்வைக்கிறேன். இந்த நாட்டில் இளைஞர் கிளர்ச்சிகளும், வன்முறைகளும் இரண்டு தடவைகள் (1971 மற்றும் 1987 – 1989) தெற்கிலும், மூன்று தசாப்தங்கள் வடக்கிலும் உருவாகியிருந்தன. இன்று எம் முன்னால் எழுந்திருக்கும் அதி நவீன ஆயுதம் தரித்த அரசாங்கத்தைக் கட்டியெழுப்பியதன் பெரும் பொறுப்பு அந்தத் தோல்வியடைந்த கிளர்ச்சிகளுக்கும் உரியது. இதே விடயத்தை வேறொரு விதத்தில் கூறுவதானால், வடக்கின் கிளர்ச்சியாளர்கள் தென்னிலங்கையால் உருவாக்கப்பட்டது போலவே, தெற்கின் படையினர் வடக்கின் தோல்வியுற்ற கிளர்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளமை, மீளப் பார்க்கும்போது எமக்குத் தெளிவாகும்.

அனைத்தும் பின்னிப் பிணைந்துள்ளமை

    இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புபட்டவை. இந்த நீண்ட வரலாற்றின் குற்றவாளியைக் கண்டறியும்போது (உண்மையிலேயே அவ்வாறான ஒன்று தேவைப்படுமாயின்) அதன் பொறுப்பைச் சுமத்த ஒரு தரப்பை மாத்திரம் தனியாக ஒதுக்கி வைப்பது சாத்தியமில்லை என்பதையே நான் சுட்டிக் காட்ட முயல்கிறேன். கட்சித் தேவைகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் இவ்வாறான கவர்ச்சிரமான கோஷங்கள், அநாமதேய மற்றும் முறையாக ஒருங்கமைக்கப்படாத மக்கள் எழுச்சிப் போராட்டங்களில் அதை விடவும் விசாலமாகவும், போலியாகவும் உள்வாங்கப்படுகின்றன.

    உதாரணத்துக்கு, 74 ஆண்டு கால சாபத்தின் வரலாறு தற்போது 225 அமைச்சர்களுமே நமக்கு வேண்டாம் எனும் கோஷம் வரை நீண்டிருக்கிறது. அதாவது, அந்த வேண்டுகோளுக்கு மக்கள் விடுதலை முன்னணி கட்சியும் இக் கணத்தில் இரையாகியிருக்கிறது. இந்தக் கற்பனாவாத கோரிக்கையானது, தெரு முழக்கங்களுக்கு நன்றாக இருந்த போதிலும், நாட்டுக்குப் பயனுள்ளதாகவோ, நடைமுறைக்குச் சாத்தியமானதாகவோ இல்லை. தெரு என்பது அநீதிக்கு எதிரான சகிப்புத்தன்மை எல்லை கடந்ததும் மக்கள் ஒன்றுசேரும் ஒரு திறந்த காட்சியரங்கு. அது கண்களுக்குப் புலப்படும் பகுத்தறிவுக்குள் கண்களுக்குப் புலப்படாத முரண்பாடுகளும் இருக்கக் கூடுமான ஒரு மேடை.



    அங்கு பாதுகாப்பு போலவே பாதுகாப்பின்மையும் உள்ளது. கடந்த சில தினங்களாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவன் எனும் வகையில் இந்த இரண்டு நிலைமைகளையும் நான் அனுபவத்தில் கண்டேன். இலக்கத் தகடுகளற்ற மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களை ஏந்தியவாறு கறுப்பு உடையணிந்திருந்த அதிரடிப் படையினரை போராளிகளான பொதுமக்கள் நடுவே அதிகாரிகள் அனுப்பி வைத்தமையையும், சட்டத்தையும், அமைதியையும் காப்பதற்குப் பொறுப்பான போலிஸாரால் அந்த ஆயுததாரிகள் திருப்பி அனுப்பப்பட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அதற்காக, சம்பந்தப்பட்ட போலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக இராணுவப் படைப் பிரிவால் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கையானது ஒரு இருண்ட சித்திரத்தையே எடுத்துக் காட்டுகிறது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ முன்புள்ள ஜனநாயக தேர்வு

    தற்போது கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு இரண்டு தெரிவுகளே உள்ளன. ஒன்று ஜனநாயகம். தனக்கு வாக்களித்து ஜனாதிபதியாக ஆக்கிய 69 இலட்சம் மக்கள் குறித்துப் பேச தற்போது அவரால் முடியாது. ஜனாதிபதி அவரது ஊடகப் பிரிவிடம் கூறினால், அவருக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்த அரச அதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருமே தற்போது வரிசையாக வந்து பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கும் காணொலிகளை அவரால் பார்க்க முடியும். ‘நாட்டைக் காக்கும் வீரன்’ என அவரின் புகழ் பாடி பாடல் எழுதிய பாடலாசிரியனின் வாக்குமூலத்தையும் அவர் அவற்றுள் காணலாம். அப்போது வாக்களித்த அந்த 69 இலட்ச மக்களின் தற்போதைய கோஷத்தையும், ஒட்டுமொத்த சமூகத்தின் கிளர்ச்சியிலும், தெருவிலும் கண்டுணர அவர் விரும்பவில்லையானால், பாராளுமன்றத்திலிருந்த அவரது ஆதரவு வட்டத்திலும் கூட அவர் கண்டறியலாம். அந்த 69 இலட்ச மக்களிடையே நிதியமைச்சர் பதவியைப் பொறுப்பேற்கத் தயாரான ஒருவரைக் கூட இந்தக் கணம் வரைக்கும் அவரால் தேடிக் கண்டறிய முடியாதுள்ளது. அவர் உத்தரவிட்ட அவசர கால சட்டத்தைப் பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியாமல் தோற்றுப் போய் தானாகவே அதை நீக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். (இருப்பினும் இதைக் கொண்டு பாராளுமன்றத்தை நாட்டின் நிலைமைகளைத் தெளிவாகவும், துல்லியமாகவும் காட்டும் ஒரு கருவியாகக் கருதாதீர்கள். அங்கு நாளையே நாட்டின் உண்மையான பிரதிபலிப்புகளுக்குப் பதிலாக, வேறு சில குறுகிய நலன்களின் விம்பங்களைக் காணக் கூடியதாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.)


    இந்தப் பிரச்சினைக்கான உகந்த ஜனநாயகத் தீர்வு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் பதவி விலகலோடு ஆரம்பிக்கப்பட வேண்டும். அடுத்ததாக ஓரிரு ஆண்டுகளுக்கு, அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்துடன் சிறிய அமைச்சரவையுடன் கூடிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். அந்த இடைக்கால அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதோடு, இந்தியா மற்றும் சீனாவுக்கு மாத்திரமல்லாமல் முழு உலகுக்கும் நட்பாக இருக்க வேண்டும். அத்தோடு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக சட்டபூர்வமான தன்மையை சர்வதேசத்தின் முன்னிலையில் உறுதிப்படுத்த வேண்டும். இன்று நாட்டு மக்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்திருக்கும் (சமையல் எரிவாயு, பெற்றோல், டீசல், பால் மா, மின்சாரம், இன்ன பிற) அவசர அன்றாட பொருளாதாரத் தேவைகளை இந்த இடைக்கால அரசாங்கம் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். அதேவேளை, இந்த பொருளாதார நெருக்கடியிலும், அரசியல் ஸ்திரத்தன்மையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அது தொடர்பாகத் தெரிவித்திருக்கும் கூற்று மிக முக்கியமானது. தக்க சமயத்துக்கானது. அந்தக் கருத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு பொருளாதாரத்துக்கு அடுத்ததாக, தற்போது நாட்டின் முக்கியமான தேசிய மற்றும் அரசியல் தேவையாக அதைக் கருதி அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

    ஜனாதிபதி பதவி விலக மறுத்தால், அதன் பிறகும் அவருக்காகத் திறந்திருக்கும் மற்றுமொரு ஜனநாயக வாய்ப்பு உள்ளது. அதாவது, அவர் ஜனாதிபதி பதவியில் இருக்கும்போதே, இருபதாவது திருத்தச் சட்டத்தை மாற்றியமைப்பது, பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்திலுள்ள ஓட்டைகளை அடைப்பது, இருபத்தோராவது திருத்தச் சட்டத்தை உடனடியாக ஏற்றுக் கொள்ளச் செய்வது ஆகியவற்றை மேற்கொண்டு மேலே குறிப்பிட்ட சர்வ கட்சியினரின் இடைக்கால அரசாங்கத்தை நிறுவலாம். இது சர்வ கட்சியினரது இடைக்கால அரசாங்கமாக ஏன் இருக்க வேண்டும் என்றால், தற்போதைய தேசிய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டிய பொறுப்பையும், பொறுப்புணர்வையும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதால்தான். அத்தோடு இருபதாவது திருத்தச் சட்டத்தை ஏன் மாற்றியமைக்க வேண்டும் என்றால் இடைக்கால ஆட்சியானது, அதிகப்படியான நிர்வாகத்திலிருந்து சுயாதீனமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அவ்வாறு இல்லாவிட்டால், இந்த இரண்டரை வருட காலத்துக்குள் தனது ஆட்சியில் ஏற்பட்ட தோல்விகளை, இடைக்கால ஆட்சியின் போதும் மேற்கொள்வதற்கு, இயலுமான அனைத்து வழிமுறைகளிலும் ஜனாதிபதி முயல்வார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ முன்புள்ள ஜனநாயகமற்ற தேர்வு



    இறுதியாக, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ முன்பாக ஜனநாயகமற்ற தேர்வொன்றும் இருக்கிறது. அது, தான் பதவி விலக மறுப்பதோடு மாத்திரம் நின்று விடாமல், அரசியலமைப்புத் திருத்தத்துடன் இடைக்கால அரசாங்கத்தை நாடாமல், பொதுமக்கள் போராட்ட களம் மேலும் மேலும் விசாலமடைய, வேண்டுமென்றே இடமளித்தல். அவ்வாறான தீர்மானத்தின் பின்னணியில் இராணுவ ‘தீர்வுகளே’ இருக்கலாம். இரத்தக் களறியும், அடக்குமுறையும்தான் அதன் பாதை. கடந்த காலங்களில், குடிநீர் கேட்டுப் போராடிய ரதுபஸ்வல பிரதேச மக்களைச் சுட்டுக் கொன்ற அனுபவமுள்ள, மண்ணெண்ணெய் கேட்டுப் போராடிய ஹலாவத பிரதேச மக்களைச் சுட்டுக் கொன்ற அனுபவமுள்ள, கட்டுநாயக்க பிரதேச ஊழியர்கள் தமது சேமலாப நிதியைக் காக்கப் போராடிய போது அவர்களைச் சுட்டுக் கொன்ற அனுபவமுள்ள, நிராயுதபாணிகளான சிறைக் கைதிகளைச் சுட்டுக் கொன்ற அனுபவமுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ பதவி விலகலை இன்னுமின்னும் தாமதப்படுத்தியவாறு, அவசர சீர்திருத்தங்களுக்கு இடமளிக்காமல் காலம் கடத்தும் ஓரோர் தினமும் திட்டமிட்டுக் கொண்டிருப்பது இவ்வாறான பயங்கரமான ஒரு நடவடிக்கையாக இருக்கலாமே தவிர வெகுளித்தனமானதாக இருக்கப் போவதில்லை.

    இங்குதான் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தமது கவலைகளையும், துயரங்களையும் தெருக்களில் பலத்த குரலில் எழுப்பிக் கொண்டிருப்பது போலவே, தனக்குள்ளேயும், வெளியேயும் மேற்கூறிய ஆபத்துகளுக்கு இரையாக வாய்ப்பளிக்காமல் இருப்பதற்கு ஒவ்வொரு கணமும் எச்சரிக்கையோடு இருப்பதில் இந்தப் போராளி பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு எந்த நேரத்திலும் எழக் கூடிய ஆபத்துகள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக அனைவருமே விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். எந்தக் கட்சியையும் சாராமல் சுயமாக பொதுமக்கள் போராடிக் கொண்டிருப்பதால் தனித்தனியாகத்தான் இந்தப் பொறுப்பை மக்கள் சுமக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பொறுப்பைச் சுமப்பது சிரமம்தான் என்றாலும், சுமக்க முடியாத ஒன்றல்ல.

_____________________________________

காமினி வியங்கொட

    

    சிறுபான்மையினருக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து இயங்கி வரும் இலங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான திரு. காமினி வியங்கொட சமூக, அரசியல் விவகாரங்கள் குறித்து தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதி வருகிறார். பிரபலமான இலக்கிய மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டுள்ள இவர் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்‌ஷவின் ஜனாதிபதி வேட்புமனுவை சட்ட ரீதியாக சவால் செய்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - காலச்சுவடு மே, 2022 இதழ்

Wednesday, May 11, 2022

இலங்கையில் கலவர அதிர்வுகளைக் கிளப்பியிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ராஜினாமா - எம். ரிஷான் ஷெரீப்


    
கடைசியில், இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது பதவியை நேற்று மே மாதம் ஒன்பதாம் திகதி ராஜினாமா செய்து விட்டார். இலங்கையில் எழுந்துள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் எதிரொலியாக, நாட்டின் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எதிராகக் கிளம்பிய பாரிய அழுத்தத்துக்கு மத்தியில் இந்தத் தீர்மானத்தைப் பிரதமர் எடுத்திருக்கிறார். இலங்கையின் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் பல தடவைகள் பதவி வகித்துள்ள மஹிந்த ராஜபக்‌ஷ தனது நீண்ட கால அரசியல் வாழ்க்கையை அவரே எதிர்பார்த்திராத ஒரு கணத்தில், எதிர்பார்த்திராத விதத்தில் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஏற்கெனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்து விட்டதாக நாடு முழுவதும் நான்கு தடவைகள் வதந்திகள் கிளம்பியிருந்த போதிலும், இப்போதுதான் அந்தத் தகவல் அவரது உத்தியோகபூர்வ கடிதத்தின் மூலம் உண்மையாகியிருக்கிறது.

    கடந்த வாரம் பொதுமக்கள் எழுச்சிப் போராட்டமானது, அரசாங்கம் ஒன்று கூடும் பாராளுமன்றத்தைத் தைரியமாக முற்றுகையிட்டமையும், நாடு தழுவிய ஹர்த்தாலும் இந்த ராஜினாமாவிற்கான பிரதான காரணம் என்று கூறலாம். அத்தியாவசிய உணவுகள், மருந்துகள் தட்டுப்பாடுகளின் காரணமாக நாளாந்தம் பொதுமக்கள் பலரும் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலை கண்டு அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்காக இந்தியா வழங்கிய பில்லியன்கணக்கான கடன்தொகையில் எழுபத்தைந்து சதவீதமளவு பணத்தைச் செலவழித்து இரும்பு, உருக்கைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளமை கண்டு கொந்தளித்துப் போன சட்டத்தரணிகளும், பல்கலைக்கழக மாணவர் பேரணியும், பொதுமக்களும்தான் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டிருந்தார்கள்.

 

   
அவ்வாறு முற்றுகையிட்ட மக்களை பல நாடுகளில் தடை செய்யப்பட்டதும், பல நூறு டாலர்கள் பெறுமதியானதுமான கொரியத் தயாரிப்பான N 500–CS Gas Hand Grenade வகை கண்ணீர்ப் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தி அரசாங்கம் தாக்கியது. 2019-2020 காலப்பகுதியில் சிலியிலும், 2020 இல் போர்ட்லன்டிலும் பயன்படுத்தப்பட்ட இந்த வகை கண்ணீர்ப் புகைக்குண்டுகளால் பெரும்பாலானோர் பார்வையிழந்துள்ளதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன. இலங்கையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வேளையில் பலரும் உடனடியாக மயங்கி விழுந்ததைக் காண முடிந்தது. இந்த வகைக் குண்டுத் தாக்குதல்களால் தோலில் கடுமையான எரிச்சல்களோடு ஆழமான காயங்களும், கண் பார்வையிழப்பு, சுவாசப் பிரச்சினை, மண்டையோட்டில் எலும்பு முறிவுகள் போன்றவையும் ஏற்படுவதனால் திடீர் மரணங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்திருப்பதோடு, குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் நீண்ட கால பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்திருக்கிறது.

    மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுகள், மருந்துகள், எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, பொதுமக்களின் பட்டினியைப் போக்குவதற்காக வெளிநாடுகள் வழங்கும் நிதியுதவிகளை இவ்வாறாக இரும்பும், உருக்கும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளும் கொள்வனவு செய்வதற்காகவா செலவழிக்க வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்ததோடு, பொதுமக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரியும் மறுநாள் மே மாதம் ஆறாம் திகதி நாடு முழுவதும் ஹர்த்தால் நடைபெற்றது. நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தமது வீடுகளுக்குள் முடங்கி இந்த ஹர்த்தாலில் பங்கேற்றார்கள். சர்வதேச அல்ஜசீரா தொலைக்காட்சி சேவையானது, ‘ராஜபக்‌ஷேக்களைத் துரத்த மொத்த இலங்கை மக்களும் வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள்’ என்று இந்த ஹர்த்தாலைக் குறித்து தெரிவித்ததைத் தொடர்ந்து சர்வதேச ஊடகங்களில் பிரதான செய்தியாக இந்த ஹர்த்தால் மாறியிருந்தது.

    அதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக நாடு முழுவதும் அவசர கால சட்டத்தை அமுல்படுத்திய நிலையிலேயே மஹிந்த ராஜபக்‌ஷ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால், இந்த ராஜினாமாவுக்கு முன்பாக, தனக்கு இப்போதும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்ட, ஆட்களைத் திரட்டி கொழும்பு, கண்டி போன்ற பிரதான நகரங்களில் அவர் செய்துள்ள ஒரு காரியத்தை காலத்துக்கும் மக்கள் மறக்க மாட்டார்கள்.


    
அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு சில மணித்தியாலத்துக்கு முன்பு, தனது கட்சியைச் சேர்ந்தவர்களையும், தனது ஆதரவாளர்களையும் சந்தித்து பிரதமராக தனது இறுதி உரையை ஆற்றியதோடு அதில் இன்று தான் மிக முக்கியமான ஒரு தீர்மானத்தை எடுக்கப் போவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து அரசாங்கத்துக்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். பேரூந்துகளும், வாகனங்களும் எரிக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்களின் இருப்பிடங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் நிலவும் இவ்வாறான கலவரச் சூழல் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஏற்பாடு என்றும், அதனால் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறே அமைதியான பொதுமக்கள் போராட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்கள் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவும் தெரிவித்திருக்கிறார்.

    இவ்வாறாக, பொதுமக்களுக்கு எதிராக எவ்வளவுதான் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதிலும் இன்று தைரியமாகப் போராடிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் மூலமாக ஒரு உண்மை வெளிப்பட்டிருக்கிறது. சர்வாதிகாரம் மீதும், இலங்கையைத் தீவிரவாதத்திலிருந்தும், யுத்தங்களிலிருந்தும் மீட்டதாக மார்தட்டிக் கொண்டிருக்கும் ‘ராஜபக்‌ஷேக்கள்’ எனும் அரசியல் குடும்பத்தின் மீதும் பொதுமக்களுக்கு இருந்த பேரச்சத்தை கடந்த பல மாதங்களாக இலங்கையில் உக்கிரமடைந்துள்ள நிதி நெருக்கடியும், இவ்வாறான தாக்குதல்களும் முழுவதுமாக நீக்கியிருக்கின்றன என்பதுவே அது.

 

   
பயம் நீங்கிய பொதுமக்கள் புதிய அரசியல் உத்வேகத்தையும், வலிமையையும் தற்போது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாகத் திரண்டெழுந்து பலம் வாய்ந்த அரசாங்கத்துக்கும், அதிகாரத்துக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் அத்திவாரத்தையே அசைக்க அவர்களால் முடிந்திருக்கிறது. இவ்வாறாக அரசியல்ரீதியாக சுறுசுறுப்பாகவும், விழுப்புணர்வோடுமுள்ள குடிமக்களையே ஜனநாயகத்தின் நிஜ ஆதாரமாகவும், உரிமையாளர்களாகவும் குறிப்பிடலாம். உண்மையில் தமது வாக்குகள் மூலம் பாராளுமன்றத்துக்கு ஆட்சியாளர்களை அனுப்பும் அவர்கள் வெறும் வாக்காளர்கள் மாத்திரமல்ல. வாக்களிப்பதோடு, நாட்டின் அரசியலில் பங்குகொள்ளும் உரிமையையும் அவர்கள் இவ்வாறாகக் கோருகிறார்கள். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் தமது கடமையைச் செய்யத் தவறும்போது தைரியமாகவும், நேரடியாகவும் அதனைத் தட்டிக் கேட்டு, பதவி விலகுமாறு அவர்களைக் கோருகிறார்கள்.

    அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை மீதான விவாதத்தை இன்று புதன்கிழமை நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், இந்த வாரம் பிரதமர் பதவி வெற்றிடமாவதைத் தொடர்ந்து உடனடியாக அமைச்சரவையும் கலைவதோடு, அனைத்து அமைச்சுப் பதவிகளும் கூட செயலிழந்து விடுகின்றன. ஆகவே புதிய பிரதமர் ஒருவரின் கீழ், புதிய அமைச்சரவையொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டியிருக்கிறது. வரலாற்றில் பதியப்படப் போகும் மாபெரும் அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்தியவாறு இலங்கையின் மக்கள் எழுச்சிப் போராட்டம் முதன்முறையாக இப்போது ஒரு விடியல் கீற்றைக் கண்டிருக்கிறது.


______________________________________________________

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 10.05.2022



கட்டுரையை ஒலி வடிவில் கேட்க





Thursday, May 5, 2022

இலங்கையில் தமிழில் பாட அனுமதி மறுக்கப்பட்டுள்ள தேசிய கீதம் - எம். ரிஷான் ஷெரீப்

 

   
இலங்கையின் தேசிய கீதத்துக்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது. 1951 ஆம் ஆண்டு முதல், அமைச்சரவையால் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசிய கீதத்தை புகழ்பெற்ற இந்தியக் கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிக் கொடுக்க, அவரது சாந்தி நிகேதனில் கல்வி கற்ற இலங்கையைச் சேர்ந்த சிங்கள இசைக்கலைஞரான ஆனந்த சமரகோன் சிங்களத்தில் மொழிபெயர்த்தார். 1952 ஆம் ஆண்டில் அந்தப் பாடல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அறிஞரும், பண்டிதருமான புலவர் மு.நல்லதம்பியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அன்று முதல் பாடப்பட்டு வந்த அந்தத் தேசிய கீதத்துக்கு 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க ஆட்சியில் எதிர்ப்பு கிளம்பியது.

    நாட்டில் அரசுக்கு எதிரான அரசியல் ஊர்வலங்கள், தொழிலாளர் வேலை நிறுத்தங்கள், இனவாத கலகச் செயற்பாடுகள், வெள்ளம், மண் சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஆகியவை தோன்றும்போதெல்லாம் அவை அனைத்துக்கும் காரணம் ‘நமோ நமோ மாதா’ என்று தொடங்கும் அந்தப் பாடல்தான் எனும் நியாயமற்ற கருத்தொன்று தலை தூக்கியிருந்தது. தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்குப் பிறகு 1961 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதமானது, 'ஸ்ரீலங்கா மாதா' என வரிகள் மாற்றப்பட்டே பாடப்பட்டது. இதைக் குறித்து மிகுந்த கவலைக்குள்ளாகியிருந்த ஆனந்த சமரகோன் பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மரணிப்பதற்கு முன்னர் Times of Ceylon பத்திரிகைக்கு கட்டுரையொன்றை எழுதியிருந்த அவர் அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

    'தேசிய கீதத்தின் தலை அறுத்துப் போடப்பட்டுள்ளது. அதன் காரணமாக பாடல் அழிந்தது மாத்திரமல்லாமல் பாடலாசிரியனின் ஜீவிதமும் அழிந்து போயுள்ளது. நான் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகியிருக்கிறேன். என்னைப் போன்றதொரு நேர்மையான இசைக் கலைஞனுக்கு இவ்வாறானதொன்றைச் செய்த நாட்டில் இனிமேலும் வாழ வேண்டியிருப்பது மிகவும் துரதிஷ்டமானது. இதை விடவும் மரணம் சுகமானது.'

    இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், பல்லாயிரக்கணக்கான மக்களின் போராட்டத்தினிடையே இன்று தேசிய கீதம் பற்றி எழுத நேர்ந்ததற்குக் காரணம் இருக்கிறது. கடந்த 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கடற்கரை போராட்டத் திடலில் பல்லாயிரக்கணக்கான போராளி மக்களின் பேராதரவோடு தேசிய கீதமானது தமிழில் பாடப்பட்டது. மக்களின் முன்னிலையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதைக் கேட்டதும், அதைப் பாட வேண்டாம் என்று ஒரு பௌத்த பிக்கு அந்த இடத்தில் தனது எதிர்ப்பினைத் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்த முற்பட்டார். உடனடியாக செயற்பட்ட அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பிக்குவிற்கு பல விடயங்களைத் தெளிவுபடுத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். ‘நாம் ஒரு தாய் மக்கள், அன்பால் சகல பேதங்களையும் இல்லாதொழிப்போம்’ என்ற அர்த்தம் கொண்ட தேசிய கீதத்தைச் சிங்கள மொழியில் பாடியவாறே தமிழ் பேசும் மக்களைத் தமது தாய்மொழியில் அதைப் பாட விடாமல் செய்வது என்னவிதமான அறம் என்பது அந்த பௌத்த பிக்குவுக்கும், தமிழில் பாடுவதை எதிர்க்கும் பெரும்பாலானோருக்கும் தெரியவில்லை.


    பல தசாப்த காலமாக, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற சுதந்திர தின விழாக்களிலும், ஏனைய தேசிய நிகழ்வுகளிலும், உத்தியோகபூர்வ விழாக்களிலும் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டிருக்கிறது. இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மை இனத்தவர்களாக இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரைக் குறிப்பிடலாம். இந்தத் தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வசிக்கும் பிரதேசங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் தேசிய கீதமானது எப்போதும் தமிழிலேயே பாடப்பட்டு வந்தது.

    இதை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விரும்பவில்லை. எனவே 2010 ஆம் ஆண்டு அவரது ஆட்சியில், அமைச்சரவை அறிக்கை மூலமாக தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை செல்லுபடியற்றதாக்கி சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதத்தைப் பாடத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. மஹிந்த ராஜபக்‌ஷவின் அந்த முடிவை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி வன்மையாகக் கண்டித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

    அதன் பிறகு 2015 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்‌ஷவிடமிருந்தும், தனது கட்சியிலிருந்தும், இனவாதிகளிடமிருந்தும் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் வழங்கி தேசிய கீதத்தைத் தமிழில் பாட அனுமதி வழங்கினார். தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ மீண்டும் தேசிய கீதத்தை இலங்கையின் இரண்டாவது தேசிய மொழியான தமிழ்மொழியில் பாடுவதை முழுமையாகத் தடை செய்தார்.



    ஒருவரால் தனது தாய் நாட்டின் மீதுள்ள இயல்பான அபிமானத்தின் அடிப்படையில், அதை நிர்ணயிக்கும் விதமாகப் பாடப்படும் தேசாபிமான உணர்வுகளைக் கொண்ட பாடலாக ஒரு நாட்டின் தேசிய கீதத்தைக் குறிப்பிடலாம். இலங்கையில் தேசிய ரீதியாக ஏதேனும் வைபவங்கள் நடைபெறும்போதெல்லாம் தேசிய கீதம் பாடப்படுவது வழமையாகவிருக்கிறது. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே அர்த்தத்தைக் கொண்ட தேசிய கீதம் உள்ள போதிலும், அவ்வாறான நிகழ்வுகளில் சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததுமே உத்தரவிட்டமை தமிழ் பேசும் மக்களின் மனம் நோகக் காரணமாயிற்று. இலங்கையில் தேசிய கீதத்தை விடவும், அது பாடப்படும் மொழிக்கேற்பவே நாட்டின் அமைதி, சமாதானம், தேசிய ஒற்றுமை ஆகியவை நிலைத்திருப்பதான ஜனாதிபதியின் நம்பிக்கை அதன் மூலமாக வெளிப்பட்டிருந்தது.

    நாட்டின் ஜனாதிபதியேயானாலும், கௌரவத்துக்குரிய பௌத்த பிக்குவேயானாலும், இவ்வாறான இனவாதக் கருத்தைக் கொண்டவர்களாக அவர்கள் இருக்கும்போது அவர்களுக்கு எதிராக பொதுமக்கள் தற்போது வெகுண்டெழுந்துள்ளமை இங்கு பாராட்டத்தக்கது. தமிழ் பேசும் சிறுபான்மை இனத்தவர்கள் தமது தாய்மொழியில் தேசிய கீதத்தைப் பாடுவதைத் தடுப்பது என்பது அவர்களது உரிமைகளைப் பறித்தெடுத்து அவர்கள் மீது பிரயோகிக்கும் அடையாளத் தாக்குதலாகும். இந்த நாட்டில் அவர்களுக்கு உரிமையில்லை என்று பலவந்தமாக, நாட்டை விட்டுப் போகச் சொல்லும் தூண்டுதலாகும்.

    இந்த மக்கள் எழுச்சி போராட்டத்தின் முடிவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு புதியதொரு ஆட்சி அமைக்கப்படும்பொழுது தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதற்கான உறுதியானதும், நிரந்தரமானதுமான தீர்மானம் எட்டப்பட வேண்டும். அனைவரும் போராடிப் பெறும் அந்த வெற்றியில் தமிழ் பேசும் மக்களின் மிகப் பெறுமதியான உரிமைகளில் ஒன்றான இந்தத் தீர்வானது, காலாகாலத்துக்கும் எவராலும் மாற்றப்பட முடியாத ஒன்றாக எப்போதும் இருத்தல் வேண்டும்.

______________________________________________________

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 03.05.2022