புனிதமான துல்-கஃதா மாதத்தில் நாம் இருக்கிறோம். இப்பொழுது, நம்மில் பலரும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லத் தயாரானவர்களாக இருப்போம். நம்மைச் சார்ந்தவர்கள், உறவினர்கள், அயலில் உள்ளவர்கள், ஊர்வாசிகள் என புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லக் கூடியவர்களை வழியனுப்பி வைக்கக் கூடியவர்களாகவும் இருப்போம். அறிந்தோ, அறியாமலோ தாம் பிறருக்கு இழைத்திருக்கும் குற்றங்களுக்காக, ஏழையோ, தம்மை விடவும் வசதி குறைந்தவர்களோ, தமக்குக் கீழே பணி புரியும் ஊழியர்களோ அவர்களுடனான கோபதாபங்களை மறந்து, அவர்களைத் தேடிப் போய் நேரில் சந்தித்து, அவர்களிடம் தாம் செய்த குற்றங்களை மன்னித்துக் கொள்ளக் கேட்டு, இன்முகத்தோடு விடைபெறச் செய்து மனிதர்களிடையே ஒற்றுமையையும், உறவினையும் பலப்படுத்தும் புனித மாதமிது.
இம் மாதத்தில் மேற்கொள்ளப்படும் ஹஜ் கடமையானது பர்ழான ஹஜ், சுன்னத்தான ஹஜ் என இரு வகைப்படுகிறது. உடலாலும் பொருளாலும் சக்தி பெற்றவருக்கு வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் கடமையை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகும். ஒன்றுக்கு மேலதிகமாகச் செய்யும் ஹஜ் எல்லாம் சுன்னத்தான ஹஜ்ஜுக்குள் வகைப்படுத்தப்படும். இதற்கு இஸ்லாமியச் சட்டத்தில் எந்தத் தடையுமில்லை.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல், இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புஹாரி - 1819, 1820)
ஹதீஸ்கள் ஹஜ் செய்வதன் சிறப்பை வலியுருத்திக் கூறுகின்றன. எனவே இக் காலகட்டத்தில் முன்பை விடவும் அதிகமான அளவு மக்கள் ஹஜ் கடமைக்காக ஒன்று கூடுகிறார்கள். ஹஜ்ஜுக்காக மட்டுமல்லாது உம்ராவை நிறைவேற்றுவதற்காகவும் அதிகளவான மக்கள் தமது பிரயாணத்தை மேற்கொள்கிறார்கள். 'ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஒன்று கூடும் மக்களில், சரி பாதியிலும் குறைந்த சதவீத அளவு மக்களே தமது முதல் ஹஜ்ஜை நிறைவேற்ற வருபவர்கள்; ஏனையோர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஹஜ்ஜை நிறைவேற்ற வருகை தருபவர்கள்' என ஆய்வு அறிக்கை கூறுகிறது.
இது பிழையென்றோ தவறான செயலென்றோ கூற வரவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ்ஜைச் செய்யவெனச் செல்கிறவர் மஹ்ரமாக (ஒரு பெண்ணுக்கு வழித் துணையாக), வழிகாட்டியாக, மருத்துவராக இப்படியான அவசியத் தேவையின் காரணமாகச் செல்லலாம். ஆனால் 'நான் ஐந்து தடவை ஹஜ் செய்திருக்கிறேன்..நான் பத்துத் தடவை ஹஜ் செய்திருக்கிறேன்' என்று பெருமை பேசிக் கொள்பவர்களும், அதற்காகவே பல இலட்சங்களைச் செலவழித்து ஹஜ்ஜைப் பல தடவைகள் நிறைவேற்றுபவர்களும் கூட நம் சமூகத்தில் இருக்கிறார்கள் இல்லையா?
நமது நாட்டிலிருந்தும், ஊரிலிருந்தும் கூட இவ்வாறு பல தடவைகள் ஹஜ்ஜை நிறைவேற்றப் புறப்பட்டுச் செல்வோர் அனேகர் நம்மில் இருக்கிறோம். நாம் வசிப்பது செல்வந்த நாடொன்றல்ல. நம்மைச் சூழ்ந்திருக்கும் நமது சகோதரர்கள் எல்லோருமே அவர்களது ஹலாலான எல்லாத் தேவைகளும் நிறைவேற்றப்பட்ட சௌபாக்கியங்கள் நிறைந்தவர்களல்லர். நாட்டில் அகதிகளாக்கப்பட்ட, அனாதைகளாக்கப்பட்ட, இடம்பெயர்ந்த அநேக மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களது நிறைவேற்றப்படாத பல தேவைகள் இன்னும் இருக்கின்றன. நம் தேசமானது ஒவ்வொரு வருடமும் வெள்ள அபாயத்தாலும், மண் சரிவுகளாலும், காற்றினாலும், கோடையினாலும் அழிவுக்குள்ளாகிக் கொண்டே வருகிறது. நமது மக்கள் இவற்றால் பெரும் துயரடைகிறார்கள். அவர்களது துயரங்களுக்கு மத்தியிலிருந்து நாம் ஸுன்னத்தான ஹஜ் கடமையைச் செய்யச் செல்கிறோம்.
நம்மைச் சுற்றிலும் அன்றாட சீவனத்துக்கே வழியற்றுப் போன வறியவர்கள் இருக்கிறார்கள். சொந்த வீடுகளின்றி வாடகை வீடுகளில் வசித்து, வாடகை கொடுக்க இயலாது கஷ்டப்படும் ஏழைகள் இருக்கிறார்கள். ஹலாலான தேவைக்காகக் கடன் வாங்கி, அதை மீளச் செலுத்திக் கொள்ள வழியற்றவர்கள் இருக்கிறார்கள். தமது பிள்ளைகளின் திருமண வயது தாண்டியும் திருமணம் செய்து வைக்க வசதியில்லாத பெற்றோர்கள் இருக்கிறார்கள். நல்ல திறமையிருந்தும், நன்றாகக் கற்கும் ஆர்வமிருந்தும் உதவி செய்ய ஒருவருமின்றி சிறு வயதிலேயே சிறு சிறு கூலிவேலைகளில் இறங்கிவிடும் சிறுவர்களும், இளைஞர்களும் நிறைந்திருக்கிறார்கள். மருத்துவ வசதியற்ற நோயாளிகள், இன்னும் அநாதைகள் இருக்கிறார்கள். நம்மை அண்டிப் பிழைக்கும் எளிய ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களது பெருமூச்சுகளுக்கு மத்தியிலிருந்து நாம் மீண்டும் மீண்டும் ஹஜ்ஜுக்காகச் சென்று கொண்டேயிருக்கிறோம்.
ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ்ஜினை நிறைவேற்ற, ஒருவர் தயாராகிச் செல்லும் வரையிலும், சென்று திரும்பும் வரையிலும் எத்தனை இலட்சங்கள் பணம் செலவு செய்யப்படுகிறது? இந்த வருடமும் ஹஜ் செய்யத் தீர்மானித்ததன் பின்னர் வீட்டுக்கு வந்துசெல்லும் உறவுகளுக்கான விருந்துபசாரங்களாகட்டும், ஹஜ்ஜை முடித்து விட்டுத் திரும்பி வருகையில் குடும்பத்தினர், நண்பர்களுக்காக வாங்கி வரப்படும் அன்பளிப்புப் பொருள்களாகட்டும், கணக்கற்ற பணம் செலவழிக்கப்படுகிறது அல்லவா?
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன்னோரு காலத்தில்) ஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன் எனக் கூறிக் கொண்டு (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து (தெரியாமல்), ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், இன்றிரவு திருடனுக்குத் தர்மம் வழங்கப்பட்டுள்ளது எனப் பேசிக் கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், அல்லாஹ்வே! உனக்கே சகல புகழும். (நாளை) நான் தர்மம் செய்வேன் என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளி வந்து அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார். மறுநாள் காலை மக்கள், இன்றிரவு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பேசினர். (இதைக் கேட்ட) அவர் அல்லாஹ்வே! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே சகலப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்! எனக் கூறினார். (மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளிவந்து ஒரு பணக்காரனின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், பணக்காரருக்கு ஸதகா கொடுக்கப்பட்டள்ளது எனப் பேசினர். உடனே அவர், அல்லாஹ்வே! திருடனிமும் விபச்சாரியிடமும் செல்வந்தனிடமும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் எனக் கூறினார். அப்போது ஒரு(வான)வர் அவரிடம் வந்து, நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைவிட்டுத் திருந்தக் காரணமாகலாம். விபச்சாரிக்கு நீ கொடுத்த தர்மம் அவள் விபச்சாரத்திலிருந்து விடுபடக் காரணமாகக் கூடும். செல்வந்தனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் கூடும்" எனக் கூறினார்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புஹாரி 1421)
மேலுள்ள ஹதீஸைப் பாருங்கள். எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ் தஆலா நமக்கு வழங்கியுள்ளவற்றிலிருந்து நாம் செய்யும் தர்மமானது இன்னுமொரு மனிதனின் நிலையை மாற்றக் கூடியது. அவனைத் துன்பத்திலிருந்தும் விடுவிக்கக் கூடியது. சுன்னத்தான ஹஜ்ஜுக்களுக்காக செலவாகும் இலட்சக்கணக்கிலான பணத்தினைக் கொண்டு எவ்வளவெல்லாம் செய்யலாம் பாருங்கள். வாழ்வில் ஒருமுறையேனும் பர்ழான ஹஜ்ஜைச் செய்யவேண்டுமென்ற ஆசையோடும் நிய்யத்தோடும் செல்ல வழியற்ற நம் உறவினர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு உதவலாம். ஹலாலான தேவைகளுக்காகக் கடன்பட்டு அதை மீளச் செலுத்திக் கொள்ளவியலாமல் தவிப்பவர்களை அதனிலின்றும் மீட்டு விடலாம். திருமணம் செய்ய வசதியில்லாமல் இருப்பவர்களுக்கு அதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். வசதியின்றி, கல்வியைப் பாதியில் விட்டவர்களுக்கு அவர்களுக்கான எதிர்காலத்துக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கலாம். நம்மை நம்பி நம்முடன், நமக்காக உழைக்கும் ஊழியர்களின் ஊதியத்தைச் சிறிதளவாவது அதிகரித்து விடலாம். ஏழை நோயாளிகளின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்படுபவர்களின் குடும்பத்துக்கு, அவர்களுக்குத் தெரிந்த கைத்தொழிலொன்றைச் செய்யவோ, வேறு தொழிலுக்கோ பணத்தைக் கொடுத்துதவலாம்.
கட்டாயக் கடமையான ஸகாத்தை ஒழுங்காகக் கணக்கிட்டுக் கொடுக்காது, சுன்னத்தான ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் செல்லும் மனிதர்களும் நம் மத்தியில் இல்லாமலில்லை. இஸ்லாமானது கட்டாயக் கடமைகளை உதாசீனம் செய்துவிட்டு, சுன்னத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை வரவேற்கவில்லை. நமக்குக் கடமையான முதலாவது ஹஜ்ஜை ஒழுங்காக நிறைவேற்றிவிட்டோம். அதற்குப் பிறகும் அடுத்தடுத்த வருடங்களில் ஹஜ்ஜுக்குச் செல்லவும் ஆசை வருகிறது எனில், ஹஜ்ஜுக்குச் செல்லாமல் அதற்குச் செலவாகப் போகும் பணத்தில் தன்னைச் சூழவுள்ள இயலாதவர்களுக்கு உதவுவேன் என மேலதிக ஹஜ் செய்யப் போகும் ஒவ்வொருவரும் சிந்தித்து, அதனைச் செயற்படுத்தினால் நம்மைச் சூழ்ந்திருக்கும் எளியவர்களிடத்தில் எவ்வளவு நல்ல முன்னேற்றகரமான மாற்றங்கள் வரும், சிந்தித்துப் பாருங்கள்.
நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ' மனிதன் மரணமடைந்து விட்டால் அவனுடைய எல்லா அமல்களும் நின்று விடுகின்றன. மூன்று அமல்களின் பலாபலன்கள் மாத்திரம் இறந்த பின்னரும் நிரந்தரமாக மனிதனுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
1.எப்போதும் ஓயாமல் பலன் தரும் தர்மம் (ஸதகதுல் ஜாரியா)
2.பிரயோசனமளிக்கும் கல்வி
3. நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்
ஒரு மனிதன் மரணித்து விடும்போது அவரது செயல்களின் இயக்கமும் நின்று போய்விடுகிறது. அவரால் தொடர்ந்தும் நற்செயல்கள் செய்து நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அவர் கப்றாளியாக ஆன பின்பும் அவரது நன்மைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கும்படியான நற்செயல்கள்தான் மேற்குறிப்பிட்டுள்ள ஹதீஸில் உள்ளவை. பல தடவை ஹஜ் செய்யும் வசதி படைத்தவர்களின் பணத்தில் இவ்வாறாகக் கப்றிலும் நிரந்தரமாக நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடிய எத்தனை எத்தனை நல்ல விடயங்களைச் செய்துவிடலாம்? செய்ய முயற்சிப்போம், சிந்திப்போம் சகோதரர்களே !
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# விடிவெள்ளி வார இதழ் - 51 (21.10.2010)
4 comments:
மிகவும் தேவையான விடயத்தை, மிகச்சரியான நேரத்தில் பதிப்பித்திருக்கிறீர்கள் நண்பரே! தங்களுடைய இப்பதிவிற்கு மிக்க நன்றி! சம்பந்தப்பட்டவர்கள் இதை நன்குணர்ந்து, ஃபர்ளான ஹஜ்ஜுக்கடமையை நிறைவேற்றியபின்னரும் அவர்களிடம் மீதமிருக்கும் பொருட்செல்வங்களைக்கொண்டு, அவர்களுடைய மரணத்துக்குப்பின்னும் பயனளிக்கும் வகையிலான அறம் செய்து எல்லாம் வல்ல அள்ளாஹ்வின் பேரருளைப் பெற்றுக்கொள்ளட்டும்! ஆமீன்.
thank you very much for shearing with us,good job keep it up
அன்பின் செவத்தப்பா,
//மிகவும் தேவையான விடயத்தை, மிகச்சரியான நேரத்தில் பதிப்பித்திருக்கிறீர்கள் நண்பரே! தங்களுடைய இப்பதிவிற்கு மிக்க நன்றி! சம்பந்தப்பட்டவர்கள் இதை நன்குணர்ந்து, ஃபர்ளான ஹஜ்ஜுக்கடமையை நிறைவேற்றியபின்னரும் அவர்களிடம் மீதமிருக்கும் பொருட்செல்வங்களைக்கொண்டு, அவர்களுடைய மரணத்துக்குப்பின்னும் பயனளிக்கும் வகையிலான அறம் செய்து எல்லாம் வல்ல அள்ளாஹ்வின் பேரருளைப் பெற்றுக்கொள்ளட்டும்! ஆமீன்.//
உங்கள் பிரார்த்தனைகள் பலிக்கட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
//thank you very much for shearing with us,good job keep it up//
நன்றி நண்பரே !
Post a Comment