Monday, November 15, 2010

காலச்சுவடு இதழில் வெளிவந்திருக்கும் கடிதத்துக்கான பதில்

 (காலச்சுவடு, செப்டம்பர் 2010 இதழில் வெளிவந்திருந்த எனது  நீதிக்குத் தப்பும் காவல்துறை அநீதங்கள்  கட்டுரைக்கு மறுமொழியாக காலச்சுவடு, அக்டோபர் 2010 இதழில் வெளிவந்திருக்கும் கே.எஸ். முகம்மத் ஷுஐப்பின் கடிதத்துக்கான பதில் கடிதம்)

    'காலச்சுவடு' அக்டோபர் 2010 இதழில் சகோதரர் கே.எஸ். முகம்மத் ஷுஐப்பின் கடிதத்தைக் கண்டேன். அரச அடக்குமுறைகளுக்கு எதிராகவும், காவல்துறையினரின் அநீதங்களுக்கு எதிராகவும் எழுதப்படுபவற்றை தைரியமாக வெளியிடும் தமிழக நாளிதழ்கள் குறித்து அறியக் கிடைத்ததில் மகிழ்ச்சி. அவ்வாறானதொரு சுமுகமான நிலை இலங்கையில் இல்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தைப் பிரசுரித்திருந்த ஆனந்தவிகடன் இதழ்களை இலங்கையில் விற்ற ஒரே காரணத்துக்காக ஆனந்தவிகடன் இலங்கையில் தடைசெய்யப்பட்டதையும், விற்பனையாளர் கைது செய்யப்பட்டதையும் அறிந்திருப்பீர்களென்றே நினைக்கிறேன். அரசுக்கெதிராகவோ, ஆளுங்கட்சிக்கு எதிராகவோ, ஆட்சியாளர்களுக்கு எதிராகவோ, காவல்துறைக்கெதிராகவோ ஊடகங்களுக்கு ஏதாவது தெரிவித்தால், எழுதினால் அல்லது எழுதத் தலைப்பட்டாலே ஒருவர் கடத்தப்படுவதற்கும், கூண்டுக்குள் தள்ளப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் அதனைக் காரணமாகச் சொல்லலாம்.

    இதே அக்டோபர் இதழில், என்னால் மொழிபெயர்க்கப்பட்ட சிங்களக் கவிதைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்தக் கவிஞர்களில், இலங்கையில் யுத்தத்தால் நடைபெற்ற இனப்படுகொலையைக் குறித்தும் இராணுவத்தினருக்கு எதிராகவும் தனது படைப்புக்கள் மூலமாக பலமான எதிர்ப்பைத் தெரிவிக்கும் கவிஞர் மஹேஷ் முணசிங்க, தான் யாரென வெளிக்காட்டாமலேயே இணையத் தளங்களில் எழுதி வருபவர். எங்கிருந்து எழுதுகிறார்? என்ன செய்கிறார்? என யாருக்கும் தெரியவில்லை. அதனால் விட்டுவைக்கப்பட்டிருக்கிறார். பெண் கவிஞர் மாலதீ கல்பனா எம்ப்ரோஸ், ஒரு சமூக ஆய்வாளரும், சமூக சேவகியும் கூட. இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அநீதிகள் குறித்து யாழ்ப்பாணத்துக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வுகள் செய்து, அங்கு நடைபெறும் அநீதங்கள் குறித்து வெளிப்படையாக கவிதைகள், கட்டுரைகள் என இலங்கையின் பிரபல சஞ்சிகைகளில் அச்சமின்றி எழுதி வருபவர். இவர் அண்மையில் எழுதியுள்ள 'யாழ்ப்பாணத்திலிருந்து எழுதுகிறேன்' கவிதையானது பல எதிர்வினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. 'சுதந்திரம்' பற்றி கவிதை எழுதி விட்டுக் காணாமல் போயிருக்கும் ப்ரகீத் எக்னெலிகொட பற்றிச் சொல்லவேண்டும். பிரகீத் எக்னெலிகொட பற்றித் தெரிந்துகொண்டீர்களானால் அவரது கடத்தலுக்கான காரணம் என்னவென உங்களுக்கு நான் சொல்லாமலேயே இலகுவாகப் புரியும். ஏற்கெனவே தர்மரத்தினம் சிவராம், லசந்த விக்ரமதுங்க மற்றும் பல ஊடகவியலாளர்களது விதி தீர்மானிக்கப்பட்டது எதனாலென நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

    பிரகீத் எக்னெலிகொட - இரு குழந்தைகளின் தந்தையான இவர் இலங்கையின் சுயாதீன ஊடகவியலாளர்களில் ஒருவராக,  'லங்கா ஈ நியூஸ்' வலைத்தளத்தில் அரசியல் கட்டுரைகளை எழுதிவந்தவர். நாட்டின் மிக நெருக்கடியான சூழ்நிலைகளின் போதும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துப் பகிரங்கமாக பல நூறு கட்டுரைகளும் குறிப்புக்களும் எழுதியதால், தைரியமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரராகவும், வெளிப்படையான எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார்.  இவர் இறுதியாக எழுதிய கட்டுரையானது வெளியாகிய இரு மணித்தியாலங்களுக்குள் உலகம் முழுவதிலிருந்தும் கிட்டத்தட்ட ஏழாயிரம் வாசகர்களால் வாசிக்கப்பட்டுள்ளது எனில் இவரது எழுத்துக்களின் காத்திரத்தன்மை உங்களுக்குப் புரியும். இலங்கையிலிருந்து வெளிவரும் 'சியரட' பத்திரிகையின் ஆசிரியராக சில காலம் பணியாற்றிய இவரை இதற்கு சில மாதங்களுக்கு முன்பும் ஒரு முறை வெள்ளை வேனில் கடத்தி, இரும்புக் கொக்கியொன்றில் சங்கிலியால் கட்டி விசாரித்துப் பின் நடுவீதியில் போட்டுவிட்டுப் போயிருந்தார்கள். இவர், இறுதியாக நடந்த  ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளராகப் போட்டியிட்ட சரத் பொன்சேகா பற்றிய குறிப்புக்களோடு வெளியான '‘Secrets of winning a War’ எனும் ஆவணப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இலங்கையில் 'ஹோமாகம' எனும் பகுதியில் வசிக்கும் இவர் 'காணாமல் போயுள்ளமை' குறித்து இவரது மனைவி சந்தியாவால் முன் வைக்கப்பட்ட முறையீட்டை ஹோமாகம பொலிஸ் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறது. சந்தியா, வெலிக்கட, தலங்கம ஆகிய பகுதிகளிலிருக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் ஏறி இறங்கியிருக்கிறார். இது நடந்து இரு தினங்களின் பின்னர் இவர் பணியாற்றிய 'லங்கா ஈ நியூஸ்' வலைத்தளம் இடைநிறுத்தப்பட்டது. இந்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி இதன் ஆசிரியர் சந்தன சிரிமல்வத்த அரசியல் காரணங்களுக்காக கைதுசெய்யப்பட்டார். அத்தோடு இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளில் ஒருவரான கேபி அதாவது குமாரன் பத்மநாதன் தொடர்பான இரகசிய விசாரணைகளைப் பகிரங்கப்படுத்தி, அவ் விசாரணைகளுக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில், 'லங்கா' எனும் பெயரில் வெளியாகும் ஞாயிறு வார இதழை தடுத்து நிறுத்தியதோடு அதன் அலுவலகத்துக்கும் அரசால் சீல் வைக்கப்பட்டது. தேர்தல் காலத்தின் போது பிபிசியின் இலங்கை பெண் ஊடகவியலாளரான தக்ஷிலா தில்ருக்ஷி ஜயசேனவும் தாக்கப்பட்டு அவரது பதிவுபகரணங்களும் திருடப்பட்டன.

    இலங்கையில், ஊடகத்துறையில் நேர்மையாகப் பணியாற்றுபவர்களின் நிலைமை இவ்வாறுதான் இருக்கிறது. பேனாவையோ, கேமராக்களையோ, விரல்களையோ அநீதிகளுக்கெதிராக உயர்த்தும்வேளை அவர்களது தலைவிதிகளும் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. கடத்தப்படுவதும், காணாமல் போவதும், வதைக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதுமென பல இம்சைகள் இவர்களைத் தொடர்வதால், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்பவர்களைப் போல உயிருக்கு உத்தரவாதமின்றித்தான் இவர்கள் நடமாட வேண்டியிருக்கிறது. ஊடகவியலாளர்களை நண்பர்களாகக் கொள்ளவும் மக்கள் அஞ்சுகிறார்கள்.

    ஊடகவியலாளர் லசந்த படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் கழிந்த பிற்பாடும் அவரைக் கொலை செய்தவர்கள் யாரெனக் கண்டுபிடிப்பது அரசுக்கு இன்னும் சிரமமாக இருக்கிறது. அதுவும் பட்டப்பகலில், நடுவீதியில் வைத்து கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார்கள். கொலையாளிகள் இன்னும் உல்லாசமாகத் திரிந்துகொண்டிருக்கக் கூடும். அவர்களது அடுத்த இலக்கு தைரியமாக அநீதிகளை வெளிப்படுத்தும் இன்னுமொரு ஊடகவியலாளராக இருக்கலாம். இலங்கையில் மனித உரிமை எனப்படுவது மக்களாலோ, ஊடகங்களாலோ கேள்விக்குட்படுத்தப்படவும் உரிமை கோரவும் முடியாத ஒன்றாக இருக்கிறது. சர்வதேச வலைத்தளங்களான ஃபேஸ் புக், ட்விட்டர் மற்றும் சொந்த வலைப்பூக்கள் போன்றவற்றில் இலங்கையின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    இலங்கை ஜனாதிபதியின் செல்லப்பிள்ளையாகக் கருதப்படும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் அண்மைய நடவடிக்கைகளிலொன்று, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை பகிரங்கமாக எல்லோர் முன்னிலையிலும் மரத்தில் கட்டிவைத்தது. காரணம் டெங்கு ஒழிப்பு சிரமதானத்தில் அவர் கலந்துகொள்ளாதது. இத்தனைக்கும் அவர் தனது குழந்தைக்குச் சுகவீனமென்பதால் வைத்தியசாலைக்குச் செல்லவேண்டி அலுவலகத்துக்கு விடுமுறையை அறிவித்துவிட்டுத்தான் அன்றைய தினம் விடுமுறை எடுத்திருக்கிறார். அமைச்சரால் கோபத்தோடு மரத்தில் கட்டிவைக்கப்படுவதையும், அதற்கு தைரியமாக எதிர்ப்புத் தெரிவித்த பெண்ணொருவரை அமைச்சர் மிரட்டுவதையும் பதிவு செய்த காட்சியை நீங்கள் யூ ட்யூப் இணையத்தளத்தில் இப்பொழுதும் பார்க்கலாம். இதற்கு அரசின் நடவடிக்கை என்னவாக இருந்தது? அமைச்சரைக் கைது செய்தார்களா? இல்லை. பிற்பாடு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தி அரசுக்குக் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரை அப்பதவியிலிருந்து நீக்கினார். பிறகு வழக்குப் பதிவு செய்து விசாரித்து, அதில் அமைச்சர் குற்றமற்றவரென (மரத்தில் கட்டி வைத்து தண்டனை வழங்கப்பட்டது ஒரு நாடகமாகவும், பாதிக்கப்பட்டவரின் அனுமதியோடேதான் அமைச்சர் அவ்வாறு நடித்ததாகவும்) தீர்ப்பைச் சொல்லி அமைச்சருக்குத் திரும்பவும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. எல்லாம் அரசு நடத்தும் கண்துடைப்பு நாடகம்.

    அண்மையில் நடந்த இன்னுமொரு சம்பவத்தைக் கேள்விப்பட்டால் நீங்கள் ஆச்சரியத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகலாம். இலங்கை அரசுக்குச் சொந்தமான பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் சிலர், மாலை ஆறு மணிக்குப் பிற்பாடும் பல்கலைக்கழக வளாகத்தில் கதைத்துக் கொண்டிருந்த காரணத்தால், அங்கிருந்த மாணவிகளை, பல்கலைக்கழக ஆம்புலன்ஸில் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி,  அவர்களது கன்னித்தன்மையைப் பரிசோதிக்கச் சொன்னார் அப் பல்கலைக்கழக முதல்வர். அத்தோடு நிற்காமல் அவர்களது பெற்றோர்களிடம், அம் மாணவர்கள் குறித்து மிகக் கேவலமாகச் சொல்லியிருக்கிறார். பல்கலைக்கழக வளாகத்தில் நிழல் மரங்களின் கீழ் அமைக்கப்பட்டிருந்த சீமெந்து ஆசனங்களை உடைத்திருக்கிறார். கேட்டால், மாணவர்கள் காதலிப்பது தவறென்கிறார். அம் மாணவிகளின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். அந்த வைத்தியசாலை வைத்தியர்கள் அப் பரிசோதனையை மேற்கொள்ள மறுத்துவிட்டார்களெனினும், இலங்கை முழுதும் அம் மாணவிகள் குறித்த தவறான விம்பத்தைத் தீட்டியாயிற்று. வறுமைக்கும், ஆயிரம் பிரச்சினைகளுக்கும், கடினமான தேர்வுகளுக்கும் முகம் கொடுத்து பல்கலைக்கழக அனுமதி பெற்று, கல்வி கற்க வரும் அவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் எவ்வளவு அவமானம் ஏற்பட்டிருக்கும்? வேறு நாடுகளிலென்றால், மான நஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்திருப்பார்கள் இல்லையா? ஆனால் இலங்கையில் அவ்வாறில்லை. அம் முதல்வர், இன்னும் அப் பதவியிலேயே நிலைத்திருக்கிறார்.

    இலங்கையில் இவ்வாறுதான். அநீதங்கள் பகிரங்கமாக நடைபெறும். யாரும் எழுதத் தயங்குகிறார்கள். இலங்கையைப் பொறுத்தவரையில் நேர்மையான ஒரு ஊடகவியலாளர் உயிருடன் இருக்கவேண்டுமானால், அந்த மூன்று குரங்குகளைப் போல அநீதிகளைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு, மக்களின் குறைகளைக் கேட்காமல் காதைப் பொத்திக் கொண்டு, அநீதிகளையும், மக்களது பிரச்சினைகளையும் பற்றிப் பேசாமல் (எழுதாமல்) வாயை மூடிக் கொண்டு மௌனமாக இருப்பதே உசிதம். எனினும் புதிது புதிதாக லசந்தகள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள் எழுத்திலும், இறப்பிலும் ஒன்றுபோலவே !

    'காலச்சுவடு' பிரசுரிக்கும் இலங்கை சம்பந்தமான எனது கட்டுரைகளை இலங்கையிலிருந்து வெளியாகும் எந்த இதழும் பிரசுரிக்கத் தயங்குமென உறுதியாகவே கூறலாம். எனில், இலங்கையில் நடைபெறும் அநீதங்களை யார்தான் எப்பொழுது வெளிப்படுத்துவது? "ரிஷான் ஷெரீபுக்குத் தமிழக நாளிதழ்களை அனுப்பிவைத்தால், தாம் எழுதிய இலங்கைச் சம்பவம் ஒன்றுமே இல்லை என்பதை அவர் புரிந்துகொள்வார். " எனச் சொல்லியிருக்கிறீர்கள். தப்பில்லை. தமிழக இதழ்களில், உங்கள் தேசத்தில் நடைபெறும் எல்லா அநீதங்கள் குறித்தும் பகிரங்கமாக வெளிவருவதால் உங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கும். ஆகவே உங்கள் பார்வைக்கு இலங்கை, காவல்துறை அநீதங்கள் ஒன்றுமே இல்லாதவையாகத் தோன்றினாலும், நடைபெறும் அநீதங்களை காலச்சுவடு போன்ற தைரியமான இதழ்களிலும், எனது வலைத்தளங்களிலும் நான் பதிந்து வைக்கவே விரும்புகிறேன். ஏனெனில் என்றாவது நீதமான நல்ல தீர்ப்பு கிடைக்கக் கூடும் அல்லவா? நான் புனைப்பெயர் எதனையும் கூடப் பயன்படுத்துவதில்லை. இவ்வாறு எழுதுவதால் நான் அக் கட்டுரையில் சொன்னது போல அரசின், காவல்துறையின் அடுத்த பலி நானாகவும் இருக்கலாம். அஞ்சேன் !

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# காலச்சுவடு இதழ் 131, நவம்பர் 2010

4 comments:

Theruvilakku said...

Good Article... You are Sharing the Situation of The Sri Lanka...

But, In Mervin Silva's Case he is not a Rural Development Officer, He is a Samurdhi Development officer.... If you can Change it Rizan :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பருக்கு,

//Good Article... You are Sharing the Situation of The Sri Lanka...

But, In Mervin Silva's Case he is not a Rural Development Officer, He is a Samurdhi Development officer.... If you can Change it Rizan :)//

சமுர்த்தி, கிராம அபிவிருத்தியைத்தானே மேற்கொண்டு வருகிறது நண்பரே? இரண்டும் ஒன்றென்று நினைக்கிறேன். தவறெனில் சொல்லுங்கள்..திருத்தி விடலாம். :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

மன்னார் அமுதன் said...

அருமையாக கட்டுரைகளையும், கவிதைகளையும், மொழிபெயர்ப்புகளையும் சற்றும் தளராமல் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள்... உங்களை எண்ணி மிக்க மகிழ்ச்சியடைகிறேன் தோழரே... இன பேதமின்றி நீங்கள் எழுதும் எழுத்துக்கள் மகத்தானவை...

வாழ்த்துக்கள் தோழரே

M.Rishan Shareef said...

அன்பின் மன்னார் அமுதன்,
வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !