Wednesday, March 16, 2022

இருளுக்குள் சிக்கியிருக்கும் இலங்கை - எம். ரிஷான் ஷெரீப்

 உலக மக்களைப் போலவே கொரோனா தொற்று நோயால் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இலங்கை மக்கள் இன்னலுக்குள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தொற்று நோயிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க இலங்கை அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டது. பொதுமக்கள் அனைவரும் அவற்றுக்கு தமது அதியுயர் பங்களிப்பை வழங்கினார்கள். கொரோனாவைத் தொடர்ந்து இப்போது மிகப் பாரிய பொருளாதார நெருக்கடி இலங்கையில் உருவாகியிருக்கிறது. அரசாங்கத்தின் டாலர் கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளதுதான் இதற்குக் காரணம் ஆகும்.

 

எந்தளவு குறைந்திருக்கிறது என்றால், இலங்கைக்கு அத்தியாவசியமான எரிபொருட்களைக் கொள்வனவு செய்யக் கூட அரசாங்கத்திடம் டாலர்கள் இல்லை. அதனால்தான் நாட்டில் ஒரு நாளைக்கு ஏழரை மணித்தியாலங்கள் என மின்சார விநியோகத்தைத் தடை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி தற்போது அதை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த மின்சார விநியோகத் தடை காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் தினந்தோறும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து தனியாக விவரிக்கத் தேவையில்லை. குறிப்பாக பரீட்சைகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் முகம் கொடுக்க நேரும் இவ்வாறான அசௌகரியங்கள் அவர்களது எதிர்காலத்தையே பாதிக்கும்.

 

அவ்வாறே இலங்கையில் தமது உற்பத்திகளுக்காக மின்சாரத்தை நம்பியிருக்கும் தொழிற்சாலைகள் இயங்குவதில் சிக்கல்கள் தோன்றியுள்ளன. போக்குவரத்து, கைத்தொழில்கள், விவசாயம் போன்ற தொழிற்துறைகளில் உள்ள கருவிகளை இயக்கத் தேவையான எரிபொருட்கள் இல்லை. ஆகவே இவ்வாறான தொழிற்துறைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் பலரும் தமது வேலைவாய்ப்புகளை இழக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டின் காரணமாக இலங்கையில் பல உணவகங்களை மூட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. உணவகங்களின் உரிமையாளர்களைப் போலவே, அவற்றில் பணிபுரியும் சேவகர்களதும் வருமானம் இதனால் இல்லாமல் போயுள்ளது. சீமெந்து விலை அதிகரிப்பின் காரணமாக கட்டட கட்டுமான வேலைகள் பலவும் நின்று போயுள்ளமையால் அந்தத் தொழில்களில் ஈடுபடுபவர்கள் பலரும் தற்போது வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

 

    பெற்றோல், டீசல், சமையல் எரிவாயு, உணவுப் பொருட்களுக்கு மாத்திரமல்லாமல் மருந்துகளுக்கான தட்டுப்பாடு கூட இலங்கையில் பாரியளவில் நிலவுகிறது. பேரூந்து மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. காய்கறிகளின் விலைவாசியும் இப்போதும் உச்சத்திலேயே உள்ளது. அரிசி, கோதுமை மா உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களினதும், ஏனைய பொருட்களினதும் விலைகளும் மக்களால் எளிதாக வாங்கக் கூடிய விலைகளில் இல்லை. நாட்டில் அரசாங்க விலைக் கட்டுப்பாடு இல்லை. இடைத் தரகர்களே பொருட்களின் விலைகளைத் தீர்மானிக்கிறார்கள். நெல் ஆலை உரிமையாளர்கள்தான் ஊடகக் கலந்துரையாடல் நடத்தி அரிசி விலை குறித்து நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார்கள் எனும்போது நாட்டை ஆளும் கட்சி என்னதான் செய்கிறது என்ற கேள்வி எழுகிறது.

தற்போது இலங்கையில் நாட்டு மக்கள் அனைவரும் பகல் முழுவதும் தேவையான பொருட்களை வாங்குவதற்காக வரிசைகளிலும், இரவில் இருட்டிலும் காலம் கடத்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆண்களும் பெண்களும் பெற்றோல், டீசல், சமையல் எரிவாயு, பால் மா, பாண், அரிசி மற்றும் மருந்துகளுக்கான வரிசைகளில் காலை முதல் மாலை வரை பட்டினியோடும், எதிர்பார்ப்புகளோடும் காத்திருக்கிறார்கள். ஒரு பாணையோ, பால்மாவையோ பெற்றுக் கொள்ளக் கூட பல மணித்தியாலங்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவல நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. என்னதான் வரிசைகளில் காத்திருந்த போதிலும் அவற்றுக்கும் மிகுந்த தட்டுப்பாடு நிலவுகிறது

 

 

அரசாங்கம் விரைவில் மக்களுக்காக ஏதாவது செய்யும் என்ற நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் காத்திருந்த பொதுமக்களை மேலும் நெருக்கடியில் தள்ளும்விதமாக அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுத்தது. பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த நிதி அமைச்சகமும், இலங்கை மத்திய வங்கியும் இணைந்து அத்தியாவசியமற்ற 367 பொருட்களின் பட்டியலொன்றைத் தயாரித்தன. அந்தப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளரின் உரிய அனுமதியின்றி எந்தவொரு நபரினாலும், எந்தவொரு நாட்டிலிருந்தும் இலங்கைக்குள் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்படுவதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கணினிகள், மூக்குக் கண்ணாடிகள், கைக்கடிகாரங்கள், இசைக்கருவிகள், விளையாட்டுச் சாதனங்கள், இறைச்சி, மீன், பால், சாக்லெட், மா சார்ந்த தயாரிப்புகள், பழங்கள், துரித உணவுகள், மதுபான வகைகள், சிகரெட் மற்றும் புகையிலைத் தயாரிப்புகள், வாசனைத் திரவியங்கள், ஒப்பனை சாதனங்கள், சுகாதாரப் பொருட்கள், இறப்பர் மற்றும் தோல் சார்ந்த தயாரிப்புகள், பயணப் பைகள், நில விரிப்புகள், ஆடைகள், செருப்புகள், செரமிக் மற்றும் கண்ணாடி சார்ந்த தயாரிப்புகள், இலத்திரனியல் சாதனங்கள், வீட்டு மின் உபகரணங்கள், தளபாடங்கள்  போன்றவை அவற்றுள் அடங்கும் சில பொருட்களாகும்.

 

இந்த இறக்குமதித் தடையோடு இலங்கையில் கைபேசிகளின் விலையும் முப்பது சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அரசாங்கமானது மேலுள்ள பொருட்களை அத்தியாவசியமற்ற பொருட்களாகக் கருதிய போதிலும், இந்த நவீன உலகில் இவற்றுள் கணினியும், கைபேசியும் அத்தியாவசியப் பொருட்களாக எப்பொழுதோ மாறியாயிற்று. இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டாண்டு காலமாக, கொரோனா உக்கிரமாகத் தாண்டவமாடிக் கொண்டிருந்த காலப் பகுதியில் கணினி மற்றும் கைபேசி வழியாகத்தான் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள். இப்போதும் பெரும்பாலான வகுப்புகள் நிகழ்நிலை மூலமாகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில், மக்களின் அத்தியாவசியமான பொருட்களாக மாறியிருக்கும் மேற்குறிப்பிட்ட பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கும்போது நாட்டில் ஏற்கெனவே உள்ள இந்தப் பொருட்களின் விலை பெறுமளவு உயர்கிறது. இது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளையும் வெகுவாகப் பாதிக்கும்.

 

இந்த நிலைமையையும், தட்டுப்பாடுகளையும் சீரமைக்க இலங்கை அரசாங்கத்திடம் எந்தவொரு செயற்திட்டமும் இருப்பதை இதுவரை காண முடியவில்லை. மக்களை இந்தளவு கஷ்டத்துக்குள் தள்ளினால் எப்படி வாழ்வது என்பதுதான் பொதுமக்கள் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது. மக்கள் மீது சுமத்தியிருக்கும் இந்த நெருக்கடியிலிருந்து அவர்களைக் காப்பாற்ற தாம் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் மிகவும் வெளிப்படையாக மக்களுக்கு அறியத் தர வேண்டும் என்றபோதிலும், அவ்வாறான ஒன்று இதுவரை நடக்கவேயில்லை.

 

ஆசியாவில், பல இயற்கை வளங்களைக் கொண்ட இலங்கை எனும் அழகிய நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி, மிகவும் துயரமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. யார் தம்மை இந்த இக்கட்டிலிருந்து மீட்கப் போகிறார்கள் என்ற கேள்வியோடு இலங்கை மக்கள் தினந்தோறும் காத்திருக்கிறார்கள் வரிசைகளிலும், இருளிலும்.

 

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் - 16.03.2022




No comments: