இலங்கையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. எரிபொருட்களுக்காகவும், உணவுகளுக்காகவும், மருந்துகளுக்காகவும் பொதுமக்கள் நாளாந்தம் நீண்ட வரிசைகளில் பல மணித்தியாலங்களாகக் காத்திருக்க வேண்டிய நிலைமை தொடர்ந்தும் நீடித்திருக்கிறது.
சிறிய தனித்த தீவான இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த அதியுச்ச பொருளாதார நெருக்கடி, அதன் இயல்பு நிலையில் பெரும் தாக்கத்தைச் செலுத்தப் போவதை முன்பே கணித்த பொருளாதார வல்லுநர்கள் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அப்போது அரசுக்கு ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தார்கள். என்றபோதிலும், அரசியல் தலைமைகள் அந்த ஆலோசனைகளைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தன. அதன் பலனாக, இன்று பெருங்கடலில் பொருளாதார நெருக்கடி எனும் புயலில் சிக்கி ஓட்டை விழுந்த படகொன்றாக இலங்கை தத்தளித்து மூழ்கிக் கொண்டிருக்கிறது.
இந் நிலையில் ஒரு ஒழுங்கான பொருளாதாரக் கொள்கை வரைவை முன்வைக்காத வரை இலங்கைக்கு தற்போதைக்கு நிதியுதவி எதுவும் வழங்கும் எண்ணம் இல்லையென்று உலக வங்கி தெரிவித்திருக்கிறது. அதனால் வாரக் கணக்கில் நிதியமைச்சர் ஒருவர் இல்லாமலிருந்த இலங்கையில் அந்தக் குறையை நீக்க நிதியமைச்சர் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டிருக்கிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க. பதவியேற்றதுமே அவர், நாட்டின் செலவுகளுக்கு மேலும் ஒரு டிரில்லியன் ரூபாய்கள் பணத்தை அச்சிட வேண்டும் என்றும் எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பண வீக்கமானது நாற்பது சதவீதத்தைத் தாண்டும் என்றும் வாழ்வின் மிக மோசமான காலகட்டத்தை எதிர்நோக்க மக்கள் தயாராக வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, நாட்டில் வறுமை நிலையும், வேலை வாய்ப்பின்மையும் மேலும் அதிகரிக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மக்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்த போது அவர் எவ்வாறு பண வீக்கத்துக்குக் காரணமாக, தொடர்ச்சியாக பணத்தை அச்சிட்டுக் கொண்டிருந்தாரோ அதே வழியில்தான் தற்போதைய பிரதமரும், நிதியமைச்சருமான ரணிலின் பாதையும் இருக்கிறது. எனவே, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பிறகு பொருளாதாரத்திலும், தமது வாழ்க்கையிலும் ஏதேனும் முன்னேற்றம் உருவாகலாம் என்று மக்களிடம் காணப்பட்ட சிறிய எதிர்பார்ப்பும் கூட முழுவதுமாக தற்போது பொய்த்துப் போயுள்ளது.
இவ்வாறான நெருக்கடி நிலைமையில், இந்திய மக்களால் சேகரிக்கப்பட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அரிசி, பால்மா, மருந்துகள் உள்ளிட்ட 2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் இந்த வாரம் கொழும்பை வந்தடைந்தன. இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, மக்களிடம் பகிர்ந்தளிக்குமாறு கோரி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் அவற்றை மொத்தமாகக் கையளித்துள்ளார். ஏற்கெனவே 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான பொருளாதார உதவி உள்ளிட்ட நிறைய உதவிகளை இந்தியா செய்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ஜப்பான் அரசாங்கமும் உலக உணவுத் திட்டத்தின் ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. தற்போதைய நெருக்கடி நிலைமையில் இந்தியாவினதும், ஜப்பானினதும் இந்த உதவிகள் மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்திருக்கின்றன.
என்றாலும், இந்த உதவிகள் உரிய விதத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் போய்ச் சேருகிறதா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். ஏனெனில், இவ்வாறாக வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் பெரும்பாலான பொதுமக்களுக்குப் போய்ச் சேருவதில்லை. சுனாமி, கொரோனா சமயங்களிலும் பல்வேறு நாடுகளிலிருந்தும் வழங்கப்பட்ட நிதியுதவிகளும், பொருளுதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்பதை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. வழமையாக அமைச்சர்களுக்கும், உயரதிகாரிகளுக்கும் நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் இவ்வாறான உதவிகளில் ஒரு சிலவற்றைப் பகிர்ந்தளித்து, புகைப்படங்களெடுத்து ஊடகங்களுக்குக் கொடுத்து மொத்த உதவிகளையும் பகிர்ந்தளித்து விட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தந்த நாடுகளுக்கு அறிவிக்கிறார்கள். ஆனால், உண்மையில் உதவி தேவைப்படும் எளிய மக்களுக்கு அந்த உதவிகள் போய்ச் சேருவதில்லை.
ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் இந்திய உதவித் திட்டம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 11000 மெட்ரிக் டன் அரிசிக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இந்த மாதம் நடுப்பகுதியில் பொதுமக்கள் அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு தேடுதல்களை நடத்திய போது பல நூற்றுக்கணக்கான அரிசி மூட்டைகள், உர மூட்டைகள், எரிவாயு சிலிண்டர்கள் போன்றவை அந்த வீடுகளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
அடுத்த முக்கியமான விடயம், வழமையாக கொழும்பில் மாத்திரம் பகிர்ந்தளிக்கப்படும் இவ்வாறான உதவிகளைப் பகிர்ந்தளிக்கும் விவகாரத்தில் இலங்கையிலுள்ள அனைத்துப் பிரதேசங்களையும் அரசாங்கம் கவனத்தில் கொள்வது அவசியம். தலைநகரமான கொழும்பிலிருந்து மிகத் தொலைவிலிருக்கும் வறிய மற்றும் கஷ்டப் பிரதேசங்கள் நெடுங்காலமாக கவனத்திலேயே கொள்ளப்படாத பல பிரச்சினைகளாலும், நெருக்கடிகளாலும் சூழப்பட்டிருக்கின்றன. அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலைமையில், அவற்றில் காணப்படும் பஞ்சமும், பட்டினியும், மருந்துத் தட்டுப்பாடுகளும் பல வருடங்களாக நீடித்திருக்கின்றன. கணக்கில் வராத அளவுக்கு மந்தபோஷணம், பட்டினி மற்றும் மருந்தின்மையால் ஏற்படும் மரணங்களும் அப் பகுதிகளில் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
எனவே உதவிகள் தேவைப்படும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்கப்படாமல் தாம் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் அனைத்தும் பகிரப்படுகின்றனவா என்பதை, உதவியளித்த நாடுகள் கண்காணிப்பதில் தீவிரமாக இருக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் தமக்கு ஏதேனும் உதவிகள் செய்யும் என்ற மக்கள் நம்பிக்கை முழுமையாக அற்றுப் போயுள்ள நிலையில், மக்களின் இறுதி எதிர்பார்ப்பாக தற்போதைக்கு இவ்வாறான வெளிநாட்டு உதவிகளே உள்ளன. அவை ஒழுங்காகவும், நீதமான விதத்திலும் உரிய மக்களுக்குப் போய்ச் சேருவதிலேயே நிதியுதவிகளை அளித்த நாடுகள் குறித்த அபிமானமும், நல்லபிப்ராயமும் மக்கள் மத்தியில் தங்கியிருக்கிறது.
____________________________________________________
No comments:
Post a Comment