Tuesday, August 9, 2011

விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன?

அது 2009ம் வருடத்தின் நடுப்பகுதி. கிளிநொச்சியில் ஷெல் குண்டு மழை பொழிந்த காலம். 2008 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு முகங்கொடுத்த விஜிதா நால்வர் அடங்கிய குடும்பத்தின் மூன்றாமவள். அப்பொழுது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பிச் செல்லத் தேவையானவற்றைத் தயார்படுத்துவதற்காக அவள் அவசர அவசரமாக தனது தாய்க்கு உதவிக் கொண்டிருந்தாள்.

 தப்பிச் செல்வது ஷெல் குண்டுகளிலிருந்து காத்துக் கொள்வதற்காக மட்டுமல்லாது விடுதலைப் புலிகளின் கட்டளையை செயற்படுத்தாது விடின் வரும் ரீ56 குண்டுகளிலிருந்தும் காத்துக் கொள்ளத்தான். அதனால் பின்தொடரும் விடுதலைப் புலிகளின் மனிதப் பலிகடாக்கள் ஆகத்தான் விஜிதாவும் அவளது பெற்றோரும் கோண்டாவில் பிரதேசத்திலிருந்து விஷ்வமடு, முல்லைத் தீவு ஊடாக முள்ளிவாய்க்கால் வரை பயணித்தார்கள்.

விஜிதாவும் குடும்பத்தாரும் முள்ளிவாய்க்காலில் ஒரு மாதம் போலக் கழித்தார்கள். அதற்கிடையில் விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாகத் தோல்வியுற்றிருந்தது. அரசாங்கத்தின் இராணுவம் முழு வடக்கு பிரதேசத்திலுமே தனது பலத்தை நிரூபித்திருந்தது. அகப்பட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் அகதிமுகாம்களுக்கு அனுப்பப்படுவது ஆரம்பிக்கப்பட்டது. அவ்வாறு வரும் பயணத்தின் போது முக்கியமானதொரு நிகழ்வு நடந்தேறியது. அங்கு வந்த இராணுவம், இடம்பெயர்ந்த மக்களை ஒன்று சேர்த்து ஒரு நாளேனும் விடுதலைப் புலிகளோடு சம்பந்தம் வைத்திருந்தவர்கள் ஒரு புறம் நிற்கும்படியும் மற்றவர்கள் மற்றப்புறம் செல்லும்படியும் கட்டளையிட்டது. அங்கு, முக்கியமாக பெற்றோரிடம் பயப்பட ஏதுமில்லை எனவும் விசாரணைகளின் இடையில் பிள்ளைகள் நிரபராதிகள் எனில் திரும்ப அவர்களிடம் ஒப்படைப்பதாக தாம் உறுதி கூறுவதாக இராணுவத்தால் சொல்லப்பட்டது.

 அச் சந்தர்ப்பத்தில் தாய்மார்களாலேயே தங்கள் பிள்ளைகளுக்கு சரணடையுமாறு சொல்லப்பட்டது. அது அவர்கள் இராணுவம் சொன்னதில் நம்பிக்கை வைத்ததை விடவும், வேறு செய்ய வழியேதுமற்ற காரணத்தினால் செய்யப்பட்டதொன்றாக இருக்கக் கூடும். அத்தோடு 30 வருடங்களுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் அப் பிரதேசம் இருந்தமையால் எல்லோருக்குமே விடுதலைப் புலிகளுடன் ஏதேனுமொரு சம்பந்தம் இருக்கத்தான் செய்தது. விஷேடமாக இங்கு, அனேக இளைஞர் யுவதிகளின் வயதை விடவும் அதிகமான காலங்கள் அவர்களது ஊர்ப் பிரதேசங்கள் விடுதலைப் புலிகளாலேயே ஆளப்பட்டிருந்தது. கருணா அம்மான்கள் போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட சட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவரேனும் இயக்கத்தில் சேர வேண்டியிருந்தது. அந்த யதார்த்தத்துக்கு ஏற்ப ஓர் தினமேனும் விடுதலைப் புலிகளோடு தொடர்பு வைத்திருந்திருப்பது என்பது சாத்தியமே.

எவ்வாறாயினும் இன்று வரையில், அவ்வாறாக இராணுவத்தில் சரணடைந்தவர்கள் எவருமே திரும்பி வரவில்லை. அது பலரோ அல்லது சிலரோ எனச் சொல்வதற்கு அவசரமில்லையெனினும் அது குறித்து தேடிப் பார்க்க வேண்டும். இதுவரை தேடிப் பார்த்ததற்கு ஏற்ப கிளிநொச்சி கோண்டாவில் கிராமத்தில் மட்டும் பல இளைஞர் யுவதிகள் அவ்வாறு சரணடைந்த பிற்பாடு இன்னும் திரும்ப வரவில்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

 இது பாரதூரமான அநீதி எனச் சொல்லாதிருக்க முடியாது. யுத்தத்தின் போது காயமடைதல், மரணமடைதல் பொதுவானது என ஒருவரால் சொல்லலாம். எனினும் யுத்தத்தின் பிறகு பெற்றோரால் சட்ட ரீதியாக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இளைஞனொருவன் காணாமல் போவதென்பதை எவராலுமே ஏற்றுக் கொள்ளமுடியுமென நாம் எண்ணவில்லை. மேலே குறிப்பிட்ட விஜிதாவின் குடும்பத்தில் அவளை விடவும் மூத்த அண்ணனொருவரும் அக்கா ஒருவரும் இருக்கிறார்கள். அவர்கள் திருமணம் முடித்து வெளியேறிச் சென்றிருக்கிறார்கள். தாயுடனும் தந்தையுடனும் வீட்டிலிருந்தது விஜிதா மட்டுமே. வீட்டில் இளையவளான விஜிதாவுக்கு என்ன நடந்ததெனத் தெரியாமல் இன்று அவளது தாய் வீட்டின் முன்னிருந்து ஓலமிடுகிறாள். அது மட்டுமல்லாது முள்ளிவாய்க்காலிலிருந்து வந்த அவர்கள் இழந்திருந்தது தமது மகளை மாத்திரமல்ல. அகதி முகாமில் பல துயரங்களை அனுபவித்துவிட்டு வந்த அவர்களது வீடு கூட யாராலோ எரியூட்டப்பட்டிருந்தது. அப் பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆட்சி நிறைவுற்ற பிற்பாடே அது எரியூட்டப்பட்டிருக்கிறது.

 வடக்கின் பிரதேசங்கள் பலவற்றில் விடுதலைப் புலிகள் இயக்கம் வேறொரு ஆட்சி முறையை நடத்திச் சென்றது வரலாற்றில் திடீரென நடந்த ஒன்றல்ல. அது ஒழுங்கற்ற அரசியல் நிலைப்பாடுகள் பலவற்றின் தர்க்க ரீதியான பெறுபேறு. இன்று இது குறித்து நாங்கள் செவியுறுவது என்னவெனில் பிரபாகரன் எனும் அதிபயங்கரமான கலகக்காரரொருவரின் வீரமானது அரசன் ஒருவனால் அடக்கப்பட்ட விதம் குறித்த கதைகளையே. எனினும் வடக்கின் தமிழ்மக்கள் பானையிலிருந்து அடுப்புக்கு இழுத்துப் போடப்பட்டிருப்பதைக் காண்பதற்கு அங்கு செல்ல வேண்டும். தேசியத் தொலைக்காட்சியைப் பார்த்து அதனை அறிந்துகொள்ள முடியாது. எனவே சில கிழமைகளுக்கொரு முறை இக் குறிப்புக்களை எழுதுவது அப் பிரதேசங்களுக்குச் சென்று, அவர்களுடன் வசித்து, அவர்களது பிரச்சினைகளை எங்களது பிரச்சினைகளாக மாற்றிய பிற்பாடுதான் என்பதைக் கூறவே வேண்டும்.

பிள்ளைகளை இழந்த தாய்மார்களின் தம் பிள்ளைகள் குறித்த துயரங்கள் குறித்தோ, பிள்ளைகளை இழந்த காரணத்தால் அவர்கள் அழுது ஓலமிடும் விதங்கள் குறித்தோ நான் இங்கு எழுதவில்லை. அது ஏனெனில் அதைவிடவும் முக்கியமான விடயமொன்று இந் நிலைப்பாட்டில் இருப்பதன் காரணத்தால் ஆகும். அது என்னவெனில் இதற்குள் இருக்கும் பாரதூரமான அரசியல் தவறு. தமிழ் இளைஞர்கள் ஒருமுறை ஆயுதம் எடுத்தது அந்த அரசியல் தவற்றின் காரணமாகத்தான். மென்மேலும் அத் தவறானது மீண்டும் மீண்டும் செய்யப்பட்டால் அதன் அடுத்த பெறுபேறு தெளிவானது. அத் தவறு என்னவெனில் தமிழ் மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் துயரம். அன்று அத் துயரமானது இனவாதச் சட்டங்களைப் பிரயோகிப்பதன் மூலமும் அநீதமான மற்றும் சமமற்ற வாய்ப்புக்களும் உரிமைகளும் மூலமாக அவர்கள் மீது செயற்படுத்தப்பட்டிருந்தது. இன்று அதற்கும் மேலதிகமாக அவர்களது பிள்ளைகளை காணாமல் போகச் செய்வதன் மூலமும் வெறுமனே சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் மூலமும் தொடரச் செய்யப்பட்டிருக்கிறது.

 ஆகவே அரசாங்கமானது உடனடியாக காணாமல் போகச் செய்யப்பட்டிருக்கும் அத் தமிழ் அன்னையர்களின் பிள்ளைகளை தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞனின் போராட்டம் தவறான அத்திவாரமொன்றின் மீது அமைக்கப்பட்டிருந்த காரணத்தால், தமிழ் இனவாதத் தலைவர்களாலும் சர்வதேச சக்திகளாலும் அதனை பிரிவினை வாதத் தேவைகளுக்காக பாவிக்கப்பட்டதனால் தேசம் பிளவுபடுவதைத் தடுக்க வேண்டியிருந்தமை உண்மைதான். எனினும் அத் தவறை சீராக்குகையில் குருட்டுத்தனமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குவதற்கும், தமிழ் மக்களை தகர்த்து நசுக்கி விடுவதற்கும் அரசாங்கத்துக்கு இடமளிக்க முடியாது.

 - உதுல் ப்ரேமரத்ன 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 
 இலங்கை

நன்றி
# இனியொரு
# உயிர்மை
# ஊடறு
# பெண்ணியம்
# திண்ணை

Monday, August 8, 2011

புனித ரமழான் மாதத்தில் நாங்கள் இருக்கிறோம்


     ‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக் கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).
     புனித ரமழான் மாதத்தில் நாங்கள் இருக்கிறோம். ரமழான் வரும்போது இரவுகள் அமல்களால் விழிப்படைகின்றன. இருள் அகற்றப்பட்டு குர்ஆன் திலாவத்துக்களாலும், தொழுகைகளாலும், இஃதிகாப்களாலும்  நம் உள்ளும் புறமும் ஒளியேற்றப்படுகிறது. ரமழான் மாதம் வருகையில் நிறைய நன்மைகளை நாம் தேடிக் கொள்ளலாம் என மகிழும் அனேக இஸ்லாமியர்களைப் போலவே ரமழானின் இரவுகளை வீண் விளையாட்டுக்களிலும் வியாபாரங்களிலும் கழித்துவிடலாம் என எண்ணித் திளைப்பவர்களும் நம் மத்தியில் இருக்கிறார்கள். உண்மையில் சொல்லப் போனால் அனேக இஸ்லாமிய இளைஞர்கள் ரமழானின் இரவுகளை விளையாட்டிலேயே கழித்துக் கொண்டிருப்பதுதான் நிதர்சனம்.
     'எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக்கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், இப்னுமாஜா).
     அவரது  கூற்றினை உண்மையாக்குவது போலவே நடந்துகொள்ளும் அனேகரை நாம் ரமழானில் காணலாம். தொழுகையிலும், திக்ரிலும், இபாதத்களிலும் கழிக்கப்பட வேண்டிய ரமழானின் இரவுகள், தெருக்கள் தோறும் கும்மாளமிட்டுத் திரியும் சில இளைய சமுதாயத்தினரால் கேளிக்கைக்குரிய இரவுகளாக மாற்றம் பெறுகின்றன. ஏனைய மாதங்களில் இரவுவேளைகளில் இளைஞர்களை வெளியே இறங்கி நடமாட விடாத பெற்றோரிடமும், பாதுகாவலர்களிடமும் பள்ளிவாசலுக்குச் செல்வதாகப் பொய் சொல்லி வீட்டில் அனுமதி பெறும் இந்த இளைஞர்கள் செல்வது அல்லாஹ்வின் மாளிகைக்கல்ல. அதற்கு மாற்றமாக இளம்பெண்கள் தொழுகைக்காகச் செல்லும் இடங்களையும், துணிக்கடைகள், உணவுக் கடைகள் போன்ற இடங்களையுமே இவர்களது பாதங்கள் சுற்றி வருகின்றன.
     ரமழானின் புனித இரவுகளை இவ்வாறாக வீணாகக் கழிப்பவர்கள், உறக்கம் மிகுதியால் ஸஹருக்குப் பிறகு பர்ழான தொழுகையான சுபஹைக் கூடத் தொழாது தூங்கிவிடுகின்றனர். அஸர் நெருங்கும் வேளையில் விழித்தெழும் இவர்கள் நோன்பின் மாண்பையும், பசியையும் பெரிதாக உணர்வதே இல்லை. சிலருக்கு ஸஹர் கூட இல்லை. நோன்பும் பிடிப்பதில்லை. இஸ்லாம் எனும் உண்மையானதும் உன்னதமானதுமான மார்க்கம் நமக்குத் தந்திருக்கும் அருட்கொடைகளின் அற்புதமான மாதம், இவ்வாறாக வீணாகக் கழிவதை இவர்கள் உணர்வதுமில்லை. இவர்களுக்கு இதில் சிறிதும் வருத்தமும் இல்லை.
     இது போல நோன்பின் பகல்பொழுதைக் கழிக்கவென வீண்விளையாட்டுக்களிலும், தொலைக்காட்சிப் பெட்டியிலும், இசையிலும் சரணடையும் அனேக இஸ்லாமியர்கள் நம் மத்தியில் இருக்கின்றனர்.
     விசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (நோன்பு) விதிக்கப்பட்டுள்ளது, (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)
     (இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும், எனினும் (கடுமையான நோய் முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்கு பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், எனினும் எவரேனும் தாமாக அதிகமாகக் கொடுக்கிறாறோ அது அவருக்கு நல்லது, ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும், (என்பதை உணர்வீர்கள்- அல்குர்ஆன் 2:184)
     "பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை,” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா.
     பெருநாள் செலவுக்கென சூதாட்டங்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்களும், பெருநாளுக்கென ஆடைகளும் உணவுப் பொருட்களும் அதிகமாக விற்பனையாவதால் அவற்றில் பொய் கூறி ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்களும் நம் மத்தியில் இருக்கின்றனர். கருணை மிக்க அல்லாஹ் தஆலா, நோன்பாளிகளுக்கு எவ்வளவு சலுகைகள் வழங்கியிருக்கிறான். அவற்றைப் புறக்கணித்து நோன்பை வீணாகக் கழிப்பவர்கள் எவ்வளவு பெரும் பாவத்தைச் சுமப்பார்கள்? இவர்கள் ஒவ்வொருவரும் தாம் செய்யும் தவறுகளைத் தாமே உணர்ந்து திருந்தாமல் இருப்பின், இவர்களது வாழ்நாளில் எத்தனை ரமழான்கள் வந்து போனாலும் இவர்களது நடவடிக்கைகளில் மாற்றமேதுமிருக்காது.
     ரமழானில் நோன்பை முறித்துவிடக் கூடிய காரியங்களை சர்வசாதாரணமாகச் செய்துவிடும் அனேகர், நோன்பு முறிந்துவிடும் என்ற அச்சத்தில் நோன்பை முறித்துவிடாத ஹலாலான நிறைய காரியங்களை செய்யாதிருந்து விடுவதை நாம் நிறையக் காணலாம். உதாரணமாக 'நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடையானது அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்' என்ற ஹதீஸை தவறாகப் புரிந்துகொண்டு, நோன்பு நோற்றிருக்கும் நேரம் முழுதும் பல்துலக்காது இருந்து விடும் நோன்பாளிகள் பலர் உள்ளனர். இதனால் நோன்பு நோற்றிருக்கையில் பல் துலக்காதிருக்கும் இந் நோன்பாளிகளுடன் கதைக்க நேரும் ஏனைய வேற்று மதத்தவர்கள் நோன்பைப் பற்றியும் இஸ்லாமியரைப் பற்றியும் தவறாகப் புரிந்துகொள்வதுதானே நடக்கும்? இவ்வாறு நிறைய ஹதீஸ்களையும் நோன்பு குறித்த எண்ணக் கருவையும் பிழையாகப் புரிந்துகொண்ட காரணத்தால் தவறிழைப்பவர்கள் அனேகர்.
     இஸ்லாமிய வரையறைக்குள் அடங்காத ஆடைகளை அணியும் நாகரிகக் கலாசாரம் வெகுவேகமாகப் பரவிக் கொண்டிருக்கையில் அதையே பின்பற்றத் துடிக்கும் அனேக முஸ்லிம்களை இக் காலத்தில் மிக அதிகமாகக் காணக் கிடைக்கிறது. இவ்வாறே பெருநாள் நெருங்குகையில் கடைத் தெருக்களில் இரவு பகல் பாராது எப்பொழுதும் நம்மவர்கள் ஆண் பெண் பேதமற்று சுற்றித் திரிவதையும் காணலாம். நோன்பின் இறுதிப் பத்தில் ஆடை கொள்வனவுகளில் மிக மும்முரமாக ஈடுபட நேர்வதால் புனித  லைலதுல் கத்ர் இரவினைக் கூட கடைத்தெருக்களில் வீணாகக் கழிக்கிறார்கள் நம்மவர்கள்.
     'நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி(ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி(ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
     சாதாரண நாட்களை விடவும் ரமழானுடைய தினங்களில் கொடைகள் வாரி வழங்கப்படுகின்றன. பணத்தாலோ, தானியங்களாலோ தங்களால் இயன்ற அளவு வழங்குவதன் மூலம் நன்மைகளைக் கொள்ளையடித்துக் கொள்ளும் நிறையப் பேருக்கு மத்தியில் எதையுமே கொடுக்காமல் பதுக்கி வைத்துக் கொள்பவர்களும் இருக்கின்றனர். கொடுத்தால் குறைந்துவிடும் என்ற அச்சம் மிகைத்துச் செய்யும் அவர்களது இந் நடவடிக்கைகள் தவறானது என எடுத்துச் சொல்பவர்கள் யார்?
     இவ்வாறு இஸ்லாத்தை நன்கு புரிந்தும் இறையச்சம் இல்லாததன் காரணத்தால் பாவம் செய்பவர்களுக்கும், இஸ்லாத்தைத் தவறாகப் புரிந்துகொள்வதன் காரணமாக தவறிழைப்பவர்களுக்கும், மூட நம்பிக்கைகளின் காரணத்தால் பிழை செய்பவர்களுக்கும் உண்மையை எடுத்துரைப்பதுவும் நன்மையின் பக்கம் அவர்களை ஈர்ப்பதுவும் அவர்களதும் எமதும் நல்வழிக்காகப் பிரார்த்திப்பதுவும் நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இன்ஷா அல்லாஹ், இப் புனித ரமழானில் நாம் அதைச் செய்ய எல்லாம் வல்ல நாயன் அருள் புரியட்டும் !
- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
நன்றி
# விடிவெள்ளி 04.08.2011

Monday, August 1, 2011

யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்

எனது சிறுவயதில் சிங்கள தமிழ் புத்தாண்டானது, அயலவரும் நாமும் மிகவும் எதிர்பார்த்திருக்குமொன்றாக அமைந்திருந்தது. அப் புத்தாண்டுக் காலத்தில் நாம் சீட்டு விளையாடுவோம். பேட்மிண்டன் போட்டிகளை நடத்துவோம். புத்தாண்டு தினமானது எங்கள் அனைவருக்கும் வேலைப்பளு நிறைந்ததாய் அமைந்திருக்கும். சிறுவர்கள் சிரித்துக் களித்தபடியே வெவ்வேறு கருமங்களில் ஈடுபட்டிருப்பர். யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த 'யாழ்ப்பாண புத்தாண்டுக் கொண்டாட்டம்' மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்களை மின்னச் செய்தது.

நான் யாழ்ப்பாணத்தில் வைத்து, வெவ்வேறு பின்னணிகளுடன் வந்திருந்த இளைஞர்கள் சிலருடன் கதைத்தேன். புதுவருடத்தில் அவர்களது எதிர்பார்ப்புக்கள், அச்சங்கள் மற்றும் இலட்சியங்கள் குறித்த கருத்துக்களை அந்த உரையாடலினூடு பெற்றுக் கொள்ள என்னால் முடிந்தது.

"யுத்தம் முடிவுற்ற பிற்பாடு நான் எந்தவித கொண்டாட்டங்களிலும் பங்குபற்றவில்லை. வன்னியில் மட்டுமல்லாது யாழ்ப்பாணத்திலும் இளைஞர்கள் இன்னும் துயருற்றுக் கொண்டிருக்கையில் நான் எப்படிக் கொண்டாடுவது? நிறையப் பேருக்கு கல்வி கற்க வாய்ப்பு இல்லை. சிலருக்கு சாப்பிடக் கூட ஒழுங்காக ஏதுமில்லை. எனது வயதிலுள்ள ஏனையவர்களும் இதே துயரத்தை அனுபவிக்கிறார்கள். அவர்கள் உள்ளுக்குள்ளேயே அனுபவிக்கும் வேதனைகளை நான் அறிந்த காரணத்தால் விழாக்களை நடத்த என்னால் முடியவில்லை.  அரசாங்கமானது வடக்கு மக்களின் வாழ்க்கையினை இதனை விடவும் முன்னேற்றுமென்றால் எங்களுக்கு உண்மையாகவே விழாக்களை நடத்துவதற்கான காரணமொன்று இருக்கும். அரசு தான் நினைக்கும் விதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்." இவ்வாறு என்னிடம் சொன்னார் 24 வயதேயான பல்கலைக்கழக மாணவரொருவர்.

"வடக்கையும் தெற்கையும் ஒப்பிட்டுப் பார்ப்போமேயானால் தெற்கு மக்கள் தங்களது சுதந்திரத்தை பரிபூரணமாக அனுபவிப்பது விளங்கும்.  இன்னும் எங்களை செக் பொயிண்டுகளில் நிறுத்துகிறார்கள். விசாரிக்கிறார்கள். இங்கு எங்களுக்கு சுதந்திரமில்லை. எவ்வாறு நாங்கள் விழாக்களை நடத்துவது? இன்று, நாளை, நாளை மறுநாள் என எந் நாளுமே இவ்வாறுதான். புத்தாண்டு என்பதுவும் இன்னுமோர் தினம் மாத்திரமே. இத் தினத்தில் தமிழர்களுக்கு சமாதானமும் சம உரிமையும் பெற்றுக் கொடு என கடவுளிடம் வேண்டுவதை மட்டுமே எம்மால் செய்ய இயலும்." அவர் மேலும் கருத்துரைத்தார்.

27 வயதான கோசலை கூறியவை கீழே தரப்பட்டிருக்கிறது.

"எனக்கும் கொண்டாட்டங்களுக்குச் செல்ல மனமில்லை. எவ்வாறாயினும் நான் கொண்டாட்டங்களுக்குச் செல்வதுமில்லை. நாங்கள் விழாக்களைக் கொண்டாடுவது எங்களது கலாச்சார முறைப்படிதான். எனினும் எனக்கு இந் நாட்களில் எந்த விஷேடமும் தென்படுவதில்லை. பல தசாப்தங்களாக இது பற்றிக் கதைத்தும் பயனேதுமில்லை. அதனால் எதுவுமே இதை விடவும் முன்னேற்றம் பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. உரிமை மற்றும் விடுதலைக்காக நாங்கள் செல்லவேண்டிய நெடும் பயணமொன்று இருக்கிறது. அதுதான் நாங்கள் முகங்கொடுக்கும் பெரிய சவால். நான் நினைக்கும் விதத்தில், எமது வேண்டுகோள்கள் குறித்து எங்களுக்கு இருக்கும் தெளிவான பார்வை, போதியளவு கலந்துரையாடும் திறமை, மனிதர்களிடையே இருக்கும் ஒற்றுமை மற்றும் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பதன் அவசியம் போன்றவைகளால்தான் எங்களது நிலைமை உயரக் கூடும்."

இன்னுமொரு பல்கலைக்கழக மாணவர் தனது கருத்தினைப் பகிர்ந்து கொண்டார். அவரது வயது 24.

"என்னைப் பொறுத்தவரையில் போன வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் எதுவுமே மாற்றமடையவில்லை. எனினும் எனக்கு அது குறித்து இருப்பது ஒரு கலவையான உணர்வே. ஏனெனில் நான் இங்கு வந்தது அரைகுறைத் தமிழ் பேசி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இருந்த ஓர் தெருவோரம் வழியேதான். எங்களைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றியதாக எங்களிடம் சொல்கிறார்கள். எனினும் அதே வழிமுறையைத்தான் அரசின் கருத்தை ஏற்றுக் கொள்ளாத மற்றும் அரசைக் கேள்வி கேட்கும் மக்களை அழிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் உண்மையில் அவ்வாறில்லை. அரசாங்கம் யாழ்ப்பாண மக்களை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்கிறது. அது போலவே விதம் விதமாக விழாக்களைக் காட்டி அவர்களது பாதையை மாற்றவும் முயற்சிக்கிறது. எனினும் நிறைய மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய நேர்மையான முயற்சியொன்றை எடுப்பதைத்தான் காண முடியவில்லை." என அவர் விளக்கமளித்தார்.

"தமிழர்கள் ஒன்றிணைந்து நியாயமானதொரு தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியுமென நான் வெளிப்படையாகவே எதிர்பார்க்கிறேன்.அதற்கு அவர்கள் மத்தியில் ஓர் மனதுடனான ஒற்றுமையொன்று இருக்க வேண்டும். குறைந்த பட்சம் பிறக்கும் புதுவருடத்திலேனும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

"எனது எதிர்பார்ப்பானது எங்களது எல்லா நடவடிக்கைகளும் சமாதானத்துடனும் சகோதரத்துவத்துடனும் நடைபெற வேண்டும் என்பதுதான். நாங்கள் எமது கலாச்சாரத்தின் அங்கமொன்றாக புத்தாண்டினைக் கொண்டாடுகிறோம். பொங்கல் செய்கிறோம். மூத்தவர்கள் கை விஷேசமாக பணம் தருகிறார்கள். எங்களுக்கு மூத்தவர்களிடமிருந்து பணம் கிடைத்தால் அதனை அதிர்ஷ்டம் எனக் கருதுகிறோம். நல்ல விடயங்கள் மேலும் தொடரட்டும், கெட்ட விடயங்கள் அழிந்து போகட்டும் என்றே நான் எப்பொழுதும் எண்ணுகிறேன். வழமையாக நாங்கள் புத்தாண்டு தினத்தில் பாட்டி வீட்டில் ஒன்றுகூடுவோம். எனினும் கடந்த வருடம் அவர் மரணித்த காரணத்தால் இந்த வருடம் எங்களுக்கு புத்தாண்டு இல்லை" என 30 வயதான தாணு கூறினார்.

"நாங்கள் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் தோற்கடிக்கப்பட்ட ஓர் இனம். நாங்கள் நிழலேதுமற்ற மனிதர்கள். நான் நினைக்கும் விதத்தில் எம் மக்கள் தன்னம்பிக்கை மிகுந்த அமைதியானவர்கள். விஷேடமாக கடந்த வருடங்களில் அது புலப்பட்டது. நாங்கள் ஒன்றாக இணைந்தால் எங்களது சக்தியை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். எனினும் நாங்கள் முகங்கொடுக்க நேர்ந்திருக்கும் முடிவேயில்லாத இடையூறுகளின் காரணத்தால் அது யதார்த்தத்தில் சாத்தியப்படாது. சிறிய உதாரணமொன்றைக் கூறின், மிக அண்மையில் தமிழ் மக்களின் துயரங்கள் குறித்து பிரசித்தமாக கூட்டமொன்றில் பேசிய புகழ்பெற்ற மதகுருவொருவருக்கு அதன் பிறகு இனந்தெரியாத நபர்கள் மூவரின் எச்சரிக்கைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்திருக்கிறது. காவல்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மதகுரு ஒருவருக்குக் கூட தனது மக்களுக்காக கதைக்க முடியாது எனின் எங்களால் செய்ய முடியுமான விடயங்கள் குறித்த எதிர்பார்ப்புக்கள் என்ன?" என இன்னுமொரு 27 வயதேயான பல்கலைக் கழக மாணவரொருவர் கூறினார். "நான் பொதுவாகவே மத ரீதியான, கலாச்சார ரீதியான விழாக்களைக் கொண்டாடுவதில்லை எனது குடும்பத்தவர்கள் செய்தபோதும். எங்களது இனம் நெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த இனம். இன்றும் எங்களால் சுதந்திரமாகக் கதைக்கவோ அங்கிங்கு செல்லவோ முடியாதுள்ளது. இனி நாங்கள் எதனைக் கொண்டாடுவது?" என்று அவர் மேலும் கூறினார்.

"கடந்த தினமொன்றில் இராணுவத் தளபதி, இராணுவத்தால் அபகரித்துக் கொள்ளப்பட்டுள்ள சொத்துக்களை படிப்படியாக விடுவிக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். எனினும் பார்க்கும் எல்லா இடங்களிலும் புதிய பெயர்ப் பலகைகளைக் காண முடிகிறது. 'இந்திந்த ப்ரிகேடியர் உங்களை அன்புடன் வரவேற்கிறார்' என்றே அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாங்கள் வாழ்வது ஜனநாயக சமூகமொன்றிலா அல்லது இராணுவ சமூகமொன்றிலா என்பது பற்றிய சந்தேகத்தை அது எழுப்புகிறது. இதற்கிடையில் யுத்த நிலத்தினை முன்னேற்றுவதற்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக அரசாங்கம் சொல்கிறது. அது அவ்வாறெனில் வடக்கில் சேவை செய்ய எதிர்பார்க்கும் ஒருவருக்கு ஜனாதிபதி தரப்பிலிருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் அதிகாரத்துவ எதிர்ப்பும் தாமதமும் ஏற்படுவதற்கு இடமளித்திருப்பது ஏன்? இன்னுமொரு சந்தர்ப்பத்தில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளை மீண்டும் விசாரிப்பதற்காகக் கைது செய்திருப்பதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறான பிண்ணனியில் எங்களுக்கிருக்கும் பாதுகாப்பு என்ன? நாங்கள் எந்தக் கணத்தில் கைது செய்யப்படுவோமோ, இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுவோமோ தெரியாது. இளைஞர்கள் பலம் பெறுதலும், அவர்களது பங்களிப்பானது முன்னேற்றத்துக்கும் அரசியல் செயற்பாடுகளுக்கும் ஒன்று சேர்க்கப்படுவது, மாற்றமொன்றுக்காக அத்தியாவசியமானது. எனினும் அரசாங்கம் இன்னும் அது குறித்து முயற்சிக்கவில்லை." என அவர் மேலும் தெரிவித்தார்.

"நான் விருப்பத்துடனேயே இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதாக நான் நினைக்கவில்லை. இது எனது வாழ்வில் இன்னுமொரு நாளைப் போன்றது. புத்தாண்டு எனப்படுவது வாழ்க்கையில் புதிய பகுதியொன்றில் பாதம் பதிக்க உருவாக்கப்பட்ட இலகு வழி என்பதாகவே நான் நினைக்கிறேன். தம்மைச் சுற்றிலும், நிழலொன்றற்ற மனிதர்கள் அனேகர் இருக்கையில் எவர்க்கும் புத்தாண்டைக் கொண்டாட முடியுமாக இருக்குமென நான் நினைக்கவில்லை. அதுபோலவே அவர்களிடையே சாதிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களும், வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு புத்தாண்டு எங்கிருந்து? அதுதான் என்னைத் துயருக்குள்ளாக்கும் கேள்வி." என 26 வயதான திரு சொல்கிறார்.

"நான் சிறுவனாக இருந்த காலத்தில் யுத்தம் இருந்த போதும் புத்தாண்டு வந்தது. நான் தந்தையின் சைக்கிளை மிதித்தபடி அக்காவோடு பாட்டி வீட்டுக்குச் சென்றேன். புத்தாடைகள் அணிந்தேன். எனினும் பட்டாசுகள் இருக்கவில்லை. தமிழ் மக்கள் எதிர்பார்ப்பு மற்றும் எதிர்பார்ப்பின்மைக்கிடையிலிருந்து புத்தாண்டையும் எதிர்பார்க்கிறார்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த சமாதானம் இன்னும் எங்கள் வாசல்களுக்கு வரவில்லை. அச்சமற்று மனிதர்களுடன் கதைக்க முடியுமான நாளொன்றை நான் எதிர்பார்த்திருக்கிறேன். வெவ்வேறு விதமாக ஒரு புறமாகத் தள்ளப்பட்டிருக்கும் இலங்கையின் எல்லா மனிதர்களோடும், மாற்றமொன்றை எதிர்பார்க்கும் மனிதர்களும் ஒன்றிணைந்து தங்களது எதிர்கால வேலைத் திட்டங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டுமென எனக்குத் தோன்றுகிறது" என அவர் எதிர்பார்ப்புடனேயே கூறினார்.

இங்கு எந்த இளைஞர் யுவதியும் கூட தங்களது பெயர்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லையென்பது தெளிவாகியிருக்கும். யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள் கழிந்த பிற்பாடும் வடக்கு மக்கள் தற்காலிக சமாதானமொன்றை இன்னும் எதிர்பார்த்திருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பு ஈடேறிய பிற்பாடுதான் புத்தாண்டை உண்மையாகவே கொண்டாட முடியுமாக இருக்கும்.

- மரீஸா த சில்வா
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# இனியொரு
# உயிர்மை
# ஊடறு
# திண்ணை