Wednesday, June 2, 2010

மீள் குடியமர்த்தல்: மறைந்திருக்கும் உண்மைகள்

    "கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே" என்ற ஔவையாரின் வாக்கை நேரடியாக மெய்ப்பிப்பது போலவே இன்றைய ஈழத்தின் நிலைமை இருக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்கும் பல மாணவர்கள் அரசாங்க உதவித் தொகையை மட்டுமே நம்பி தமது காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. அரைகுறை உணவு, பழைய ஆடைகள், புத்தகங்களோடு செலவுகளைக் குறைக்கவேண்டி அநேக மாணவர்கள் தம் வெறும் வயிற்றில் தண்ணீரை மாத்திரம் அருந்தியபடி கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தினர் அகதி முகாம்களிலும், தொழிலற்றும் வாடியிருக்கும்போது தமது தேவைகளுக்காக குடும்பத்தை நாடவும் இவர்களால் முடியாதுள்ளது. அடுத்ததாக யுத்தத்தின் மூலமாக ஏற்பட்ட உடல் சுகவீனங்களுக்கான மருந்துகளைப் பெற்றுக் கொள்ளவும் பணம் தேவைப்படுவதால் பலர் மருத்துவத்தை இடைநிறுத்தி, வலிகளைத் தாங்கிக் கொள்ளப் பழக்கப்பட்டுப் போயுள்ளனர்.

    இது இப்படியிருக்க, 'ஷெல் விழுந்தபொழுது நாங்கள் அன்றே செத்துப் போயிருந்தால் இதை விடவும் நன்றாக இருந்திருக்கும்' என்று சொல்கிறார்கள் வவுனியா மெனிக்பார்ம் முள்வேலி முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிற்பாடு இங்குள்ள அனேகமான மக்கள் பட்டினியோடுதான் காலத்தைக் கடத்துகிறார்கள். 1.5 லீற்றர் கொள்ளளவுடைய ப்ளாஸ்டிக் பெப்சி போத்தலொன்றின் மேற்பகுதியை வெட்டிவிட்டால் கிடைக்கும் பாத்திரத்தினளவு அரிசிதான் ஒரு கிழமைக்கு ஒருவருக்கு கொடுக்கப்படுகிறது. கோதுமை மாவும் அதே அளவுதான் கொடுக்கப்படுகிறது. ஐம்பது கிராமுக்கும் குறைவான அளவுடைய சீனியும், அதே அளவு பருப்பும் கொடுக்கப்படுகிறது. ஒரு சிறிய குவளையில் தேங்காயெண்ணைய் வழங்கப்படுவதோடு ஒரு கிழமையின் ஏழு நாட்களையும் இந்த உணவுப் பொருட்களோடு மட்டுமே கழிக்க வேண்டியுள்ளது. மரக்கறி, கீரை வகைகள், இறைச்சி, மீனென்று எதுவுமே இல்லை. உடைகள், சமைக்கத்தேவையான மற்ற பொருட்கள், பாத்திரங்களென அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான எதுவுமேயில்லை.

    ஆனால் தேர்தலுக்கு முன்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் மரக்கறி வகைகள், வெங்காயம், மிளகாய்த் தூள்,  மசாலாத் தூள், உப்பு, முட்டை, கிழங்கு, நெத்தலி போன்றவை இவர்களுக்குக் கிடைத்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இவை அனைத்தும் நிறுத்தப்பட்டதோடு வழங்கப்பட்ட அரிசி, கோதுமையின் அளவும் பாதியாகக் குறைந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தற்பொழுது அரிசி, கோதுமை வழங்கப்படும் அதே பாத்திரத்தின் இரு மடங்கு அளவு ஒரு வாரத் தேவைக்கென ஒருவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இம் மக்களினது விருப்புவாக்குகள் எதிர்க்கட்சியைச் சார்ந்திருந்ததே இன்றைய நிலைக்கான காரணமென்பது வெளிப்படையாகிறது. உண்மையில் இங்குள்ள அனேகமான அகதிமக்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பமே வழங்கப்படவில்லையென்பதையும் இங்கு சொல்ல வேண்டும்.

    இங்குள்ள அகதிகளில் சிலர் மட்டும் வெளிநாடுகளிலிருந்து தமது உறவினர்கள் அனுப்பும் பணத்தினைக் கொண்டும், அரச வேலைகளிலிருந்தோருக்கு அரசால் கொடுக்கப்படும் பணத்தினைக் கொண்டும்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். இது போன்ற உதவிகளேதுமற்ற பலர் அன்றாட வாழ்க்கையைக் கழிப்பதற்கே வழியில்லாத கையறு நிலையில் இருக்கிறார்கள்.

    வெளியூர்களுக்குச் சென்று உழைக்கும் அனுமதியை சமீபத்தில்தான் இம் முகாம் வாசிகளுக்கு வழங்கியுள்ளது அரசு. அதுவும் கூட அதிகபட்சமாக இரு மாதங்களுக்கு மட்டும்தான். அதாவது இரண்டு மாதங்களுக்கொரு முறை முகாமுக்கு சமூகமளித்து, வெளியே சென்று வேலை பார்க்கும் அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த அனுமதிப்பத்திரத்தில் பகுதிப் பெயர், குழு இலக்கம், வீட்டு இலக்கம், குடும்ப இலக்கம், மாவட்டம், பிரதேச சபை பிரிவு, கிராம சேவகர் பிரிவு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. குடும்ப உறுப்பினர்களின் பெயர்களோடு அவர்களுக்கான இலக்கங்கள், உறவு முறைகள், அவர்களது தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் ஆகியனவும் குறிப்பிடப்படுவது கட்டாயம். அதன் பிறகு தாம் தொழில் பார்க்கச் செல்லவிருக்கும் ஊரைக் குறிப்பிட வேண்டும். அந்த ஊருக்குப் போய் சந்திக்க இருப்பவரின் பெயரும் தொலைபேசி இலக்கமும் குறிப்பிடப்பட வேண்டும்.  அத்தோடு செல்லும் நாளின் திகதி மற்றும் நேரத்தோடு, இரண்டு மாதங்களுக்குள் திரும்ப வரும் நாளின் திகதியையும் நேரத்தையும் கூடக் குறிப்பிட வேண்டும்.

    முகாமிலிருக்கும் இடம்பெயர்ந்தவர்களுக்கு, இலங்கை அரசால் வழங்கப்பட்டிருக்கும் தற்காலிக அடையாள அட்டைகள் கூட அதி நவீன பார்கோட் இலச்சினைகளுடனானவையாக இருக்கின்றன. இதனுள் முகாம்வாசியுடைய அனைத்துத் தகவல்களும் அடங்கப் பெற்றிருக்குமென நம்பலாம். நாட்டின் தேசிய அடையாள அட்டைகள் கூட இந்தளவு பாதுகாப்பானதாகவும், முக்கியத்துவம் மிக்கதாகவும் இல்லை.


    முகாம்வாசிகளுக்கு தினமும் காலை ஆறு மணிக்குப் பிறகே வெளியே செல்ல அனுமதி கிடைக்கிறது. அத்தோடு இரவு எட்டு மணிக்குள் திரும்பி விட வேண்டும். முகாமிலிருக்கும் ஒரு குடும்பத்தில் எல்லோருக்குமே ஒரே தடவையில் முகாமை விட்டு வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. மக்கள் தமது முகாமன்றி வேறு முகாம்களுக்குச் செல்வது சம்பூரணமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தூர இடங்களிலிருந்து உறவினர்கள் இவர்களைப் பார்க்க வந்தால் கூட அவர்களோடு சுதந்திரமாக, எந்தத் தொந்தரவுமின்றி கதைப்பது சிரமமாக உள்ளது. முள்வேலியின் இரு புறமிருந்துதான் கதைக்கவும் முடியும். இவ்வாறான முள்வேலிச் சிறைகளுக்குள் தள்ளப்பட்டிருப்பது தத்தமது பாட்டில் விவசாயமோ, கூலித் தொழிலோ செய்து உழைத்து வாழ்ந்துகொண்டிருந்த அப்பாவி மக்கள்.

    "நாங்கள் எங்கள் வீடுகளுக்குப் போய் இருக்க விரும்புகிறோம். அரசாங்கம் எதுவுமே தரவில்லையென்றால் கூட காட்டிலிருந்து தடிகளை வெட்டி, வீடு கட்டி, விவசாயம் செய்துகொண்டு வாழ விரும்புறோம்."

    தங்கள் கரங்களின் பலத்தோடு வாழ்க்கையைக் கொண்டு சென்ற இம் மக்களுக்கு இன்று உண்ணாமல், குடிக்காமல் அரிசி, கோதுமை சேகரித்து வவுனியாவுக்குக் கொண்டு போய்  விற்று வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. முகாமிலிருந்து வவுனியாவுக்கு வருவதற்கு ஒருவருக்கு பிரயாணச் செலவாக ஐம்பது ரூபாய் தேவைப்படுகிறது. எனவே இவர்களுக்குக் கிடைக்கும் அரிசி, கோதுமைகளை ஒரு வாரம் உண்ணாமல் சேகரித்து, வவுனியாவில் அதை சரிபாதி விலைக்கு விற்று, இவர்கள் பணம் பெற்றுக் கொள்கின்றனர். தற்பொழுது வவுனியாவிலும் தற்காலிக தொழில்வாய்ப்புகள் ஏதுமில்லை. முகாம்களிலிருந்து அன்றாடம் தொழில் தேடி வெளியேறும் இது போன்ற அகதிகளோடு, உறவினர்களுடன் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களால் வவுனியா நகரம் நிறைந்து போயிருக்கிறது.

    குடிப்பதற்கான நீரையும் முகாம் மக்கள் குழாய்க் கிணறுகளின் மூலமாகத்தான் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றில் காலையிலிருந்து இரவுவரைக்கும் வரிசைகள் நீள்கின்றன. காத்திருக்கின்றன. குளிப்பதற்காக சில நாட்களில் மட்டும் குழாய்களில் நீர் வழங்கப்படுகிறது. முகாம் பள்ளிக் கூடத்திலும் ஒரு நாளைக்கு ஒரு பாடமே கற்பிக்கப்படுகிறது. முகாமில் வைத்தியர்கள் இருந்த போதிலும் மருந்து வசதிகள் ஏதுமற்ற காரணத்தால் நோயாளிகள் செட்டிக்குளம் வைத்தியசாலைக்கே அனுப்பப்படுகிறார்கள்.

    மீள் குடியேற்றம் என்ற பெயரில், மறுவாழ்வு அளிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டு முகாமிலிருந்து தங்கள் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட மக்கள் மகிழ்வோடுதான் வெளியேறினார்களா? இல்லை. ஏனெனில் தத்தமது ஊர்களுக்குப் போக முடியாத காரணத்தால் அவர்கள் ஏ ஒன்பது நெடுஞ்சாலையின் ஓரங்களில்தான் கூடாரமமைத்துக் கொண்டு தங்கியுள்ளனர். இதுதான் மீள்குடியமர்த்தல் என்ற சொல்லுக்குப் பின்பு மறைந்திருக்கும் உண்மை. யுத்தம் முடிவுற்றதோடு இடம்பெயர்ந்த மக்களனைவரையும் ஆறு மாத காலத்துக்குள் மீள்குடியமர்த்துவதாக அரசு வாக்குறுதியளித்திருந்த போதிலும் அவர்களது சொந்தக் கிராமத்துக்குச் செல்ல அனுமதி கிடைத்திருப்பது மிகச் சிலருக்கே. மீள் குடியமர்த்தப்பட்டோரெனச் சொல்லப்படும் அனேகமான மக்கள் தங்கியிருப்பது தங்கள் உறவினர்கள் வீடுகளிலும், ஏ ஒன்பது வீதியோரக் கூடாரங்களிலும்தான்.

    இந்தக் கொத்தடிமை முள் வாழ்க்கையிலிருந்து மீண்டு, இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாழும் சுதந்திரம் வழங்கப்படுவது எப்போது? இதுதான் அவர்களுக்கும் எங்களுக்கும் எழும் ஒரே கேள்வி. இம் முகாம் மக்கள் இன்னும் காணாமல் போவதும், முகாமிலிருந்து பலவந்தமாகக் கொண்டுசெல்லப்படுவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறாக அதிகளவாகக் காணாமல் போயுள்ளவர்களுக்கும் கொண்டு செல்லப்பட்டவர்களுக்கும் என்ன நடந்ததென யாருக்கும் தெரியவில்லை.

"இலட்சக்கணக்கான மக்கள் ஷெல் விழுந்து, விமானக் குண்டு போட்டு செத்துப் போனார்கள். எப்படியாவது உயிர் பிழைத்து வாழ வேண்டுமென்றுதான் பிணங்களின் மேலால் இங்கு ஓடி வந்தோம். அன்றே ஷெல்லொன்று விழுந்து செத்துப் போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமென இப்பொழுது தோன்றுகிறது" அவர்கள் கண்ணீரோடு சொல்கிறார்கள்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# காலச்சுவடு இதழ் 124, ஏப்ரல் 2010
# Global Tamil News
# வியப்பு 
# இனியொரு

Sunday, May 2, 2010

இலங்கை - வறுமையும், புனித வேடமணியும் கோமாளிகளும்!

    "...... ஒரு திரைப்படத்தில், தொலைக்காட்சி நாடகமொன்றில் அல்லது வேறு பிரிவில் பிரதானமானவர்களாக இருப்பதால் மட்டுமே அவர்கள் அரசியலுக்கும் பொருத்தமானவர்களாவது எப்படி என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பெண்களை வல்லுறவுக்குட்படுத்தியவர்கள், குற்றவாளிகள், சூதாட்ட விடுதிகளை நடத்தி வருபவர்கள் இந்தத் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கின்றனர். அவர்கள் கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து தங்களது விம்பங்களை உயர்த்திக் காட்டச் செய்யும் முயற்சிகளை மதில்கள், மின்கம்பங்களைப் பார்க்கும்போது தெளிவாகிறது. இவ்வாறானவர்களை பொதுமக்களின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்துவது எவ்வாறு என்பது எங்கள் மத்தியிலிருக்கும் இன்னுமொரு பிரச்சினை" - பேராசிரியர் மயுர சமரகோன்.

    இலங்கைத் தேர்தல் வரலாற்றில் ஒரு 20-20 கிரிக்கெட் ஆட்டம் முடிவடைந்து, இன்னுமொரு டெஸ்ட் ஆட்டம் தொடங்கியிருக்கின்றது. 20-20 ஆட்டத்தில் தவறான மத்தியஸ்தம், வன்முறைகளெனப் பல விமர்சனங்கள் உலக பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தாலும், விறுவிறுப்பாக இருந்தது ஆட்டம். அதற்குப் பிறகு ஆடப்படப் போகும் டெஸ்ட் ஆட்டமோ மிகவும் மந்தகதியில் நடைபெறுவதாகவே தோன்றுகிறது. உலக நாடுகளைக் கூட இந்த ஆட்டம் அவ்வளவாக ஈர்த்துக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும் ஏப்ரல் எட்டாம் திகதி இந்த ஆட்டத்தின் முடிவு தெரியவரும். அன்றுதான் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல்.

இம் முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக தெருவிலிறங்கி வாக்குக் கேட்டுத் திரிந்த பல நடிக, நடிகைகள், விளையாட்டு வீரர்களுக்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அரசியல் முன்னனுபவமோ, சேவை மனப்பான்மையோ சிறிதும் தென்படாத இவர்களின் மேடைப் பேச்சுக்கள் மூலைக்கு மூலை பொதுமக்களை நகைக்கச் செய்து கொண்டிருக்கின்றன. இவர்களைக் குறித்த 'பொதுமக்களுக்காகவே வாழும்', 'பொதுமக்களுக்காகவே சிந்திக்கும்' போன்ற அப்பட்டமான பொய் வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகளைக் கழுதைகள் கூடச் சீண்டாது. சினிமா கவர்ச்சி ஆட்டத்திலும் கிரிக்கெட் ஆட்டத்திலும் பொதுமக்களுக்காக என்ன வாழ்ந்தார்களோ, பொதுமக்களை என்ன சிந்திக்கச் செய்தார்களோ?

அந்த ஆட்டங்களின் மூலம் பல கோடிகளைச் சம்பாதித்துக் கொண்டு, இப்பொழுது ஓய்வெடுக்கும் வயதில் 'சும்மா' இருக்கப் பிடிக்காமல் ஒரேயடியாக அரசியலில் குதித்து, வென்று அதன் பிறகு 'சும்மா' இருக்கலாமெனத் தீர்மானித்திருக்கிறார்கள் போல.

    இவர்கள் தேர்தல் காலத்தில் மட்டும் சமூகத்தின் கலாச்சாரக் காவலர்களாக மாறி, நாட்டின் தேசிய உடை அணிந்துகொள்கிறார்கள். தோளில் துண்டு, முகத்தில் மீசை, உதடுகளில் எப்பொழுதுமொரு புன்சிரிப்பு என வளைய வருகிறார்கள். தெருவில் காணும் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சுகிறார்கள். மதத் தலைவர்களைச் சென்று பார்த்து காலில் விழுகிறார்கள். இவ்வாறாக, பொதுமக்களின் வாக்குவேட்டைக்காக இவர்கள் செய்யும் கோமாளித்தனமும் மாறுவேடமும் இவர்களது ஆட்டங்களை விடவும் சிலவேளைகளில் ரசிக்கச் செய்கிறது.

    எவ்வாறாயினும் இந்தத் தேர்தலின் காரணத்தால் இலங்கையில் தற்பொழுது அமைதியான ஒரு அந்தி நேரம் போன்ற ஒரு மந்த நிலை நிலவுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்த விலையேற்றம் குறையவில்லை எனினும் அதே போல மீண்டும் அதிகரிக்கவும் இல்லை. எந்த வற்புறுத்தல்களின் காரணமோ ஊடகங்களில் வெளியிடப்படும் வன்முறைகள் குறித்த செய்திகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அமைச்சர்களிடம் கையளிக்கப்படும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, அமைச்சர்கள் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். எல்லாம் பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரைதான். எனினும் அதுவரை இந்த 'நரக வாழ்வின் இடைவேளை' மக்களுக்கு சற்று அமைதியளிக்கத்தான் செய்கிறது. 

    ஏப்ரல் எட்டாம் திகதிக்குப் பின்னர் இந்த இடைவேளை முடிவுக்கு வரும். அதன்பிறகு உண்மையான வாழ்வின் நெருக்கடிகள் மீண்டும் தலைகாட்டத் தொடங்கும். ஏற்கெனவே இலங்கையில் தனிநபர் செலவு வீதம் அதிகரித்திருக்கிறது. இன்னும் நாட்டில் அதிகளவான மக்கள் வறுமையிலும், பொருளாதார, வாழ்க்கை வசதிகளின் மந்த நிலையிலும் வாட வேண்டியிருக்கிறது. இனி, தேர்தல் காரணமாக நிலவும் தற்போதைய அமைதி நிலையை இனி எப்பொழுதும் இப்படித்தானென நம்பி உறங்கிக் கொண்டிருப்பவர்கள் தூக்கத்திலிருந்து விழிக்க வேண்டியிருக்கும்.

    தற்போதைய இலங்கையில் சராசரி தனி நபர் வருமான வீதம் $2000 என அமைச்சர்கள் சொல்லிச் சொல்லிக் குதூகலிக்கிறார்கள். இதைக் கேட்டு தாங்கள் வாழ்வது உலகத்திலேயே உன்னதமான ஒரு தேசத்திலென கனவுலகில் மிதக்கும் பொதுமக்கள் வாக்குகளை முன்னின்று அளிப்பார்கள். நாட்டில் விலைவாசி ஏறிக் கொண்டே செல்கிறது. ஊதிய அதிகரிப்பு என்ற ஒன்று இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. நிலையான வருமானம் இல்லை. ஒரு தேங்காய் முப்பத்தைந்து ரூபாய்க்கும் ஒரு கிலோகிராம் அரிசி நூற்றி முப்பது ரூபாவுக்கும் விற்கப்படும் ஒரு நாட்டில் இந்த வருமானம் எப்படிப் போதுமானதாகும்? சீனி, தேயிலை, பால்மா, கிழங்குவகைகள், பருப்பு, சமையல் பொருட்கள் என அனைத்தின் விலையுமே நூறு ரூபாய்த் தாள்களைக் கொடுக்கும்போது மட்டுமே வாங்கக் கூடியதாக இருக்கும்போது ஒரு சராசரி பொதுமகனால் இவற்றை வாங்கமுடியாத நிலையும், பட்டினியில் நாட்களைக் கழிக்கவேண்டிய நிலையுமே இன்று உருவாகியுள்ளது. பெற்றோர்களால், குழந்தைகளுக்கு உண்ணக் குடிக்கக் கொடுக்க வழியில்லை.
    அண்மையில் ஒரு தாய் தனது மூன்று வயதைச் சமீபிக்கும் குழந்தையை களுத்துறை பெரிய பௌத்த விகாரை அருகே பெருக்கெடுத்தோடும் களு கங்கையில் மிதக்க விட்டுச் சென்றார். குழந்தையொன்று நீரில் மிதந்துவரும் காட்சியை கேமராவில் பதிவு செய்துகொண்டிருந்த தொலைக்காட்சி நிருபர், புத்தரை வழிபட வந்திருந்த பக்தர்கள் எனப் பலரும் குழந்தையின் துடிப்பை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க, அந்த வழியால் சென்ற ஒரு லாரி சாரதி, உடனே ஆற்றில் குதித்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றினார். அந்தச் சாரதி ஒரு கிறிஸ்துவர். மனிதாபிமானத்துக்கு இனமோ, மதமோ, மொழியோ எதுவுமே தடையாக இருக்காது என்பதற்கொரு உதாரணமாகக் கொள்ளப்படக் கூடியவர். அந்தத் தாய்க்கு முப்பது வயது. இந்தக் குழந்தையுடன் சேர்த்து மொத்தமாக ஐந்து குழந்தைகள் வேறு. மிதந்து சென்ற குழந்தை காப்பாற்றப்பட்டது. தாய் கைது செய்யப்பட்டார். குழந்தையை ஆற்றில் விட நேர்ந்தமைக்கான காரணத்தை அத் தாய் அழுதழுது சொல்கிறார். 'வறுமை. உணவுக்கு வழியில்லை'.

    கணவன் மதுபோதைக்கு அடிமையான பிறகு, தனது பட்டினியைக் கண்டுகொள்ளாமல் தெருவில் யாசித்து, இதுகால வரையிலும், அந்தக் குழந்தையை ஆற்றில் விடப் போகும் கணத்துக்கு முன்பும் கூட அந்தக் குழந்தையின் பசி போக்க உணவூட்டியது அந்தத் தாயன்றி வேறு யார்? நீதிமன்றமா? அந்தத் தாயை சிறைக்கனுப்பி, எல்லாக் குழந்தைகளையும் அனாதை விடுதிகளுக்கு அனுப்பிவைக்க முன்னின்ற சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம், இவ்வளவு காலமாக அந்தத் தாயை, குழந்தைகளை தெருவில் யாசகர்களாகக் கண்டபோதெல்லாம் எங்கே இருந்தது? இதுபோன்ற நிர்க்கதி நிலையிலிருக்கும் பொதுமக்களுக்கு உதவுவதற்காகவென்றே அரசு சம்பளம் கொடுத்து நியமித்திருக்கும் உத்தியோகத்தர்களும், ஒவ்வொரு பொதுமகனுக்காகவும் தான் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்ளும் தேசத் தந்தையும், எங்கே போயிருந்தார்கள்?

    இந்தப் பெண், சுனாமியால் இடம்பெயர்ந்து ஒரு கூடாரமமைத்துத் தன் குழந்தைகளுடன் தங்கியிருந்தார். கடந்த காலங்களில் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித் தொகையாக வந்த பல கோடி ரூபாய் பணத்தில், சுனாமியால் சிறிதும் பாதிக்கப்படாத அமைச்சர்கள் பலர் தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டபோது இந்தத் தாய்க்கு மட்டும் எந்த உதவியும் கிட்டாமல் போனது எதனால்? குழந்தையை வளர்க்க முடியாமல் ஆற்றில் விடுவது குற்றம்தான். ஆனால் அந்தக் குற்றத்தைச் செய்யத் தூண்டியதில் வறுமைக்கும், மேற்சொன்ன அனைவருக்கும் பங்கு இருக்கும்போது இவர்கள் எல்லோருமே தண்டிக்கப்படுவதுதானே நியாயம்?

    குழந்தையை விட்ட ஆற்றின் கரையிலேயே விலைமதிப்பு மிக்க பெரிய பெரிய கட்அவுட், சுவரொட்டி, பதாதைகளில் அமைச்சர்கள் சிரிக்கிறார்கள். அந்த பௌத்த விகாரையின் உண்டியலை தங்களது வெற்றிக்காக வேண்டி பணக்கற்றைகளால் நிறைக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடும் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், அமைச்சர்கள் அனைவரும் தங்களது விளம்பரங்களுக்காகச் செலவழிக்கும் பணத்தில் இது போன்ற இலட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகளின் பசியாற்ற முடியும். ஆனால் செய்வார்களில்லை. விளம்பரப் புகைப்படங்களில் மட்டும்தான் தெருக் குழந்தைகளைத் தூக்கிக் கொள்வதுவும், அவர்களுக்காகவே தாங்கள் பாடுபடுவதாக எச்சில் தெறிக்க உரையாற்றுவதுவும் நடக்கிறது. தேர்தல் முடிந்ததும் இலங்கை மக்கள் இன்னும் நெருக்கடிக்குள்ளாவது மட்டும் நிச்சயம். என்ன செய்வது? இலங்கை பல ஆறுகளைக் கொண்ட நாடு. எல்லாமும் கண்ணீரால் நிரம்பியோடுகிறது, இனி குழந்தைகளாலும்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
mrishanshareef@gmail.com


நன்றி

# வடக்குவாசல் இதழ் - ஏப்ரல், 2010






Monday, April 5, 2010

நான் ஒரு பொதுமகன். And Im not a terrorist

    நீங்கள் ஒருவரைக் கொலை செய்ய விரும்புகிறீர்களா? அதுவும் நீங்கள்தான் கொன்றீர்களென்பது வெட்டவெளிச்சமாகத் தெரியவேண்டும் ஆனால் உங்களுக்குத் தண்டனை கிடைக்காது. உடனே காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்துவிடுங்கள்.  காவல்துறையெனும் போர்வையில் உங்கள் நண்பரையோ, எதிரியையோ விரோதத்துக்காகவோ, இலாபத்துக்காகவோ உங்களால் கொன்றுவிடுவது இலகு. தண்டனையைப் பற்றி ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இடம் மாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு வேண்டப்பட்டவர்களாக இருப்பின், உங்களுக்குப் பிடித்த இடத்தைச் சொல்லி அங்கு உங்களால் மாறிக் கொள்ளலாம். அல்லது வேறு இடத்துக்கு மாறிக் கொள்வதற்காக வேண்டியே கூட ஆள் கொலை செய்யலாம்.

    இலங்கை, இக்கினியாகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவல பிரதேசத்தில் வசித்துவந்த ஏழை இளைஞன் ஏ.ஆர்.சமன் திலகசிறி செய்த குற்றமென்ன என்று யாருக்கும் இதுவரை தெரியவில்லை. எனினும் கடந்த பெப்ரவரி 21ம் திகதி ஞாயிறு இரவு ஒன்பது மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் மூவர் அவரைத் தேடி அவரது வீட்டுக்கு வந்தனர். அவர் வீட்டில் இருக்கவில்லை. அவர் வந்தவுடனே பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரும்படி அவரது மனைவியை மிரட்டிச் சென்ற பொலிஸார் இடைவழியில் அவரது நண்பரது வீட்டுக்குள் நுழைந்தனர். சமன் அங்கிருந்தார்.

    "கொல்லப்பட்ட சமனும், நானும், இன்னுமொரு நண்பர் சந்தனவும் எனது வீட்டில் இருந்தோம். அப்பொழுது இரவு நேரம் ஒன்பது மணியிருக்கும். மோட்டார் சைக்கிளில் மூவர் வந்து சமனை அழைத்தனர். சமன் எழுந்து முன்னால் வந்தான். 'உடனே வா, உன்னிடம் வாக்குமூலமொன்று எடுக்கவேண்டும்..பொலிஸுக்குப் போகலாம்' என்று அவர்கள் கூறினர். 'நான்தான் குற்றமெதுவும் செய்யவில்லையே. சரி நான் இவர்களுடன் போய்வருகிறேன்' என்று சொல்லி அவன் ஒரு மோட்டார் சைக்கிளில் அவர்களுடன் ஏறிக் கொண்டான். அவர்கள் சென்ற உடனேயே நாங்களும் பொலிஸ் நிலையம் போனோம். செல்லும் வழியில் இக்கினியாகலை நீர்த் தேக்கத்துக்கருகில் அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அருகில் யாரும் இருக்கவில்லை. நாங்கள் இருளில் தேடமுடியாமல் நேராக பொலிஸ் நிலையம் சென்றோம். அங்கு போய் சமனைப் பற்றி விசாரித்ததும் எந்தப் பதிலுமில்லை. நிலையத்துக்குள் குழப்பமான ஒரு சூழ்நிலை. சமன் இருக்கவில்லை. காலையில் சமனின் உடல் நீரில் மிதந்தது." இது சமனின் தோழன் எல்.டீ.சந்திரசேனவின் வாக்குமூலம்.

    காவல்துறையினர், சமனை எந்தக் குற்றத்துக்காக அழைத்துச் சென்றார்கள் என்பது பற்றி யாருக்குமே தெரியவில்லையெனினும், அவரது உயிரைப் பறித்தெடுக்கவே அழைத்துப் போயிருப்பது மட்டும் நிதர்சனம். அவரைக் கொல்வது மட்டுமே அவர்களது நோக்கமாக இருந்திருப்பது, பொலிஸ் நிலையத்துக்குக் கூட அவரைக் கொண்டுசெல்லாமல் இடைவழியில் கொன்றுபோட்டிருப்பதன் மூலம் தெளிவாகிறது. இதன் மூலம் தெளிவாகும் இன்னுமொரு விடயம், பொதுமக்களை அடிக்க, வதைக்க, கொலைசெய்து குவிக்க காவல்துறைக்கு 'லைசன்ஸ்' இருக்கிறது என்பதுதான்.

    காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மரணமான பின்பு, வழமையாக நடப்பது போலவே இங்கும் நடந்திருக்கிறது. அதாவது இக்கினியாகலை பொலிஸ் நிலைய உயரதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட மூன்று காவல்துறையினரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை அதிகாரி அனில் ஆரியவங்ஸ, 'இது சம்பந்தமான முழுமையான விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' எனச் சொல்லியிருக்கிறார்.

    காவல்துறையினரின் இதுபோன்ற பதில்களைக் கேட்டு பொதுமக்கள் உடலின் எப்பாகத்தால் நகைப்பதெனப் புரியாமலிருக்கின்றனர். இது போன்ற நடவடிக்கைகள் காவல்துறைக்கு புதிதில்லை. அத்தோடு இது போன்ற மழுப்பலான பதில்களைச் சொல்லித் தப்பித்துக் கொள்வதுவும் இது முதன்முறையில்லை. இலங்கை, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் இயக்குனரின் மகன், தனது பாதுகாப்புக்கென வழங்கப்பட்ட காவல் அதிகாரிகளின் குழுவோடு, ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, நிபுண ராமநாயக்க எனும் மாணவனைக் கடத்திச் சென்று மிகக் குரூரமான முறையில் சித்திரவதைப்படுத்தியதுவும், பல நூறு மக்கள் பார்த்திருக்க பம்பலப்பிட்டிய கடற்கரையில் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனை அடித்துக் கொன்றதுவும் சமீப கால முறைப்பாடுகளாகக் கிடைத்தபோதிலும் எந்தவொரு நியாயமான தீர்ப்பும் இன்னும் வழங்கப்படவில்லை.

    இலங்கையில் யாருக்கு எந்த சட்டம் செல்லுபடியாகினும், காவல்துறைக்கு மட்டும் எந்த சட்டமும் இல்லை. சுருக்கமாக காவல்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் சந்தேகநபரொருவர் இறந்துபோய்விட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுதலென்பது, சாதாரணப் பொதுமகனொருவர் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதைப் போலவன்று. பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து மற்றும் பொலிஸாரால் நிகழும் கொலை, வன்முறைகள் சம்பந்தமாக ஒரு காவல்துறை அதிகாரியேனும் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் இதுவரை கைதாகியதில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்டதுமில்லை. சமனின் மரணத்தில் கூட சம்பந்தப்பட்டவர்களது பணிநிறுத்தம் செய்யப்படும். அவ்வளவே.

    சாதாரணமாக ஒரு கொலை நிகழ்ந்தவிடத்து உடனே செயல்படும் காவல்துறை, சந்தேகத்துக்குரியவர்கள் அனைவரையும் கைது செய்யும். வாக்குமூலம் பெற்று அதைக் குறித்துக் கொண்டு கொலைக் குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்களை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கும். நீதிமன்றம் அவர்களை குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் சிறையிலடைக்கும். இதையெல்லாம் செய்யும் காவல்துறையே ஒரு கொலை செய்யுமிடத்து மேற்குறிப்பிட்ட எதுவும் நடைபெறாது.

    உண்மையில் சமனுக்கு என்ன நடந்ததென்று அறிந்தவர்கள் அவரைக் கொண்டுசென்ற மூவரும்தான். அவர்கள் பொலிஸ்காரர்கள். இப்பொழுதிருக்கும் வேறு சாட்சிகளெனில் சமனுடன் இருந்த மற்ற நண்பர்கள் இருவர். அவர்களுக்குக் கூட, வரும் நாட்களில் சாட்சி சொல்லவேண்டியிருப்பது காவல்துறையினருக்கு எதிராகத்தான். அது இலங்கையைப் பொருத்தவரையில் எளிதான விடயமில்லை. ஆகவே இவர்கள் கூட எதிர்காலத்தில் ஏதாவதொரு காரணத்துக்காக கைது செய்யப்பட இடமிருக்கிறது.

    எப்பொழுதும் காவல்துறையினரது கைதுக்குப் பிற்பாடு மரணித்த பலரதும் விபரங்கள் வெளிவருவதை விடவும், வராமலிருப்பது பொதுவானதுதான். இக்கினியாகலை சமனினது கொலை விபரங்களும், இது கால வரையில் நிகழ்ந்த காவல்துறை படுகொலைகளைப் போலவே காலத்தோடு அழிந்துபோகும். ஆனால் வாழ்நாள் முழுவதற்குமாக துயரப்பட வேண்டியிருப்பது சமனையே நம்பியிருந்த அவரது குடும்பமும், அப்பாவி மனைவியும், சிறு குழந்தையும்தான். அந்தத் துயரத்திலும் சிறிதளவாவது அமைதி கிடைப்பது கொலைகாரர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும்போதுதான். அது சாத்தியமற்றுப் போகும்போது நாட்டின் ஒவ்வொரு மனிதனினதும் ஐக்கியத்துக்காகவும், நிம்மதியான வாழ்வுக்காகவும் பாடுபடுவதாகத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் அரசும் இதற்குத் துணை போவதாகத்தான் கொள்ள வேண்டும்.

    காவல்துறைப்படுகொலைகள் உலகளாவிய ரீதியில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கைது செய்யப்படும் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் குறித்து எழுதப்போனால் இந்தக் கட்டுரை போதாது. இது போன்ற நாடுகளாக இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் என சொல்லிக் கொண்டே போகலாம். உலகின் அநேக நாடுகளில் காவல்துறையினர் ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். முரட்டு சீருடை. முரட்டு நடை. முரட்டு நடவடிக்கை. முரட்டு இதயங்கள். இந்த நிலையில் 'காவல்துறை உங்கள் நண்பன்' எனும் வாசகங்கள் பாடப்புத்தகங்களிலும் சில முட்டுச் சுவர்களிலும் மட்டுமே தெளிவாக எழுதப்பட்டிருக்கிறதே தவிர பொதுமக்களது மனங்களிலல்ல.

பின்குறிப்பு - 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த கொலை சந்தேகநபர்கள் இன்னும் கைதுசெய்யப்படாதது குறித்த முன்னைய கட்டுரைக்குப் பின்னர், உடனடியாக துப்பறியும் துறை, விசாரணைகளை நடத்திவருவதோடு, ஒரு ஆட்டோ சாரதி உட்பட 15 இராணுவக் குற்றப்புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்களைக் கைது செய்து விசாரித்துவருகிறது. அத்தோடு விசாரணைகள் தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் 18ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கல்கிசை பிரதான நீதிமன்ற நீதவான் ஹர்ஷ சேதுங்க குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
05.03.2010



நன்றி
# உயிர்மை