Thursday, May 1, 2014

ஊடகவியலாளர் தர்மரத்னம் சிவராம் (தராகி) படுகொலையும், இலங்கையின் நிலைப்பாடும் !


'தராகி' என அழைக்கப்பட்டுவந்த ஊடகவியலாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான தர்மரத்னம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு (28.04.2014) 09 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இக் காலத்தில் இலங்கை, இந்தியாவில் 'அரசியல்' செய்துவரும் அநேகர் இவரை மறந்திருக்கக் கூடும்.

1959 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி, மட்டக்களப்பில் பிறந்த தர்மரத்னம் சிவராம், 1980 களின் பின்னர் ப்ளொட், EPLF போன்ற  இயக்கங்களுடன் இணைந்து தனது அரசியல் செயற்பாடுகளைத் தொடர்ந்தவர். 'தராகி', 'எஸ்.ஆர்' ஆகிய பெயர்களில் அச்சு மற்றும் இணையத்தில் எழுதி வந்த இவர், பிரபல அரசியல் விமர்சகராகவும், பத்தி எழுத்தாளராகவும், ஊடகவியலாளராகவும் அறியப்பட்டவர்.

2005 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி, இலங்கை, பம்பலபிடிய பொலிஸ் நிலையத்துக்கருகே வைத்து, வேனில் வந்த குழுவினரால் கடத்தப்பட்ட இவரது சடலத்தை மறுதினம் இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் கண்டெடுத்தனர். பொலிஸ் நிலையத்துக்கருகே வைத்துக் கடத்தி, பாராளுமன்றத்துக்கருகிலேயே வைத்து சுட்டுக் கொலை செய்து, சடலத்தை விட்டுச் செல்வார்களாயின் கடத்தல்காரர்கள் மற்றும் கொலைகாரர்கள் எவ்வளவு பலமும், அதிகாரமுமுடையவர்களாக இருந்திருக்கக் கூடும்?! இலங்கையின் அதி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் வைத்து இவ்வாறான குற்றச் செயல்களை யாரால் செய்யவியலும்?!

ஒன்பது வருடங்கள் கடந்தும் இன்னும் உயர் அதிகாரிகளாலும், பாதுகாப்புப் பிரிவாலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இரகசியக் கேமராக்கள் பதிக்கப்பட்டுள்ள, இலங்கையின் அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் நடந்த இப் பாதகச் செயலின் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஏன் இன்னும் முடியவில்லை? எனில் குற்றவாளிகள் யார்? தராகி என அழைக்கப்பட்ட தர்மரத்னம் சிவராமைப் படுகொலை செய்தவர்கள் யார்?

இலங்கையில் நேர்மையான ஊடகவியலாளர்களாகவும், அரசியல் விமர்சகர்களாகவும் இருப்போர் பலருக்கும் இந்த முடிவுதான் இறுதியாகக் கிட்டும் போலும். சிவராமைப் போலவே, இலங்கை ஊடகவியலாளர்கள், அரசியல் விமர்சகர்களான காரணத்தால் கொலைசெய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் என நூற்றுக்கணக்கானவர்களை வரிசைப்படுத்திப் பட்டியலிட்டுக் காட்டமுடியும். இதில் இன மத பேதமில்லை. கொலைசெய்யப்படவும், கடத்தப்படவும், காணாமல் போகச் செய்யப்படவும், கண்மூடித்தனமாகத் தாக்கப்படவும், நாடுகடத்தப்படவும் அவர்கள் செய்த ஒரேயொரு குற்றம் நேர்மையான ஊடகவியலாளர்களாக இருப்பதுதான்.

எவர்க்கும் இன்னும் நீதி கிட்டவில்லை. அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் வைத்து பட்டப்பகலில் பலரும் பார்த்திருக்க படுகொலை செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, காணாமல் போயுள்ள ப்ரகீத் எக்னெலிகொட போன்ற பலருக்கும் கூட இன்னும் நீதி கிட்டவில்லை. எனில் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான நீதியை எதிர்பார்ப்பது சாத்தியமேயில்லை.

படுகொலைகளுக்கும், குற்றச் செயல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக பல சாட்சியங்கள் இருந்தபோதிலும், குற்றவாளிகளைக் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க முடியாத ஒரு நிலைப்பாடு பல வருடங்களாக இலங்கையில் இருப்பதானது, குற்றவாளிகளை ஏவிவிடும் அதிகாரம் படைத்தவர்கள் குறித்து வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் யார்? அவர்கள்தான் இலங்கையை வழி நடத்துபவர்களா? இலங்கைக்கான 'சிறந்த எதிர்கால'த்தை உருவாக்கித் தரப் போகிறவர்கள் அவர்கள்தானா?

சிவராம், நீங்கள் இப்பொழுது இல்லை. நீங்கள் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் கடந்த நிலையில், இன்றும் கூட 'இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுருத்தலாக உள்ள' (பால்ய வயதினர் உள்ளடங்கலாக) பலரும் கைது செய்யப்பட்டும், தண்டனை வழங்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் அதிகாரம் படைத்தவர்களது பார்வையில் 'நீதி' வழங்கப்பட்டு வருகிறது. கேட்பார் எவருமில்லை.

செல்வந்தர்கள் இன்னுமின்னும் செல்வந்தர்களாகவே ஆகிக் கொண்டிருக்க, ஏழைகள் தம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் இழந்து இழந்து இன்னும் வறுமைக்குள்ளேயே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆட்சி அதிகாரங்கள், சௌபாக்கியங்கள் என எதுவும் வேண்டாமெனத் துறந்து சென்ற புத்தரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்ளும் புத்த பிக்குகள் சிலர் அதிகாரத்தையும், ஆயுதங்களையும் கையிலேந்தியவாறு வெறி பிடித்த விலங்குகளைப் போல நாவில் எச்சில் வடிய நடமாடித் திரிகின்றனர். கண்டவர்களையும் தாக்குகின்றனர்.

இலங்கையின் முன்னேற்றம் பற்றியும் உங்களிடம் கூற வேண்டும். இலங்கை எனும் தேசம் இப்பொழுது அழகாகவும், தூய்மையாகவும் உள்ளது. பகிரங்கமாகத் திரிந்த யாசகர்கள் அழிக்கப்பட்டுவிட்டார்கள். இப்பொழுது அதிநவீன வசதிகள் எல்லாம் இலங்கையில் பாவனையில் உள்ளன. அதிவேகப் பாதைகள், நட்சத்திர ஹோட்டல்கள் எனப் பலதும், பல கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. விலைவாசிகளும், வரிகளும் அதிகரித்துள்ளன. அவை மாத்திரமன்றி, நாம் ஒவ்வொருவரும் உலகின் பல நாடுகளுக்கும் பல மில்லியன் டொலர்கள் கடனாளிகளாக உள்ளோம். இவை நாட்டின் முன்னேற்றங்கள் எனில், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு?

அது மட்டும் அன்று போலவே இன்றும் கேள்விக்குறியாகவேயுள்ளது சிவராம் !

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
28.04.2014

நன்றி 
#இனியொரு இதழ்

Monday, March 10, 2014

புன்னகையை விற்பவளின் கதை


பளபளக்கும் விழிகள், பூக்கும் இதழ்கள் என்பன மகிழ்ச்சி நிரம்பி வழியும் ஒரு வாழ்க்கையின் அறிகுறி. உண்மைதான், நான் இன்று எல்லோர் முன்னிலையிலும் புன்னகைக்கிறேன். இவ்வுலகில் வாழும் ஏனைய எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் எதுவுமே எனக்கு இல்லாதது போல பூரிப்புடன் உரையாடுகிறேன். உண்மையில் இன்னுமொருவர் முன்னிலையில் எனது விழிகளில் கண்ணீரைத் தேக்கி வைக்க எனக்கு உரிமையில்லை. உங்களைப் போலவே நானும் துயருருவதை சொல்வதற்கும் இயலவில்லை. புன்னகையால் துயரக் கண்ணீரை மறைத்தபடி, ஒப்பனைகளால் பிரச்சினைகளை மூடி, இந் நிறுவனத்துக்கு வரும் உங்களை வரவேற்கிறேன்.

இரு விழிகளிலும் மையிட்டு விழிநீரை மறைத்த போதிலும், இதழ்களுக்குச் சாயமிட்டு மெருகூட்டிய போதிலும், ஆத்மாவை இரு கைகளிலேந்தி புன்னகையால் உங்களை வரவேற்ற போதிலும், இப் புன்னகையால் மூடப்பட்டிருக்கும் எனது வாழ்க்கையானது முட்கள் நிறைந்ததென எவ்வாறு உரைப்பேன்? தேவதையொருத்தியாக நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள் எனினும் நான் ஒரு பொம்மையல்ல. இந் நிறுவனத்துக்குள் நுழையும் கணம்தொட்டு உங்களுக்கு காணிக்கையாக்கும் புன்னகைகளுக்கு ஊதியம் கிடைக்கிறதெனக்கு. வாய் நிறைய 'வணக்கம்' சொல்லி உங்களை வரவேற்று பணப்பையின் சுமைக்கேற்ப கொடுக்கல் வாங்கல்களை நிகழ்த்தும் நீங்களும் நானும் அறியாமல் எங்களை விற்கும் நடைமுறையிது. தலைமை அதிகாரியின் மனநிலையை சாந்தப்படுத்தவும் எனது புன்னகைதான் தேவைப்படுகிறது.

அதனை விருப்பத்துடன்தான் செய்கிறேனா என்பதை யாரும் அறிய மாட்டார்கள். அழகாகப் புன்னகைத்தபடியே இருந்த போதிலும் அப் புன்னகைக்குள் கண்ணீரும் வெளியே குதித்திடவென அலைபாய்கிறது. இச் சமூகத்தில் மிகவும் கௌரவமாக மதிக்கப்படும் ஒரு தொழிலை நான் செய்கிறேன். எனினும் சிலர் இதனை மோசமான கோணத்தில் பார்க்கிறார்கள். நிறுவனத்துக்குள் பிரவேசிக்கும் தலைவாசலிலிருந்து புன்னகையை விற்பது உண்மைதான். உங்களை எமது நிறுவனம் பக்கம் ஈர்க்க நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதுதான் எனது தொழில். இலகுவானதும் நிம்மதி தரக்கூடியதுமான தொழிலென நீங்கள் எண்ணிய போதிலும், இது உண்மையில் இலகுவானதா என்ன? புன்னகைக்கக் காசு செலவழியாது என ஒரு பேச்சுக்குச் சொல்வார்கள். எனினும் நான் புன்னகைக்க எனக்கு பணம் கொடுக்கப்படுகிறது. நான் புன்னகைத்தால் மாத்திரமே எனது நிலைப்பாடு உறுதியாகிறது. வாழ்க்கையை வாழ்ந்து செல்லவே இன்று நான் புன்னகைக்கிறேன்.

சில மாதர்கள், தங்களது காரியங்களை ஆற்றிக் கொள்ளவென கனவான்களின் கைகளில் தொங்கிப் புன்னகைக்கிறார்கள். எனினும் எனக்குக் கவலையில்லை. நான் எனது தொழிலைச் செய்கிறேன். பொருளாதாரத்தை வளம் மிக்கதாக்கும் செயன்முறை இது. யார் எவ்விதத்தில் அதனை நோக்கிய போதும், மாதக் கடைசியில் கிடைக்கப் போகும் ஊதியத்தைப் பற்றியே நான் சிந்திக்கிறேன். அதற்காகத்தான் நான் புன்னகைக்கிறேன்.

- திலினி தயானந்த
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# வல்லமை
# பெண்ணியம்
# இனியொரு
# திண்ணை

Wednesday, February 19, 2014

சிறுமியின் தற்கொலைக்குக் காரணமான அதிபர் கைது

ஃபேஸ்புக் இணையத்தளத்தில் தனக்கு டேக் செய்யப்பட்ட புகைப்படமொன்றைப் பார்த்து, அதிபர் 'வேசி' எனத் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதையையும், அவளது கடிதத்தின் தமிழ்மொழிபெயர்ப்பையும் ஏற்கெனவே உங்களுக்குத் தந்திருந்தேன்.

தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை

சிறுமி வெனுஷா தனது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிடுவதற்கு முன்பே, அந்த அதிபரான W.M சமன் இந்திரரத்னவின் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடுகள் பல கொடுக்கப்பட்டிருந்த போதும், அவருக்கிருந்த அதிகாரத்தின் காரணத்தாலும், அரசியல் பலத்தாலும் அந்த முறைப்பாடுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

கடந்த வருடம் மே மாதத்துக்கு முன்பிருந்தே இந்த அதிபருக்கெதிராகவும், அப் பாடசாலையில் இடம்பெறும் சில மோசமான நடவடிக்கைகள் குறித்தும் பல முறைப்பாடுகள் உயர் கல்வித் திணைக்களங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கப் பெற்றபோதிலும் கூட, எந்த விசாரணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதிபர், மாணவர்களை உடல் மற்றும் மன ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துகிறார் எனும் மனுவை பெற்றோர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த நிலையில், இயலாத பட்சத்தில் கடந்த 2013 மே மாதம் 17ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சம்பந்தப்பட்ட பாடசாலை அமைந்திருக்கும் வலயத்தின் கல்வித் திணைக்கள உயரதிகாரிக்கு  இது குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். உத்தரவிட்டு இரு மாதங்கள் கடந்த பின்னர் 2013 ஜூலை மாதம் 23 ஆம் திகதி, அதிபருக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார் அந்த உயரதிகாரி. அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், சிறுமி வெனுஷாவின் மரணத்தின் பின்னர், அவளது தற்கொலைக் கடிதம் கிளப்பிய அலை, பூதாகரமாக எழுந்தது. தான் ஒரு தீக்குச்சியாகி ஏனைய மாணவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்ற வேண்டுமென்பதுதான் அவளது எதிர்பார்ப்பாக இருந்தது. அக் கடிதமும், அதன் மொழிபெயர்ப்பும் இணைய ஊடகங்களின் மூலமாக உலகம் முழுவதும் தெரியப்படுத்தப்பட்ட பின்னர் சமூக வலைத்தளங்களில் ஒன்றுசேர்ந்த நல்ல மனங்களின் காரணமாக அதிபருக்கிருந்த அரசியல்பலத்தினால் மறைக்கப்படவிருந்த உண்மைக்கும், மூடி மறைக்க முயற்சி செய்யப்பட்ட அநீதிக்கும் ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

மேலதிக விசாரணைகளுக்காக நேற்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பிரிவு விஷேட காவல்துறையினரால் அதிபர் சமன் இந்திரரத்ன, கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது, சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டு பதிவாகியிருக்கிறது. 1995 இல 22 குற்றத் தண்டனைச் சட்டத்தின் 308 ஆவது பிரிவின் கீழ், சிறுவர் துஷ்பிரயோகம் எனப்படுவது மனரீதியாகத் துன்புறுத்தலும் சேர்ந்ததுதான் என்பதாலும், 2006 இல 16 குற்றத் தண்டனைச் சட்டத்தின் கீழ் மன ரீதியாகத் துன்புறுத்துவது என்பதுவும் குற்றமாகக் கருதப்படுவதாலும் அப் பிரிவுகளின் கீழ் அதிபருக்கு தண்டனை வழங்கப்படச் சாத்தியமிருக்கிறது. அவர் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பத்து வருடத்துக்குக் குறையாத சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க நேர்வார்.

அதிபர் சிறுமியின் நடத்தை குறித்து தவறாகக் கூறியதால் மன உளைச்சலுக்குள்ளான சிறுமியின் தந்தை, மரண விசாரணைக்கான உடல் பரிசோதனையின் போது, சிறுமியின் கன்னித்தன்மை சான்றிதழையும் வைத்தியர் குழுவிடம் கோரியிருந்தார். எந்தப் பெற்றோருக்கும் நேரக் கூடாத விடயம் இது. எனினும், சிறுமி கன்னித்தன்மையுடனே மரணித்திருக்கிறாள் எனச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றதையடுத்து அதிபர் சிறுமி மீது குறிப்பிட்ட 'வேசி - விபச்சாரி' எனும் கூற்று பொய்யாகியிருக்கிறது. அத்தோடு சிறுமியின் தற்கொலைக்கு அவளது பெற்றோரே காரணமென பகிரங்கமாக அரசியல் மேடைகளில் உரைத்து, அதிபரைக் காப்பாற்ற முனைந்த  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரது கருத்துக்கள், அநீதியை எதிர்த்து எழுந்த மக்களது ஆர்ப்பாட்டங்களின் முன்னிலையில் அடிபட்டுப் போயிருக்கிறது.

எதற்கும் தற்கொலை தீர்வல்ல. ஏனைய மாணவர்களின் நல்வாழ்வுக்காக தற்கொலை செய்துகொண்ட சிறுமி வெனுஷாவின் நடவடிக்கையை யாரும் இங்கு முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது. எனினும், மக்கள் ஒன்றிணைந்தால், அநீதிகளுக்கெதிராக எதையும் சாதிக்கலாம் என்பதையே இது நிரூபித்திருக்கிறது.

செய்தியாகப் பதிவிட்டும், எனது வலைத்தளம் மற்றும் ஃபேஸ்புக் முகப்பிலிருந்து பகிர்ந்தும் இந்த அநீதிக்கெதிராக ஒன்றிணைந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
19.02.2014