இலங்கையானது தற்போது வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெறும் நிதியுதவிகளிலேயே தங்கியிருக்கிறது. பொருளாதார அபிவிருத்தி முழுமையாக அற்றுப் போய், பஞ்சமும் பட்டினியும் கோலோச்சியவாறு திவாலாகியுள்ள நாட்டில், அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்கு என்ன செய்வது என்பது குறித்து மக்களால் யோசித்துக் கூடப் பார்க்க முடியாதுள்ளது. அடுத்த நான்கைந்து மாதங்களுக்கு இந்த நெருக்கடி நிலைமை நீடிக்கும் எனவும், நாட்டில் பஞ்சம் இன்னும் தீவிரமடையும் என்றும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே மின்சாரத் தடை காரணமாகவும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் பல தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள், போக்குவரத்து ஸ்தாபனங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கானோர் தமது தொழில்களை இழந்திருக்கிறார்கள். பட்டினியாலும், மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லாமலும் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். பொதுமக்கள் இவ்வாறு எல்லாப் புறங்களிலிருந்தும் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்காக அரசாங்கமானது பொருட்களின் விலைகளை அதிகரிப்பதையும், அதிகபட்ச வரிகளை விதிப்பதையும், கட்டணங்களை அதிகமாக அறவிடுவதையும் தொடர்ச்சியாக செய்து கொண்டிருப்பதானது மேலும் மேலும் அரசுக்கெதிராக மக்களைப் போராடத் தூண்டிக் கொண்டேயிருக்கிறது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்தியாவை அண்மித்துள்ள பிரதேசங்களில் வாழ்ந்து வரும் பொதுமக்கள் பலரும் இந்தியாவுக்குத் தஞ்சம் கோரி புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள். சிலர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறார்கள். இவ்வாறு தைரியமாகப் புறப்பட்டுச் செல்லும் ஒரு சிலரால் மாத்திரமே இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் பத்திரமாகப் போய்ச் சேர முடிகிறது. பலரும் இடைவழியில் இலங்கை மற்றும் வெளிநாட்டுக் காவல்துறைகளால் கைது செய்யப்படுகிறார்கள். தாய்நாட்டில் உயிர் வாழ வேறு வழியற்ற நிலைமையில் இவ்வாறு உயிராபத்து மிக்க பயணத்தைத் தொடரத் துணிபவர்களைக் குற்றம் கூற முடியாது.
கடந்த வாரமும் கூட இலங்கையில் எரிபொருட்களினதும், உணவுப் பொருட்களினதும் விலைவாசிகள் கணிசமான அளவு அதிகரித்திருக்கின்றன. வரிசைகளில் காத்திருந்த மக்கள் அவ்விடங்களிலேயே மரணித்து விழுந்திருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் மேலும் மேலும் விலைவாசிகள், வரிகள் மற்றும் கட்டணங்கள் அதிகரிப்படுவதற்கு எதிராகத்தான் நாடு முழுவதும் பொதுமக்கள் ஒன்றிணைந்து தெருவிலிறங்கி ஆர்ப்பாட்டங்களைச் செய்து வருகிறார்கள். ரம்புக்கனை எனும் பிரதேசத்தில் அவ்வாறு நடைபெற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது களமிறங்கிய காவல்துறை அவர்களைச் சுட்டுக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அரசாங்கமும், அதிகார வர்க்கமும் மிகக் கொடூரமாகவும், குரூரமாகவும் மக்களை இவ்வாறு வேட்டையாடிக் கொண்டிருப்பதுதான் தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது. அரச வன்முறை எனப்படுவது இவ்வாறான பேரழிவு ஆயுதங்களால் நடத்தப்படுவது மாத்திரமல்ல. நாட்டில் பண வீக்கத்தை ஏற்படுத்தி, இலங்கை ரூபாயின் பெறுமதி அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருத்தல், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டேயிருத்தல், பட்டினியாலும், மருந்துகளின்மையாலும் மக்கள் மரணிப்பதற்கு எதிராக எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமலிருத்தல், தினந்தோறும் பல மணித்தியாலங்கள் மின்சாரத்தைத் துண்டித்தல், சமையல் எரிவாயு, டீசல், பெற்றோல் போன்றவற்றின் தட்டுப்பாட்டை இல்லாதொழிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமலிருத்தல் போன்ற குரூரமான, ஆயுதங்களற்ற வன்முறைகளையும் அரசாங்கமும், அதிகார வர்க்கமும் மக்கள் மீது பிரயோகிக்கலாம் என்பதற்கு தற்போது இலங்கை ஒரு அத்தாட்சியாகவிருக்கிறது.
அவ்வாறே, ஆயுதங்களாலான வன்முறைகளும் இலங்கையில் பகிரங்கமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. கொழும்பின் தெருக்கள் அனைத்திலும், குறிப்பாக அலரி மாளிகை, பாராளுமன்றம், ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றைச் சூழவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவசர காலச் சட்டம் விதிக்கப்பட்டு, நாடு முழுவதிலுமிருந்தும் அதிகளவான காவல்துறையினரும், அதிரடிப் படையினரும் பேரூந்துகளில் அழைத்து வரப்பட்டு கொழும்பு நகரில் குவிக்கப்பட்டுள்ளதோடு, சாதாரணமாக மக்கள் எளிதில் கடந்து செல்ல முடியாத அளவு உயரமான காவல் அரண்கள் தெருக்களின் மத்தியில் எழுந்துள்ளன.
எனவே இலங்கையர்கள் மாத்திரமல்லாமல், இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்திருக்கும் வெளிநாட்டவர்களும் கூட தமது பணிநிமித்தமாக தெருவில் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. எவரையும் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லும் அனுமதி வழங்கப்பட்டுள்ள காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் ஆயுதந் தாங்கிய இராணுவ வாகனங்களோடு தெருக்களில் வலம் வருகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்ட பல வெளிநாடுகள் இலங்கைக்கு பயணம் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளதோடு, பல வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் இந்தக் காலகட்டத்தில் இலங்கையிலுள்ள தமது பிரஜைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விதிமுறைகளை விதித்திருக்கின்றன.
பொதுமக்களுக்கு எதிராக இவ்வளவு உயிராபத்துகள் உள்ள போதிலும், ஏற்கெனவே நாடு பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் கடும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் காரணத்தால்தான் அதற்குக் காரணமான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவையும், அரசியல்வாதிகளையும் பதவி விலகுமாறு கோரி பொதுமக்கள் கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையிலும், அலரி மாளிகைக்கு முன்பும் நாடு முழுவதும் ஒன்றிணைந்து இரவு பகலாக மாதக் கணக்கில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்கள் எழுச்சி போராட்டத்தின் காரணமாக இலங்கை அரசியலில் தற்போது சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. எரிபொருள், உணவு, மருந்து மற்றும் டாலர் தட்டுப்பாடுகளுக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்கத் தேவையான பொருத்தமான தீர்வு இன்னும் கண்டறியப்படவில்லை. என்றாலும், மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் காரணமாக, நாட்டை சரியான பாதையில் திருப்பி நீண்ட கால தீர்வுகளைக் கண்டறிய, மக்களுக்கு அதிகாரம் அளிக்கக் கூடிய விதத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த மக்கள் எழுச்சி போராட்டத்தின் மூலம், இலங்கை மக்கள், கடைசியில் தமது உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் பாரபட்சமின்றி ஒன்றிணைவதற்கான தைரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அரசியல் ரீதியாக சர்வ அதிகாரங்களும் படைத்த ஆட்சியொன்றை, ஒரு சில தினங்களிலேயே தம் முன்னே மண்டியிடச் செய்யும் அளவுக்கு பொதுமக்களின் அந்த ஒற்றுமை பலமடைந்திருக்கிறது. பொதுமக்களின் அந்த சாத்வீகமான போராட்டம் ஆனது, மூன்று தினங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த அமைச்சரவையையும் பதவி விலகச் செய்ய காரணமாக இருந்ததோடு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜினாமா செய்வதற்குக் காரணமாகவும் அமைந்தது. தேர்தல்களின் போதும், மக்களின் ஆர்ப்பாட்டங்களின் போதும் உயிரிழப்புகள் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு நாட்டில் இது முக்கியமானதும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததுமான வெற்றிகளாகும்.
பொதுமக்கள் போராட்டத்தின் அந்த வெற்றிகளைக் காணச் சகிக்காமல் அவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டார் மஹிந்த ராஜபக்ஷ. அந்த அண்மைய வன்முறைகளுக்குக் காரணமான மஹிந்த ராஜபக்ஷ மீதும், அவரது உத்தரவுகளை நிறைவேற்றிய அரசியல்வாதிகள் மீதும், காடையர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதனால், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷவின் ராஜினாமா இலங்கை மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் ஒரு முக்கியமான வெற்றியென்றால், அவர் மீதான இந்தத் தடை மற்றுமொரு குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.
சீரற்ற காலநிலையில், உக்கிரமான வெயில் மற்றும் கடும் மழைக்கு மத்தியிலும் ஆர்ப்பாட்டக்காரர்களின் ‘கோட்டா கோ (Gota Go)’ கிராமத்தில் இதுவரை கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட பொதுமக்களினதும், ஊடகவியலாளர்களினதும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு அதற்கான நீதி கேட்கும் போராட்டமும் வலுத்து வருகிறது. வரலாற்றில் முதற்தடவையாக தமிழர்களோடு, சிங்களவர்களும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையில் கடந்த மே மாதம் பதினெட்டாம் திகதி நடத்தியிருக்கிறார்கள்.
வழமையாக இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை அரசாங்கம் கடுமையாக எதிர்க்கும். அவற்றை நடத்துபவர்களைக் கைது செய்து சிறையிலடைக்கும். இப்போது கொழும்பில் ஜனாதிபதி செயலகம் முன்பே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும்போது அரசாங்கத்தால் எதுவுமே செய்ய இயலாதுள்ளது. இதுவும் இந்தப் போராட்டத்தின் மூலம் மக்கள் அடைந்துள்ள வெற்றிகளுள் குறிப்பிடத்தக்க ஒன்று.
இவையனைத்தும் இலங்கை அரசியலில் பொதுமக்களின் எழுச்சி ஏற்படுத்தியுள்ள மிகப் பிரதானமான மாற்றங்களாகும். இலங்கை சுதந்திரம் பெற்றதற்குப் பிறகான அரசியலில், அரசியல் கட்சிகள் மக்கள் வாக்குகளோடு பாராளுமன்றத்தின் ஊடாக அதிகாரத்திற்கு வந்த போதிலும், நாட்டில் ஜனநாயக அரசியல் செயற்படவேயில்லை. அரச மற்றும் எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள் தமது சகாக்களோடு சேர்ந்து நாட்டின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதுதான் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அவ்வாறே சிங்கள தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட இனவாத அரசியலானது, சிறுபான்மையினரை பாகுபடுத்தி அவர்களைத் தரம் குறைந்த குடிமக்களாக ஆக்கியுள்ளது. பல தசாப்தங்களாக தமிழர்கள் தமது உரிமைகளைக் கோரி ஜனநாயக ரீதியிலும், ஆயுதங்களைக் கொண்டும் நடத்திய போராட்டங்கள் குரூரமாக நசுக்கப்பட்டதோடு, அவர்களது பிரச்சினைகளும் இன்னும் தீர்க்கப்படவில்லை. இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் இருந்ததை விடவும், இன்று சிறுபான்மையினரின் உரிமைகள் மிக மோசமான முறையில் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்கள் தமது ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடிக் கொண்டிருந்த போதிலும் சிங்கள தேசியவாத அரசியலும், அதன் உதவியாளர்களும் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகள் பற்றி சிறிதளவும் சிந்திக்கவேயில்லை.
தற்போதைய நெருக்கடி நிலைமையானது பொதுமக்களிடையே இவை தொடர்பான சிந்தனைகளைத் தோற்றுவித்துள்ளதோடு, தற்போது மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பொதுமக்களும் சகல இனத்தவர்களையும் ஒன்றுபோலவே கருதக் கூடிய விதத்தில் இலங்கையில் புதிய அரசியல் கலாசாரமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று தமது போராட்டங்களின் மூலமாக தைரியமாக கோரிக்கைகளை எழுப்பி வருகிறார்கள்.
சர்வாதிகாரம் மீதும், இலங்கையைத் தீவிரவாதத்திலிருந்தும், யுத்தங்களிலிருந்தும் மீட்டதாக மார் தட்டிக் கொண்டிருக்கும் ராஜபக்ஷேக்கள் எனும் அரசியல் குடும்பத்தின் மீதும் பொதுமக்களுக்கு இருந்த பேரச்சத்தை கடந்த பல மாதங்களாக இலங்கையில் உக்கிரமடைந்துள்ள நிதி நெருக்கடியானது முழுவதுமாக நீக்கியிருக்கிறது. பயம் நீங்கிய பொதுமக்கள் புதிய அரசியல் உத்வேகத்தையும், வலிமையையும் தற்போது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாகத் திரண்டெழுந்து பலம் வாய்ந்த அரசாங்கத்துக்கும், அதிகாரத்துக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் அத்திவாரத்தை அசைத்துப் பார்க்க அவர்களால் முடிந்திருக்கிறது.
இவ்வாறாக அரசியல்ரீதியாக சுறுசுறுப்பாகவும், விழுப்புணர்வோடுமுள்ள குடிமக்களையே ஜனநாயகத்தின் நிஜ ஆதாரமாகவும், உரிமையாளர்களாவும் குறிப்பிடலாம். உண்மையில் தமது வாக்குகள் மூலம் பாராளுமன்றத்துக்கு ஆட்சியாளர்களை அனுப்பும் அவர்கள் வெறும் வாக்காளர்கள் மாத்திரமல்ல. வாக்களிப்பதோடு, நாட்டின் அரசியலில் பங்குகொள்ளும் உரிமையையும் அவர்கள் இவ்வாறாகக் கோருகிறார்கள். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் தமது கடமையைச் செய்யத் தவறும்போது தைரியமாகவும், நேரடியாகவும் அதனைத் தட்டிக் கேட்டு, பதவி விலகுமாறு அவர்களைக் கோருகிறார்கள்.
பொதுமக்களின் கோரிக்கைகள் வலுத்ததைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ள போதிலும், தற்போது இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், இலங்கையின் நிலைமையில் பெரும் மாற்றம் ஏற்படக் கூடும் என்று கருத முடியாது. ஏற்கெனவே பிரதமராக ஐந்து தடவைகள் பதவி வகித்துத் தோற்ற அனுபவத்தைக் கொண்டுள்ள ரணிலின் இயலாமையினால், நாட்டில் பல பிரச்சினைகள் உக்கிரமானதை கடந்த கால அரசியல் வரலாறு எடுத்துக் கூறுகிறது. ராஜபக்ஷேக்களின் நெருங்கிய நண்பரான அவர், ராஜபக்ஷேக்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளான வன்முறைகளுக்குத் தூண்டியமை, ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள், போர்க் குற்றங்கள் போன்றவை மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதிலிருந்து ராஜபக்ஷேக்களைப் பாதுகாக்கவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலைமை மிகவும் பாரதூரமானது.
கடந்த வாரங்களில் மஹிந்த ராஜபக்ஷவால் உசுப்பி விடப்பட்ட காடையர்கள் கூட்டம் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்களை மிகக் கொடூரமாகத் தாக்கியது. அதனால், உந்தப்பட்ட பொதுமக்கள் ராஜபக்ஷேக்களின் பூர்வீக இல்லம், அவர்களது பெற்றோரின் கல்லறை ஆகியவை உட்பட ஏனைய ஊழல் அரசியல்வாதிகளினதும் வீடுகளையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கினார்கள். சிலவற்றுக்குத் தீ வைத்தார்கள். இவ்வாறாக அரசியல்வாதிகளின் சொத்துகளுக்கு ஏற்படுத்திய சேதங்கள் மூலமாக, ‘பொதுமக்கள் கொந்தளித்தால் என்னவாகும்?’ என்பதை அரசுக்குத் தெளிவுபடுத்தினார்கள். பொதுமக்கள் மூலமாக இவ்வளவு பின்னடைவுகளை அரசாங்கம் சந்தித்திருக்கும் நிலையிலும் அது இப்போதுவரை மௌனமாகவே இருப்பதுதான் யோசிக்க வேண்டிய விடயமாக இருக்கிறது.
கடத்தல்களுக்கும், கொலைகளுக்கும், சித்திரவதைகளுக்கும் பெயர் போன ராஜபக்ஷேக்கள், பொதுமக்களால் தமது பூர்வீக சொத்துகளுக்கும், பெற்றோரின் கல்லறைகளுக்கும் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் மற்றும் தம்மால் வெளியே இறங்கி நடமாட முடியாமை போன்ற அவமானங்களைப் பொறுத்துக் கொண்டு வெறுமனே இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு ராஜ குடும்பமாக இலங்கையில் தமது ஆதிக்கத்தையும், சர்வாதிகாரத்தையும் நிலைநாட்டிய அவர்கள் பதவி விலக நேரும்போது அதற்குக் காரணமான பொதுமக்களைப் பழிவாங்காமல் வெறுமனே பதவி விலகிச் செல்வார்கள் என்றும் கருத முடியாது. அவர்கள் தமது கேவலமான நிலைக்குக் காரணமான பொதுமக்களுக்கு என்னவெல்லாம் தீங்கு செய்ய வேண்டும் என்ற திட்டங்களை இப்போதும் ஒளிந்திருந்தவாறு தீட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். அந்தத் திட்டங்களின் மூலம் நாட்டை மேலும் அதல பாதாளத்தில் வேறு எவருமே மீட்டெடுக்க முடியாத நிலைமைக்கு அவர்கள் தள்ளுவார்கள்.
அதுவரையிலான ராஜபக்ஷேக்களின் இந்தக் கள்ள மௌனமானது, வெடித்துக் கிளம்பக் காத்திருக்கும் எரிமலைக்கு ஒப்பானது. அது எந்தளவுதான் உக்கிரமானதாக பொதுமக்களுக்கு ஆபத்துகளை விளைவித்தாலும் கூட, குரூரத்தையும், வன்முறைகளையும் கொண்டு சர்வாதிகார ஆட்சியை நிலை நாட்டிக் கொண்டிருக்கும் ராஜபக்ஷ குடும்பம் மொத்தமாகப் பதவி விலகி, நாட்டில் அவர்கள் கொள்ளையடித்த மக்களின் பணத்தைத் திருப்பிச் செலுத்தும்வரை பொதுமக்கள் போராடிக் கொண்டேதான் இருப்பார்கள். நாட்டின் எதிர்கால சந்ததிகளின் நலனுக்காக தாம் போராடிக் கொண்டிருக்கும் அந்தப் போராட்டம் நிச்சயமாக ஒருநாள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையே பஞ்சத்துக்கும், பட்டினிக்கும் மத்தியிலும் பொதுமக்களைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறது.
தொடர்புக்கு – mrishansh@gmail.com
நன்றி - உயிர்மை மாத இதழ் - ஜூன், 2022