அநீதங்களிலிருந்து நாட்டுமக்களைக் காக்கவும், அவர்களுக்கு சேவை செய்யவெனவும் உருவாக்கப்பட்டவையே பொலிஸ் எனப்படும் காவல்துறை. தேசத்தின் எந்த மூலையிலும் தனியொரு நபருக்கோ, பொதுமக்களுக்கோ ஏதேனுமொரு இன்னல் ஏற்படுமிடத்து அங்கு சமூகமளித்து அமைதியை நிலைநாட்டுவதுவும், இன்னலுக்குக்கான காரணத்தை ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி உரிய தண்டனையை வாங்கிக் கொடுப்பதுவும் கூட காவல்துறையின் கடமையே. அந்த நம்பிக்கையில்தான் மக்கள் தங்களுக்கொரு அநீதி நிகழுமிடத்து காவல்துறையை நாடுகின்றனர். தனக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்குமென்ற நம்பிக்கையோடு அநீதிக்கெதிராக முறைப்பாடு செய்கின்றனர். முறைப்பாட்டை விசாரிக்கும் காவல்துறை, சம்பந்தப்பட்டவர்களை கூண்டிலேற்றி நீதத்தை நிலைநாட்டுகிறது. இது உலகளாவிய ரீதியில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவு.
ஆனால் இலங்கையின் காவல்துறைக்கும் இந்தக் கடமைகளுக்கும் சம்பந்தமேயில்லை. இலங்கை காவல்துறையின் அநீதங்கள் பற்றிப் பேசிப் பேசியும், எழுதி எழுதியும் சலித்துப் போய்விட்டது. இந் நாட்டில் ஊழல் அதிகம் நிகழுமிடங்களில் காவல்துறை இரண்டாமிடத்திலிருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் ஆளுங்கட்சி அமைச்சரொருவரும் வெளிப்படையாக உரையாற்றியிருக்கிறார். இலங்கையின் காவல்துறையினர் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றனர். கதிர்காமத்தில், மாணிக்க கங்கையில் புனித நீராடும் தமிழ் மக்களை தடியால் அடித்து விரட்டும்போதும், பம்பலப்பிட்டி கடற்கரையில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனை தடியால் அடித்துக் கொல்லும்போதும் ஒரே சுபாவத்தோடுதான் நடந்துகொள்கின்றனர். அங்குலான பொலிஸ்நிலையத்துக்குள் கொலை நிகழ்ந்தபோதும், கொட்டாவ பொலிஸ்நிலையத்துக்குள் கொலை நிகழ்ந்தபோதும் கொலைப்பழிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள காவல்துறை சொல்லும் கதை ஒன்றேதான். கைது செய்யப்பட்டபின்பு சந்தேகநபரொருவர் கொல்லப்படாத பொலிஸ்நிலையமொன்று இலங்கையிலிருக்குமென்பது ஊருக்குள் மரணமே நிகழாத வீடொன்றைக் கண்டுபிடிப்பதுபோல நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது.
அண்மையில் நிகழ்ந்த இரு சம்பவங்களைப் பார்ப்போம். இவற்றுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. இரண்டு சம்பவங்களிலுமே யார் குற்றவாளியென்பது வெளிப்படையாகத் தெரிந்த போதிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கான தண்டனை வழங்கப்படவில்லை. நிரபராதிகள் வீணே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
லாலக பீரிஸ், 34 வயதான இவர் இரு குழந்தைகளின் தந்தை. வழிப்பறிக் கொள்ளைக்காரர்களைப் பற்றி காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் படி, அந்த அங்கலட்சணத்துடன், கைவசம் தேசிய அடையாள அட்டை இல்லாமலிருந்த இவரையும் இவரது நண்பரையும் தெருவில் வைத்து கைது செய்து அழைத்துச் சென்றது காவல்துறை. ஒருவரைக் கைது செய்த பின்பு அவரை என்ன குற்றவாளியாக்குவதெனும் கலையில் திறமை வாய்ந்த காவல்துறை, இவரைக் கொள்ளைக்காரனாக்கியது.
லாலகவின் தங்கை வீட்டில், உடைந்திருந்த சலவை இயந்திரத்தை திருத்திக் கொடுப்பதற்காக அன்றைய பகல்பொழுது முழுவதையும் செலவளித்திருந்த லாலக, வீட்டுக்கு வந்த பின்னர் வீட்டுத் தண்ணீர்க் குழாய் உடைந்ததன் காரணமாக, அதில் பொருத்துவதற்கு பிளாஸ்டிக் குழாயொன்றை வாங்கிவரவென்று மே மாதம் 23ம் திகதி மாலை 6 மணிக்கு கொட்டாவ நகரத்துக்குச் சென்றதாக அவரது மனைவி அனுஷா தில்ருக்ஷி சொல்கிறார். அவர் நகரத்துக்குப் போனபின்னர், அவரையும் இன்னுமொருவரையும் காவல்துறை கைதுசெய்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து உடனேயே கொட்டாவ பொலிஸ் நிலையத்துக்கு அவரது மனைவியும், தங்கையும் சென்று அவரைப் பற்றி விசாரித்துள்ளனர். அவ்வாறு யாரையும் கைது செய்யவில்லையென அங்கு அவர்களுக்குச் சொல்லப்பட்டது. உடனே அயல் பொலிஸ்நிலையமான ஹோமாகம பொலிஸ் நிலையத்துக்குச் சென்று விசாரித்தபோதும் அதே பதில்தான் அவர்களுக்குக் கிடைத்தது.
பொலிஸ்நிலையத்துக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும்போது அவரது வீட்டினர், உறவினரின் மனதில் எவ்வாறான வேதனையெழும்பும்? அதுவும் இந் நாட்டு காவல்துறையினரின் நடத்தைகளை அறிந்தவர்களது மனது என்ன பாடுபடும்? எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தும் கிடைக்காதவிடத்து, மீண்டும் இரவாகி அவரது மனைவியும், தங்கையும் பொலிஸ்நிலையம் வந்தனர். முன்னைய பதிலே அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால், லாலகவுடன் சேர்த்து கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட நபர் அங்கு கூண்டுக்குள்ளிருப்பதை அவர்கள் கண்டனர்.
'நாங்கள் உன்னுடன் சேர்த்து வேறு யாரையும் இங்கு கொண்டுவரவில்லைதானே?' பொலிஸார், அவர்கள் முன்பே அந் நபரிடம் வினவினர். அவரும் இல்லையென்று தலையசைத்தார். கொடுக்கப்பட்டிருந்த அடி காயங்கள் அவரை அவ்வாறு சொல்லவைத்திருக்கக் கூடும். ஏனெனில், அவர்கள் இருவரையும் நகரில் வைத்து பொலிஸ் தங்கள் ஜீப்பில் ஏற்றியதை நேரில் கண்ட சாட்சிகள் பலர் இருந்தனர். அப் பெண்கள் பெருந் துயரத்தோடு வீட்டுக்கு வந்தனர்.
அடுத்தநாள் விடிகாலை 6.30 மணியளவில் திரும்பவும் லாலகவின் தங்கை பொலிஸ்நிலையம் வந்து விசாரித்துள்ளார். முந்தைய நாள் அவருக்குக் கிடைத்த அதே பதில்தான் மீண்டும் கிடைத்தது. அவர் வீட்டுக்கு வந்தார். காலை 9 மணிக்கு காவல்துறையிடமிருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
'அண்ணனுக்கு ஏதேனும் சுகவீனம் இருந்ததா? உனது அண்ணன் நேற்று செத்துப் போய்விட்டார். உடனே பொலிஸுக்கு வா.'
உடனே அவர், லாலகவின் மனைவியையும், இன்னுமொரு சகோதரனையும் அழைத்துக் கொண்டு பொலிஸ்நிலையம் வந்துள்ளார். அங்கு பொலிஸ் மேசைக் காலொன்றில் கட்டப்பட்டு, இறந்துபோயிருந்த லாலகவைக் கண்டனர். கைகளிரண்டிலும் விலங்கிடப்பட்டு, காது அருகில் காயத்தோடும், உடல் முழுவதும் சப்பாத்து அடையாளங்களோடும், வாயிலிருந்து இரத்தம் வழிந்த நிலையில் இருந்த அண்ணனின் சடலத்தைக் கண்ணுற்றதாக அவரது சகோதரன் கூறுகிறார். 23ம் திகதி, தங்களால் கைது செய்யப்படவில்லையெனச் சொல்லப்பட்ட ஒருவர், 24ம் திகதி பொலிஸ்நிலையத்துக்குள்ளேயே இறந்துபோயிருந்தது எப்படி? இப்பொழுது லாலகவைக் கைது செய்யவே இல்லையெனச் சொல்லப் போவது யார்? பொலிஸாருக்கு கைதிகளை அடிப்பதற்கும், சித்திரவதை செய்வதற்கும், கொலை செய்வதற்கும், அவர்கள் மேல் பொய்யான குற்றங்களைச் சோடிப்பதற்கும் இன்னும் பொய் சொல்வதற்கும் கூட இங்கு அனுமதி இருக்கிறது.
பொலிஸாரின் கைதுக்குப் பின்னர் நிகழ்ந்த இப் படுகொலைக்குப் பிற்பாடு செய்யப்பட வேண்டிய அனைத்தும் வழமை போலவே நிகழ்ந்துமுடிந்தாயிற்று. அதாவது கொட்டாவ பொலிஸார் மூவருக்கு வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இப் படுகொலை சம்பந்தமாக பூரண விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறியுள்ளார். இது நடக்குமா? இது போன்ற அறிக்கைகளை எத்தனை முறை கேட்டிருப்போம். ஆனால் எந்தச் சிறைச்சாலைப் படுகொலைக் குற்றத்திலும் பொலிஸுக்குத் தண்டனை கிடைத்ததாகத் தகவல்கள் இல்லை. இந்தச் சமூகத்தில் எவர்க்கும் யாரினதும் உயிரைப் பறிக்க உரிமையில்லை. பொலிஸுக்கு மட்டும் அந்த உரிமை இருக்கிறதா என்ற கேள்வி எழுகின்றது. குற்றவாளியென இனங்காணப்படும் வரை கைது செய்யப்படும் அனைவருமே சந்தேக நபர்கள் மாத்திரம்தான். அவர்கள் குற்றமிழைத்தவர்களா, நிரபராதிகளா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இங்கு சந்தேகநபருக்கு, எந்த நீதியுமின்றி தண்டனை வழங்கியாயிற்று.
இது இவ்வாறெனில், தனக்கு நீதி வழங்குவார்களென அப்பாவித்தனமாக நம்பி, பொலிஸை நாடிய ஒருவரையே பொலிஸ் தண்டித்த இன்னுமொரு கதையும் இங்கு நிகழ்ந்துள்ளது. இது நடந்து நான்கு மாதங்களாகிறது. இன்னும் நீதி கிடைக்கப்பெறவில்லை. கதையின் நாயகனின் பெயர் சரத் சந்திரசிறி. 43 வயதில் மெலிந்து, உயர்ந்த, ஏழ்மையான தோற்றம் கொண்ட நபர். தனது தந்தையின் மரண வீட்டுக்குப் புறப்பட்டவருக்கு நடந்ததைப் பார்ப்போம்.
கடந்த பெப்ரவரி 21ம் திகதி தனது தந்தையின் மரணம் குறித்த தகவல் கிடைத்ததுமே, அவர் வாழ்ந்த நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தார் சந்திரசிறி. அப்பொழுது நேரம் விடிகாலை 2 மணி. நகரத்திலிருந்து முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு எடுத்து அவர் மரண வீட்டுக்குச் செல்லத் தீர்மானித்தார். அதன்படியே சென்ற அவர், முச்சக்கர வண்டியை மரண வீட்டுக்கருகிலேயே கொண்டு செல்ல முடியாத காரணத்தால் மரண வீடு தென்படும் தூரத்தில் நிறுத்தச் சொல்லி இறங்கி, வாடகை எவ்வளவு எனக் கேட்டிருக்கிறார். நூறு ரூபாய் கேட்ட சாரதியிடம் தன்னிடமிருந்த ஒரேயொரு ஆயிரம் ரூபாய்த் தாளைக் கொடுத்திருக்கிறார். வண்டிச் சாரதி தன்னிடம் மாற்றித்தர காசு இல்லை எனச் சொன்னதும் இவர் மரண வீட்டில் யாரிடமாவது வாங்கிவந்து தருவதாகச் சொல்லும்போதே சாரதி ஆயிரம் ரூபாய்த் தாளோடு வண்டியைச் செலுத்திச் சென்றுவிட்டார். இனி அவரே சொல்கிறார் கேளுங்கள்.
" அப்பொழுது விடிகாலை 3 மணியிருக்கும். நான் ஆட்டோவைத் துரத்திக் கொண்டு சந்திவரை ஓடினேன். அவர் எந்நாளும் ஆட்டோவை நிறுத்திவைக்கும் இடத்திலேயே தனது ஆட்டோவுடன் இருந்தார். 'தம்பி, நான் கொடுத்த ஆயிரம் ரூபாயோட மீதியத் தாங்கோ' என்று அவரிடம் போய்க் கேட்டேன். 'உனக்கென்ன பைத்தியமா ஓய்? நீ எனக்கு நூறு ரூபா மட்டும்தான் கொடுத்தாய்.' என்று அவர் மிரட்டினார். நான் ஏதும் செய்ய வழியற்று நின்றிருந்தேன். அப்பாவுடைய மரண வீட்டுக்குப் போகவும் கையில் காசில்லை. அப்பொழுது வீதியில் ரோந்து போய்க் கொண்டிருந்த இரண்டு பொலிஸாரைக் கண்டேன். நான் அவர்களிடம் போய் விடயத்தைக் கூறினேன். அவர்களால் எதுவும் செய்யமுடியாதென்றும் வேண்டுமென்றால் போய் பொலிஸ்நிலையத்தில் ஒரு முறைப்பாடு கொடு என்றும் அவர்கள் கூறினார்கள். நான் அப்பொழுதே நடந்து பொலிஸ்நிலையம் புறப்பட்டேன். நான் அங்கு போய்ச் சேர்ந்தபோது சம்பந்தப்பட்ட ஆட்டோ சாரதியும், பொலிஸ் சார்ஜனும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டேன். சார்ஜன் என்னைக் கண்டதும் எனதருகில் வந்தார். செருப்பைக் கழற்றச் சொன்னார். நான் கழற்றியதும் என்னை இழுத்துக் கொண்டுபோய் சிறைக் கூண்டுக்குள் தள்ளினார். நான் ஏனெனக் கேட்டேன். அதற்கு, 'வாயை மூடிக் கொண்டிரு..ரொம்பப் பேசினா வாயிலிருக்கும் பல்லெல்லாத்தையும் வயித்துக்குள்ள அனுப்பிடுவேன்' என்று மிரட்டினார்."
22ம் திகதிதான் அவர் விடுவிக்கப்பட்டார். எந்தக் குற்றமும் செய்யாத ஒருவரை, நீதி கேட்டு வந்த ஒருவரை தண்டித்தனுப்புவது எந்த விதத்தில் நியாயமானது? அந்த அப்பாவி மனிதன், தனி மனிதனாக இதற்கு நீதி கேட்டுப் போராடத் தொடங்கியுள்ளார். பொலிஸ் மட்டத்தில் ஒவ்வொரு உயரதிகாரிகளாகச் சந்தித்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து விளக்கமளித்திருக்கிறார். எந்த முன்னேற்றமும் நிகழவில்லை. தான் இறுதியாகச் சந்தித்த பொலிஸ் உயரதிகாரியிடம் விடயத்தைக் கூறியதும் 'கேவலம் ஒரு ஆயிரம் ரூபாய்க்காகவா இவ்வளவு அலையுற?' எனக் கேட்டிருக்கிறார். அந்த ஆயிரம் ரூபாய் கூட தனக்குப் பெறுமதியானது எனக் கூறும் சந்திரசிறி, தன்னை அநியாயமாக சிறையில் வைத்திருந்தமைக்கு நீதி கேட்டே நான் இப்பொழுது போராடுகிறேன் எனச் சொல்லியிருக்கிறார். அங்கிருந்தும் துரத்தப்பட்ட அவர், பல தொலைக்காட்சி ஊடகங்களைச் சந்தித்து விடயத்தைக் கூறியிருக்கிறார். எங்கும் அவரைக் கண்டுகொள்ளவில்லை.
"நான் ஒரு விவசாயி. அப்பாவுடைய மரண வீட்டுக்குச் செல்வதற்காகவே பாடுபட்டு ஆயிரம் ரூபாய் தேடிக் கொண்டேன். இன்று வரை ஒவ்வொருவரும் சொல்லுமிடங்களுக்கு நீதி கேட்டு அலைந்து பத்தாயிரம் ரூபா போல செலவாகிவிட்டது. ஆனாலும் நான் ஓய மாட்டேன். எனது பணத்தைத் திருடிய திருடனே பொலிஸுடன் சேர்ந்து என்னை அச்சுறுத்தினான். அவர்கள் என்னை வீணாகக் கூண்டுக்குள் தள்ளினர். இதற்கு எனக்கு நீதி தேவை. " அவர் குறிப்பிடும் முச்சக்கர வண்டியின் இலக்கம் 7644. சாரதியின் பெயர் 'சுபுன்'. சந்திரசிறியைப் பார்க்கும்போதே பாமரனெனத் தெரிகிறது. ஆனாலும் அவரினுள்ளே பெரும் தைரியமொன்று இருக்கிறது. அவ்வாறில்லையெனில் தனக்கு நிகழ்ந்த அநீதியொன்றுக்கு நீதி வேண்டி இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டார். ஆனால் இவ்வாறு எல்லோராலும் இயலுமா என்பதே கேள்வி.
காலத்தோடு இந்த அசம்பாவிதங்கள் மறக்கடிக்கப்படலாம். ஆனால் அநீதமாக துயரிழைக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரால் இதனை எவ்வாறு இலகுவில் மறந்துவிட இயலும்? இவ்வாறான நிகழ்வுகளுக்கு அரசு உடனடியாக ஏதேனும் நடவடிக்கை எடுக்காது விடின், பொலிஸுக்குச் செல்வதென்பது தனது கல்லறைக்குத் தானே நடந்து செல்வதற்கு ஒப்பாகும் என்ற ஒரு எண்ணம் மட்டும்தான் பொதுமக்களிடம் தொடரும்.
இலங்கையில் காவல்துறை எனப்படுவது, பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு இடமாகவும், அங்கு நீதியைக் காப்பதற்குப் பதிலாக, மரணத்தைத் தேடித் தருமிடமாகவும் மக்கள் மனதில் ஆழப் பதிந்தாயிற்று. லத்திக் கம்போடு மட்டும் நின்று விட்டிருந்த பொலிஸ், ஈழக் கலவரத்துக்குப் பிறகு துப்பாக்கியாலும் தண்டனை வழங்கத் தொடங்கியிருக்கின்றனர். பொலிஸுக்கு எதிராக யாரும் விரல்நீட்டத் தயங்குவதாலேயே கைது செய்து அழைத்துச் செல்லப்படும் சந்தேகநபர்கள் எல்லோருக்கும் சித்திரவதையும், அடி, உதையும் தாராளமாகக் கிடைக்கிறது. கைது செய்யப்படும் நபருக்கு அடிப்பதென்பது நீதிக்கு மாற்றமானதென வாதம் புரிவது இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் நகைச்சுவையாக உருமாறியுள்ளது. பொலிஸ் தடுப்புக்காவலிலிருக்கும் கைதிகள் கொல்லப்படுவதென்பது திகைப்பளிக்கக் கூடிய ஒன்றாகவும் இங்கு இல்லை. சிக்கல் என்னவெனில், காவல்துறையின் நாளைய பலி நீங்களா, நானா என்பது மட்டுமே.
(தகவல் உதவி - டிரன்குமார பங்ககம ஆரச்சி)
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
21.06.2010
நன்றி
# காலச்சுவடு இதழ் 129, செப்டம்பர் 2010
# KKY NEWS
4 comments:
அதெல்லாம் ஒன்றுமில்லை.
இலங்கை காவல் துறை நல்லவங்க. வல்லவங்க. கோல்ட்ங்க. டைமனுங்க...
தமிழனுக்கு நடந்தால் அது பயங்கரவாத தடைச்சட்டம். சிங்களவருக்கு நடந்தால் அது அநீதியா???
இப்ப தானே ஆரம்பிச்சிருக்கு. அதுக்குள்ளயா???
பிள்ளைக்கு காச்சல் என்று வராதுவிட்ட ஊழியரை மரத்தில் கட்டிய அமைச்சர் செய்த செயல் தான் சரி என்று அமைச்சரவை பேச்சாளர் சொன்னபோது எங்கே போனார்கள் நீதவான்கள்? இலங்கை அதிபரை தான் கண்டிக்க முடியாது. குறைந்த பட்சம் கண்டனமாவது தெரிவித்திருக்கலாம்.
இலங்கை வழமான வசந்தகாலத்தை நோக்கி பிரயாணம் செய்யும் போது இப்படி தூற்ற வேண்டாம்.
அன்பின் அன்பு ரசிகன்,
எனது முன்னைய கட்டுரைகளைப் பார்த்திருப்பீர்களெனில், இவ்வாறான கேள்விகள் உங்களுக்கு எழுந்திருக்காதென நினைக்கிறேன்.
கருத்துக்கு நன்றி நண்பரே. :-)
உங்களில் கோபமேது. உங்களின் பதிவுகளை படிக்காததல்ல. இதெல்லாம் ஒருவித வயித்தெரிச்சல் எனலாம். இன்னும் கேவலமாக சொன்னால் கையாலாகாதவர்களாக நாம் இருக்கிறோம். எத்தனை தடவை அழக்கூடமுடியாது துன்புற்றிருக்கிறோம். இந்த அரசை ஆட்சிபீடம் ஏற்றியது யார்? அதற்கான பலன்களை *நாம்* அனுபவித்துவிட்டோம். அதற்காக முடிந்ததென்றல்ல.
தொடரும்
Its not only in srilanka its everywhere, always the hypocrites of the society to hide their true identity does so...
Post a Comment