இந்துமத சம்பிரதாயப்படி, இறந்தவர்களை எரித்ததன் பிற்பாடு எஞ்சும் அவர்களது அஸ்தியை தண்ணீரில் மிதந்துசெல்ல விட வேண்டும். அதன் பிரகாரம் கடந்த பெப்ரவரி 23ம் திகதி காலை அன்னாரது உறவினர்கள் அஸ்தியை எடுத்துவர மயானத்துக்குச் சென்றனர். முந்தைய நாள் இரவு பத்து மணி வரை அங்கு கூடியிருந்த அவர்கள், உடலானது சம்பூரணமாக எரிந்து முடிந்ததன் பின்னரே அங்கிருந்தும் சென்றிருந்தார்கள்.
பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கு அறியக் கிடைத்திராத, ஏற்றுக் கொள்ள முடியாத சம்பவமொன்றை அவர்களுக்குக் காணக் கிடைத்தது அப்பொழுதுதான். சுடலையில் அஸ்திக்குப் பதிலாகக் காணக் கிடைத்தது, அந்தத் தாயின் அஸ்தி அழிந்துசெல்லும் வண்ணம் அக் கல்லறையின் மீது போடப்பட்டிருந்த, சுட்டுக் கொல்லப்பட்ட நாய்கள் மூன்றினது சடலங்களையே. அத்தோடு அந்த அஸ்தி விசிறப்பட்டுப் பரவிச் செல்லும் வண்ணம் அஸ்தி இருந்த இடத்தின் மீது ஜீப் வண்டி ஏறிச் சென்றது புலப்படும்படியான அடையாளங்களும் எஞ்சியிருந்தன.
எந்தவொரு நற்பண்புள்ள சமூகத்தினாலும் மிகக் கேவலமாகக் கருதப்படக் கூடிய இச் செய்கை நடைபெற்றிருப்பது எங்கோ தொலைதூரக் கிராமமொன்றிலல்ல. இலங்கையின் இராணுவத் துறையால் எப்பொழுதுமே கண்காணிப்புக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித் துறையில். இந்தச் செய்கையில் சம்பந்தப்பட்டவர்கள் எவர்களென உறுதியாகச் சொல்வதற்கான சாட்சியங்கள் இல்லாமலிருப்பதற்கு வாய்ப்பில்லை. அது ஏனெனில், இராணுவத்தின் பாதுகாப்பு அல்லது அறிதலற்று வேறொரு குழுவுக்கு இரவில் ஆயுதங்களைப் பாவிப்பதற்கோ, நள்ளிரவில் இது போன்ற காரியங்களைச் செய்வதற்கோ இயலுமென எண்ணுதல் மிகவும் கடினம்.
எவரால் செய்யப்பட்டிருப்பினும், இலங்கையின் பெரும்பான்மையான அத்தோடு ஆட்சியாளர்களின் மதமான பௌத்த மதத்துக்கு மட்டுமல்லாது, ஒழுங்குமுறையாக மதங்கள் உருவாவதற்கு முன்பிருந்த எந்தவொரு மானிட நம்பிக்கைகளுக்கும் கூட இந்த ஈனச் செயலானது பொருத்தமானதல்ல. இறந்தவர்களை கௌரவிப்பதென்பது மானிட சமூகத்தினைப் போலவே தொன்மையானதொரு பண்பாடு. துட்டகைமுனு மன்னனுடன் கடுமையாகப் போரிட்டு இறந்து போன அரசன் எல்லாளனது கல்லறையானது, கௌரவிக்கப்பட வேண்டுமென துட்டகைமுனு மன்னனினாலேயே இடப்பட்ட கட்டளையை பெருமிதத்தோடு ஞாபகப்படுத்துமொரு சமூகத்தில் இப்பொழுது யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்களின் பிற்பாடு, இந்த மோசமான ஈனச் செயல் நடைபெற்றிருக்கிறது. எந்த நிலைமையின் கீழும், எந்த வர்க்கத்தினராலும் கூட இம் மாதிரியான பழிவாங்கும் செய்கையொன்று, சிங்கள மக்களினால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதென்று எண்ணுவது கடினம்.
பிரபாகரனின் அரசியலோடு ஒன்றுபடுபவர்களைப் போலவே அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களும் தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறார்கள். அது எவ்வாறாயினும் இம் மாதிரியான மனிதத் தன்மையற்ற நடவடிக்கையின் மூலமாக புலப்படுவது முழுத் தமிழ்ச் சமூகத்தையே அவமதிப்புக்கு உட்படுத்துவதை இலட்சியமாகக் கொண்ட பலம் மிக்கவொரு சக்தி இலங்கையில் செயற்பாட்டிலிருக்கிறதென்பதுதான். இந்த நடவடிக்கையால் தமிழ்ச் சமூகத்துக்கு சொல்லப்படும் செய்தி என்ன? அதாவது இலங்கையில் தமிழ் மக்கள் எனப்படுபவர்கள், தங்களிடையே மரணித்தவர்களை கௌரவிப்பதற்குக் கூட உரிமையற்றவர்களாக அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்கள் என்பதுதானே? இந்த அறுவெறுப்பூட்டும் கேவலமான செய்கை, அரசியல் ரீதியாக தமிழ் இளைஞர்களினுள்ளே எவ்வளவு இயலாமையையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கும்?
இந்தச் சம்பவமானது தங்களது தன்மானத்தைக் குறிவைத்த அவமதிப்பொன்றென தமிழ்ச் சமூகத்தில் வாசிக்கும், எழுதும், சிந்திக்கும் மக்களினது, அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்திருப்பினும், சிந்தனையைத் தூண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மனிதத் தன்மையற்ற செயலினால் சிங்கள அரசு குறித்து, தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் அவநம்பிக்கையானது இன்னும் இன்னும் அதிகரிக்காமல் இருக்குமா? எவ்வாறாயினும் இந்தச் சம்பவம் குறித்த எந்தவொரு பேச்சும் எங்கள் சிங்கள சமூகத்தில் எழவில்லை. அதற்குக் காரணம் பெரும்பான்மையான ஊடகங்கள் வெளிப்படுத்தும் பெரும்பான்மைச் சிந்தனை மற்றும் சுய பாதுகாப்பு.
பாராளுமன்ற அமைச்சரும் தொலைக்காட்சி நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலியின் கன்னம் வெடிக்குமளவுக்கு அவரது கணவரால் அவர் தாக்கப்பட்ட செய்தியானது, இலங்கையின் பெரும்பான்மை ஊடகங்களால், எவ்வளவு காலத்துக்கு மீண்டும் மீண்டும் சுவையூட்டப்பட்டு பதிவுசெய்யப்பட்டது? (ஆனால் அந்தச் சம்பவமானது பெண்களுக்கெதிரான வீட்டு வன்முறைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படவில்லை.) எத்தனை புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கும்? வைத்தியசாலையிலிருந்து வைத்தியசாலைக்குச் சென்று தொடர்ச்சியாகப் பதிவுசெய்ய அனேக சிங்கள, ஆங்கில ஊடகங்கள் காட்டிய ஆர்வம்தான் என்னே!
எனினும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையொன்றாக, யாழ்ப்பாணத்தில் தாயொருவரின் சடலம் எரியூட்டப்பட்டதன் பிற்பாடு அந்தச் அஸ்தியின் மீது சுட்டுக் கொல்லப்பட்ட நாய்களின் சடலங்களைப் போட்டதன் மூலம் செய்யப்பட்ட அவமதிப்பை பதிவு செய்ய எந்த ஊடகம் முன்வந்தது? இந்த இரண்டு சம்பவங்களுக்கிடையிலும் நீண்ட கால முக்கியத்துவம் எமது சமூகத்துக்கு இருப்பது எந்தச் சம்பவத்தில் என்பதில் வாதிடுவதற்கு ஏதுமில்லை.
மக்களது அமைதிக்கு இடையூறு நேரும் வண்ணம் செய்தி பதிவு செய்வதில் ஈடுபட வேண்டாமென ஜனாதிபதியிலிருந்து அமைச்சர் மேர்வின் சில்வா வரை ஊடகங்களுக்கு அறிவுருத்துகிறார்கள். எச்சரிக்கிறார்கள். இனத்துவேசத்தைக் கிளப்புகிறார்களென அரசியல் கட்சிகள் மேல் குற்றம் சுமத்துகிறார்கள். என்றபோதிலும் இந்த நாய் உடல்களின் அரசியலுக்கு எதிராக ஒரு வார்த்தையையேனும் உதிர்ப்பதற்கு அரசாங்கத்தின் எந்தவொரு முக்கியஸ்தரும் வாய் திறக்கவில்லை. இனத் துவேஷம் மற்றும் மக்களிடையே ஒற்றுமையின்மை ஏற்படுவதுவும், பரவுவதும் இவ்வாறான நடவடிக்கைகளால்தான் என்பதனைப் புரிந்துகொள்ள முடியாதிருப்பது யாரால்?
இந்த அவமதிப்பை ஏதோவொரு சம்பவம் என எண்ணி மறந்துவிட முடியுமென எவரும் எண்ணுவதற்கோ, வாதிடுவதற்கோ இடமிருக்கிறது. எனினும் அவ்வாறு முடியாதிருப்பது, இதுவரையில் இது ஒரேயொரு சம்பவம் மாத்திரமல்ல என்பதனாலேயே. யுத்தம் முடிவுற்றதன் பிற்பாடு கேள்விப்பட்ட, புனர்நிர்மாணம், மீள்குடியமர்த்தல் போன்ற எண்ணங்கள் சமூக அரசியல் நடவடிக்கையொன்றாக உருவாவதற்குப் பதிலாக இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் ஆட்சியொன்றின் கீழ் இரண்டாம் தரப்புக் குடிமக்களாக வைத்திருப்பதே.
தமிழர் பிரதேசங்களில் பௌத்த விகாரைகளைக் கட்டுவது, ஊர் மற்றும் பாதைகளின் பெயர்களைச் சிங்களப்படுத்துவது, யாழ்ப்பாண மக்களை இராணுவத்தினரைக் கொண்டு பதிவு செய்வது, வன்னி மக்களுக்கு எந்தவொரு சுதந்திரத்தையும் வழங்காதிருப்பது, வடக்கு கிழக்கு இராணுவ ஆட்சி, விடுதலைப் புலிகளின் கல்லறைகளை அழித்து அவற்றின் மீது இராணுவ முகாம்களைக் கட்டுவது போன்ற செயற்பாடுகள் அனேகமானவற்றால் தமிழ் மக்களுக்குச் சொல்லும் செய்தியானது, அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும், சம உரிமைகளற்ற மக்கள் என்பதுதான். பார்வதி அம்மாவின் அஸ்தி சேதப்படுத்தப்பட்டமை தனியொரு சம்பவமல்ல என்பது அதனாலேயேதான். அதுபோலவே அந்தச் சம்பவமானது அரசியல் சம்பவமொன்றாகக் கருதப்படுவதும் அதனாலேயேதான். அந்தச் சம்பவமானது எங்களால் வெளிப்படுத்தப்பட வேண்டியதுவும் அதனாலேயேதான்.
ஒன்றிணைந்த, அமைதியான, நேர்மையான இலங்கையொன்று எங்களுக்கு அவசியமெனில், அதன் முதலாவது நிபந்தனையானது தமிழ் மக்களை சுதந்திரமாகவும், ஆத்ம கௌரவத்தோடும் உள்ள மக்களாக வாழ இடமளிப்பதே.
- சுனந்த தேஸப்ரிய
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# காலச்சுவடு இதழ் 137, மே 2011
# இனியொரு
# திண்ணை
12 comments:
தேவையான பதிவு சகோதரா..
பெருமூச்சு விடுவதைத் தவிர வேறேதும் சொல்ல முடியவில்லை.
மூல ஆக்கத்துக்குரிய சுனந்த எப்போதும் என் பெருமதிப்புக்குரியவர்
அன்பின் லோஷன்,
//தேவையான பதிவு சகோதரா..
பெருமூச்சு விடுவதைத் தவிர வேறேதும் சொல்ல முடியவில்லை.
மூல ஆக்கத்துக்குரிய சுனந்த எப்போதும் என் பெருமதிப்புக்குரியவர்//
சிறுபான்மை இனத்தவர்கள் குறித்த பெரும்பான்மை இனத்தவரில் மனிதாபிமானம் மிக்கவர்களின் கருத்துக்கள் பெரும்பாலும் அவர்களது மொழியிலேயே வெளிவருவதால் நம்மவர்களை அவை சேர்வதில்லை. அவற்றைத் தமிழில் கொண்டு செல்லக் கிடைத்தமையில் பெருமகிழ்ச்சி. சுனந்த எனக்கும் பிடித்தமானவர்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)
தேவையான பணி ரிஷான், வாசிச்ச பின் வெறுமை தான். ஆருக்குச் சொல்லி அழ
காலம் காலமாக நடப்பது இதுதான் உலக அரசுகளுக்கு நன்றாக தெரிந்தும் அரசின்
அனைத்து மனித உரிமை மிறல்கும் அதரவு வாழங்குகின்றனவே! கடவுள் தகுந்த பதில் கொடுப்பார்
ஹ்ம்ம்ம்..... சிங்களவர் எல்லோரும் எம் எதிரிகள் அல்லர் என்பதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு சுனந்த. மொழிப்பெய்ப்புக்கும் பகிர்வுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் ரிஷான்
அன்பின் கானா பிரபா,
//தேவையான பணி ரிஷான், வாசிச்ச பின் வெறுமை தான். ஆருக்குச் சொல்லி அழ //
:-(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் சருஜன்,
//காலம் காலமாக நடப்பது இதுதான் உலக அரசுகளுக்கு நன்றாக தெரிந்தும் அரசின்
அனைத்து மனித உரிமை மிறல்கும் அதரவு வாழங்குகின்றனவே! கடவுள் தகுந்த பதில் கொடுப்பார்//
அரசின் சுயநலப் போக்குகளுக்கு உலக அரசுகளும் இணைந்து வாலாட்டிக் கொண்டிருப்பதால் தொடர்ந்தும் இந்த ஏகாதிபத்தியமே கோலோச்சும். :-(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் ஜாவித் ராயிஸ்,
//ஹ்ம்ம்ம்..... சிங்களவர் எல்லோரும் எம் எதிரிகள் அல்லர் என்பதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு சுனந்த. மொழிப்பெய்ப்புக்கும் பகிர்வுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் ரிஷான்//
நிச்சயமாக !
கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பா !
நல்ல பதிவு... சுனந்த தேசப்பிரியவுக்கும் நன்றிகள்
அன்பின் கிருத்திகன்,
//நல்ல பதிவு... சுனந்த தேசப்பிரியவுக்கும் நன்றிகள்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)
:-(
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)
அன்பின் ம.தி.சுதா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
Post a Comment