Wednesday, May 28, 2014

படுகொலை செய்யப்பட்ட கவிதை - செல்வி.டிமாஷா கயனகி

சம்பவம் - இலங்கை, எல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி செல்வி.டிமாஷா கயனகி, தனது கல்வி நடவடிக்கைகளுக்காக கொழும்பு செல்வதற்காக 24.05.2014 அன்று விடிகாலை 3.30 மணிக்கு, எல்பிடிய பஸ் நிலையத்துக்கு வந்தவேளை, அங்கு நின்றிருந்த இராணுவ வீரனொருவனால் அருகிலிருந்த பாழடைந்த கட்டிடமொன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவி அங்கிருந்து தப்பிக்க முற்பட்ட வேளையில் இராணுவ வீரனால் கத்தியால் பல தடவை குத்தப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். 

மோப்பநாயின் உதவி கொண்டு தப்பித்துச் சென்ற குற்றவாளியைக் கைது செய்துள்ள போதிலும், குற்றவாளி இராணுவத்தினன் என்பதால் 'இராணுவ வீரனது விருப்பத்துக்கு இணங்க மறுத்ததால் அவனுக்கு ஏற்பட்ட சடுதியான கோபத்தின் காரணமாகவே கொலை நிகழ்ந்துள்ளது. திட்டமிட்டுச் செய்ததல்ல' என இராணுவத்தரப்பும், இலங்கைக் காவல்துறையும் சம்பவத்தை மூடி மறைக்கவும், குற்றவாளியைத் தப்பிக்கச் செய்யவும் முயற்சிக்கிறது.

21 வயதான செல்வி.டிமாஷா கயனகி, இலங்கை, கட்புல ஆற்றுகைக் கலைகள் (University of Visual & Performing Arts) பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவி. சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் கூட கொழும்புக்குச் சென்று, தலவத்துகொட பிரதேசத்திலுள்ள முதலாம் தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழியைக் கற்பித்து வந்த, சமூக சேவை மனப்பான்மை கொண்ட இளம் பெண்.

கடந்த 24.05.2014 அன்று ஒரு இராணுவ வீரனால் படுகொலை செய்யப்பட்ட அவர் மரணிக்க முன்பு இறுதியாக எழுதியிருந்த கவிதை இது.



எப்போதேனுமொரு நாள் இவையெல்லாவற்றையும்
விட்டுச் செல்லவேண்டியிருக்கும்
எவரும் மகிழ்ச்சியாகச் செல்லும் பயணமல்ல அது
எனினும் அதை
துயரமின்றிச் செல்லமுடிந்தால்
எவ்வளவு நன்றாகவிருக்கும்

அந்நாளில்
நினைவில் வராதோர் அனேகர்
எனினும்
நினைவில் வரக் கூடிய சிலரில்
நீங்கள் இருப்பீர்களென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது

நான் மரிக்கும் நாளில் வாருங்கள்
என்னைப் பார்க்கவென்றே வந்துசெல்லுங்கள்
ஒருபோதும் சிந்திராத கண்ணீரில்
ஒரு துளியை விட்டுச் செல்லுங்கள்

இரு விழிகளும் இறுக்கமாக மூடப்பட்டிருந்த போதிலும்
குளிர்ந்த சரீரத்துடனிருந்த போதிலும்
முன்பு பழகியதையெண்ணி
நெற்றியிலொரு முத்தமிடுங்கள்

ஆயிரம் கண்கள் பார்த்திருக்கும்
எனது நற்குணங்களை விமர்சிக்கும்
பதிலாக எதுவும் பேசாது
ஒரு பிடி மண்ணிட்டுச் செல்லுங்கள்

கல்லறையிலிருந்து நீங்கள்
நீங்கிச் செல்கையில்
மாபெரும் தனிமையை நான் உணரக் கூடும் - எனவே
ஒரு பூவை மட்டும் வைத்துவிட்டு
நீங்கள் செல்லுங்கள் திரும்பிப் பாராது

- செல்வி. டிமாஷா கயனகி
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

3 comments:

Umesh Srinivasan said...

சோகமான நிகழ்வு. கொலையாளி ராணுவ வீரன் எனும் ஒரே காரணத்தால் தப்பிக்க வைக்கப்பட்டால் அது மோசமான முன்னுதாரணமாகத் திகழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Pathman said...

இவர் கத்தியால் குத்தப் பட்ட பின்னரா இக்கவிதை எழுதினார் ..அல்லது அதற்கு முன் எழுதப் பட்டதா ? கொஞ்சம் குளப்பமாக உள்ளது ... மிகவும் கொடுமை ...உண்மையில் இராணுவ நீதி மன்றம் இன்னும் கடுமையான தண்டனையே கொடுக்க வேண்டும் ....வழமையான தண்டனைகளைவிட இராணுவத்தில் தண்டனை அதிகம் ...

Garunyan Konfuzius said...

மிகவும் வேதனையை உண்டு பண்ணுகிறது,மனதைப்பிசைகிறது ஷெரீப். அந்தப்பெண்ணின் கண்ணிலேயே தெரிகின்றது அவளொரு அமானுஷி என்பது.அங்குள்ள மனித உரிமை இயக்கங்கள், அரசியல் கட்சிகள் எதுவும் இதனைக்கண்டுகொள்ளவில்லையா? பின்னர் என்ன நடந்தது தெரிவியுங்கள்.