Sunday, September 18, 2016

ஆரம்பிக்கிறது சர்வதேச புத்தகக் கண்காட்சி. செல்ல நீங்கள் தயாரா?


            “A reader lives a thousand lives before he dies, said Jojen. The man who never reads lives only one.”
― George R.R. Martin, A Dance with Dragons, Chapter 34


     இலங்கையின் இலக்கிய மாதமான செப்டம்பரின் 'சர்வதேசப் புத்தகக் கண்காட்சி' 16.09.2016 முதல் கொழும்பில், BMICH (Bandaranaike Memorial International Conference Hall - பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்) இல் ஆரம்பமாகவிருக்கிறது. இக் கண்காட்சி எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடரவிருக்கிறது.

     இத் தினங்களில் தினசரி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுவதோடு, கண்காட்சியின் இறுதி நாளான 25 ஆம் திகதி, இரவு 12 மணி வரைக்கும் கடைகள் திறந்திருக்கும். இம் முறை 410 புத்தகக் காட்சியறைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் வாசகர்களுக்காக புத்தகங்களை வழங்க தயாராக உள்ளதோடு, அவற்றுள் 60 விற்பனை நிலையங்கள் வெளிநாட்டு பதிப்பகங்களுக்கானவை. அனுமதிக் கட்டணம் ஒருவருக்கு 20/= மாத்திரமே. அத்தோடு இங்கு விற்கப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் குறைந்தபட்சம் 20% கழிவு கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

     இலங்கையில் வருடம்தோறும் நடைபெறும் மிகப் பெரிய அளவிலான புத்தகக் கண்காட்சி இதுவாகும். ஆகவே தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இக் கண்காட்சியில் ஒன்று கூடுவர். எங்கும் சன நெரிசலும், புத்தகங்களுமே நிறைந்திருக்கும் இக் கண்காட்சியில் நீங்கள் வாங்க விரும்பும் புத்தகங்களை எளிதாகப் பெற்றுக் கொள்ள சில வழிமுறைகளை அனுபவ ரீதியில் குறிப்பிட விரும்புகிறேன்.

  • நீங்கள் புத்தகக் கண்காட்சிக்கு செல்லத் தீர்மானித்ததன் பிறகு, வாங்க விரும்பும் புத்தகங்கள், நூலாசிரியர்கள், அவற்றின் பதிப்பகங்கள் குறித்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொள்ளுங்கள். இதனால் புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்ததன் பிறகு, வாங்க முடியாமல் போன அத்தியாவசியமான புத்தகங்கள் குறித்து வருந்த வேண்டி வராது. சன நெரிசலில் உங்கள் பட்டியலிலுள்ள புத்தகங்களைத் தேடிப் பெற்றுக் கொள்ள உங்களால் முடியாவிட்டால் காட்சியறை உதவியாளரை தயங்காது நாடுங்கள். அவர் நிச்சயம் தேடித் தருவார் அல்லது அப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய காட்சியரங்குகளுக்குச் செல்ல உங்களுக்கு வழி காட்டுவார்.

  • புத்தகக் கண்காட்சியில் செலவழிக்கப் போகும் பணத்தின் அளவை ஏற்கெனவே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது. புத்தகங்களை வாங்கும் ஆசையில், கையிலிருக்கும் கடைசித் தொகையையும் புத்தகங்களுக்காகச் செலவழித்து விட்டு, வீட்டுக்குத் திரும்பி வர வழிச் செலவுக்குக் கூடக் காசில்லாது  நடந்தே பயணிக்கும்  பலரையும் அங்கு பார்க்கலாம். அந்த நிலைக்கு நீங்களும் ஆளாகாதிருக்க, உங்களால் அங்கு புத்தகங்களுக்காக செலவழிக்க முடிந்த தொகை, உணவு, குடிபானங்கள் மற்றும் பிரயாணச் செலவுகளுக்காக ஒரு தொகை எனத் தனியாகப்  பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடித்ததன் பிறகு, உங்கள் வாழ்க்கை மீதமிருக்கப் போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வங்கிப் புத்தக மீதியை புத்தகங்களுக்காக மட்டுமே முழுவதுமாக செலவழித்து விடாதீர்கள்.

  • இந்தத் தடவை இக் கண்காட்சி தினங்களில், பௌர்ணமி தின விடுமுறையோடு சேர்த்து ஐந்து விடுமுறை தினங்களும் (16,17,18,24,25) , ஐந்து வேலை நாட்களும் (19,20,21,22,23) அடங்கியிருக்கின்றனகண்காட்சியின் ஆரம்ப தினத்திலும், வேலை நாட்களின் காலை நேரங்களிலும் கூட்டம் கணிசமான அளவில் குறைந்து காணப்படும். அதற்கு எதிர்மாறாக விடுமுறை நாட்களிலும், கண்காட்சியின் இறுதித் தினத்திலும் கூட்டம் மிக அதிகமாகக் காணப்படும். கடந்த புத்தகக் கண்காட்சிகளின் போது, கண்காட்சியின் இறுதித் தினத்தில், தமது புத்தகங்களை விற்றுத் தீர்ப்பதற்காக வேண்டி, பதிப்பகங்கள் அவற்றுக்கு பெரிய அளவில்  கழிவினைக் கொடுப்பதைக் காணக் கூடியதாக இருந்தது. எனவே நீங்கள் கண்காட்சிக்கு செல்லும் தினத்தை இவற்றைக் கவனத்தில் கொண்டு தீர்மானியுங்கள்

  • புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி வரச் செல்லும் பயணம் என்பது வெறுமனே கை வீசிக் கொண்டு, காலாற நடந்து வரச் செல்லும் பயணமல்ல. இது மலையேறுவதற்கு ஒத்ததுஅதற்கிணையான ஏற்பாட்டோடு செல்லுங்கள். பாரமற்றதும், உங்களுக்கு நடமாட இலகுவானதுமான ஆடைகளையே அணிந்து செல்லுங்கள். ஆடை கசங்குவதைப் பற்றிக் கவலைப்படத் தேவையற்ற ஆடையாக அது இருக்கட்டும். புத்தகக் கண்காட்சியின் சன நெரிசலில், நின்று கொண்டும், அங்குமிங்கும் நுழைந்து நடந்து கொண்டும், சிறிய இடைவெளிகளில் மக்கள் கூட்டத்தில் சிக்குண்டு, வியர்வையில் குளித்து, புத்தகப் பாரங்களையும் சுமந்து கொண்டு மீண்டு வர வேண்டியிருக்கும். எனவே புத்தகக் கண்காட்சிக்கு வரும்போது அதற்கேற்ற ஆடைகளையும், பாதணிகளையும் அணிந்து வருவதோடு, வெளியரங்குக் கடைகளையும் பார்வையிட வேண்டியிருப்பதனால் குடை மற்றும் வெயில் கண்ணாடிகளையும் எடுத்துக் கொண்டு வர  மறக்க வேண்டாம்

  • வாங்கும் புத்தகங்களைப் பத்திரமாக எடுத்துக் கொண்டு வர ஒரு பையை (Bag) எடுத்துச் செல்ல மறக்க வேண்டாம். காட்சியரங்குக் கடைகளில் சாதாரண பொலிதீன் பைகளிலும், காகித உறைகளிலுமே புத்தகங்களை இட்டுத் தருவார்கள்அவற்றை நீண்ட நேரம் கைகளில் சுமந்து செல்லும்போது விரல்களில் வலியெடுக்கும். அத்தோடு உறை கிழிந்தால் வாங்கிய புத்தகங்களெல்லாம் தரையில் விழுந்து வேலையைக் கூடுதலாக்கும். எனவே உங்கள் பட்டியலை வைத்து, வாங்கத் தீர்மானித்துள்ள  புத்தகங்களுக்கு ஏற்ற பையை வீட்டிலிருந்து எடுத்துச் செல்லுங்கள். அது முதுகில் சுமந்து செல்லக் கூடிய பையாக இருப்பின் இன்னும் இலகு. புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்க கைகள் எப்போதும் வெறுமனே இருக்கட்டும்

  • காட்சியரங்கில் உணவு, குடிபானங்கள் விற்பனைக்கு இருக்கின்றன. ஆனால் அவற்றையே முழுவதுமாக நம்பிச் செல்லாதீர்கள். இருக்கும் சன நெரிசலில், அவற்றை வாங்கக் காத்திருப்பதில் நேரம் அதிகளவு விரயமாகும். எனவே தண்ணீர் மற்றும் சிற்றுண்டி வகைகளை கையோடு எடுத்துச் செல்வது நல்லது. அது ஆரோக்கியமானதும் கூட. அத்தோடு நீங்கள் மருந்துகளைப் பாவிப்பவராக இருந்தால் அன்றைய தினத்துக்கு அருந்தத் தேவையான மருந்துகளையும், தற்காலிக நிவாரணி மாத்திரைகளையும் எடுத்துச் செல்வது சிறந்தது.

  •  நீங்கள் பஸ்ஸிலோ, ரயிலிலோ கண்காட்சிக்கு வருபவராக இருப்பின், திரும்பிச் செல்லும்போது புத்தகப் பையை சுமந்து செல்ல ஏற்றதான, சன நெரிசலற்ற பஸ்ஸோ, ரயிலோ புறப்படும் நேரத்தை அறிந்து அதற்கேற்ப பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். சொந்த வாகனத்தில் வருபவர்களும் கூட வாகனத் தரிப்பிடத்துக்கு ஏற்ற இடங்களை நுழைவாயிலிலேயே கேட்டுத் தெரிந்து கொள்வதன் மூலம், வீண் செலவுகளைத் தவிர்க்கலாம். மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் ஹெல்மட் தலைக்கவசங்களை சைக்கிளிலேயே விட்டுச் செல்ல வேண்டாம்.


  • புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும்போது இன்னுமொருவருடன் சேர்ந்தோ, குழுவாகவோ செல்வதோ நல்லது. புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க, புத்தகப் பாரங்களை சுமக்க ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளலாம்உங்களோடு கூட வரும் நபரும் / நபர்களும் புத்தக வாசிப்பை விரும்புபவர்களாக இருப்பது அவசியம். இல்லாவிட்டால் சன நெரிசலில், காட்சியரங்குகளில் காத்திருக்க பொறுமையற்று, அங்கிருந்து அகன்று சென்று விட நச்சரித்துக் கொண்டேயிருப்பார்கள்அவ்வாறே கைக் குழந்தைகளை, சிறு பராயத்தினரை காட்சியறைகளினுள்ளே அழைத்துச் செல்ல வேண்டாம். அது உங்களுக்கும், ஏனையவர்களுக்கும் இடைஞ்சல்களை ஏற்படுத்தும்.


  • புத்தகக் கண்காட்சிக்காக BMICH க்கு வந்ததுமே அங்குமிங்குமாக அலைந்து திரிய முற்படாதீர்கள். நுழைவாயிலிலேயே காட்சியரங்கின் கடைகள் குறித்த தெளிவான விவரணப் படம் இலவசமாகத் தருவார்கள். அது மிகவும் பெறுமதியானது. அதனை வைத்து நீங்கள் செல்லப் போகும் கடைகளை முன்பே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். காட்சியரங்கின் கடைகள் ஒரு ஒழுங்கிற்கமையவே அங்கு காணப்படும். கதை, கவிதை, இலக்கியப் பிரதிகளுக்கான காட்சியறைகள் ஒரு புறம், கல்வி சார்ந்த புத்தகங்களுக்கான காட்சியறைகள் ஒரு புறம், பிற நாட்டு பதிப்பகங்களுக்கான காட்சியறைகள் ஒரு புறம், பாடசாலை அப்பியாசப் புத்தகங்களும், பொருட்களும் விற்கும் கடைகள் ஒரு புறம் என தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருக்கும். எனவே வழிகாட்டல் படத்தினைப் பார்த்து அதற்கேற்ப நீங்கள் செல்லப் போகும் கடைகளைத் தேர்ந்தெடுத்து அங்கு செல்லுங்கள். செல்லும் வழியில் கண்ட விஷேடமான அடையாளங்களை அவ் வழிகாட்டல் படத்திலேயே குறித்துக் கொள்ளுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரே கடையைச் சுற்றுவதை விட்டும் உங்களைத் தவிர்க்கச் செய்யும்.


  • நீங்கள் வாங்குவதற்காகப் பட்டியலிட்டிருக்கும் புத்தகங்களை, அப் புத்தகங்களை வெளியிட்டுள்ள பதிப்பகத்தின் காட்சியரங்குகளிலேயே வாங்குவது அதிகமான கழிவினைப் பெற்றுத் தந்து, உங்கள் செலவினைக் குறைக்கும். பிரசித்தமான, புகழ் பெற்ற பதிப்பகங்களின் காட்சியரங்குகளுக்கு மாத்திரமே செல்லாது, சிறிய காட்சியறைகளுக்கும் சென்று வாருங்கள். மிகப் பெறுமதியான புத்தகங்கள், குறைந்த விலையில் அங்கு கிடைக்கும். அவ்வாறே இங்குள்ள பழைய புத்தகங்களுக்கான காட்சியறைகளில்விலை மதிக்க முடியாத, அரிய புத்தகங்களை மிக மிகக் குறைந்த விலையில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்

  • பாடசாலை வாசிகசாலைகளுக்கான புத்தகங்களை பல பதிப்பகங்கள் இலவசமாகவும்மிக மிகக் குறைந்த விலையிலும் வழங்குகின்றன. அவற்றைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பாடசாலைகளின் ஆசிரியர்களோ, அதிபர்களோ தேவையான ஆவணங்கள், பட்டியல்களோடு சம்பந்தப்பட்ட பதிப்பகங்களை அணுகி அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

  •  மிக முக்கியமாக, நீங்கள் வாங்கும் புத்தகங்கள் குறித்து எப்போதும் ஞாபகத்திலேயே வைத்திருங்கள். ஒரு காட்சியறையிலிருந்து இன்னுமொரு காட்சியறைக்குச் செல்லும்போது, சில வேளைகளில் வாயிற்காவலரிடம் பொதிகளைக் கொடுத்து விட்டுச் செல்ல நேரும். திரும்பி வரும்போது அவற்றைப் பெற்றுக் கொள்ள மறக்காதீர்கள். அத்தோடு சன நெரிசலான இடமென்பதால் உங்கள் பணப் பை, சிறிய கைப்பைகள் கீழே விழுந்தாலும் இலகுவில் தேடிப் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே அவற்றைக் குறித்தும் கவனமாக இருங்கள்.

  •  இந்த இறுதிக் குறிப்பை, புத்தகங்களை வாங்க வருவோரும், கண்காட்சியை வெறுமனே பார்க்க வருவோரும் கண்டிப்பாக நினைவில் வைத்திருக்கவும். காட்சியரங்கில் மூலைக்கு மூலை குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நம்மவர்கள் பொதுவாக அவற்றைக் கவனத்தில் கொள்ளாத காரணத்தால், காட்சியரங்கின் நடைபாதைகள் தோறும் குப்பைகளை மிதித்தபடியே உள்ளே செல்ல வேண்டியிருக்கிறது. உங்களது வெற்று பிளாஸ்டிக் போத்தல்கள், கரண்டிகள், தட்டுக்கள், மீதமான உணவுகள், ஏனைய குப்பைகள் போன்றவற்றை அவற்றுக்கேயுரிய குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட்டு விடுங்கள்அது அனைவருக்கும் உங்களால் ஆற்றப்படும் பேருதவியாக இருக்கும்.

     இப் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கச் செல்லவிருப்போருக்கு இக் குறிப்புக்கள் பயனுள்ளதாக அமையுமென நம்புகிறேன். உங்களுக்காக புத்தகங்களை வாங்கும்போது, வீட்டிலிருக்கும் உங்கள் குழந்தைகளையும், பரீட்சைகள் எழுதிவிட்டு பெறுபேறு வரும்வரையில் காத்திருக்கும் மாணவப் பருவத்தினரையும் நினைவில் கொள்ளுங்கள். அவர்களுக்காகவும் நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களது விஷேட தினங்களில் புத்தகங்களைப் பரிசளியுங்கள். சிறு வயதிலிருந்தேயான வாசிப்புப் பழக்கம் அவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுத்து சமூகத்துக்கு பயனுள்ளவர்களாக மாற்றித் தரும். நம் சமூகத்துக்கு அவ்வாறானவர்களே தேவைப்படுகிறார்கள் எப்போதும்.

- எம்.ரிஷான் ஷெரீப் 
நன்றி - விடிவெள்ளி வார இதழ் - 16.09.2016

No comments: