மனிதர்களை சித்திரவதைக்குள்ளாக்குவதுவும், காணாமல் போகச் செய்வதுவும், சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்வதுவும் ஆட்சியில் நிலைத்திருக்க அவசியமானவை எனக் கருதுவதால் ஆட்சியிலிருக்கும் எல்லா அரசுகளுமே தமது ஆட்சியை எவர் தொந்தரவின்றியும் கொண்டு செல்வதற்காக இவற்றை பிரதானமாகப் பயன்படுத்துகின்றன. தாம் எதிர்க்கட்சியாக இருக்கும்போது இவற்றுக்கெதிராகக் குரல் கொடுக்கும் எல்லாக் கட்சிகளும், தாம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு, இவற்றையே தாமும் செய்கின்றன. கடந்த ஒவ்வொரு தசாப்த காலங்களிலும் மேற்சொன்ன நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டு வந்திருக்கிறதே ஒழிய குறையவில்லை.
ஒருவர் ஒரு குற்றம் செய்தால், அதனை விசாரித்து தக்க தண்டனை வழங்க நீதிமன்றத்தாலேயே முடியும். ஆனால் அதற்கு முன்பாக அந்த அதிகாரத்தை, வேறு நபர்கள் தம் கரங்களில் எடுத்துக் கொள்வதாலேயே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளும் ஆரம்பிக்கின்றன. எனவே பொது மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையை, தமக்குப் பாதுகாப்பும் நியாயமும் தேடி நாடுவதற்குத் தயங்குகின்றனர் மக்கள். எனினும், ஆதரவு தேடி நாடிச் செல்ல காவல்துறையைத் தவிர வேறு இடங்களும் இல்லை. பொதுமக்களுக்கு காவல்துறை மூலம் கிடைக்கப்பெறும் மோசமான அனுபவங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கும் அனேக மக்கள் உள்ளனர். சிலர் மனித உரிமைகளைக் காக்கும் ஒருங்கமைப்புக்களை நாடுகின்றனர்.
இங்கு மனித உரிமைகள் மீறப்படுமிடத்து, முறைப்பாடுகளைப் பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள், காவல்துறைக்கு எதிரான வழக்குகளுக்காக வாதாட துணிச்சலும் நம்பிக்கையுமுள்ள சட்டத்தரணிகளை தேடிக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள், முறையிடுபவரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பு குறித்த சிக்கல்கள் ஆகியனவே பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒருங்கமைப்புக்களுக்கும் பிரதானமான சிக்கல்களாக இதுவரை இருந்தன. தற்போது இவற்றோடு இன்னுமொரு சிக்கலும் புதிதாகச் சேர்ந்திருக்கிறது. அதாவது இவ்வளவு சிக்கல்களைத் தாண்டி ஒருவர் காவல்துறைக்கு எதிராக முறையிட்டு, அவ் வழக்கு விசாரணை, நீதிமன்றத்துக்கு வருமிடத்து, நீதிபதியால் அவ் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவது எனும் புதிய சிக்கல் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக எழுந்து நிற்கிறது.
நான் இப்படிச் சொல்ல ஒரு வலுவான காரணம் இருக்கிறது. கடந்த காலங்களில் ஊழல்களையும், படுகொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் வன்முறைகளையும் செய்து மாட்டிக் கொண்ட அரசியல்வாதிகளுக்கெதிராக இருந்த அனேக வழக்குகள் நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகள் வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டார்கள். அத்தோடு சித்திரவதைகள் சம்பந்தமாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கெதிரான அனேக வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு, தொடர்ந்தும் குற்றவாளிகள் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே சித்திரவதைக்கு எதிராக எவ்வளவுதான் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அதிகாரத் தரப்பும், காவல்துறையும் தாம் பொதுமக்களுக்கு இழைக்கும் அநீதங்களைத் தாமாக உணரும் வரையில் சித்திரவதையை ஒழிக்கவே முடியாது. இந் நிலை தொடருமிடத்து, சித்திரவதை உள்ளிட்ட அனைத்து மனித உரிமை மீறல்களும் மென்மேலும் வளர்ச்சியடையும் என்பதோடு, மனித உரிமைத் திணைக்களங்களும் ஒருங்கமைப்புக்களும் தமது பெயரில் மட்டுமே மனித உரிமையை வைத்திருப்பதுவும் தொடரும். எனவே மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்ந்தும் சர்வ சாதாரணமாக நிகழும். துரதிஷ்டவசமான இந் நிலைக்கு நாளை நானும், நீங்களும் ஆளாகலாம். அந் நாளில் எமக்காகப் பேசவும் எவருமிருக்க மாட்டார்கள்.
- எம்.ரிஷான் ஷெரீப்
No comments:
Post a Comment