Friday, October 25, 2013

யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !



குறிப்பு - ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். இவரது புதிய தொகுப்பான And the Mountains Echoed எனும் நாவல் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி வெளிவந்தது.  அவரது புதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற நேர்காணலின் தமிழாக்கம் இது.


உங்களது முந்தைய இரண்டு நாவல்களும் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டவை. உங்கள் புதிய நாவலின் சம்பவங்களும் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், அதன் கதையானது, பரம்பரைகள் மற்றும் கால இடைவெளி பலவற்றைக் கடந்து கிரீஸ், பாரிஸ் மற்றும் கலிஃபோர்னியா போன்ற உலகின் பல்வேறு பிரதேசங்களுக்கும் விரிந்து செல்கின்றது. ஆப்கானிஸ்தானைத் தாண்டி சர்வதேச அளவில் கதையை விரிவாக்கிச் செல்ல நீங்கள் தூண்டப்பட்டது எவ்வாறு?

காலித் ஹுஸைனி : குடும்பம் எனப்படுவது ஒரு ஆப்கானியனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு அடையாளம் ஆகும். எவரும் தன்னையும், தன்னைச் சுற்றியிருப்பவரையும் புரிந்து கொள்வதைப் போலவே உலகம் போன்ற அனைத்தினுள்ளும் தன்னை நிலைநிறுத்துவதும் குடும்பத்துக்கு இணையாகத்தான். இந் நாவலின் கதையை ஆப்கானிஸ்தானுக்கு வெளியே கொண்டு சென்றது நான் வேண்டுமென்றே செய்த ஒன்றுதான். அவ்வாறே இக் கதையின் யதார்த்தமான நடைக்கு அவ்வாறான சர்வதேசப் பரம்பல் அவசியமானது. காபூல் நகரத்தில் ஆரம்பித்து கந்தஹார் பிரதேசத்தில் முடியும் ஒரு கதையைக் கூற எனக்கு அவசியப்படவில்லை. கடந்த பத்து வருட காலத்துக்குள் நான் உலகின் பல இடங்களுக்கு பயணம் செய்து பெற்ற அனுபவங்களை, எனது கதையின் கதாபாத்திரங்களுக்குத் தேவையான பூகோளச் சுற்றாடலை உருவாக்குவதற்கு உபயோகப்படுத்த எனக்குத் தேவைப்பட்டது. அவ்வாறே ஒரு எழுத்தாளராக ஆப்கானிஸ்தானைத் தாண்டிய அனுபவங்களை எனது படைப்பில் சேர்த்துக் கொள்ள நான் விரும்பினேன். சில எழுத்தாளர்கள் தமது வாழ்நாள் முழுவதும் ஒரே நகரத்தை அடிப்படையாகக் கொண்டு அருமையான பல புத்தகங்களை எழுதுகின்றனர். அது பாராட்டப்பட வேண்டிய திறமைகளிலொன்று. எனினும் எனக்கு இத் தொகுப்பை எழுதும்போது இந்த இடத்தைத் தாண்டிச் செல்வதே எனது தேவையாக இருந்தது.

            மிகச் சாதாரணமானதொரு எண்ணத்தோடுதான் இப் புத்தகத்தை ஆரம்பித்தேன். ஒரு தந்தை, தனது சிறு பிள்ளைகள் இருவரோடு பாலைவனத்தினூடு காபூல் நகரம் நோக்கிச் செல்லும் சந்தர்ப்பமொன்றின் மூலம் அந்த எண்ணம் விரிவடைகிறது. எல்லாப் பக்கங்களிலும் கிளை விரித்துள்ள மரமொன்றின் தண்டைப் பற்றிய சித்திரம் என்னுள் வரையப்பட்டிருந்தது. அந்தச் சாதாரண எண்ணம் மற்றும் மரத் தண்டின் உருவத்துக்கு மேலதிகமாக வேறெதுவும் கதையொன்றாகக் கோர்க்கப்பட்டிருக்கவில்லை. முதலில் பிரான்ஸுக்குச் செல்வது குறித்தும் அங்கிருந்து பிறகு கிரீஸுக்குச் செல்வது குறித்தும் எண்ணம் எதுவும் முதலில் எனக்குள் இருக்கவில்லை. கதையானது, அதுவாகவே படிப்படியாக அவ்வாறு உருவானது. இக் கதையானது எவ்வளவு தூரம் விரிந்து செல்லும் என்பதையும் எவ்வளவு வாழ்க்கைகளை இக் கதையின் மூலம் தொடமுடியும் என்பதையும் தேடிப் பார்ப்பதுவே எனது தேவையாக இருந்தது.

The Kite Runner நாவலுக்கு அடிப்படையாக அமைந்த அனுபவம் எது?

காலித் ஹுஸைனி : அக் கதையானது அதிகளவில் புனைவாகவே எழுதப்பட்டது. ஆனால் 1999 ஆம் ஆண்டின் மழைக்காலத்தில் ஓர் தினம் தொலைக்காட்சியில் நான் பார்க்க நேர்ந்த செய்தியொன்று அக் கதைக்கு அடிப்படையாக அமைந்தது எனக் கூறலாம். அச் செய்தியில் தலிபான்களைப் பற்றி ஒளிபரப்பப்பட்டது. ஆப்கான் மக்களுக்கு தலிபான்களால் விடுக்கப்படும் பல்வேறு எச்சரிக்கைகள் குறித்து அச் செய்தியில் கூறப்பட்டது. அவர்கள் காற்றாடி விளையாட்டையும் தடை செய்திருப்பாக அச் செய்தியில் அறிவிக்கப்பட்டது. காபூல் நகரத்தில் வாழ்ந்த காலத்தில் எனது உறவினர்களுடனும், நண்பர்களுடனும் காற்றாடி விட்டு விளையாடிய என்னைத் திகைப்படையச் செய்ய அச் செய்தியால் முடியுமாக இருந்தது.

            ஆகவே அச் செய்தியைச் செவிமடுத்த பிறகு நான் எனது எழுதும் மேசைக்கருகே அமர்ந்து காபூல் நகரத்தில் காற்றாடி விடும் விளையாட்டை விளையாடிய சிறுவர்கள் இருவரைப் பற்றி 25 பக்கங்களில் ஒரு சிறுகதையை எழுதினேன். அது நான் நினைத்ததிலும் பார்க்க, அனுதாபத்தைத் தோற்றுவிக்கக் கூடிய விதத்தில் வெற்றிகரமாக எழுதப்பட்ட ஒரு கதையாக அமைந்தது. அதை எழுதி சில வருடங்கள் கடந்த பிற்பாடு, 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அக் கதையை மீண்டும் வாசிக்கும்போது அதனை ஒரு நாவலாக எழுத வேண்டுமென எனக்குத் தோன்றியது. ஆகவே நான் அக் கதையை மேலும் செப்பனிட்டும், மேலும் விடயங்களைச் சேர்த்து விரிவுபடுத்தியும் நாவலொன்றாக வடிவமைக்கத் தொடங்கினேன். அது பிற்காலத்தில் The Kite Runner நாவலாக அமைந்தது.

நீங்கள் அதன்பிறகு எழுதிய A Thousand Splendid Suns எனும் படைப்பில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் எதிர்நோக்கும் மிகவும் வித்தியாசமான அனுபவங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இந் நாவலை எழுத நீங்கள் தூண்டப்பட்டது எவ்வாறு?

காலித் ஹுஸைனி : நான் The Kite Runner நாவலை எழுதி முடித்ததுமே இரண்டாவது தொகுப்பையும் எழுத வேண்டுமென எனக்குத் தோன்றியிருந்தது. அவ்வாறே பெண்கள் குறித்து எழுத வேண்டுமெனவும் எனக்கு எண்ணமிருந்தது. நான் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற நேரத்தில் யுத்தத்தின் உண்மையான குரூரத்தை நான் எனது கண்களால் நேரடியாக காணக் கூடியதாக இருந்தது. யுத்தத்தின் காரணமாக பெண்களின் வாழ்க்கையைக் குறிவைத்துள்ள அழுத்தங்கள், அவர்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ள துயரங்கள், இடர்கள் மற்றும் பாலியல் வன்முறைகள், தடைகள், சாமான்ய வாழ்க்கை நடைமுறைகளிலிருந்து விலகி வாழ வேண்டிய நிர்ப்பந்தங்கள், மகளிர் இயக்கங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை, தமது சட்டங்கள், சமூக மற்றும் அரசியல் உரிமைகள் போன்றவற்றுக்காக  முன்வருதல் தடுக்கப்பட்டமை போன்ற பல விடயங்கள் குறித்த கதைகளை நான் செவிமடுக்க நேர்ந்தது.

            அது மிகவும் குரூரமான நிலையென எனக்குத் தோன்றியது. அதே போல அவை அனைத்தினுள்ளும் மிகவும் முக்கியமான கதையொன்று இருப்பதாக எனக்குள் உணர்ந்தேன். நான் 2003 ஆம் ஆண்டு காபூல் நகரத்தில் இருந்தபோது, பெண்களைக் குறித்து தனிப்பட்ட ரீதியில் பல கதைகளைக் கேள்வியுற்றேன். அக் கதைகள் பல வருடங்களாக ஒன்றாக இணைந்து கதாபாத்திரங்கள் பல கட்டியெழுப்பப்பட்டன. அதற்கிணங்க ஒரு சந்தர்ப்பத்தில் கதையானது கோர்க்கப்பட்ட பிற்பாடு, நான் அதன் மூலமாக A Thousand Splendid Suns நாவலை எழுதினேன்.

A Thousand Splendid Suns நாவலை எழுதியது, The Kite Runner நாவலை எழுதியதை விடவும் சிரமமான காரியமாக அமைந்ததா?

காலித் ஹுஸைனி : மிகவும் கடினமான காரியமாக அமைந்தது. ஒருவரினதல்லாமல், ஒன்றுக்கொன்று வேறுபட்ட சமூக பின்புலத்தைக் கொண்ட, ஒருவரிடமிருந்து மற்றவர் வேறுபட்ட பெண்கள் இருவரது கோணத்தில் எழுதுவது உண்மையாகவே ஒரு சவாலாக இருந்தது. அதனால், அநேகமான சந்தர்ப்பங்களில் நான் அதனோடு உண்மையிலேயே போராட வேண்டியிருந்தது. இறுதியில், ஆப்கான் பெண்மணியொருவருக்குப் பொருத்தமான நிஜக் குரலைக் கைப்பற்றிக் கொள்ளுதல் போன்றவை குறித்து தீவிரமாகச் சிந்திப்பதை நிறுத்தியதன் பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில் கதாபாத்திரங்கள் உயிரோட்டத்தோடு படைக்கப்படத் தொடங்கின.

            இக் கதையில் அச்சங்கள், சிக்கல்கள், எதிர்பார்ப்புக்கள் பொய்த்துப் போதல் மற்றும் ஆளுமையுடன் இணைந்த பல்வேறு அடையாளங்கள் போன்ற நிறைய விடயங்கள் ஒன்றாக இணைந்த மனித வாழ்க்கைகளை முன் வைத்து நான் எழுதினேன். எனவே, அதனாலேதான் ஏதோவோரிடத்தில் அக் கதாபாத்திரங்கள்  அவற்றுக்கு உரித்தான வாழ்க்கையைப் பெற்றுக் கொண்டு மிகவும் யதார்த்தமான கதாபாத்திரங்களாகத் தோன்றின.

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தமானது உங்கள் தேசத்தின் கலாசாரத்துக்கும் ஆப்கானிஸ்தானுடைய அன்றாட வாழ்க்கை நடைமுறைகளுக்கும் ஏற்படுத்திய அழுத்தங்கள் எவ்வாறானதென உங்களால் விவரிக்க இயலுமா?

காலித் ஹுஸைனி : அவை, 'இதோ இவ்வளவுதான்' எனக் காட்ட முடியாத அளவுக்கு மிகப் பாரிய அழுத்தங்கள். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பல்வேறு யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம். உலகில் ஆப்பிரிக்காவுக்கு உரித்தற்ற வறிய நாடுகளிடையே ஒன்றாகக் கருதப்படும் நாடாக அது மாறியிருக்கிறது. உலகில் 218 ஆவது மட்டத்திலிருக்கும் கரடுமுரடான நில உற்பத்திகளோடு, மக்கள் தொகையில் நூற்றுக்கு முப்பது சதவீதமானோர் வறுமையின் கடைநிலைக்கும் கீழிருக்கும் நிலையே இப்போது எமது நாட்டிலிருக்கிறது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பாதுகாப்பற்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தபடியிருக்கிறது.

            பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வந்திருக்கின்றனர். 2002 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 57 இலட்சமளவு பெருந்தொகையான மக்கள் திரும்பவும் ஆப்கானிஸ்தானுக்கு வந்திருக்கின்றனர். இவ்வாறு ஆப்கானிஸ்தானுக்கு மீண்டு வந்த மக்கள், ஆப்கானிஸ்தானில் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவதென்பது மிகவும் சிரமமான  காரியமாக மாறியிருக்கிறது. மீண்டும் வழமை போல, முன்பிருந்தது போன்று தமக்கு நன்கு தெரிந்த மக்கள் சமூகத்தோடு இணைந்து தமது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பது அவர்களுக்கு மிகவும் கஷ்டமான விடயமாக ஆகியிருக்கிறது. இதனாலேயே ஆப்கானிஸ்தானுக்கு நீண்ட கால பொருளாதார அபிவிருத்தியின் அவசியத்தை உணர்த்த வேண்டியிருக்கிறது. கிராமங்களுக்குச் சென்று கிராம மட்டத்தில் மக்களது வாழ்க்கையைக் கட்டியெழுப்பக் கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அவ்வாறே ஆப்கானிஸ்தானுக்கு யுத்தத் தீர்வொன்று தேவையற்றதெனக் கூறுவது சம்பந்தமாக நாம் அனைவருமே இப்பொழுது ஒரு பொதுவான இணக்கத்துக்கு வந்திருக்கிறோம்.
 
 - எம். ரிஷான் ஷெரீப்

நன்றி
# அம்ருதா இதழ் 
# எங்கள் தேசம்
# எதுவரை
# இனியொரு
# திண்ணை
# உயிர்மை
# நவீன விருட்சம்
# பதிவுகள்


 

Monday, September 2, 2013

குரூர மனமுடையோர்

      
   ரு மனிதனை எப்படியெல்லாம் நாம் துன்புறுத்தலாம்? சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. நீச்சலை அறியாதவன் ஒருவனை நடுக் கடலில் தள்ளிவிடுவதைப் போல குரூரமானவை அவை. ஆனால் அதைச் செய்பவனும் இன்னுமொரு சக மனிதனே. துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுபவனைப் போன்றே குருதியும், நரம்புகளும், அவயவங்களும் கொண்டவனே துன்புறுத்துபவனும். அவனுக்கு மட்டும் அம் மனநிலை எப்படி வாய்க்கிறது? அதிகாரமும், ஆணவமும், பழி வாங்கலுமே இவ்வாறான துன்புறுத்தலுக்கு ஒரு மனிதனைத் தூண்டுகின்றன. இவ்வாறான துன்புறுத்தல்களைசித்திரவதைஎனப் பொதுப் பெயர் கொண்டு அழைக்கலாம்.

            இச் சித்திரவதைகள், தமது இருப்பிடங்கள், பணியிடங்கள் போன்றவற்றில் சக மனிதர்களாலும் கூட சர்வ சாதாரணமாக நடைபெற்று  வருவதோடு அரசியல் ரீதியாகவும், அதிகார வர்க்கத்தாலும் கூட மனிதனைத் துன்புறுத்தல் எனும் இம் மனித உரிமை மீறலானது, எவ்விதக் கேள்விகளுக்கும் உட்படாதவண்ணம் நடைபெற்று வருகின்றது. உலகம் முழுதும் இது பொருந்தும். ஆதி காலத்திலும், சாம்ராஜ்யங்களின் ஆட்சியின் போதும், தற்கால உலக அரசியலிலும் தமது ஆட்சிக்கு எதிராக இருப்பவற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அடக்கி வைப்பதற்காகவும் சித்திரவதை பிரயோகிப்பட்டு வந்திருக்கிறது. அதிகார வர்க்கத்தால் கைது செய்யப்படுபவர்களையும் யுத்தக் கைதிகளையும் பாதுகாப்பதற்காக அனேக சட்டங்கள் இருந்தபோதிலும், இந்த அதிகார வர்க்கங்கள் இச் சட்டங்களைக் கண்டுகொள்ளாமலிருப்பதை அண்மைய  காலங்களில் பெருமளவில் காணக் கிடைக்கிறது.

ri-00
            அத்தோடு அமெரிக்க இராணுவமானது, பாலஸ்தீனர்களைக் கைது செய்து மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்வதையும், இன்னும் பல நாடுகளில் அதிகார வர்க்கமானது பொதுமக்களை சர்வ சாதாரணமாக சித்திரவதைக்குள்ளாக்குவதையும் இணைய ஊடகங்கள் பலவற்றிலும் பரவலாகக் காணக் கிடைக்கிறது. அமெரிக்காவை முன்னிலைப்படுத்தியிருக்கும் ஏனைய பலம் வாய்ந்த உலக நாடுகளும் சித்திரவதையைப் பிரயோகிப்பதை மிகவும் விருப்பத்தோடு செய்து வருகின்றன. இவ்வாறாக, சித்திரவதையை சர்வ சாதாரணமாக பிரயோகித்து வரும் நாடுகளுக்கு பெரும் தடையாக இருப்பது சித்திரவதைக்கு எதிரான தற்போதைய சட்டங்களே.  எனவே உலகம் முழுவதற்குமான சட்டங்களை இயற்றக் கூடிய வல்லமை பெற்றிருக்கும் அமெரிக்காவுக்கும், ஏனைய நாடுகளுக்கும், எவராலும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியா வண்ணம், சித்திரவதையை சட்டபூர்வமான நிலையிலிருந்து செய்வதற்கான அனுமதியே தேவையாக இருக்கிறது.

            இதில் அபாயமானது என்னவெனில், ‘சந்தேக நபர்களிடமிருந்து சில தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக சித்திரவதையைப் பாவிப்பது நியாயமானதேஎன்ற கருத்தை பொதுமக்களிடம் பரப்புவதன் மூலம் சித்திரவதையை சட்டபூர்வமாக்குவது. அமெரிக்காவிலும் இன்னும் சில நாடுகளிலும் சித்திரவதையை சட்டபூர்வமாக்க வேண்டும் என பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கும் அளவுக்கு இப் பயங்கர எண்ணக் கரு வளர்ச்சியடைந்திருக்கிறது. 2002 ஏப்ரல் மாதத்தில் அல்கைதா இயக்கத் தலைவர்களில் ஒருவரான அபூ சுபைதா கைது செய்யப்பட்ட பிற்பாடு அவர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி மேற்கு ஊடகங்களில் வெளிப்படையாகக் கலந்துரையாடப்பட்டன. நாளை இந் நிலைமை எமது நாடுகளிலும் வரலாம். இது இன்னும் முன்னேற்றமடையுமானால் எதிர்காலத்தில் சித்திரவதையும் சட்டபூர்வமான ஒரு நடவடிக்கையாக மாறிவிடும். இதனை நாம் தடுக்க வேண்டும்.

            இதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும் ஜூன் 26 ஆம் திகதியை சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாளாகவும், சித்திரவதைக்கு எதிரான நாளாகவும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதை நான் வரவேற்கிறேன். அதிகாரத் தரப்பிலிருந்து பல சிக்கல்கள் வரக் கூடும் என்ற போதிலும் மனித உரிமை மீறல்களும், சித்திரவதைகளும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கையிலும் கூட இத் தினமானது அனுஷ்டிக்கப்படவிருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளின் போது, இதற்கு முன்பும் பல தடவைகள் பொதுமக்கள் மீதான மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளும் பகிரங்கமாக நடைபெற்ற போதிலும் எவரிடமிருந்தும் எந்த நீதியும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

            மனிதர்களை சித்திரவதைக்குள்ளாக்குவதுவும், காணாமல் போகச் செய்வதுவும், சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்வதுவும் ஆட்சியில் நிலைத்திருக்க அவசியமானவை எனக் கருதுவதால் ஆட்சியிலிருக்கும் எல்லா அரசுகளுமே தமது ஆட்சியை எவர் தொந்தரவின்றியும் கொண்டு செல்வதற்காக இவற்றை பிரதானமாகப் பயன்படுத்துகின்றன. தாம் எதிர்க்கட்சியாக இருக்கும்போது இவற்றுக்கெதிராகக் குரல் கொடுக்கும் எல்லாக் கட்சிகளும், தாம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு, இவற்றையே தாமும் செய்கின்றன. இலங்கையில் கடந்த ஒவ்வொரு தசாப்த காலங்களிலும் மேற்சொன்ன நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டு வந்திருக்கிறதே ஒழிய குறையவில்லை.

            பொதுமக்கள், தமக்கொரு அநீதி நேருமிடத்து ஆதரவு தேடி காவல்துறையை நாடும் நிலைமை இன்று இலங்கையில் மிகவும் குறுகி வருகிறது. நான் முன்பொரு கட்டுரையில் சொன்னது போல, தற்போது இலங்கையில் அதிகளவான சித்திரவதைகள், சிறைக் கைதிகள் மேலேயே நிகழ்த்தப்படுகின்றன. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க அனேகமான நாடுகளில் பின்பற்றப்படும் சித்திரவதையற்ற நடைமுறைகளில் எதுவுமே இலங்கையில் பின்பற்றப்படுவதில்லை. இலங்கைக் காவல்துறை அறிந்த ஒரே செயன்முறை சித்திரவதைதான். சிறைச்சாலைப் படுகொலைகள் நிகழாத ஒரு காவல்நிலையத்தை இலங்கையில் தேடிக் கண்டுபிடிப்பதென்பது கடற்கரையில் சிந்திய கடுகுமணிகளைத் தேடிக் கண்டுபிடிப்பது போல கடினமான ஒரு காரியம்.

            ஒருவர் ஒரு குற்றம் செய்தால், அதனை விசாரித்து தக்க தண்டனை வழங்க நீதிமன்றத்தாலேயே முடியும். ஆனால் அதற்கு முன்பாக அந்த அதிகாரத்தை, வேறு நபர்கள் தம் கரங்களில் எடுத்துக் கொள்வதாலேயே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளும் ஆரம்பிக்கின்றன. எனவே பொது மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையை, தமக்குப் பாதுகாப்பும் நியாயமும் தேடி நாடுவதற்குத் தயங்குகின்றனர் மக்கள். எனினும், இலங்கையில் ஆதரவு தேடி நாடிச் செல்ல  காவல்துறையைத் தவிர வேறு இடங்களும் இல்லை. பொதுமக்களுக்கு காவல்துறை மூலம் கிடைக்கப்பெறும் மோசமான அனுபவங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கும் அனேக மக்கள் இலங்கையில் உள்ளனர். சிலர் மனித உரிமைகளைக் காக்கும் ஒருங்கமைப்புக்களை நாடுகின்றனர்.

            இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுமிடத்து, முறைப்பாடுகளைப் பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள், காவல்துறைக்கு எதிரான வழக்குகளுக்காக வாதாட துணிச்சலும் நம்பிக்கையுமுள்ள சட்டத்தரணிகளை தேடிக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள், முறையிடுபவரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பு குறித்த சிக்கல்கள் ஆகியனவே பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒருங்கமைப்புக்களுக்கும் பிரதானமான சிக்கல்களாக இதுவரை இருந்தன. தற்போது இவற்றோடு இன்னுமொரு சிக்கலும் புதிதாகச் சேர்ந்திருக்கிறது. அதாவது இவ்வளவு சிக்கல்களைத் தாண்டி ஒருவர் காவல்துறைக்கு எதிராக முறையிட்டு, அவ் வழக்கு விசாரணை, நீதிமன்றத்துக்கு வருமிடத்து, நீதிபதியால் அவ் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவது எனும் புதிய சிக்கல் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக எழுந்து நிற்கிறது.

            நான் இப்படிச் சொல்ல ஒரு வலுவான காரணம் இருக்கிறது. இலங்கையில் கடந்த காலங்களில் ஊழல்களையும், படுகொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் வன்முறைகளையும் செய்து மாட்டிக் கொண்ட அரசியல்வாதிகளுக்கெதிராக இருந்த அனேக வழக்குகள் நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகள் வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டார்கள். அத்தோடு சித்திரவதைகள் சம்பந்தமாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கெதிரான அனேக வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு, தொடர்ந்தும் குற்றவாளிகள் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

            எனவே சித்திரவதைக்கு எதிராக எவ்வளவுதான் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அதிகாரத் தரப்பும், காவல்துறையும் தாம் பொதுமக்களுக்கு இழைக்கும் அநீதங்களைத் தாமாக உணரும் வரையில் இலங்கையிலிருந்து சித்திரவதையை ஒழிக்கவே முடியாது. இந் நிலை தொடருமிடத்து, சித்திரவதை உள்ளிட்ட அனைத்து மனித உரிமை மீறல்களும் இலங்கையில் மென்மேலும் வளர்ச்சியடையும் என்பதோடு, இலங்கையிலுள்ள மனித உரிமைத் திணைக்களங்களும் ஒருங்கமைப்புக்களும் தமது பெயரில் மட்டுமே மனித உரிமையை வைத்திருப்பதுவும் தொடரும். எனவே மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்ந்தும் சர்வ சாதாரணமாக நிகழும். துரதிஷ்டவசமான இந் நிலைக்கு நாளை நானும், நீங்களும் ஆளாகலாம். அந் நாளில் எமக்காகப் பேசவும் எவருமிருக்க மாட்டார்கள்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி 
# எதுவரை இதழ் - 12, ஜூலை 2013
# உயிர்மை
# இனியொரு
# பதிவுகள்
# திண்ணை

Monday, July 15, 2013

'தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள்'



          இலங்கையில் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து, அனைத்து இன மாணவர்களும் எல்லா இனத்தவர்களதும் புனித ஸ்தலங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் அண்மையில் பதுளை, கத்தோலிக்கத் திருச்சபையின் பாதிரியார் திரு.பிரியலால் அவர்களுடனான கலந்துரையாடலின் போது இலங்கையில் கல்வித் திட்டத்தில் நடைமுறையிலுள்ள பல விடயங்கள் குறித்து அவர் தெளிவுபடுத்தினார்.

          'All is depend on need and respect. The human dignity is denied not the human rights'

          நாம் காண்பதைத் தாண்டியும் ஏதோவொன்று எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிறதென்பதை பாதிரியாரின் கருத்திலிருந்து விளங்கிக் கொள்ள முடிந்தது. அதாவது தமிழ் மொழி மூல மாணவர்கள் பௌத்த விகாரைகளை வழிபட வருவதென்பது கல்விச் சுற்றுநிருபம் மூலம் உருவாக்கப்பட்ட பலவந்தமான கட்டளையொன்றின் பிரதிபலன் எனலாம். வெசாக் உற்சவ வாரத்தினை முன்னிட்டு அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு, பௌத்த மத வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்படி சுற்றுநிருபங்கள் அனுப்பப்பட்டிருந்தன. எமது அரசியல் அதிகாரங்கள், பலவந்தமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் உருவாக்க முற்படும் இவ்வாறான சில நியமங்களின் காரணமாகவே, மத ஒற்றுமைக்கும் இன ஒருமைப்பாட்டுக்குமிடையில் விரிசல்களும், குழப்பங்களும், தடைகளும் ஏற்படுவதாக பாதிரியார் கூறுகிறார்.

          மேலும் தற்காலத்தில் மத நல்லுறவு எதிர்நோக்கியிருக்கும் பிரதானமான சிக்கலென பாதிரியார் குறிப்பிடுவது, ஆட்சி அதிகாரங்கள் மீது பேராசை கொண்ட சிலரால் 'பலசேனா'க்கள் நிறுவப்பட்டு, மத நல்லுறவுக்கு சவால் விடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரச்சினைகளை உண்டுபண்ணுவதாகும். 'We have a right to our own religion'. எமது மதத்தைப் பின்பற்ற எமக்கு உரிமை இருக்கிறது. அவ்வாறே அடுத்தவருக்கும் இதே உரிமைகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து அனைவரும்  ஏனைய மதங்களையும் கௌரவமாக நடத்துவரெனில் இங்கு எந்தப் பிரச்சினைகளும் எழாது.

          முன்னாள் ஜனாதிபதி டீ.பீ. விஜேதுங்க கூறிய ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது. 'பெரும்பான்மை இனமென அழைக்கப்படும் சிங்களவர் எனும் மரத்தை, சிறுபான்மை எனப்படும் ஏனைய இனத்தவர்கள் கொடி போல பற்றிக் கொண்டு வாழ வேண்டும்.' அழகான உவமைகள் கொண்டு சொல்லப்பட்ட வாக்கியமாக இது மேம்போக்காகத் தோன்றிய போதிலும், அதனுள்ளேயிருக்கும் அர்த்தமானது, சிறுபான்மையினரை ஒடுக்கும், அவர்களது சுதந்திரத்தையும் உரிமைகளையும் அடக்க முயலும் சிங்களவர்களது அபிப்பிராயங்களையே பிரதிபலிக்கிறதெனக் கூறலாம்.

          அத்தோடு பாதிரியார் அவர்கள், இலங்கைக் கல்வித் திணைக்களத்தால்  7 ஆம் தரத்துக்கான சிங்களப் பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ள ஒரு வாக்கியத்தை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

          'தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள்' என்பதே அது.

          கல்வித் திணைக்கள அதிகாரிகளது கவனத்தைத் தாண்டி இவ்வாக்கியம் எவ்வாறு இடம்பெற்றது? எந்த நோக்கத்தில் புத்தகத்தில் இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை எனினும் இவ் வாக்கியத்தின் உட்கருத்து பல அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது அல்லவா?

*பொதுவாகவே தமிழச்சிகள் அழகானவர்களில்லை.
* ஸ்ரீதேவி அழகானவள் என்பதற்காக மட்டுமே அவளை நேசிக்கலாம்.
* அழகற்ற தமிழச்சிகள் மத்தியில் ஸ்ரீதேவி தப்பிப் பிறந்தவள்.

போன்ற பல தப்பபிப்ராயங்களை சிங்கள மாணவர்களுக்குப் புகட்டுவதற்கு இவ்வரி காரணமாக அமையக் கூடும். இவ்வாறாக பல வரிகள் எல்லாப் பாடப் புத்தகங்களிலும் மறைமுகமாக ஒளிந்திருக்கலாம். இதனைச் செய்பவர்களது நோக்கம் என்ன?

          அரசாங்கமானது விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துப் பெற்ற வெற்றியை, அதாவது ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி கொண்டாடப்படும் இவ்வெற்றியை,  தற்போது தமிழர்களைத் தோற்கடித்துப் பெற்ற வெற்றியாகக் கொண்டாட சிங்களவர்கள் தூண்டப்பட்டிருக்கிறார்கள். நாடுமுழுவதும் கொண்டாடப்பட்ட இராணுவ வீரர்கள் தினமானது 'சிங்களவர்களது தின'மாக அர்த்தப்படுத்தப்படுவதானது ஆறி வரும் காயத்தினை மீண்டும் மீண்டும் கீறுவதற்கு ஒப்பானதன்றி வேறென்ன?

- எம்.ரிஷான் ஷெரீப்
தகவல் உதவி - சமபிம

நன்றி
# இனியொரு