Sunday, June 26, 2011

திண்ணைப் பேச்சு - நன்றி ரிஷான் ஷெரீஃப்

நன்றிக் குறிப்பு

# தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்படுபவரும், தேர்ந்த விமர்சகரும், தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகையான திண்ணை இதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான  திரு.கோபால் ராஜாராம் அவர்களால் எழுதப்பட்ட, எனது மொழிபெயர்ப்புக்கள் குறித்த விமர்சனக் கட்டுரையொன்றை, இவ் வார 'திண்ணை' இதழ் பிரசுரித்திருக்கிறது. இக் கட்டுரையானது, மொழிபெயர்ப்பு உலகில் தொடர்ந்தும் இயங்க என்னைப் பெரிதும் ஊக்குவிக்கின்றது. 

அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அக் கட்டுரையைக் கீழே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
__________________________________________________________________

திண்ணைப் பேச்சு - நன்றி ரிஷான் ஷெரீஃப்

                        சிங்களர்களே என்றாலே காடையர்கள் என்பதாக ஒரு பிம்பம் கடந்த் மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களில் பதிந்து விட்ட ஒன்று. தமிழ் ஈழப் போராட்டத்தில் நியாய உணர்வு கொண்ட சிங்களவர்களும் இணைந்து பணி புரிய முடியாதபடிக்கு அவர்களிடமிருந்து தனிமைப் பட்ட நிலையில் இயக்கங்களும் போராட்டங்களும் இருந்து வந்திருக்கின்றன. இது பற்றி முதன்முதலில் உணர்ச்சி பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் விவாதித்தவர் பிரமிள். அவருடைய “ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை” புத்தகத்தில் இது பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அந்த நூலை இன்று படிக்கும்போது வருத்தம் மேலிடுகிறது, ”தற்கொலை” என்ற கணிப்பு அன்று வெகு தொலைவில் கற்பனை செய்ய முடியாத ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால் மெல்ல உருவாகிவரும் சிதைவில் உண்மையின் வெப்பமும், மக்களை முன்னிறுத்தாத நெகிழ்ச்சியற்ற அரசுச் செயல்பாடுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. காந்தியும், மண்டேலாவும் சரி எப்படிப் பட்ட தீர்க்கதரிசிகள் என்பது ஒவ்வொரு விடுதலை இயக்கத்தின் போக்கையும் பார்க்கையில் உறுதிபடுகிறது.

                       சிங்கள அறிவுஜீவிகள் தொடர்ந்து தமிழ் போராட்டங்கள் பற்றியும் எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருந்த சூழலில் அது அவர்களுடைய உடனடி சமூகத்தில் என்ன பிரசினைகளை ஏற்படுத்தியிருக்கும் என்று தெரிந்து கொள்வது கடினமில்லை. இருந்தும் கூட சிங்கள அறிவுஜீவிகள் பலரின்  செயல்பாடு தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசின் கொடும்போக்கிற்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தே வந்திருக்கிறது. ஆனால் தமிழ் ஊடகங்கள் இவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. அவற்றை வெளியிடுவதன் மூலம் சிங்களச் சமூகம் அனைத்தையும் “எதிரி”யாகக் கட்டமைக்க முடியாமல் போகலாம் என்றோ என்னவோ அந்தக் குரல்கள் தமிழ் பத்திரிகைகளில் வெளியாவதில்லை.

                       ஆனால் இன்று நிலைமை வேறு. சிங்கள அரசு போர்க்காலத்தில் புரிந்த அத்துமீறல்களுக்கு, செர்பியாவின் மிலோசெவிச் போன்று சிங்கள அரசின் குற்றவாளிகள் தண்டனை பெற வெண்டுமென்றால் இது வெறும் தமிழர்களின் குரலாகவே நின்று விடக்கூடாது. ஸ்ரீலங்காவின் அனைத்து தரப்பினரின் குரலாகவும் அது ஒலிக்க வேண்டும். அந்தக் குரலை உலகிற்கு மட்டுமல்லாமல், தமிழ் மக்களிடத்தும் கொண்டு செல்ல வேண்டும்.
திண்ணை தளத்தில் சமீப காலமாக தொடர்ந்து பங்களிப்புச் செய்து வரும் ரிஷான் ஷெரீஃபுக்கு விசேஷமான நன்றிகள். உதுல் பிரேமரத்ன, அஸங்க சாயக்கார, ப்ரியந்த லியனகே, பியன்காரக பந்துல ஜெயவீர, சுனந்த தேசப்ரிய போன்ற ஆகச் சிறந்த சிங்கள அறிவிஜீவிகளின் படைப்புகளை, கவிதைகளை, உரிமைக் குரல்களை தமிழ் மக்கள் முன்னால் வைப்பது என்பது இன்றைய சூழலில் மிகவும் தேவையான ஒன்று. ஸ்ரீலங்காவின் நம்பகத் தன்மை உலக நாடுகளின் முன்பு மீண்டும் நிறுவப் படவேண்டுமென்றால், போர்க்குற்றவாளிகள் உலகப் பொது மேடையில் தண்டனை பெற்றாக வேண்டும். தமிழர்களின் இன்றைய அவலனிலை, வெறுமே தமிழர்களின் அவல நிலை அன்று, ஸ்ரீலங்காவின் குடிமக்களின் அவல நிலை என்ற உணர்வு தொடர்ந்து முன்னிறுத்தப் படவேண்டும்.

                      "தமிழர் பிரதேசங்களில் பௌத்த விகாரைகளைக் கட்டுவது, ஊர் மற்றும் பாதைகளின் பெயர்களைச் சிங்களப்படுத்துவது, யாழ்ப்பாண மக்களை இராணுவத்தினரைக் கொண்டு பதிவு செய்வது, வன்னி மக்களுக்கு எந்தவொரு சுதந்திரத்தையும் வழங்காதிருப்பது, வடக்கு கிழக்கு இராணுவ ஆட்சி, விடுதலைப் புலிகளின் கல்லறைகளை அழித்து அவற்றின் மீது இராணுவ முகாம்களைக் கட்டுவது போன்ற செயற்பாடுகள் அனேகமானவற்றால் தமிழ் மக்களுக்குச் சொல்லும் செய்தியானது, அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும், சம உரிமைகளற்ற மக்கள் என்பதுதான். பார்வதி அம்மாவின் அஸ்தி சேதப்படுத்தப்பட்டமை தனியொரு சம்பவமல்ல என்பது அதனாலேயேதான். அதுபோலவே அந்தச் சம்பவமானது அரசியல் சம்பவமொன்றாகக் கருதப்படுவதும் அதனாலேயேதான். அந்தச் சம்பவமானது எங்களால் வெளிப்படுத்தப்பட வேண்டியதுவும் அதனாலேயேதான்.ஒன்றிணைந்த, அமைதியான, நேர்மையான இலங்கையொன்று எங்களுக்கு அவசியமெனில், அதன் முதலாவது நிபந்தனையானது தமிழ் மக்களை சுதந்திரமாகவும், ஆத்ம கௌரவத்தோடும் உள்ள மக்களாக வாழ இடமளிப்பதே." என்ற சுனந்த தேசப்ரியவின் குரல் அனைத்து சிங்கள மக்களின் குரலாகவும் மாறவேண்டும் என்றால் அது தமிழ் மக்களிடம் இணக்கக் குரலாக, ஒருங்கிணைவுக் குரலாக கொண்டு செல்லப் படவேண்டும். அந்த முயற்சியின் மிக முக்கியமான பங்களிப்பு ரிஷான் ஷெரிபுடையது. மீண்டும் தனிப்பட்ட முறையிலும், திண்ணை வாசகர்கள் சார்பாகவும் அவருக்கு நம் நன்றிகள்.

- கோபால் ராஜாராம்
திண்ணை இதழ் 26.06.2011

Thursday, June 23, 2011

என்னைக் கைது செய்யப் போகிறார்கள்


    தற்போது இலங்கையில் வசிக்கும் என்னை விரைவில் கைது செய்யப் போகிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் நான் ஒரு தண்டனைக்குரிய குற்றவாளி. தண்டனையாக, ஐந்து லட்ச இலங்கை ரூபாய்களை தண்டப் பணமாகச் செலுத்த வேண்டும். தவறினால் குறைந்த பட்சம் ஆறு மாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். என்ன செய்யப் போகிறேன் நான்?

    என்னிடம் நன்றாக வேலை செய்யும் ஒரு கணினி இருக்கிறது. அதில்தான் இதையெல்லாம் எழுதுகிறேன். இனி, அதன் திரைக் கண்ணாடியை உடைத்து, தலை கீழாய்க் கவிழ்த்து குப்பைக் கூடையாய்ப் பயன்படுத்தலாம். அல்லது உள்ளே மண் நிறைத்து செடிகள் நடலாம். விசைப் பலகையைக் கவிழ்த்தால் சமையலறையில் பாத்திரங்களை வைக்கவும், காய்கறிகளை நறுக்கவும் பயன்படுத்தலாம். போனால் போகிறதென்று மௌஸை மட்டும் சிறு குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்கலாம். இன்னும் கணினிகளை வைத்திருப்பவர்கள் எல்லோரும் ஏதாவதொரு முடிவை இப்போதே எடுத்துக் கொள்ளுங்கள். நாளை உங்களைக் கைது செய்த பிறகு அவை நிச்சயம் பயன்படும்.

    இவ்வளவு காலமும் கணினியில் தட்டச்சு செய்து, அதனை ஏ4 தாளொன்றில் பிரதி எடுத்துத் தர, ஐம்பது ரூபாய்களை வாங்கிய கடைக்காரர்கள் இனிமேல் இருநூற்றைம்பது ரூபாய்களுக்கும் மேலே அறவிடப் போகிறார்கள். அதுபோல, ஒரு குறுந்தகடைப் பிரதி எடுத்துத் தருவதற்கு ஐநூறு ரூபாய்களுக்கும் மேலே. அது ஒரு பக்கம் இருக்க, கணினியறிவின் ஆரம்பக் கல்வியை (மௌஸைக் கையாள்வது எப்படி எனக் கற்க) மட்டும், ஒரு மாணவருக்கு ஒரு நாள் கட்டணம் ஐயாயிரம் ரூபாய்களுக்கும் மேலே.

    இலங்கையினுள் கணினிகளில் மிக அதிகளவில் பாவிக்கப்படுவது விண்டோஸ் மென்பொருள்தான். இம் மென்பொருளை, கணினி மென்பொருட்களை விற்பதற்காகவே இலங்கை அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டிருக்கும் மென்பொருள் விற்பனை நிலையங்களில் மாத்திரமே இனி வாங்கிப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7 மென்பொருளானது இலங்கையினுள் விற்கப்படும் விலை 226 அமெரிக்க டொலர்கள். அதாவது கிட்டத்தட்ட 24758/= இலங்கை ரூபாய்கள். அதன் உண்மையான விலை இது இல்லை. இதற்கு இன்னும் 12% வெட் வரியையும் சேர்க்க வேண்டும். இவ் வரிகளையெல்லாம் சேர்த்த பிற்பாடு விண்டோஸ் மென்பொருளின் உண்மையான விலை கிட்டத்தட்ட 28000/= இலங்கை ரூபாய்கள். இலங்கையில் புகைப்படங்களை மெருகேற்றவென அதிகம் பயன்படுத்தப்படும் அடோப் போட்டோஷொப் உள்ளடங்கிய அடோப் க்ரியேட்டிவ் சூட் மென்பொருளின் விலையானது, கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து இருபத்தொன்பதாயிரம் இலங்கை ரூபாய்கள். இலங்கையில் பரந்தளவில் பாவிக்கப்படும் இன்னுமொரு மென்பொருளான ஒடோகேட்டின் விலை 3995 அமெரிக்க டொலர்கள். இலங்கை ரூபாய்களில் சொல்வதாயின் கிட்டத்தட்ட நான்கு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்கள்.

    என்ன, ஒன்றுக்கொன்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டு போகிறேன் என்று தலைசுற்றுகிறதா உங்களுக்கு? விடயத்துக்கு வருகிறேன். இலங்கை அரசாங்கமானது, ஒரு சட்டத்தை அமுல்படுத்தத் தொடங்கியிருக்கிறது. சட்டவிரோத மென்பொருள் பாவனையாளர்களுக்கு எதிராகப் புலமைச் சொத்து துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. அதன்படி, இலங்கையில் பாவனையிலிருக்கும் கணினிகளில், மென்பொருட்களின் சட்ட ரீதியான பிரதிகளைப் பயன்படுத்தாமல் எவரேனும் போலிப் பிரதிகளைப் பயன்படுத்தினால், அவரைக் கைது செய்து ஐந்து லட்ச ரூபாய்களைத் தண்டப்பணமாக அறவிடவோ அல்லது குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனைக்குள்ளாக்கவோ அரசு திட்டமிட்டிருக்கிறது.

    இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் பத்தாயிரம் ரூபாய்க்குக் கூட ஒரு கணினியை வாங்கிவிட முடியுமாக இருப்பதால் அனேகமான மத்திய தர வீடுகளில் கூட ஒரு கணினி இருக்கிறது. ஒரு பாடசாலையில் சொற்ப கணினிகளை மட்டும் வைத்துக் கொண்டு எல்லா மாணவர்களுக்கும், அதன் பிரயோகக் கல்வியை பூரணமாகக் கொடுப்பது சாத்தியமற்றது. எனவே கற்கும் வயதிலுள்ள பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர், எப் பாடுபட்டாவது தம் பிள்ளைகளுக்கு ஒரு கணினியை வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். கணினிக்குத் தேவையான புதிய புதிய மென்பொருள்களையும் அவர்களால் குறைந்த செலவில் இலகுவாக வாங்க முடிந்ததால், இன்று இலங்கையில் பாடசாலை செல்லும் ஒரு மாணவருக்குக் கூட அனேக மென்பொருட்களை வீட்டிலிருந்தே இலகுவாகக் கற்றுக் கொள்ளவும் கையாளவும் முடிந்திருக்கிறது. மென்பொருட்களை எல்லாம் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிந்ததாலேயே இது சாத்தியமாகியிருக்கிறது. இது நாடு முழுவதும் தொடர்வதால்தான் இலங்கையானது, தகவல் தொடர்பாடலில் உச்ச வளர்ச்சி நோக்கிச் சென்றிருக்கிறது.

    இன்று இலங்கையிலிருக்கும் பொருளாதாரச் சிக்கலில், அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கையில், சட்டரீதியான மென்பொருட்களை மட்டுமே எல்லோருக்கும் பயன்படுத்தச் சொன்னால், அவற்றை வாங்க இலட்சக்கணக்கான பணத்துக்கு எங்கு செல்வது? நாட்டு மக்கள் எல்லோருமே லட்சாதிபதிகளா என்ன? இதனால், கணினியும் மென்பொருட்களும் இனிமேல் மாணவர்களுக்கு நிறைவேறாக் கனவுகளாகவே ஆகிவிடும் அல்லவா? இனி எப்படி இலங்கையில் தகவல் தொடர்பாடல் அதன் வளர்ச்சியைத் தொடரும்?

    சட்ட ரீதியான மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்த நேருவதன் இன்னுமொரு விளைவு, இலங்கையிலுள்ள அனைத்துப் பொருட்களினதும் சேவைகளினதும் விலை உயர்வது. கணினி வகுப்பொன்றுக்கு தனது பிள்ளையை அனுப்பும் பெற்றோருக்கு, பாடக் கட்டணமானது, அவர்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர சாத்தியமிருக்கிறது. ஏனெனில் வகுப்பில் பயன்படுத்தப்படும் தமது கணினிகளுக்கான மென்பொருட்களை  வாங்குவதற்காக செலவளித்த இலட்சக்கணக்கான பணத்தை, அவ் வகுப்புக்களின் உரிமையாளர்கள் மாணவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ளத் தீர்மானிப்பர். இன்னும், கணினி பாவனையிலிருக்கும் எல்லா இடங்களிலும், வாடிக்கையாளர்களிடமிருந்தே அச் செலவைச் சமாளிக்கத் தேவையான பணம் ஏதோ ஒரு விதத்தில் அறவிடப்படும்.

    இதன் அடுத்த விளைவானது பலர் தமது வேலை வாய்ப்புக்களை இழப்பது. சிறிய நிறுவனங்கள் கூட கணினிகளை அப்புறப்படுத்தி விட்டு, மீண்டும் தட்டச்சுப் பொறிகளுக்கும், கையால் எழுதுவதற்கும் மாறிவிட வாய்ப்பிருக்கிறது. இணைய விடுதிகள் எல்லாம் மூடப்பட வேண்டி வரும். கணினி பாவனையிலிருக்கும்போதே அரச அலுவலகங்களில் ஏதேனும் காரியம் நிகழ வேண்டுமானால், கால்கடுக்க பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதில் கணினியும் இல்லையானால், பொதுமக்களின் கதி அதோகதிதான். நேர விரயத்துடன், இலங்கை மக்கள் நவீன யுகத்திலிருந்து பின்னோக்கிச் செலுத்தப்படுவர் என்பது நிதர்சனம்.

    உண்மையில் இம் மென்பொருட்களைத் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், வறுமை நிலையிலுள்ள நாடுகளில் அவற்றை விற்று இலாபம் சம்பாதிக்கும் நோக்கில் அம் மென்பொருட்களைத் தயாரிப்பதில்லை. அந் நிறுவனங்கள் தமது நாடுகளுக்குள்ளும், இன்னும் ஏனைய செல்வந்த நாடுகளிலும் அவற்றை விற்று உடனடியாக இலாபம் சம்பாதித்து விடுகின்றன. இலங்கை அரசாங்கமானது, இலங்கைக்குள் சட்ட ரீதியான மென்பொருட்களை மட்டுமே பாவனைக்குக் கொண்டு வர முன்வந்ததன் முக்கிய நோக்கம், அந் நிறுவனங்களுக்கு இலாபம் சம்பாதித்துக் கொடுப்பதல்ல. சட்டரீதியான மென்பொருட்களை விற்கும் அரசுக்கு வேண்டியவர்களுக்கு, இலங்கைக்குள் ஒரு விற்பனைச் சந்தையை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் அதன் அடிப்படைத் திட்டம். இதனால் பாதிக்கப்படும் பொது மக்களைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும் அரசு சிந்திக்கவேயில்லை.

    அத்தோடு அரசாங்கமானது, போலி மென்பொருட்களைக் கைப்பற்றும் பொறுப்பை காவல்துறையிடம் ஒப்படைப்பதால் என்ன நடக்கும்? காவல்துறையானது, இம் மென்பொருட்களை வைத்திருப்பவர்களை மிரட்டுவதாலும், அச்சுருத்துவதாலும் தமது பணப்பைகளை நிரப்பிக் கொள்ளும் சாத்தியம்தான் அதிகரிக்கும். இதனால் இச் சட்டமானது, அதிகாரத்திலிருக்கும் எவரெவருக்கோ, எவற்றுக்கெல்லாமோ பயன்படுவதன்றி, பொதுமக்களுக்கு சிறிதளவும் பயனளிக்காது.

    உலக நாடுகளில் நடைமுறையிலுள்ள அனைத்து சட்டங்களையும் இலங்கையிலும் நடைமுறைப்படுத்த விரும்புவதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படப் போகும் பாதிப்புக்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். போலியானவற்றைத் தடை செய்ய வேண்டும்தான். ஆனால், அதற்குச் சமமான மாற்றுப் பரிகாரத்தை ஏற்படுத்தி விட்டு, போலியானவற்றைத் தடை செய்ய வேண்டும். அரசாங்கமானது எதற்கெல்லாமோ கலந்தாலோசிக்கிறது, அறிக்கைகளை விடுகிறது. இத் தடை மூலம் இலங்கையில் ஏற்படப் போகும் பாரிய பாதிப்புக்களுக்கெதிராக அரசாங்கம் என்ன திட்டத்தை வைத்திருக்கிறது எனப் பார்த்தால் எதுவுமேயில்லை. மைக்ரோசொஃப்ட் போன்ற நிறுவனங்கள்தான் இலங்கையில் இத் தடையைக் கொண்டு வரச் சொல்லிக் கோரியிருந்தால் கூட, அந் நிறுவனங்களிடம் இதனால் இலங்கையில் ஏற்படப் போகும் சிக்கல்கள் குறித்து எடுத்துச் சொல்ல அதிகாரத் தரப்பில் எவருமில்லை.

    இலங்கைக்குள் சட்ட ரீதியான மென்பொருளை மட்டுமே பயன்படுத்தக் கோரும் இச் சட்டத்தை ஆதரிப்பவர்களின் கருத்தைப் பார்ப்போம். எமது நாட்டுக்குள் தயாரிக்கப்படும் மென்பொருட்களுக்கு உரிய மதிப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கும், அவற்றின் பயன்பாடுகளை அதிகரிப்பதற்கும், அவற்றுக்கு ஒரு சந்தையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இச் சட்டமானது பெரிதும் உதவக் கூடுமென இவர்கள் எண்ணுகிறார்கள். எனினும் இம் மென்பொருள் தயாரிப்பைக் கற்றுக் கொள்வதற்கும் இவர்களுக்கு விலை குறைந்த போலி மென்பொருள்கள்தானே தேவைப்படுகிறது. எனின், 'எவ்வளவு சுயநலமான சிந்தனை இது?' எனச் சொல்லலாம்தானே.

    அண்மையில், இலங்கையில் தகவல்தொடர்பாடலானது 30% சதவீத வளர்ச்சிக்குள்ளாகியிருக்கிறதென சமீபத்திய கணக்கெடுப்புக்கள் சொல்கின்றன. அதன் பிரகாரம், இவ் வளர்ச்சியானது மிகவும் வரவேற்கத்தக்கது. இந் நாடானது இந்தளவு வளர்ச்சியை இக் குறுகிய காலத்துக்குள் பெற்றுக் கொள்ள முடிந்ததன் முக்கிய  காரணமானது, கணினிகளுக்கு அவசியமான மென்பொருட்களையெல்லாம் ஐம்பது ரூபாய்களுக்குக் கூட இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிந்தமைதான். 'எமது நாட்டை தகவல் தொடர்பாடல்களின் மையமாக்குவோம்' என ஒருபுறம் சூளுரைத்துவிட்டு, மறுபுறம் மென்பொருட்களை குறைந்த விலையில் பயன்படுத்தும் நடைமுறையைத் தடுக்க அரசு முன்வருவதன் மூலம், இத் தகவல் தொடர்பாடல் வளர்ச்சியானது எமது கண் முன்னாலேயே வீழ்ந்தழிந்து போவதுதான் நடக்கும். அத்தோடு தகவல் தொடர்பாடலும், கணினிப் பாவனையும் மிகவும் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமேயென மட்டுப்படுத்தப்படும்.

    இச் சட்டத்தின் பிரகாரம், இதை எழுதிக் கொண்டிருக்கும் நானும், வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் கூட அரசின் பார்வையில் குற்றவாளிகள்தான். எனவே நாளை நாமும் கைது செய்யப்படலாம். நம் கணினிகள், நமது வீடுகளின் கண்டுகொள்ளப்படாத மூலைகளில் கிடத்தப்படலாம். பூந் தொட்டிகளாகவோ, சமையலறைப் பாவனைப் பொருட்களாவோ பயன்படுத்தப்படலாம். அன்றேல் 'ஒரு காலத்தில் எனது வீட்டிலும் கணினி இருந்தது' என விருந்தினருக்கும் வருங்கால சந்ததிக்கும் காட்டுவதற்காக, பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# இனியொரு
# விடிவெள்ளி 23.06.2011
# உயிர்மை
# திண்ணை

Monday, June 20, 2011

யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்

விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் முடிவுற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது, கடந்த இரண்டு வருடங்கள் பூராகவும் இடைக்கிடையே அந்த யுத்த வெற்றி மனப்பான்மையை மக்கள் மத்தியிலும் இராணுவத்தினர் மத்தியிலும் நிலை நிறுத்துவதற்காக பல விதமான விழாக்களை ஏற்பாடு செய்திருக்கிறது. அதனடிப்படையில் இன்றும் கூட அது போன்ற விழாக்கள் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கெனில் இன்றைய தினமானது 'பலகாரம், பாற்சோறு சாப்பிட்டு'க் கொண்டாடப்பட வேண்டிய தினமென்பது உண்மை. ஏனெனில் ராஜபக்ஷ பரம்பரைக்குக் கிடைத்த 'அதிர்ஷ்டம்' இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிடைத்த அந்த யுத்த வெற்றியே. ராஜபக்ஷ குடும்பத்தின் கூட்டுச் சகோதர்கள் உள்ளிட்ட ஏழேழு பரம்பரைக்கும் வேண்டிய சொத்துக்களைப் பெற்றுத் தந்த 'புதையல்' அது. எனினும் அந் நிலை உருவானது ராஜபக்ஷ குழுவினருக்கு மட்டுமே.

உண்மையாகவே அரசாங்கமானது மக்களுக்காக இயங்கியிருந்தால் இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு யுத்தம் முடிவடைந்ததானது, இந் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய எல்லா மக்களுக்கும் ஏதேனுமொரு வெற்றியையோ, சுதந்திரத்தையோ உருவாக்கக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கும். எனினும் கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்தவைகள் அதன்படியல்ல. அரசாங்கத்தின் ஊடகக் கண்காட்சிகளில் இரு விழிகளும் மயங்காத எவர்க்கும், சற்றுக் கூர்ந்து நோக்குகையில் இந் நிலையைப் புரிந்துகொள்ள முடியும்.

மேலே குறிப்பிட்ட படி ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு குடும்ப ஆட்சியை நீண்ட காலத்துக்கு நிலை நிறுத்திக் கொள்வதற்கு வழியமைத்த, கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வரம்கொடுத்த, நினைத்த விதத்தில் சட்டங்களைக் கூட பலவந்தமாக மாற்றியமைத்து தனக்கு வேண்டிய விதத்தில் ஆட்சியைக் கொண்டு செல்லும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்த யுத்த வெற்றி கிடைத்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

எனினும் வடக்கு தமிழ் மக்களுக்கென்றால், தமது வீடுகளைக் கை விட்டுவிட்டு, அகதி முகாம்களெனும் சிறைகளுக்குள் வர நேர்ந்து, இன்றோடு இரண்டு வருடங்கள். குடும்பத்தின் உயிர்களைக் காப்பாற்றவென செய்து கொண்டிருந்த தொழில்களைக் கைவிட்டுவிட்டு அரசாங்கத்தின் முட்கம்பிகளுக்குள் சிறைப்பட்டு 'வெறுமனே' பார்த்திருக்க நேர்ந்து, இன்றோடு இரண்டு வருடங்கள். பாடுபட்டு உழைத்த பணத்தைக் கொண்டு, சுடச் சுட சமைத்து உண்ணும் புதிய உணவுகளுக்குப் பதிலாக பூஞ்சனம் பிடித்த சோற்றையும் பருப்பையும் விழுங்கி உள்ளே தள்ள நேர்ந்து, இன்றோடு இன்றோடு இரண்டு வருடங்கள்.

பிள்ளைகளின் பாடசாலைகள் இராணுவ முகாம்களுக்கென கைப்பற்றப்பட்டதால் பிள்ளைகளின் கல்விப் பயணம் நிறுத்தப்பட்டு இன்றோடு இரண்டு வருடங்கள். இந்தியாவில் தேர்தல்கள் நெருங்கும்போது இலங்கைத் தமிழ் மக்கள் குறித்து முதலைக் கண்ணீர் விடும் சோனியா காந்தி போன்றவர்களுக்கு நிலையங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல்களைக் கட்டுவதற்கு இடங்களைக் கொடுத்துவிட்டு தாம் பிறந்த மண்ணிலேயே அனாதைகளாகி இன்றோடு இரண்டு வருடங்கள்.

அது மட்டுமல்லாது, குறைந்தபட்சம் தமக்கெதிராக முறைப்பாடொன்று கூட அற்ற தமிழ் இளைஞர்கள், தமது கறுத்த தோல் நிறத்தினாலும், தமிழ் மொழியைப் பேசுவதன் காரணத்தினாலும் சிறைச்சாலைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு, இன்றோடு இரண்டு வருடங்கள். தமிழ்த் தாய்மார்கள் காணாமல் போன தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களைத் தேடி பல துயரங்களை அனுபவித்தபடி, கேலி கிண்டல்களுக்கு ஆளான படி ஒவ்வொரு இராணுவ முகாம்களாக அலைய ஆரம்பித்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

ஆகவே இந்த 'இரண்டு வருடக் கொண்டாட்டம்' ஆனது, வெற்றியின் இரண்டு வருடங்களல்ல. துயரங்களினதும் கட்டுப்பாடுகளினதும் இரண்டு வருடங்கள். வன்முறையினதும் ஏகாதிபத்தியத்தினதும் இரண்டு வருடங்கள். வரப் போகும் இருபது வருடங்களையும் கூட, கடந்த இரண்டு வருடங்களைப் போல இலகுவாகக் கழித்துவிட ராஜபக்ஷ அரசாங்கம் தயாராகி வருகிறது. அந் நிலையை மாற்ற வேண்டும். யுத்தம் முடிவுற்ற மூன்றாம் வருடத்தை நாம் இன்றிலிருந்து ஆரம்பிக்கிறோம். நாம் எல்லோரும் இவ் வருடத்திலாவது இந் நிலையை மாற்றத் தீர்மானிக்க வேண்டும். உண்மையான தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பக் கூடிய, சகோதர தமிழ் மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் வன்முறையை அகற்றுதலுக்கும், அதற்காகப் போராடுதலுக்குமான வருடமாக இவ் வருடத்தை ஆக்கிக் கொள்வோமாக.

- உதுல் ப்ரேமரத்ன
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# உயிர்மை
# இனியொரு
# திண்ணை