Sunday, June 26, 2011

திண்ணைப் பேச்சு - நன்றி ரிஷான் ஷெரீஃப்

நன்றிக் குறிப்பு

# தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்படுபவரும், தேர்ந்த விமர்சகரும், தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகையான திண்ணை இதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான  திரு.கோபால் ராஜாராம் அவர்களால் எழுதப்பட்ட, எனது மொழிபெயர்ப்புக்கள் குறித்த விமர்சனக் கட்டுரையொன்றை, இவ் வார 'திண்ணை' இதழ் பிரசுரித்திருக்கிறது. இக் கட்டுரையானது, மொழிபெயர்ப்பு உலகில் தொடர்ந்தும் இயங்க என்னைப் பெரிதும் ஊக்குவிக்கின்றது. 

அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அக் கட்டுரையைக் கீழே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
__________________________________________________________________

திண்ணைப் பேச்சு - நன்றி ரிஷான் ஷெரீஃப்

                        சிங்களர்களே என்றாலே காடையர்கள் என்பதாக ஒரு பிம்பம் கடந்த் மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களில் பதிந்து விட்ட ஒன்று. தமிழ் ஈழப் போராட்டத்தில் நியாய உணர்வு கொண்ட சிங்களவர்களும் இணைந்து பணி புரிய முடியாதபடிக்கு அவர்களிடமிருந்து தனிமைப் பட்ட நிலையில் இயக்கங்களும் போராட்டங்களும் இருந்து வந்திருக்கின்றன. இது பற்றி முதன்முதலில் உணர்ச்சி பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் விவாதித்தவர் பிரமிள். அவருடைய “ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை” புத்தகத்தில் இது பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அந்த நூலை இன்று படிக்கும்போது வருத்தம் மேலிடுகிறது, ”தற்கொலை” என்ற கணிப்பு அன்று வெகு தொலைவில் கற்பனை செய்ய முடியாத ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால் மெல்ல உருவாகிவரும் சிதைவில் உண்மையின் வெப்பமும், மக்களை முன்னிறுத்தாத நெகிழ்ச்சியற்ற அரசுச் செயல்பாடுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. காந்தியும், மண்டேலாவும் சரி எப்படிப் பட்ட தீர்க்கதரிசிகள் என்பது ஒவ்வொரு விடுதலை இயக்கத்தின் போக்கையும் பார்க்கையில் உறுதிபடுகிறது.

                       சிங்கள அறிவுஜீவிகள் தொடர்ந்து தமிழ் போராட்டங்கள் பற்றியும் எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருந்த சூழலில் அது அவர்களுடைய உடனடி சமூகத்தில் என்ன பிரசினைகளை ஏற்படுத்தியிருக்கும் என்று தெரிந்து கொள்வது கடினமில்லை. இருந்தும் கூட சிங்கள அறிவுஜீவிகள் பலரின்  செயல்பாடு தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசின் கொடும்போக்கிற்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தே வந்திருக்கிறது. ஆனால் தமிழ் ஊடகங்கள் இவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. அவற்றை வெளியிடுவதன் மூலம் சிங்களச் சமூகம் அனைத்தையும் “எதிரி”யாகக் கட்டமைக்க முடியாமல் போகலாம் என்றோ என்னவோ அந்தக் குரல்கள் தமிழ் பத்திரிகைகளில் வெளியாவதில்லை.

                       ஆனால் இன்று நிலைமை வேறு. சிங்கள அரசு போர்க்காலத்தில் புரிந்த அத்துமீறல்களுக்கு, செர்பியாவின் மிலோசெவிச் போன்று சிங்கள அரசின் குற்றவாளிகள் தண்டனை பெற வெண்டுமென்றால் இது வெறும் தமிழர்களின் குரலாகவே நின்று விடக்கூடாது. ஸ்ரீலங்காவின் அனைத்து தரப்பினரின் குரலாகவும் அது ஒலிக்க வேண்டும். அந்தக் குரலை உலகிற்கு மட்டுமல்லாமல், தமிழ் மக்களிடத்தும் கொண்டு செல்ல வேண்டும்.
திண்ணை தளத்தில் சமீப காலமாக தொடர்ந்து பங்களிப்புச் செய்து வரும் ரிஷான் ஷெரீஃபுக்கு விசேஷமான நன்றிகள். உதுல் பிரேமரத்ன, அஸங்க சாயக்கார, ப்ரியந்த லியனகே, பியன்காரக பந்துல ஜெயவீர, சுனந்த தேசப்ரிய போன்ற ஆகச் சிறந்த சிங்கள அறிவிஜீவிகளின் படைப்புகளை, கவிதைகளை, உரிமைக் குரல்களை தமிழ் மக்கள் முன்னால் வைப்பது என்பது இன்றைய சூழலில் மிகவும் தேவையான ஒன்று. ஸ்ரீலங்காவின் நம்பகத் தன்மை உலக நாடுகளின் முன்பு மீண்டும் நிறுவப் படவேண்டுமென்றால், போர்க்குற்றவாளிகள் உலகப் பொது மேடையில் தண்டனை பெற்றாக வேண்டும். தமிழர்களின் இன்றைய அவலனிலை, வெறுமே தமிழர்களின் அவல நிலை அன்று, ஸ்ரீலங்காவின் குடிமக்களின் அவல நிலை என்ற உணர்வு தொடர்ந்து முன்னிறுத்தப் படவேண்டும்.

                      "தமிழர் பிரதேசங்களில் பௌத்த விகாரைகளைக் கட்டுவது, ஊர் மற்றும் பாதைகளின் பெயர்களைச் சிங்களப்படுத்துவது, யாழ்ப்பாண மக்களை இராணுவத்தினரைக் கொண்டு பதிவு செய்வது, வன்னி மக்களுக்கு எந்தவொரு சுதந்திரத்தையும் வழங்காதிருப்பது, வடக்கு கிழக்கு இராணுவ ஆட்சி, விடுதலைப் புலிகளின் கல்லறைகளை அழித்து அவற்றின் மீது இராணுவ முகாம்களைக் கட்டுவது போன்ற செயற்பாடுகள் அனேகமானவற்றால் தமிழ் மக்களுக்குச் சொல்லும் செய்தியானது, அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும், சம உரிமைகளற்ற மக்கள் என்பதுதான். பார்வதி அம்மாவின் அஸ்தி சேதப்படுத்தப்பட்டமை தனியொரு சம்பவமல்ல என்பது அதனாலேயேதான். அதுபோலவே அந்தச் சம்பவமானது அரசியல் சம்பவமொன்றாகக் கருதப்படுவதும் அதனாலேயேதான். அந்தச் சம்பவமானது எங்களால் வெளிப்படுத்தப்பட வேண்டியதுவும் அதனாலேயேதான்.ஒன்றிணைந்த, அமைதியான, நேர்மையான இலங்கையொன்று எங்களுக்கு அவசியமெனில், அதன் முதலாவது நிபந்தனையானது தமிழ் மக்களை சுதந்திரமாகவும், ஆத்ம கௌரவத்தோடும் உள்ள மக்களாக வாழ இடமளிப்பதே." என்ற சுனந்த தேசப்ரியவின் குரல் அனைத்து சிங்கள மக்களின் குரலாகவும் மாறவேண்டும் என்றால் அது தமிழ் மக்களிடம் இணக்கக் குரலாக, ஒருங்கிணைவுக் குரலாக கொண்டு செல்லப் படவேண்டும். அந்த முயற்சியின் மிக முக்கியமான பங்களிப்பு ரிஷான் ஷெரிபுடையது. மீண்டும் தனிப்பட்ட முறையிலும், திண்ணை வாசகர்கள் சார்பாகவும் அவருக்கு நம் நன்றிகள்.

- கோபால் ராஜாராம்
திண்ணை இதழ் 26.06.2011

3 comments:

Parimala said...

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காகவும்,அவர்களின் உரிமைகளுக்காகவும் மனசாட்சியோடு குரல் கொடுக்கும் அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கப்பட வேண்டியவர்களே சிங்களவர்களையும் சேர்த்து. ஆனால் பாதிக்கப்பட்ட அம் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பதை அம் மக்களைதவிர வேறு யாருக்கும் பேச உரிமை இல்லை, சிங்களவர்களையும் சேர்த்து. இந்த அடிப்படையில் மட்டுமே நாம் யாவரையும் அணுக வேண்டும் என்பது என் கருத்து.

அப்துல் ஜப்பார் said...

உண்மை ரிஷான். ‘காப்பால்லா - பீப்பால்லா - சுதிகொரப்பால்லா’ என்று வாழ்க்கையை மிக எளிமையாக எடுத்துகொள்ளும் கூற்றை தாரக மந்திரமாகக்
கொண்ட, பழகுவதற்கு இனிமையான, சிங்கள மக்கள் மனதில் இத்தனை வன்மங்களும், கொடூரங்களும் எப்படி குடி கொண்டன என்பது எனக்கு இன்னும்
புரியாத புதிராகவே இருக்கிறது.

rajamelaiyur said...

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

வாழ்க.. ஒழிக… ஒழிக… வாழ்க