Wednesday, July 9, 2008

பதிவுத் திருடர்களை என்ன செய்யலாம் ?

அண்மையில் 'தமிழ்மணத்தில்' பார்த்து, அமலன் என்பவரது 'கடகம்' வலைத்தளத்தில் நுழைந்தேன்.

மிகவும் அதிர்ச்சியளித்தது அந்த வலைத்தளம்.எனது மூன்று பதிவுகளைத் திருடி (என்னிடம் அனுமதியைப் பெறாமல் தன் பதிவிலிட்டுள்ளதால் வேறு சொல் தெரியவில்லை) தனது வலைத்தளத்தில் இட்டிருக்கிறார்.நீக்கிவிடச் சொல்லி பின்னூட்டம், மின்னஞ்சல் மூலம் அறிவித்தும் இதுவரையில் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

என்னுடைய பதிவுகள் மட்டுமல்ல. சகோதரி கமலாவினது சமையல் குறிப்புகளும் அங்கிருக்கின்றன.மற்ற பதிவுகளின் பதிவர்கள் யாரெனத் தெரியவில்லை.

எனது மனிதாபிமானம் உங்களுக்கு மாத்திரமா ? பதிவு அங்கு,
எனது பெட்டி,பெட்டியாகத் தர்பூசணிகள் பதிவு அங்கு,

எனது யானைகள் பதிவு அங்கு,

சுயமாக எழுதத் தெரியாவிட்டால் ஏன் பதிவெழுதவேண்டும் ? இல்லாவிட்டால் பதிவின் சொந்தக்காரரிடம் அனுமதியைப் பெற்று தன் வலைத்தளங்களில் இடலாமே ? ஒவ்வொரு எழுத்தாளரும், பதிவர்களும் தங்கள் பெறுமதி வாய்ந்த நேரத்தைச் செலவுபண்ணி , தங்கள் திறமைகளைக் கொண்டு ஒரு குழந்தையைப் போல ஆக்கங்களைப் பிரசவிக்கையில் அவற்றைத் திருடிப் பதிவிடுவதைப் பார்க்கும் போது அது குறித்தான எனது வருத்தம் நியாயமானது தானே ?

95 comments:

கே.என்.சிவராமன் said...

நண்பர் ரிஷான் ஷெரீப்,

உங்களது இந்தப் பதிவு எனக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. நீங்கள் சொல்வது உண்மையானால் கண்டிப்பாக இது கண்டிக்கத்தக்கது.

அந்த நண்பரிடம் பேசுங்கள். ஒருவேளை உங்களுக்கு அவர் பதில் அளிக்காவிட்டால் தமிழ்மணம் நிர்வாகிகளிடம் முறையிடுங்கள்.

சக பதிவுலக நண்பனாக உங்கள் வருத்தத்தில் பங்கு கொள்வதுடன், இதை போக்க நீங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கையிலும் உறுதுணையாக இருப்பேன்

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Syam said...

அடபாவி மக்கா அநியாயத்துக்கு கூச்சமே இல்லாம சுட்டு இருக்கானே...

இராம்/Raam said...

ஹீரோ,

இந்த தளத்தை உபயோகப்படுத்தி பாருங்க...

http://www.copyscape.com

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர்,

//பைத்தியக்காரன் said...
நண்பர் ரிஷான் ஷெரீப்,

உங்களது இந்தப் பதிவு எனக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. நீங்கள் சொல்வது உண்மையானால் கண்டிப்பாக இது கண்டிக்கத்தக்கது.//

ஒரு பதிவர் என்ற முறையில் பதிவினைப் பிரசவிக்கும் வலியுணர்ந்த, வருத்தத்தைத் தெரிவிக்கும் உங்கள் தார்மீகக் கோபத்துடனான வரிகளைக் கண்டு மகிழ்கிறேன்.

//அந்த நண்பரிடம் பேசுங்கள். ஒருவேளை உங்களுக்கு அவர் பதில் அளிக்காவிட்டால் தமிழ்மணம் நிர்வாகிகளிடம் முறையிடுங்கள்.//

அவருக்கு மின்னஞ்சல் மூலமாகவும், பின்னூட்டம் மூலமாகவும் அறிவித்துப் பல நாட்கள் பொறுத்துப் பார்த்தும் பயனற்றதாலேயே இப்பதிவினை இட்டேன்.
தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் இப்பதிவின் மூலம் அறிவித்திருக்கிறேன். மேலும் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்களென உறுதியாக நம்புகிறேன். இன்னும் சில பதிவுகள் அங்கே காணக்கிடைத்தன.அவையும் சக பதிவர்களுடையவையாக இருக்கக் கூடும்.

//சக பதிவுலக நண்பனாக உங்கள் வருத்தத்தில் பங்கு கொள்வதுடன், இதை போக்க நீங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கையிலும் உறுதுணையாக இருப்பேன்

தோழமையுடன்
பைத்தியக்காரன் //

வருகைக்கும், ஆதரவளிக்க நாடும் உங்கள் மனதுக்கும் மிகவும் நன்றி நண்பரே..!
உங்கள் வரிகள் எனக்கு மிகவும் ஆறுதலைத் தருகிறது.

M.Rishan Shareef said...

//Syam said...
அடபாவி மக்கா அநியாயத்துக்கு கூச்சமே இல்லாம சுட்டு இருக்கானே...//

:)
அந்த வலைத்தளம் போய்ப் பாருங்கள் ஸ்யாம்.சிலவேளை உங்களுடைய பதிவுகளும் இருக்கலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

- யெஸ்.பாலபாரதி said...

:((

இதோ போன்று அடிக்கடி பலருக்கும் நிகழ்கிறது..! :(

M.Rishan Shareef said...

அன்பின் இராம்,

ஹீரோ நீங்கள் தான் :)
மிகப் பயனுள்ள ஒரு வலைத்தள முகவரியைத் தந்திருக்கிறீர்கள்.

அதில் போய்ப் பார்த்ததில் நான் மேலே குறிப்பிட்ட வலைத்தளத்தில் சமீபத்தில் பதியப்பட்டுள்ள பதிவுகள் சகபதிவர்கள் ஊரோடி, தென்றல் சங்கர், ப்ரியதர்ஷன் ஆகியோருடையவை.

வருகைக்கும் உதவிக்கும் நன்றி நண்பரே :)

MyFriend said...

ஆஹா.. என்ன கொடும ரிஷான் இது????

இப்போ இதையெல்லாம் கூட திருடுறாங்களா? :-(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்மணட்தில் இல்லாத பதிவென்றாலும் சரி இவர் இப்படி சொல்றாருன்னு எங்க இருந்து எடுத்தாரோஅந்த ப்ளாக் முகவரியாவது போடலாம் ...
இங்கே யும் இணைத்துவிட்டு
கொடுமை.

VIKNESHWARAN ADAKKALAM said...

நானும் பார்த்தேன் திரு.சேவியரின் பதிவு ஒன்றை தலைப்பு முதல் கொண்டு அங்கு காப்பியடிக்கப்பட்டிருந்தது.

Tech Shankar said...

Naan ethanaiyo English Tech blog la ulladhai 'E' adicchu copy paste pannaamal - tamil translation panni pottirukkiren

adhile onnudhaan idhu..

http://tamizh2000.blogspot.com/2008/03/blog-post_490.html


idhai niraiya per copy,pasti irukkirargal.

பதிவுத் திருடர்களை என்ன செய்யலாம் ?

they should put atleast some Courtesy, Thanks to etc.,

I am doing that Courtesy linking..

thanks for your posting..

Anonymous said...

இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். என்னுடைய 'நையாண்டி விலாஸ்' பதிவுகள் வெவ்வேறு பெயர்களில் எனக்கே மின்னஞ்சல் மூலம் ஃபார்வர்ட் செய்யப்பட்டு வருகின்றன.

வெண்பூ said...

அதிர்ச்சி, அருவருப்பு எல்லாம் வருகிறது இந்த மாதிரி ஆட்களைப் பார்க்கும்போது. நான் உங்கள் பக்கம் ரிஷான்..

இறக்குவானை நிர்ஷன் said...

ரிஷான்,
பதிவர்கள் சில விடயங்களை எத்தனை சிரமத்துக்கு மத்தியில் தருகிறார்கள் என்பது உண்மையாய் பதிந்தவர்களுக்குத் தெரியும். நீங்கள் குறிப்பிட்டது போல வலைப்பதிவை, பதிவுலகத்தை நேசிக்கும் அனைவரும் தமது ஒவ்வொரு பதிவையும் குழந்தையைப் போலவே பார்க்கிறார்கள்.

ஆகக்குறைந்தது வலைத்தளத்தின் பெயரையாவது குறி்ப்பிட்டிருக்கலாம்.

உங்களது பதிவு திருட நினைத்தவர்களுக்கும் ஒரு பாடம் ரிஷான்.

M.Rishan Shareef said...

அன்பின் பாலபாரதி,

//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
:((

இதோ போன்று அடிக்கடி பலருக்கும் நிகழ்கிறது..! :( //

ஆமாம் நண்பரே. பூனைக்கு யாராவது ஒருத்தர் மணி கட்ட வேண்டுமல்லவா? :)
பார்க்கலாம்.இப்பதிவினைப் பார்த்தபின்னராவது திருந்துகிறாரா என்று..!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
ஆஹா.. என்ன கொடும ரிஷான் இது????

இப்போ இதையெல்லாம் கூட திருடுறாங்களா? :-( //

ஆமாம் மை பிரண்ட்.என்ன செய்வது ? :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
தமிழ்மணட்தில் இல்லாத பதிவென்றாலும் சரி இவர் இப்படி சொல்றாருன்னு எங்க இருந்து எடுத்தாரோஅந்த ப்ளாக் முகவரியாவது போடலாம் ...
இங்கே யும் இணைத்துவிட்டு
கொடுமை.//

ஆமாம் கயல்விழி முத்துலெட்சுமி.
பிறருடைய பதிவொன்றினைத் தன் பதிவில் போடும் போது பதிவின் சொந்தக்காரர் பெயரையோ அல்லது மூலப்பதிவின் இணைப்பையோ இணைத்திருந்தால் நேர்மையானதாக இருக்கும் அல்லவா ?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

//VIKNESHWARAN said...
நானும் பார்த்தேன் திரு.சேவியரின் பதிவு ஒன்றை தலைப்பு முதல் கொண்டு அங்கு காப்பியடிக்கப்பட்டிருந்தது. //

ஆமாம் விக்னேஷ்வரன்.
இன்னும் ஊரோடி,தென்றல் சங்கர்,ப்ரியதர்ஷன்,கமலா ஆகியோருடைய பதிவுகளும் இருக்கின்றன.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

//தமிழ்நெஞ்சம் said...
Naan ethanaiyo English Tech blog la ulladhai 'E' adicchu copy paste pannaamal - tamil translation panni pottirukkiren //

ஆமாம் பார்த்திருக்கிறேன்.
ஆனால் உங்கள் பதிவிலேயே மூலப்பிரதியை எங்கிருந்து எடுத்தீர்களென்ற இணைப்பினை வழங்குகிறீர்கள்.அத்துடன் ஆங்கிலம் அறியாதவர்களுக்கும் பயனுள்ள விடயங்களையே தமிழில் வழங்குகிறீர்கள்.
பாராட்டத்தக்கது உங்கள் சேவை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

//kadugu said...
இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். என்னுடைய 'நையாண்டி விலாஸ்' பதிவுகள் வெவ்வேறு பெயர்களில் எனக்கே மின்னஞ்சல் மூலம் ஃபார்வர்ட் செய்யப்பட்டு வருகின்றன.//

அப்படியான வேளைகளில் தான் மனம் வேதனையடைகிறது. ஒவ்வொரு பதிவுக்காகவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள் நண்பரே..அந்த உழைப்பெல்லாம் பிறரால் வீணடிக்கப்படும் போது வேதனையே மிஞ்சும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

//வெண்பூ said...
அதிர்ச்சி, அருவருப்பு எல்லாம் வருகிறது இந்த மாதிரி ஆட்களைப் பார்க்கும்போது. நான் உங்கள் பக்கம் ரிஷான்..//

வாருங்கள் வெண்பூ :)
உங்கள் முதல்வருகை என நினைக்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்..!

வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

// இறக்குவானை நிர்ஷன் said...
ரிஷான்,
பதிவர்கள் சில விடயங்களை எத்தனை சிரமத்துக்கு மத்தியில் தருகிறார்கள் என்பது உண்மையாய் பதிந்தவர்களுக்குத் தெரியும். நீங்கள் குறிப்பிட்டது போல வலைப்பதிவை, பதிவுலகத்தை நேசிக்கும் அனைவரும் தமது ஒவ்வொரு பதிவையும் குழந்தையைப் போலவே பார்க்கிறார்கள்.

ஆகக்குறைந்தது வலைத்தளத்தின் பெயரையாவது குறி்ப்பிட்டிருக்கலாம். //

ஆமாம் நிர்ஷன்.
அதுதான் எனது ஆதங்கமும்.
இவரது வலைத்தளத்தை யாரேனும் பலவருடங்கள் கழித்துப் பார்க்குமிடத்து நான் அவர் பதிவுகளைக் காப்பியடித்து எனது வலைத்தளத்தில் போட்டிருக்கிறேனென்று யாரும் எண்ணிவிடக் கூடாதென்ற முன்னெச்சரிக்கைக்கும் சேர்த்துத்தான் எனது இந்தப் பதிவு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

வெண்பூ said...

// உங்கள் முதல்வருகை என நினைக்கிறேன்//

ஆமாம் ரிஷான். ஆனால் நீங்கள் எனக்கு நெடுநாள் பரிச்சயம். வ.வா.சங்கம் மூலமாக.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

பதிவுத் திருட்டு கவிதைத் திருட்டு அதிகமாகி விட்டது நண்பா

முறைப்படுத்தவில்லயெனில் யார் எழுதுவது நிஜம் என்று கணிக்க முடியாமல் போய்விடும்

M.Rishan Shareef said...

அன்பின் வெண்பூ,

//ஆமாம் ரிஷான். ஆனால் நீங்கள் எனக்கு நெடுநாள் பரிச்சயம். வ.வா.சங்கம் மூலமாக. //

உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பரே :)
வ.வா.சங்கம் என்னை மிகவும் பிரபலப்படுத்திவிட்டது என நினைக்கிறேன்.
தனி மெயிலிலும் நிறைய பதிவுலக நண்பர்கள் தொடர்பு கொள்கிறார்கள்.
மிகவும் மகிழ்வாக உணர்கிறேன் நண்பரே :)

M.Rishan Shareef said...

//Gnaniyar @ நிலவு நண்பன் said...
பதிவுத் திருட்டு கவிதைத் திருட்டு அதிகமாகி விட்டது நண்பா

முறைப்படுத்தவில்லயெனில் யார் எழுதுவது நிஜம் என்று கணிக்க முடியாமல் போய்விடும் //

சரியாகச் சொன்னீர்கள் ரசிகவ் ஞானியார்.
இதற்கு எல்லாம் சீக்கிரம் எல்லோரும் சேர்ந்தே ஒரு முடிவு கட்டவேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

கானா பிரபா said...

வாங்கே ரிஷான் வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்கோ,

இப்படிக்கு அனுபவம் பேசுகிறது :(

M.Rishan Shareef said...

அன்பின் கானா பிரபா,

//வாங்கே ரிஷான் வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்கோ,

இப்படிக்கு அனுபவம் பேசுகிறது :(//

அனுபவசாலி சொல்கிறீர்கள்.
நிறையத் திருட்டுக் கொடுத்த அனுபவமோ ? :P

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

எனது 'மனிதாபிமானம் உங்களுக்கு மாத்திரமா? ' பதிவினை இன்னொருவரும் சுட்டிருப்பதை இப்பொழுதுதான் பார்த்தேன்.
ம்ஹ்ம்..என்னத்தச் சொல்ல ?

Deepa said...

///வாங்கே ரிஷான் வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்கோ,

இப்படிக்கு அனுபவம் பேசுகிறது :(
///

ரிப்பீட்டூ... டபுள் ரிப்பீட்டு ( என்னொட ரெண்டு பதிவைவை திருடியிருக்காங்க... ஆங்கிலத்தில்...) நம்ம தமிழ் பதிவுக்கு அவ்வளவு மவுசு இல்லீங்க.. :- (

jokes apart
உணமையிலேயே கோபமும் வருத்தமும் ஒரே நேரத்தில் வரும். நீங்க சொல்லரா மாதிரி ஒவ்வொரு பதிவும் ஒரு germ of an idea ( இதை தமிழில் சொல்ல தெரியலை).

அப்படி இருக்க.. பார்த்து பார்த்து விதை போட்டு - தண்ணீர் ஊற்றி - பாத்தி கட்டி - களை புடுங்கி - ஒரு நல்ல தோட்டம் உருவாகும் நேரத்தில் அப்படியே மண்ணோட பிச்சு பிடுங்கி இன்னொரு இடத்துல் நடுவது மாதிரி இருக்கு... செடியும் வளராது -- தோட்டமும் பாழாப்போயிடும்.. மொத்தத்தில் யாருக்குமே இந்த மாதிரி வரக்கூடாதுங்கிரது தான் என் பிரார்த்தனை.

plagarism க்கு எதிராக என் குறலும் சேர்ந்து ஒலிக்கும்.. என் ஆதரவு உங்களுக்கு கண்டிப்பாக உண்டு

M.Rishan Shareef said...

அன்பின் தீபா,

//அப்படி இருக்க.. பார்த்து பார்த்து விதை போட்டு - தண்ணீர் ஊற்றி - பாத்தி கட்டி - களை புடுங்கி - ஒரு நல்ல தோட்டம் உருவாகும் நேரத்தில் அப்படியே மண்ணோட பிச்சு பிடுங்கி இன்னொரு இடத்துல் நடுவது மாதிரி இருக்கு... செடியும் வளராது -- தோட்டமும் பாழாப்போயிடும்.. மொத்தத்தில் யாருக்குமே இந்த மாதிரி வரக்கூடாதுங்கிரது தான் என் பிரார்த்தனை //

மிகவும் அருமையான உதாரணம் சகோதரி.சரியாகச் சொன்னீர்கள்.

//plagarism க்கு எதிராக என் குறலும் சேர்ந்து ஒலிக்கும்.. என் ஆதரவு உங்களுக்கு கண்டிப்பாக உண்டு //

மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்.
வருகைக்கும் தரும் ஆதரவுக்கும் நன்றி சகோதரி :)

Thamiz Priyan said...

கருத்துத் திருட்டு வன்மையாக கண்டித்தக்கது ரிஷான்! :(

M.Rishan Shareef said...

//தமிழ் பிரியன் said...
கருத்துத் திருட்டு வன்மையாக கண்டித்தக்கது ரிஷான்! :(//

சரியாகச் சொன்னீர்கள் தமிழ் பிரியன். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

விஜய்கோபால்சாமி said...

கீழ் கண்ட இரண்டு தொடுப்புகளையும் சொடுக்கி எழுதிய நாட்களைப் பாருங்கள்:

நான் எழுதிய பதிவு இது
http://vijaygopalswami.wordpress.com/2008/04/14/%e0%ae%95%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0/

ஈர வெங்காயம் அவர்களின் பதிவு இது
http://eeravengayam.blogspot.com/2008/07/blog-post_07.ஹ்த்ம்ல்

இதைக் குறித்து பின்னூட்டம் வழியாகக் கேட்டபோது மின்மடலில் வந்த செய்தி என்று சொன்னார். ஒரே தலைப்பு எப்படி வந்தது? யாமறியோம் பராபரமே.

புருனோ Bruno said...

அவர் நீக்க வில்லை என்றால் கூகிளிடம் புகார் அளிக்கலாம்

M.Rishan Shareef said...

அன்பின் விஜய்கோபால் சாமி,

நீங்கள் தந்த இரண்டு இணைப்பினூடும் சென்று பார்த்தேன்.
இரண்டும் வேலை செய்யவில்லை நண்பரே.. :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் டாக்டர் புரூனோ,

//அவர் நீக்க வில்லை என்றால் கூகிளிடம் புகார் அளிக்கலாம் //

அவர் வேர்ட்பிரஸ்ஸில் பதிவு வைத்துள்ளார்.முறைப்பாடு ஏற்றுக் கொள்ளப்படுமா தெரியவில்லை.

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி நண்பரே :)

KARTHIK said...

ரிஷான்
குறைந்த பட்சம் யாருடைய பதிவை C&P பண்ணுறாரோ அவங்க இணைப்பையாவது போட சொல்லுங்க.நானும் சொல்லிப்பாக்குறேன்.

வால்பையன் said...

அதனால் என்ன நண்பா
யார் பதிவை எடுத்து போட்டாலும் அவர்களது லிங்கையும் கொடுத்து விடுங்கள் என்று சொல்லி விடலாம்
நமக்கும் இரட்டை விளம்பரம்
(திருடுவது போல் நல்ல பதிவாக போடுவது உங்கள் தவறு)

வால்பையன்

நாமக்கல் சிபி said...

//(திருடுவது போல் நல்ல பதிவாக போடுவது உங்கள் தவறு)//

அது சரி!

நண்பா நானும் உம்ம பக்கம்தான்!

புருனோ Bruno said...

//அவர் வேர்ட்பிரஸ்ஸில் பதிவு வைத்துள்ளார்.முறைப்பாடு ஏற்றுக் கொள்ளப்படுமா தெரியவில்லை.

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி நண்பரே :)//

மன்னிக்கவும். முழுவதும் கூறவில்லை

நீங்கள் பதிவை நீக்க வோர்ட்ப்ரிஸிடமும், திரட்டியிலிருந்து நீக்க திரட்டி நிர்வாககங்களிடமும், தேடினால் அந்த பக்கம் வராமல் உங்கள் பக்கம் வர கூகிளிடமும் புகார் அளிக்க வேண்டும்

வந்தியத்தேவன் said...

உது பரவாயில்லை ரிஷான் ஒரு பத்திரிகைக்கு எனது ஆக்கம் ஒன்றை இன்னொரு நண்பர் மூலம் கொடுத்தேன் அங்கே என் பெயருக்குப் பதில் இன்னொருவரின் பெயரில் ஆக்கம் வெளிவந்தது. என்ன கொடுமை இது.

புருனோ Bruno said...

http://www.labnol.org/category/internet/pirates/

http://labnol.blogspot.com/2006/07/dealing-with-website-plagiarism-when.html


http://labnol.blogspot.com/2006/10/when-your-content-is-copied-on-another.html

thamizhparavai said...

ரிஷான் கேட்கவே கேவலமாக உள்ளது.. இதெல்லாம் ஒரு பொழப்புன்னு செய்றாங்க பாருங்க..
நம்ம பதிவைப் போடுவதற்குத்தான் வலைப்பூ.. அதில் கூடவா..?
நான் வலைப்பூ ஆரம்பிக்கும்போதே உறுதியோடு இருந்தேன்.. பிற பத்திரிக்கை, இணையதள விஷயங்களைக் கூட copy,pastஎ செய்யக் கூடாது என்று..
சரக்கு இருக்கும் வரை பதிவிடுவோம் இல்லையேல் நிறுத்தி விடுவோம் என்று..

ambi said...

ராம் சொன்ன லின்ங் போனா இணைய பத்திரிகை ஒன்று அப்படியே என் பதிவை போட்டுள்ளது. நல்ல வேளை என் பெயர் கீழே சின்னதாக இருந்தது. ஆனா லிங்க் இல்லை. :(

சென்ஷி said...

அடப்பாவி.. அவன் பதிவு பேரு கூட சுட்டு வைச்சிருக்கானுங்க.. இந்த பதிவு பேர்ல என் நண்பர் ஆயில்யனும் இருக்காரு :(

புதுகை.அப்துல்லா said...

அடச்சீய்...இந்தப் பொழப்பு பிழைக்கிறதுக்கு வேற பொழப்பு பொழைக்கலாம்

தமிழன்-கறுப்பி... said...

என்னத்தை சொல்ல ரிஷான் உண்மையில் கண்டனத்துக்குரிய விசயம் ஏதோ ஒரு பொதுவான படத்தை தளத்திலிருந்து எடுத்தால் கூட அதற்கும் நன்றி தெரிவிக்கிற பதிவார்கள் இருக்கிற இடத்தில இப்படியானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...

அவ்வப்பொழுது இது சம்பந்தமான பதிவுகள் வந்தாலும் திருட்டுக்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது...

மெளலி (மதுரையம்பதி) said...

வருந்ததக்கது ரீஷான். உங்கள் உணர்வுகளுடன் ஒத்துப் போகிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருந்ததக்கது ரீஷான். உங்கள் உணர்வுகளுடன் ஒத்துப் போகிறேன்.

Tharique Azeez said...

உண்மையில் இவ்வாறான பதிவுத் திருட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது இணையப் பரப்பில் மட்டுமல்லாது, அச்சுத் துறையிலும் நிகழ்வதாகத் தெரிகிறது.

எனது வலைப்பதிவில் இடம்பெற்ற பதிவொன்றை (http://niram.wordpress.com/2007/11/13/amazing-dove-niram/) அப்படியே "ஜீனியஸ்" எனும் சிறுவர் பத்திரிகையில் (2008.04.01), எனது வலைப்பதிவைப் பற்றியோ அல்லது எனது பெயரையோ குறிப்பிடாமல் பிரசுரித்திருந்தார்கள். எந்த Courtesy உம் இடப்படவில்லை. இதனை நான் அண்மையில் அந்தப் பத்திரிகையை பார்க்கும் போதுதான் கண்டு கொண்டேன்.

இப்படியெல்லாம் copy and paste தொடர்தல் பொருத்தமற்றதுதான். என்ன கொடுமை சார் இது??

பதிவுகளை மறுபிரசுரம் செய்கையில் குறித்த வலைப்பதிவருக்கு அறிவித்து அனுமதி பெற்றதன் பின்னர் தொடர்வது பொருத்தமான முன்னெடுப்பாகும் என்றே நான் கருதுகிறேன்.

இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
http://niram.wordpress.com

வல்லிசிம்ஹன் said...

அதிர்ச்சியாக இருக்கிறது.
ஒவ்வொரு பதிவும் ஒரு புதிய ஆக்கம் இல்லையா. அது திரு போவது, பொருள் திருட்டை விட ஆபத்தானது. எப்படி நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள் ரிஷான்.

லக்கிலுக் said...

சமீபத்தில் நண்பர் அதிஷா எழுதிய பதிவொன்று பிரபல நாளிதழில் அப்படியே வந்திருக்கிறது. ஒரு Courtesy கூட போடாமல் :-(

பொறுப்பான பத்திரிகை காரர்களே இதுபோல செய்யும்போது இதெல்லாம் எம்மாத்திரம்?

கயல்விழி said...

ரொம்ப வருந்தத்தக்க நிகழ்ச்சி இது :(

படைப்பு திருட்டு இருப்பதிலேயே மோசமான திருட்டு.

கயல்விழி said...

ரொம்ப வருந்தத்தக்க நிகழ்ச்சி இது :(

படைப்பு திருட்டு இருப்பதிலேயே மோசமான திருட்டு.

யட்சன்... said...

காய்த்த மரம் கல்லடி பட்டிருக்கிறீர்கள்.

வாழ்த்துகள்...

என் பதிவினை தைரியமிருப்பவர்கள் யாராவது திருடிப் பாருங்களேன்.

முரளிகண்ணன் said...

மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. நாங்கள் உங்கள் பக்கம்

M.Rishan Shareef said...

அன்பின் கார்த்திக்,

//ரிஷான்
குறைந்த பட்சம் யாருடைய பதிவை C&P பண்ணுறாரோ அவங்க இணைப்பையாவது போட சொல்லுங்க.நானும் சொல்லிப்பாக்குறேன்.//

நானும் சொல்லிப் பார்த்தேன் நண்பா. அவர் கேட்பதாகத் தெரியவில்லை.
அதனால் தான் இப்படிப் பகிரங்கமாக ஒரு பதிவு போட வேண்டி வந்தது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

//வால்பையன் said...
அதனால் என்ன நண்பா
யார் பதிவை எடுத்து போட்டாலும் அவர்களது லிங்கையும் கொடுத்து விடுங்கள் என்று சொல்லி விடலாம்
நமக்கும் இரட்டை விளம்பரம் //
நீங்கள் சொல்வது சரி . விளம்பரத்துக்காக இல்லையென்றாலும் பதிவுலக நேர்மையை அவர் மீறுவது தவறல்லவா ?

//(திருடுவது போல் நல்ல பதிவாக போடுவது உங்கள் தவறு) //
ஆஹா....நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல் எல்லாம் இதிலிருக்கிறது போலிருக்கே ?
வால்பையன் என்று சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். :)

M.Rishan Shareef said...

//நாமக்கல் சிபி said...
//(திருடுவது போல் நல்ல பதிவாக போடுவது உங்கள் தவறு)//

அது சரி!

நண்பா நானும் உம்ம பக்கம்தான்! //
அண்ணாச்சி நீங்களுமா?
இதுல உள்குத்து ஏதும் இல்லையே ? :)

M.Rishan Shareef said...

அன்பின் டாக்டர் புரூனோ,

//நீங்கள் பதிவை நீக்க வோர்ட்ப்ரிஸிடமும், திரட்டியிலிருந்து நீக்க திரட்டி நிர்வாககங்களிடமும், தேடினால் அந்த பக்கம் வராமல் உங்கள் பக்கம் வர கூகிளிடமும் புகார் அளிக்க வேண்டும் //

நிச்சயமாக செய்து விடுகிறேன்.
மிகவும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

//வந்தியத்தேவன் said...
உது பரவாயில்லை ரிஷான் ஒரு பத்திரிகைக்கு எனது ஆக்கம் ஒன்றை இன்னொரு நண்பர் மூலம் கொடுத்தேன் அங்கே என் பெயருக்குப் பதில் இன்னொருவரின் பெயரில் ஆக்கம் வெளிவந்தது. என்ன கொடுமை இது. //

மிகவும் வருந்தத்தக்க விடயம் அது நண்பரே.
இணையப் பதிவுகளென்றால் தவறிழைக்கப்பட்டு விட்டாலும் திருத்திவிட முடியும்.
ஆனால் அச்சு ஊடகங்களில் அதைச் செய்ய முடியாது. பத்திரிகைக்கு அனுப்பிவிட்டு ஆவலாய்க் காத்திருந்திருப்பீர்கள். பார்த்ததும் அதிர்ச்சியும் வேதனையுமடைந்திருப்பீர்கள்.
உடனே என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் நண்பரே ?

M.Rishan Shareef said...

அன்பின் டாக்டர் புரூனோ,

//புருனோ Bruno said...
http://www.labnol.org/category/internet/pirates/

http://labnol.blogspot.com/2006/07/dealing-with-website-plagiarism-when.html


http://labnol.blogspot.com/2006/10/when-your-content-is-copied-on-another.html //

சிரமம் பாராது சம்பந்தப்பட்ட இணையத்தள முகவரிகளைத் தேடித் தந்து உதவியிருக்கிறீர்கள்.
இது எனக்கு மட்டுமல்ல. இது போலப் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிச்சயமாக உதவும்.
மிக மிக நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

//தமிழ்ப்பறவை said...
ரிஷான் கேட்கவே கேவலமாக உள்ளது.. இதெல்லாம் ஒரு பொழப்புன்னு செய்றாங்க பாருங்க..
நம்ம பதிவைப் போடுவதற்குத்தான் வலைப்பூ.. அதில் கூடவா..?
நான் வலைப்பூ ஆரம்பிக்கும்போதே உறுதியோடு இருந்தேன்.. பிற பத்திரிக்கை, இணையதள விஷயங்களைக் கூட copy,pastஎ செய்யக் கூடாது என்று..
சரக்கு இருக்கும் வரை பதிவிடுவோம் இல்லையேல் நிறுத்தி விடுவோம் என்று.. //

அன்பின் தமிழ்ப்பறவை,
சரியாகச் சொன்னீர்கள். ஆனால் ஒரு பதிவருடைய பதிவை இன்னொருவர் பதிவில் பயன்படுத்தும் போது அவரது அனுமதியைப் பெற்றுப் பயன்படுத்தினாலோ, மூலப்பதிவருடைய பதிவு அல்லது லின்க் கொடுத்துப் பதிவிட்டாலோ தவறில்லை தானே :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

//ambi said...
ராம் சொன்ன லின்ங் போனா இணைய பத்திரிகை ஒன்று அப்படியே என் பதிவை போட்டுள்ளது. நல்ல வேளை என் பெயர் கீழே சின்னதாக இருந்தது. ஆனா லிங்க் இல்ல //

வாங்க அம்பி :)
ஆமாம் அந்த இணையத்தளம் மிகவும் பயனுள்ளது தான்.
பெயராவது போட்டு தர்மத்தைக் கடைப்பிடித்துள்ளாரே..அந்த வகையில் மகிழ்ச்சி :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

//சென்ஷி said...
அடப்பாவி.. அவன் பதிவு பேரு கூட சுட்டு வைச்சிருக்கானுங்க.. இந்த பதிவு பேர்ல என் நண்பர் ஆயில்யனும் இருக்கார்//

ஆமாம் சென்ஷி ஐயா..
'கடகம்' என்ற பெயரில் நண்பர் ஆயில்யனுக்கும் ஒரு வலைத்தளம் இருக்கிறது. அதனால்தான் வலைத்தளப் பெயர் மட்டும் குறிப்பிட நினைத்து அமலன் பெயரையும் குறிப்பிட வேண்டியதாகி விட்டது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
அடச்சீய்...இந்தப் பொழப்பு பிழைக்கிறதுக்கு வேற பொழப்பு பொழைக்கலாம் //

என்ன செய்ய அப்துல்லாஹ் ? இப்படியும் பதிவர்கள் இருக்கிறார்களே.. :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

//தமிழன்... said...
என்னத்தை சொல்ல ரிஷான் உண்மையில் கண்டனத்துக்குரிய விசயம் ஏதோ ஒரு பொதுவான படத்தை தளத்திலிருந்து எடுத்தால் கூட அதற்கும் நன்றி தெரிவிக்கிற பதிவார்கள் இருக்கிற இடத்தில இப்படியானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...

அவ்வப்பொழுது இது சம்பந்தமான பதிவுகள் வந்தாலும் திருட்டுக்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது...//

ஆமாம் தமிழன். இதனை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வர முயற்சிப்போம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

//மதுரையம்பதி said...
வருந்ததக்கது ரீஷான். உங்கள் உணர்வுகளுடன் ஒத்துப் போகிறேன். //

அன்பின் நண்பர் மௌலி,
வருகைக்கும் , கருத்துக்கும் , தரும் ஆதரவுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

//உண்மையில் இவ்வாறான பதிவுத் திருட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது இணையப் பரப்பில் மட்டுமல்லாது, அச்சுத் துறையிலும் நிகழ்வதாகத் தெரிகிறது.

எனது வலைப்பதிவில் இடம்பெற்ற பதிவொன்றை (http://niram.wordpress.com/2007/11/13/amazing-dove-niram/) அப்படியே "ஜீனியஸ்" எனும் சிறுவர் பத்திரிகையில் (2008.04.01), எனது வலைப்பதிவைப் பற்றியோ அல்லது எனது பெயரையோ குறிப்பிடாமல் பிரசுரித்திருந்தார்கள். எந்த Courtesy உம் இடப்படவில்லை. இதனை நான் அண்மையில் அந்தப் பத்திரிகையை பார்க்கும் போதுதான் கண்டு கொண்டேன்.

இப்படியெல்லாம் copy and paste தொடர்தல் பொருத்தமற்றதுதான். என்ன கொடுமை சார் இது??

பதிவுகளை மறுபிரசுரம் செய்கையில் குறித்த வலைப்பதிவருக்கு அறிவித்து அனுமதி பெற்றதன் பின்னர் தொடர்வது பொருத்தமான முன்னெடுப்பாகும் என்றே நான் கருதுகிறேன்.

இனிய புன்னகையுடன்,
உதய தாரகை //

அன்பின் உதயதாரகை,
மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள். உங்கள் கருத்தில் கூறியுள்ளதுதான் பதிவுலக நேர்மையும் கூட.
உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு வருந்துகிறேன். :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

//வல்லிசிம்ஹன் said...
அதிர்ச்சியாக இருக்கிறது.
ஒவ்வொரு பதிவும் ஒரு புதிய ஆக்கம் இல்லையா. அது திரு போவது, பொருள் திருட்டை விட ஆபத்தானது. எப்படி நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள் ரிஷான் //

அன்பின் வல்லிசிம்ஹன்,
ஆமாம். ஒவ்வொரு பதிவையும் இட எவ்வளவு சிரமப்படுகிறோம்...அதனால் தான் அவை திருடும் போகும் போது மனம் வேதனையடைகிறது.
இந்தப் பதிவினை சம்பந்தப்பட்டவருக்கும் மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன். இதைப் பார்த்த பிறகாவது மனம் மாறுவார் என நம்புவோம். அப்படியும் திருந்தவில்லையாயின் நண்பர் டாக்டர் புரூனோவின் வழிமுறையைத்தான் பின்பற்ற உள்ளேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

//லக்கிலுக் said...
சமீபத்தில் நண்பர் அதிஷா எழுதிய பதிவொன்று பிரபல நாளிதழில் அப்படியே வந்திருக்கிறது. ஒரு Courtesy கூட போடாமல் :-(

பொறுப்பான பத்திரிகை காரர்களே இதுபோல செய்யும்போது இதெல்லாம் எம்மாத்திரம்? //

ஆமாம் நண்பர் லக்கிலுக்.
பொறுப்பு மிகுந்தவர்களே இப்படிச் செய்து மாட்டிக் கொள்ளும் போது நாம் அவர்கள் மீது வைத்துள்ள மதிப்பும் நம்பிக்கையும் குறைந்துவிடுகின்றது. :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

//கயல்விழி said...
ரொம்ப வருந்தத்தக்க நிகழ்ச்சி இது

படைப்பு திருட்டு இருப்பதிலேயே மோசமான திருட்டு. //

ஆமாம் கயல்விழி. தாயிடமிருந்து குழந்தையைத் திருடுதல் போல மிக மோசமான வேதனையைத் தரும் திருட்டு...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

//யட்சன்... said...
காய்த்த மரம் கல்லடி பட்டிருக்கிறீர்கள்.

வாழ்த்துகள்...

என் பதிவினை தைரியமிருப்பவர்கள் யாராவது திருடிப் பாருங்களேன் //

ஆஹா..எவ்வளவு தைரியமாகச் சொல்கிறீர்கள்...பெயருக்கேத்த தைரியம் தான்
இந்தச் சொல்லையே ஆதாரமாகக் கொண்டு திருடப் போகிறார்கள் .. :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

//முரளிகண்ணன் said...
மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. நாங்கள் உங்கள் பக்கம் //

அன்பின் முரளிகண்ணன்,
வருகைக்கும் கருத்துக்கும் தரும் ஆதரவுக்கும் நன்றி நண்பரே :)

ராமலக்ஷ்மி said...

//ஒவ்வொரு எழுத்தாளரும், பதிவர்களும் தங்கள் பெறுமதி வாய்ந்த நேரத்தைச் செலவுபண்ணி , தங்கள் திறமைகளைக் கொண்டு ஒரு குழந்தையைப் போல ஆக்கங்களைப் பிரசவிக்கையில்//

எத்தனை சத்தியமான வார்த்தைகள்...

// அவற்றைத் திருடிப் பதிவிடுவதைப் பார்க்கும் போது அது குறித்தான எனது வருத்தம் நியாயமானது தானே ?//

கண்டிப்பாக.

ராமலக்ஷ்மி said...

//ஒவ்வொரு எழுத்தாளரும், பதிவர்களும் தங்கள் பெறுமதி வாய்ந்த நேரத்தைச் செலவுபண்ணி , தங்கள் திறமைகளைக் கொண்டு ஒரு குழந்தையைப் போல ஆக்கங்களைப் பிரசவிக்கையில்//

எத்தனை சத்தியமான வார்த்தைகள்...

// அவற்றைத் திருடிப் பதிவிடுவதைப் பார்க்கும் போது அது குறித்தான எனது வருத்தம் நியாயமானது தானே ?//

கண்டிப்பாக.

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

Kavinaya said...

//ஒவ்வொரு எழுத்தாளரும், பதிவர்களும் தங்கள் பெறுமதி வாய்ந்த நேரத்தைச் செலவுபண்ணி , தங்கள் திறமைகளைக் கொண்டு ஒரு குழந்தையைப் போல ஆக்கங்களைப் பிரசவிக்கையில்//

நன்றாகச் சொன்னீர்கள் ரிஷான். உங்கள் வருத்தம், கோபம் எல்லாம் நியாயமே. மனிதர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.

மங்களூர் சிவா said...

சீக்கிரம் போய் FIR ஃபைல் பண்ணுப்பா !!

நானெல்லாம் ஆர்குட்ல இருந்துதான் கவுஜ சுடறேன்!!

அதையும் கவுஜைக்கு கீழயே போட்டுடறேன் சுட்ட இடம் ஆர்குட் அப்படின்னு.

Thamira said...

பணம் புரளும் பிற கலைத் துறைகளில்தான் இந்த அநியாயம் தெரிந்தும் தெரியாமலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறதெனின் வலைப்பூக்களிலும் நிகழும் இந்தச்செயல் வருத்தமளிக்கிறது.!

ராமலக்ஷ்மி said...

இப் பதிவின் பின்னூட்டங்களைப் படித்த நான், தங்களுக்குப் பின்னூட்டமிட்டுவிட்டு ஒரு காரியம் செய்தேன். கூகுள் இமேஜஸ் உதவியில் என் பதிவுகளில் பயன் படுத்தியிருந்த படங்களுக்காக[உபயம்: கூகுள் இமேஜஸ்] என சேர்த்து விட்டேன். நன்றி.

NewBee said...

ரிஷான்,

வருந்தத் தக்க விஷயம்.:(. டாக்டர். புரூனோ அளித்த சுட்டிகள், தங்களுக்கு நல்லதொரு பதில் தரும் எனக் காத்திருப்போம்.

தமிழ்மணத்திலும் எல்லாத் தமிழ்ப் பதிவுகளுக்கும் உதவும் வகையில் , இதற்கு ஒரு வழி பிறக்க, உங்கள் இந்தப் பதிவு ஆரம்பமாக இருக்கட்டும்.

பி.கு.:நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பஅ அ அ அ, நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாஆஆஆஆஆ எழுதினா இப்படித் தான் ஆகுமோ ரிஷான் :). உங்கள் எல்லாக் கவிதைகளும் படித்திருக்கிறேன், பின்னூட்டம் இதுதான் முதல் முறை.:)

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//நன்றாகச் சொன்னீர்கள் ரிஷான். உங்கள் வருத்தம், கோபம் எல்லாம் நியாயமே. மனிதர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.//

ஆமாம் சகோதரி. அதே போல நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

M.Rishan Shareef said...

//மங்களூர் சிவா said...
சீக்கிரம் போய் FIR ஃபைல் பண்ணுப்பா !!

நானெல்லாம் ஆர்குட்ல இருந்துதான் கவுஜ சுடறேன்!!

அதையும் கவுஜைக்கு கீழயே போட்டுடறேன் சுட்ட இடம் ஆர்குட் அப்படின்னு. //

ஆர்குட்ல இருந்து சுடுறதைத்தான் பதிவாப் போடுறீங்களா ?
பார்த்துங்க..சம்பந்தப்பட்டவங்க வந்து என்னை மாதிரி கும்மப்போறாங்க :)

M.Rishan Shareef said...

//Thamira said...
பணம் புரளும் பிற கலைத் துறைகளில்தான் இந்த அநியாயம் தெரிந்தும் தெரியாமலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறதெனின் வலைப்பூக்களிலும் நிகழும் இந்தச்செயல் வருத்தமளிக்கிறது.!//

ஆமாம் நண்பரே. இப்படித்திருடப்படும் போது உண்மையான ஆக்கம் யாரால் எழுதப்பட்டது என்பது யாருக்கும் தெரியவராமல் போய்விடும் அபாயமும் இருக்கிறதல்லவா ?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

// ராமலக்ஷ்மி said...
இப் பதிவின் பின்னூட்டங்களைப் படித்த நான், தங்களுக்குப் பின்னூட்டமிட்டுவிட்டு ஒரு காரியம் செய்தேன். கூகுள் இமேஜஸ் உதவியில் என் பதிவுகளில் பயன் படுத்தியிருந்த படங்களுக்காக[உபயம்: கூகுள் இமேஜஸ்] என சேர்த்து விட்டேன். நன்றி //

உங்களுக்குத்தான் நன்றி கூறவேண்டும் சகோதரி. உடனடி நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்.

M.Rishan Shareef said...

///NewBee said...

ரிஷான்,

வருந்தத் தக்க விஷயம்.. டாக்டர். புரூனோ அளித்த சுட்டிகள், தங்களுக்கு நல்லதொரு பதில் தரும் எனக் காத்திருப்போம்.

தமிழ்மணத்திலும் எல்லாத் தமிழ்ப் பதிவுகளுக்கும் உதவும் வகையில் , இதற்கு ஒரு வழி பிறக்க, உங்கள் இந்தப் பதிவு ஆரம்பமாக இருக்கட்டும் //

அன்பின் நண்பருக்கு,
தமிழ்மணத்தில் உள்ள நிறையப் பதிவர்களது ஆக்கங்கள் இதுபோலத் திருடப்படுகின்றன. நீங்கள் சொல்வது போல எனதிந்தப் பதிவு எல்லாப் பதிவுகளுக்கும் ஒரு உதவியாக அமைந்தால் மகிழ்ச்சியே :)

//பி.கு.:நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பஅ அ அ அ, நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாஆஆஆஆஆ எழுதினா இப்படித் தான் ஆகுமோ ரிஷான் ?உங்கள் எல்லாக் கவிதைகளும் படித்திருக்கிறேன், பின்னூட்டம் இதுதான் முதல் முறை. //
உங்கள் முதல் பின்னூட்டம் எனக்கு மகிழ்வைத் தருகிறது. அடிக்கடி வருகை தாருங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

sury siva said...

எனது பதிவு
ரசித்துப் படித்த வலைப்பதிவுகளுக்கு வந்து
தஞ்சை டிகிரி காபி எப்படி போடுவது என்று கேட்டவருக்கு
எங்கள் வீட்டுக்கு வாருங்கள், காபி சாப்பிட வாருங்கள்
என்று அழைப்பு விடுக்க வந்தால் !? இங்கே திடுக்கிட்டேன்.

உங்கள் பதிவிலிருந்து பல பதிவுகள் திருட்டுபோய்விட்டன‌
என வருத்தத்துடன் இருக்கிறீர்கள்.
ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள்.

முல்லா நசிருதீன் கதைகளில் ஒன்று:
அவர் வீட்டில்
அடிக்கடி திருட்டு போய்க்கொண்டே இருந்தது.
திருடனைக் கண்டிப்பாக பிடித்தே ஆகிவிடவேண்டும் என்று
ஒரு நாள்
ஒளிந்து கொண்டு திருடன் வரும் நேரம் காத்திருந்தார்.
திருடனும் வந்தான்.
திருடினான்.
திரும்பிச்சென்றான். முல்லாவும் அவன் பின்னாலேயே சென்றார்.
திருடன் தன் வீடு சென்று
திருடிய பொருட்கள் யாவையும் அழகாக அடுக்கி வைத்தான்.
திடீரென ஒரு இருமல் சத்தம் !
திரும்பிப் பார்த்தான்.
திடுக்கிட்டான். முதியவர் ஒருவர்! அவனுக்குத்தெரியவில்லை
திருடிய வீட்டின் சொந்தக்காரர் இவர் தான் என.

யார் நீ ? இங்கு ஏன் வந்தாய் ? எனக் கேட்டான்.
யார் நீ என நான் அல்லவா கேட்கவேண்டும் ? என்றார் முல்லா நசிருதீன்.

திருடனுக்கு ஒரே குழப்பம்.
வெளியோ போ !என்றான்.
வெளியோ போ ! என்றார் அவர்.
இது என் வீடு என்றான் அவன்.
இதில் இருக்குமெல்லாம் என்னுடையவை எனும்போது
இது உன் வீடும் ஆகுமோ என்றார் முல்லா.

திருடனுக்கு தேள் கொட்டியது போல் வியர்த்தது.
திகைத்தான் செய்வதறியாது திணறினான். வார்த்தை வரவில்லை.

ஒன்று செய். உன்னை மன்னித்து விடுகிறேன் என்றார் முல்லா.
இன்று முதல் நீ என் வீட்டுக்குச் சென்று விடு. நான் இங்கு இருப்பேனினி.
நன்றாகப் போயிற்று. நானும் வேறு வீட்டுக்குச் செல்லலா
மென்று தான் இருந்தேன். வாடகை
யின்றி என் பொருட்களனைத்துமிங்கே கொணர்ந்திட்டாய்.
நன்றி.
வந்தனம் என்றார்.
வாழ்க வளமுடன் எனவும் ஆசி வழங்கினார்.

சுப்பு தாத்தா.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com

M.Rishan Shareef said...

வாங்க சுப்பு தாத்தா :)

உங்க வீட்டுக்கு வந்து தஞ்சாவூர் டிகிரி காபி சாப்பிட்டாச்சு :)
சூப்பர் தாத்தா..

எனக்காக எழுதிய கதையும் நல்ல கதை தாத்தா.
அப்படியே கொபி பண்ணி சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பிவிட்டேன்.

அவருக்கு உறைக்கும் என நம்பலாம் :)

வருகைக்கும் நீண்ட அன்பான கருத்துக்கும் நன்றி தாத்தா !
அடிக்கடி வாங்க.. :)

கோகுலன் said...

உங்கல்லின்உங்களின் மன வருத்தம் நியாயமானது. பதிவு மற்றும் எந்தவித திருட்டிலும் யாருக்குத்தான் உடன்பாடு இருக்க முடியும்?

உங்கள் பக்க நியாயம் இருக்கும் பட்சத்தில் இந்த திருட்டும் கண்டிக்கதக்கது தான் நண்பரே!!

M.Rishan Shareef said...

இந்த ஒரு வருடமாக என் கூடவே இருக்கும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

உங்களுக்காக...
http://rishanshareef.blogspot.com/2008/08/blog-post.html

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !

Anonymous said...

சின்ன குழந்தைகளின் பதிவையே திருடி இருக்கிறாங்க தெரியுமா? :)

முதலில் இந்த பதிவை பாருங்க. http://anjalisplace.blogspot.com/2006/09/march-of-penguins.html (written on Sep.10th 2006). பிறகு இந்த பதிவைப் பாருங்க. http://santhyilnaam.blogspot.com/2009/11/blog-post_23.html (written on Nov.23, 2009). இந்த பதிவுல கடைசியாக சிவப்பு எழுத்துக்களில் இருக்கும் வரிகள் ஆரம்பத்தில் இருக்கவில்லை. இந்த பதிவைப் பார்த்ததும் பலர் இது அஞ்சலியுடைய பதிவு என்றும் அந்த இணைப்பை அங்கே கொடுக்கும்படியும் சொல்லி பின்னுட்டத்தில் இணைப்பையும் கொடுத்தோம். ஆனால் அந்த இணைப்பை அவர் கொடுக்கவுமில்லை.பின்னுட்டங்களை வெளியிடவுமில்லை. பல நாட்களின் பின்னர் பலரின் தொந்தரவுக்குப் பிறகு அங்கே அந்த கடைசி வரிகளை சேர்த்தார். அத்துடன் தன்னை மற்றவர்கள் தொந்தரவு செய்ததால்தான் அந்த இணைப்பை கொடுக்கவில்லை என்றார். ஆனால் இணைப்பு ஆரம்பத்திலேயே கொடுக்கப்பட்டது. அதில் அவர் உறுதிப்படுத்த என்ன இருந்தது என்று தெரியவில்லை. இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தும், அதனை அங்கே கொடுக்க அவர் விரும்பவில்லை. எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் சிலரின் குறிப்புக்களை மட்டும் சேர்த்துக் கொண்டார். அத்துடன் பதிவின் இறுதியில் அந்த சுவப்பு எழுத்து வரிகளையும் சேர்த்துக் கொண்டார்.

Mohamed Shafraz said...

சுருக்கமாகச்சொன்னால் இவர்கள் "கலையுலக விபச்சாரிகள்". நீங்கள் அவர்களுக்கு என்னதான் சொன்னாலும் வெற்கம் வராது.