பாதாள உலகைச் சேர்ந்த காடையர் குழுவொன்றை காவல்துறை அதிகாரிகள் துரத்துகின்றனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஒரு ஒழுங்கைக்குள்ளால் ஓடும் முஸ்லிமற்ற நாயகன், அங்கு துணி கழுவிக் கொண்டிருக்கும் ஒரு இளவயது முஸ்லிம் பெண்ணிடம் அபயம் கேட்கிறான். அவள் துணி மறைப்புக்குள் அவனை ஒளித்துக் காப்பாற்றுகிறாள். அவள் முகத்திரையோடு, முழுமையான இஸ்லாமிய ஆடையணியும் பெண். பள்ளிவாசலில் சிறுவர்களுக்கு மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் அவள், பள்ளிவாசலுக்கும், வகுப்புக்களுக்கும் சென்று வருகையில் இடைக்கிடையே அவனைக் கண்டு காதல் மலர்கிறது. காதலின் உச்சகட்டமாக இரவில் அவளது அறைக்கும் திருட்டுத்தனமாக வந்து அவளுடன் தங்கிச் செல்பவனை அவளது தந்தை காண்கிறார். இருவரது கரங்களையும் சேர்த்து வைத்து அவனுடனேயே தனது மகளை அனுப்பி வைக்கிறார் அத் தந்தை. தனது இஸ்லாமிய ஆடையைத் துறந்து செல்லும் அவளையும் அவனையும் வழிமறிக்கும் இன்னுமொரு எதிரிக் காடையர் குழுவில் ஒருவன், அவ்விருவரையும் சுட்டுக் கொல்கின்றான். அக் கொலைகாரனைச் சுட்டுக் கொல்கிறான் காடையர் குழுவில் இஸ்லாமிய ஆடையிலிருக்கும் இன்னும் ஓர் இளைஞன்.
இலங்கையின் பிரபல சிங்களப் பாடகர் இராஜின் புதிய பாடலான 'சித்தி மனீலா'வின் காட்சியமைப்பே இது. பாடலின் ஆரம்பத்திலும் இறுதியிலும் 'ஹய்ய அலல் ஃபலாஹ்' எனும் அஸானின் ஓசையையும் ஒலிக்கச் செய்கிறார்கள். பாடலில் ஒரு காட்சியை மாதம்பிட்டிய பள்ளிவாசலில் படம்பிடித்திருக்கிறார்கள். பாடலின் இடையிடையே சூதாட்டம் ஆடுபவர்களாகவும், காடையனாகவும் இஸ்லாமிய ஆடையோடிருக்கும் முஸ்லிம் இளைஞனொருவனைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாடலின் கருப்பொருளாக இஸ்லாமியரை எடுத்துக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள்.
சிறுவர்களுக்கு மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும், வீதியில் செல்லும் போதும் முகத் திரை அணியும் முஸ்லிம் பெண்ணொருத்தி, இரவில் களவாக அந்நியன் ஒருவனைத் தனது அறைக்குள் வரவழைத்துக் கொள்ளும் அளவுக்கு ஈமானற்றவளாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. அதனைப் பார்க்கும் அனைவருக்கும் இராஜ் சொல்ல வரும் சேதியென்ன? 'முஸ்லிம் பெண்கள் தனது வீட்டில் கண்டித்துச் சொல்லப்படுவதால்தான் இவ்வாறான ஆடைகள் அணிகிறார்களென்றும், இஸ்லாமிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களென்றும், வாய்ப்புக் கிடைக்கும்போது அதனை எளிதில் துறந்துவிடலாமென்றும், அவர்களது ஈமான் வெளித்தோற்றத்தோடு மட்டும்தான்...மனதளவில் இல்லை' ஆகிய பொய்யான கருத்துக்களைத்தானே?
'இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.' (அல்குர்ஆன் 24:31)
'நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.' (அல்குர்ஆன் 33:59)
'நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அ(த்தகைய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள்.' (அல்குர்ஆன் 33:32)
என அல்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதை முழுமையாக ஏற்று நடைமுறைப்படுத்தும் உண்மையான நமது முஸ்லிம் சகோதரியொருவர் , நாளை பூரணமான இஸ்லாமிய ஆடையில் வீதியில் செல்லநேரும் போது கூட, இப் பாடலைப் பார்த்திருக்கும் அந்நியர்கள் அவரைச் சுட்டிக் காட்டிக் கதைப்பவை பலவிதமான மோசமான கதைகளாக இருக்கக் கூடும் அல்லவா?
இஸ்லாமிய ஆடையிலிருக்கும் முஸ்லிம் பெண்கள் குறித்த, நிறையக் கேள்விகள் அந்நியர்கள் எல்லோரினதும் மனங்களிலே இருக்கின்றன. அவர்கள் ஏன் இவ்வாறு உடலை மூடி ஆடையணிகிறார்கள்? எது அவ்வாறு நிர்ப்பந்திக்கிறது? ஏன் அவர்கள் தங்கள் அழகினை அந்நியர்களுக்கு வெளிப்படுத்துவதில்லை? அவர்களை அரைகுறையாடைகளில் பார்ப்பது எப்படி? ஆகிய கேள்விகள் அவர்களைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. ஆகவேதான் உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய ஆடைகளுடனிருக்கும் முஸ்லிம் பெண்கள் கேவலப்படுத்தப்படுவது வெகு சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. அப் பெண்கள் உடுத்துக் கொண்டிருக்கும் ஆடைகள், அந்நியர்களுக்கு அரிப்பை ஏற்படுத்துவது போல பாடசாலைகளில், கல்லூரிகளில், வைத்தியசாலைகளில் ஏன் நீதிமன்றங்களில் கூட முக்காட்டை உருவி விடுகிறார்கள். அவர்களை இவ்வாறு செய்யச் செய்வது எது? அழகை மறைப்பதையும், மறைப்பதால் ஏற்படும் அழகையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தனது குடும்பத்துப் பெண்கள் அரைகுறையாடையோடு அந்நியர்கள் பலருடனும் அளவளாவிச் செல்கையில், பாதையில் முழுமையாக மறைத்து ஒரு முஸ்லிம் பெண் செல்வதைக் காணும்போது கிளர்ந்தெழும் பொறாமைதான் இவ்வாறு செய்யத் தூண்டுகிறது.
இலங்கையில் இவ்வாறாக முஸ்லிம் பெண்களைக் கேவலப்படுத்தும் பாடலான இது முதலாவதில்லை. இரண்டோ, மூன்றோ இருக்கின்றன. எல்லாவற்றிலும் முஸ்லிம் பெண்கள்தான் அந்நிய ஆண்களிடம் மையலுறுகிறார்கள். தனது இஸ்லாமிய ஆடையைத் துறந்து செல்கிறார்கள். இது இலங்கையில் மட்டுமல்ல. இந்தியத் தமிழ்த் திரைப்படங்களிலும் இதே கதைதான். மெல்லத் திறந்தது கதவு, பம்பாய், பொக்கிஷம்... எனப் பல திரைப்படங்களில் கதையின் நாயகி முஸ்லிம் பெண். அந்நிய மதத்திலொருவனைக் காதலித்து, அவனுடன் இணைவதற்காக குர்ஆனையும், இஸ்லாமிய ஆடையையும் துறந்து செல்வாள். இது இன்றோடு முடியும் ஒன்றில்லை. இனி வரும் காதல் கதைகளிலும், பாடல்களிலும் இதுவேதான் தொடரும். தப்பித் தவறியேனும் முஸ்லிம் இளைஞனொருவன் தங்கள் மதத்துப் பெண்ணொருத்தியைக் காதலிப்பதாகக் காட்டமாட்டார்கள். அவ்வாறு காட்டினால் தங்கள் மதத்துப் பெண், எளிதில் அந்நிய ஆண்களிடம் வசப்பட்டு விடக் கூடியவள் என்றும் காதலுக்காக அவ்வளவு காலமும் அன்பாக வளர்த்த குடும்பத்தை விட்டும் ஓடி விடுபவள் என்றும், ஒழுக்கமற்றவள் என்றும் அர்த்தமாகிவிடும் அல்லவா? அதன்பிறகு அப்படத்தின், பாடலின் இயக்குனரை அவரது மதத்தைச் சேர்ந்தவர்கள் உண்டு, இல்லையென்று ஆக்கிவிடுவார்கள்.
ஆனால் இலங்கையில் கதாநாயகியை சிறுபான்மையாக இருக்கும் இஸ்லாமியப் பெண்ணாகக் காட்டினால் யாரால் என்ன செய்ய முடியுமென்ற தைரியம் இந்தப் பெரும்பான்மை இயக்குனர்களை, பாடகர்களைத் தொடர்ந்தும் இயங்கச் செய்கிறது. மிகத் துணிச்சலாக காட்சிகளைப் படம்பிடித்து எளிதாக ஒளிபரப்பிவிட முடிகிறது. இதுவே ஒரு பௌத்தப் பெண்ணை, வேறு மதத்தவனொருவன் இழுத்துக் கொண்டு ஓடுவதாகக் காட்டினால் அடுத்தநாள் கல்லெறிக்குள்ளாவோமென அவர்களுக்குத் தெரியும். பௌத்த மதத்தை அவமதித்த ஒரே காரணத்துக்காக, சமீபத்தில் இலங்கை வரவிருந்த அமெரிக்கப் பொப்பிசைப் பாடகரான அகோனுக்கு இலங்கை அரசு விசாவை மறுத்ததையும் இப் பாடலை ஒளிபரப்பிய சிரச மற்றும் எம்.டீ.வி நிறுவனங்கள் கல்லெறிதலுக்குள்ளானதையும் அண்மையில் அறிந்திருப்பீர்கள்.
ஒரு சிறு காட்சியினால் தமது மதத்துக்கு ஏற்படும் கலாசாரச் சீரழிவினை அவர்கள் அறிந்திருப்பதனால்தான் இவ்வாறான எதிர்வினையைக் காட்டிவிட முடிகிறது. ஆனால் நாம் மௌனமாக இருந்துவிடுகிறோம். இவ்வாறான பாடல்களை அனுமதிப்பதன் மூலம் நாம் வாழும் சமூகத்தில் எவ்வாறான தீமைகள் நிகழக் கூடுமென்பதைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.
சமீபத்தில், இந்தியா, தமிழ்நாட்டில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளார். "ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலித்து, இந்துவாக்கி மணம் புரியும் ஆணுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு" என அந்த அறிவிப்பு சொல்கிறது. அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் ஒழுக்கத்தையும் மார்க்கத்தையும் சூறையாடுவது என்ற பயிற்சியும் அவ்வியக்கத்திலிருக்கும் இந்து இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக என்றுமில்லாதவகையில் முஸ்லிம் இளம்பெண்கள் அந்நிய மதத்தவரோடு காதலுறுவதும், ஓடிப் போவதுவும் தமிழகத்தில் அதிகளவாக நிகழ்ந்து வருகிறது. இந்து அமைப்புக்களின் உதவியோடு கன்னியாகுமரி எனும் மாவட்டத்திலிருந்து மட்டும் அதிகளவான முஸ்லிம் பெண்கள மாற்று மத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமணம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பணத்திற்காக இதனைச் செய்யும் இளைஞர்கள் பணம் கிடைத்ததும் கூட வந்த பெண்ணை நடுத்தெருவில் தள்ளி விடுகின்றனர். இதற்கு அந்த இயக்கங்களை மட்டும் குறைசொல்லிப் பயனில்லை. முஸ்லிம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முழுமையாகக் கவனிக்கத் தவறுவது, பணத்தையும், பாவத்தின் பக்கம் இட்டுச் செல்லக் கூடிய நவீன தொடர்பு சாதனங்களையும் கட்டுப்பாடின்றி பிள்ளைகளைப் பாவிக்க விடுவது போன்ற இன்றைய எமது சமூகத்திலிருக்கும் ஓட்டைகளும் இதற்குக் காரணம் அல்லவா?
இப் பாடலை இணையத்திலும் ( http://www.youtube.com/watch?v=2r3M8dh1PJQ&feature=related ) ஒளிபரப்பச் செய்திருப்பதன் மூலம் உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் இதை இப்பொழுது பார்க்க முடியும். எளிதாக ஆண்களிடம் மையலுற்றுவிடக் கூடியதாக, இலங்கை முஸ்லிம் பெண்கள் குறித்த கேவலமான சித்திரமொன்றைப் பார்வையாளர்களின் மனதில் இலகுவாகத் தீட்டி விட முடியும். இதன் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் கோபத்தைக் கிளர்ந்தெழச் செய்தும், அந்நிய மதத்தவர்கள் மத்தியில் முஸ்லிம் பெண்களின் ஒழுக்கம் குறித்துக் கேள்வியெழுப்பியும் இப் பாடலின் மூலம் கிடைக்கக் கூடிய பிரபலம், இராஜை இப்படிச் செய்யத் தூண்டியிருக்கவேண்டும். புகழல்ல. பிரபலம். புகழுக்கும் பிரபலத்துக்கும் பாரிய அளவு வித்தியாசமிருக்கின்றது. ஒருவன் இன்னொருவனைக் கொன்றுவிட்டும் உடனடியாகப் பிரபலமடைந்துவிடலாம். ஆனால் மனிதர்கள் மத்தியில் நற்புகழைப் பெற நீண்ட காலம் உழைக்கவேண்டும். இலகுவாகப் பிரபலமடைந்துவிடலாம். புகழ் பெற்றுவிடுவது கடினம். இங்கு இசைக் கலைஞர் இராஜ் மற்றவர்களின் மனதைக் கொன்று இலகுவாகப் பிரபலமடையும் வழிமுறையை நன்கு அறிந்திருக்கிறார். இலங்கையில் மற்றும் உலகம் முழுதும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு மதத்தினரைத் தனது பாடலில் வக்கிரமாகக் காட்சிப்படுத்துவதன் மூலம் எழும் பரபரப்பைக் கொண்டு, இப் பாடலைப் பிரபலப்படுத்துவது அவரது நோக்கமாக இருக்கலாம்.
இலங்கையில் சியத தொலைக்காட்சியின் 'ஹட்ச் டொப் டென்' எனும் நிகழ்ச்சியில் இப்பொழுதும் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இப் பாடல் குறித்து, நியாயமான கேள்விகள் சிலதை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறார் ஒரு இஸ்லாமியச் சகோதரர்.
1. பள்ளிவாசல் வட்டாரத்துக்குள் இப் பாடலைப் படம் பிடிக்க ஏன் அனுமதித்தார்கள்?
2. அஸானின் வரிகளை இந்த பாடலில் பயன்படுத்த யார் அனுமதி கொடுத்தது?
3. ஜம்மியத்துல் உலமாவுக்கு யாராவது இப் பாடல் குறித்து அறிவித்தார்களா? அறிவித்தார்களெனில், இப் பாடல் குறித்து அவர்களது நிலைப்பாடு என்ன?
4. அந்நியப் பெண்ணொருவர் (முகத்திரையுடன் கூடிய ஹிஜாப், ஹபாயாவுடன்) இஸ்லாமிய ஆடையணிந்து, இஸ்லாத்தைக் கேவலப்படுத்துவதை அனுமதிக்கலாமா?
அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் இதை வாசிக்கும் அநேக இஸ்லாமியர்களது மனங்களிலெழும் கேள்விகள்தான். இலங்கையில் நிலவும் ஊடக சுதந்திரமானது, இவ்வாறாக ஒரு இனத்தை மாத்திரம் கேவலப்படுத்தும் அளவுக்கு வருமிடத்து அதைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? இலங்கை முஸ்லிம்களைக் கேவலமாகச் சித்தரிக்கும் இவை போன்ற ஒளிப்பதிவுகள் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டியவை. இதற்காக நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
"உங்களில் எவரேனும் தீயசெயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து (ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.
நாம் என்ன செய்யப் போகிறோம்? இப் பாடலை ஒளிபரப்பக் கூடாதென எல்லா முஸ்லிம்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்வதால், இப் பாடல் இன்னும் பிரபலம் அடைவதோடு பாடலின் வெற்றிக்கும் அது வழிவகுக்கும். பாடலைப் பார்த்திராதவர்களுக்கும் பார்க்கும் ஆவலை ஏற்படுத்திவிடும். அத்தோடு இலங்கையிலுள்ள இஸ்லாமியர்களை 'கலகம் செய்பவர்கள்' என்ற போர்வைக்குள் தள்ளிவிடும். ஆகவே முஸ்லிம்களாகிய நாம் எமது ஜம்மிய்யத்துல் உலமாவுக்கு இது பற்றி அறிவித்து, அவர்கள் முஸ்லிம் கலாசார அமைச்சைத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக இப் பாடலை எங்கும் ஒளிபரப்பவிடாதபடி தடை செய்யச் சொல்லத் தூண்ட வேண்டும். அத்தோடு இப் பாடல்காட்சியில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைவரையும் பொது மன்னிப்புக் கேட்க வைத்தால்தான் இலங்கையில் மீண்டுமொருமுறை இவை போன்ற ஒளிப்பதிவுகள் வெளிவராது. விட்டுவிடுவோமேயானால் இப் பாடலின் பிரபலத்தோடும் வெற்றியோடும் தொடர்ந்து வரக் கூடிய இது போன்ற பாடல்களையும், விளம்பரங்களையும், திரைப்படங்களையும் எதுவும் செய்ய இயலாமல் போய்விடும். விஷச் செடியொன்றை நிலத்திலிருந்து முளைத்தவுடனேயே விரல்களால் நசுக்கிவிடுவது இலகு. வேர் பிடித்து, கிளை விரித்து நன்றாக வளர்ந்த பின்னர் வெட்ட முயற்சித்தால் நிலத்துக்கும் சேதம். சுற்றியிருக்கும் எல்லாவற்றுக்கும் சேதம். சிந்திப்போம் சகோதரர்களே !
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
நன்றி
# அல்ஹசனாத் இதழ், நவம்பர் 2010
# விடிவெள்ளி இதழ் ( புகைப்படங்கள்)
20 comments:
"Every culture has its own tradition, its atrocious that one of the community is being dragged ,and made fun of , more over always women are targeted be it what ever community they belong , why don't people have sense to think ? It's one's of such incident, many are happening with out being noticed.,
எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
//தனது குடும்பத்துப் பெண்கள் அரைகுறையாடையோடு அந்நியர்கள் பலருடனும் அளவளாவிச் செல்கையில், பாதையில் முழுமையாக மறைத்து ஒரு முஸ்லிம் பெண் செல்வதைக் காணும்போது கிளர்ந்தெழும் பொறாமைதான் இவ்வாறு செய்யத் தூண்டுகிறது.//
மிகத்துள்ளியமாகச் சொன்னீர்கள் ரிஷான்; இச்செயல் கண்டிப்பாக கண்டனத்திற்குரியதே!
சம்பந்தப்பட்டவர்கள், உரிய நடவடிக்கையில் உடனே இறங்க வேண்டும்! இல்லையெனில், இதுபோன்ற செயல்கள் மென்மேலும் புற்றீசல்போல அதிகரித்துவிடக்கூடும்!
இதுமாதிரி நம்மை கேவளப்படுத்தும் நோக்கோடு எடுக்கப்படும் சினிமா/சின்னத்திரையை நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து புறந்தள்ளினால்தான் அவர்கள் திருந்துவதற்கு ஏதுவாயிருக்கும்!
இப்பதிவை இங்கு தந்தமைக்கு நன்றி!
May Allah punish Iraj!
நானும் எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
புத்தர் சிலைக்கு முன்னால் பாட்டுப் பாடினால்
ஏக்கோனுக்கு எதிர்ப்பு!
ஊடகங்களுக்குக் கல்வீச்சு!
மற்றச் சமயமென்றால் மயிரொண்டு போச்சுது!
வளமான எதிர்காலம்!
சுப அனாகதய!
அன்பின் ஷம்மி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி :-)
அன்பின் தேனுஷா,
//எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.//
வரவேற்கிறேன் தோழி. நன்றி!
அன்பின் செவத்தப்பா,
//செவத்தப்பா said...
//தனது குடும்பத்துப் பெண்கள் அரைகுறையாடையோடு அந்நியர்கள் பலருடனும் அளவளாவிச் செல்கையில், பாதையில் முழுமையாக மறைத்து ஒரு முஸ்லிம் பெண் செல்வதைக் காணும்போது கிளர்ந்தெழும் பொறாமைதான் இவ்வாறு செய்யத் தூண்டுகிறது.//
மிகத்துள்ளியமாகச் சொன்னீர்கள் ரிஷான்; இச்செயல் கண்டிப்பாக கண்டனத்திற்குரியதே!
சம்பந்தப்பட்டவர்கள், உரிய நடவடிக்கையில் உடனே இறங்க வேண்டும்! இல்லையெனில், இதுபோன்ற செயல்கள் மென்மேலும் புற்றீசல்போல அதிகரித்துவிடக்கூடும்!
இதுமாதிரி நம்மை கேவளப்படுத்தும் நோக்கோடு எடுக்கப்படும் சினிமா/சின்னத்திரையை நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து புறந்தள்ளினால்தான் அவர்கள் திருந்துவதற்கு ஏதுவாயிருக்கும்!
இப்பதிவை இங்கு தந்தமைக்கு நன்றி!//
உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும். அருமையான கருத்து.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் சித்தீக்,
//May Allah punish Iraj!//
அவருக்கும் நேர்வழி கிட்ட பிரார்த்திப்போம் நண்பரே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
இங்கு கண்டனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்திருக்கும் அனானி நண்பர்களுக்கு எனது நன்றி.
Islkamiya pengal maathiram alla, entha pennaiyum kevalappaduthuvathu anaharikam allava?
அன்பின் நண்பர் சிவா,
நிச்சயமாக நண்பரே..எந்தப் பெண்ணையும் கேவலப்படுத்துவது தவறுதான். ஆனால் இங்கு பெண் மாத்திரமல்ல.. ஒரு மதத்தைக் குறிப்பிடும் ஆடைகள், அவர்களது புனிதத் தலங்கள், கலாசாரம், புனித அழைப்போசை எல்லாவற்றையும் கேவலப்படுத்தியிருக்கிறார்...கள். இதைப் பார்க்கும் எவரும் இம் மதத்தின் மீது தப்பபிப்ராயம் கொள்வது சாத்தியம் அல்லவா? அதனால்தான் தடை செய்யக் கோருகிறேன்.
கருத்துக்கு நன்றி நண்பரே !
புனிதமான அன்பை,களங்கமற்ற மனிதநேயத்தை,உணரமுடியாதவன்,உள்ளத்தால்,உணர்வால் மனிதனே அல்ல,அதை கொண்டு ஒரு பெண்ணையும்,ஒரு சமயத்தையும்,கொச்சைபடுத்துவது,மனிதநேயம்,உணராதவர்களின்,விளம்பரம் தேடும் கையாலாகாதவரின் செயல்,புறநானூற்றில்,தாக தவிப்பால் தவிக்கும் தனது நாட்டு வீரனுக்கு,தனது தாய்ப்பாலை கொடுத்தவளின்,செயலை,அவளின்,மனிதநேயம்,பாச நெறிகளை உயர்த்தி பெண்ணை அன்னையாக்கி,தெய்வமாக சித்தரிக்கின்றது,அதே பெண்ணை நமதுகால கற்பனையாளர்கள்,விரகதாபம் பொங்கி,அவனுடன் உறவு கொண்டாள் என வடித்து,பெண்ணையும் இழிவுபடுத்தி இருப்பர்,இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,நண்பரே
Unmaithaan. Muslimkal meethu palar viparam ariyamal kandanam cheivathu islammukku muran aaha amaikirathu. Ungal dharma aavesam purikirathu. Anbu.
அன்பின் Skantha Rajah,
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் நண்பர் சிவா,
உங்கள் கருத்தில் மகிழ்கிறேன். நன்றி நண்பரே !
இவ்வாறு இஸ்லாமியப் பெண்களைக் கேவலப்படுத்தும் விடயங்களை பார்க்கும் போது இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என என் மனதில் ஒரு உந்துதல் ஏற்படும். ஆனால் என்னால் எதுவுமே செய்ய முடியாத கையாளாகாத தன்மையை நினைத்து மனம் வருந்துவதுண்டு.
உங்களது வலைப்பதிவில் இவ்வாறான பதிவுகளை இட்டு தூங்கிக் கொண்டிருக்கும் எமது சமுதாயத்தை விழித்தெழச் செய்கின்றமைக்கு எனது நன்றிகள். முஸ்லிம் சமூகம் இவ்வாறான செயல்களை கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர். நமக்கேன் தேவையில்லாத வம்பு என ஒதுங்கிவிடுகின்றனர். இந்தப் பண்பு மாறவேண்டும்.
//தனது குடும்பத்துப் பெண்கள் அரைகுறையாடையோடு அந்நியர்கள் பலருடனும் அளவளாவிச் செல்கையில், பாதையில் முழுமையாக மறைத்து ஒரு முஸ்லிம் பெண் செல்வதைக் காணும்போது கிளர்ந்தெழும் பொறாமைதான் இவ்வாறு செய்யத் தூண்டுகிறது.//
சரியாக சொன்னீர்கள் நன்பா
இஸ்லாம் வாழ்வின் வழிகாட்டி . வழிகாட்ட முற்படுபவர்கள் குழப்பவாதிகளாக இருப்பது இறைவனின் பார்வையில் குற்றவாளிகளாக ஆகிவிடுவார் .இவர்களை விட மோசக்காரர்கள் யாருமில்லை . மார்க்கத்தில் விளையாடுவது அனுமதிக்க முடியாது . நல்லது செய்யும் நினைவுடன் சிலர் ஆர்வத்தின் விளைவினால் தான் தவறு செய்திருப்பின் உடன் திருத்திக் கொள்வது உத்தமம். அல்லாஹ மிகக் கருணை உள்ளவன்
Post a Comment