Monday, June 13, 2011

இராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது?

    தம்பியின் முகத்தைச் சற்றுப் பார்த்துக் கொள்ள எமது பாட்டி தொலைக்காட்சிப் பெட்டியை நெருங்கி விழிகளைக் கூர்மையாக்கிக் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்று முறை க.பொ.உயர்தரப் பரீட்சையெழுதி மூன்றாம் முறை ஒரு வழியாக பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் அளவுக்கு தம்பி சித்தியடைந்தது சில நாட்களுக்கு முன்புதான். இப்பொழுது தம்பி ஒரு இராணுவ முகாமில் இருக்கிறான். அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க அன்பாகக் கற்றுத் தரும் இராணுவ ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளவே அவன் சென்றிருக்கிறான். இராணுவ ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச் சென்றிருக்கும் பையனின் முகத்தைச் சற்று தொலைக்காட்சியில் பார்த்திடவே பாட்டி காத்திருக்கிறார்.

    'பாட்டி, இப்பவே பார்த்துக்குங்க..நல்லாப் பார்த்துக்குங்க..ஏன்னா திரும்பி வரும்போது வரப் போறது அவனில்ல.'

    பாட்டியைச் சற்றுக் கோபமடையச் செய்து பார்க்கவே நான் அப்படிச் சொன்னேன்.

    'உனக்கு பொறாமை. நீ கெம்பஸ் போன காலத்துல இதெல்லாம் இல்லல்ல. பார்த்துட்டிரு மகன். தம்பி டை, கோட் உடுத்துத்தான் வீட்டுக்கு வருவான். அவன் வீட்டுக்கு வந்தப்புறம் சாப்பிடப் போறது கரண்டியாலையும், முள்கரண்டியாலையும்தான். இங்கிலிஸ்லதான் கதைப்பான்.'

    பாட்டி, இராணுவ முகாம் பயிற்சியின் பின்னர் வீடு திரும்பப் போகும் தம்பி பற்றி இன்னும் பல விடயங்களைச் சொல்லத் தொடங்கினார். பாட்டியுடன் சேர்ந்து தாத்தாவும் மேலும் பல சிறப்புக்களைக் கூறத் தொடங்கினார்.

    இம் மூத்தவர்களின் கதைகளைக் கேட்டு அலுத்துப் போன காரணத்தினால் நான் தம்பி குறித்தும், தம்பிகளுக்கு இராணுவ முகாமில்  கொடுக்கப்படும் பயிற்சி குறித்தும் ஆராயத் தீர்மானித்தேன். அவ்வாறு ஆராய்ந்து பார்க்கையில் எனது பாட்டி குறித்து எனக்குப் பாவமாகத் தோன்றியது. பாட்டி குறித்து பரிதாப எண்ணம் எழுகையில், எனக்கு இன்னும் பலரது தாய்மார்கள் நினைவில் தோன்றினர். தம்பி மீது பல எதிர்பார்ப்புக்கள் வைத்து இராணுவ முகாமுக்கு அனுப்பிய எனது தாய், முகாம்களில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் தம்பிகள், தங்கைகளின் தாய்மார்கள் மற்றும் அமைச்சர்களின் தாய்மார்கள் அவர்களிலிருந்தனர். பாட்டி வயதானவர். பலவீனமானவர். குழியிலொரு பாதம், கரையில் சில விரல்களென இருப்பவர். அதனால் இராணுவ முகாம் பயிற்சியின் உண்மை நிலவரங்களை அவரிடம் சொல்ல மனம் இடம்கொடுக்கவில்லை. எனினும் அவற்றை மூடிமறைக்கவும் முடியாது.

    அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க உயர்கல்விப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட பிற்பாடுதான் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாமில் பயிற்சி கொடுப்பது பற்றி முதலில் பேச்சு அடிபடத் தொடங்கியது. பல்கலைக்கழக மாணவர்களது ஒழுங்கு நடவடிக்கைகள்  தொடர்ந்தும் பலவீனமாகப் போய்க் கொண்டிருப்பதாக திடீரெனக் கண்ட அமைச்சர் மாணவ, மாணவிகளது ஒழுக்கத்தை எண்ணி இந் நடவடிக்கையை மேற்கொண்டார். அதன் பிரகாரம், 2011.05.12 எனத் திகதியிட்டு எழுதப்பட்ட கடிதமொன்று உயர் கல்வி அமைச்சினால் எனது தம்பி உட்பட இம் முறை உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதி கிடைக்கக் கூடுமென எண்ணியிருக்கும் மாணவர்கள் 10000 பேருக்கு அனுப்பப்பட்டன.

    அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க பல்கலைக்கழக மாணவர்களை ஒழுங்குபடுத்துவதற்கு தீர்மானித்ததன் நிலைப்பாடானது இக் கடிதத்திலேயே முழுமையாகத் தெளிவாகிறது. கொழும்பு நகரில் வசிக்கும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் முகாமாக பூஸா முகாம் அறிவிக்கப்பட்டிருந்தது. இரத்தினபுரியில் வசிக்கும் சில மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் முகாமாக திருகோணமலை அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சிலருக்கு இன்னும் சில முகாம்கள்.

    இராணுவ முகாம் பயிற்சி குறித்து இன்னும் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்த அக் கடிதத்தின் ஒரு பக்கத்தில் பயிற்சிக்காக கட்டாயம் எடுத்துவர வேண்டிய பொருட்களின் பட்டியல் தரப்பட்டிருந்தது.  தேசிய அடையாள அட்டையில் ஆரம்பித்து காபன் பேனைகளிரண்டில் முடிவுற்ற அப் பட்டியலில் கேன்வஸ் சப்பாத்துக்கள், வெள்ளைக் காலுறைகள், அரைக் கை டீ ஷேர்ட், முழுக் கை ஷேர்ட், நீல நிற குறுங் காற்சட்டை, கறுப்பு நிற நீண்ட காற்சட்டை, சேலை, ட்ரக் பொட்டம், கறுப்பு நிறச் சப்பாத்துக்கள், புடவைத் தொப்பி, வெள்ளை நிற படுக்கை விரிப்பு, வெள்ளை நிற தலையணை உறைகள், பூட்டு போடக் கூடிய சூட்கேஸொன்று என இன்னும் பல பொருட்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

    எனது அம்மா, செய்ய வேறு வழியற்று ஐயாயிரம் ரூபாயளவில் செலவளித்து இப் பட்டியலிலிருந்த பொருட்களைத் தம்பிக்கு வாங்கிக் கொடுத்தார். பாட்டியெனில் 'பையன் நாளை டை, கோட் உடுத்து வரவிருப்பதனால் இன்று செலவளித்ததற்குப் பரவாயில்லை' எனச் சொன்னார்.

    இவ்வாறு எனது தம்பியை உள்ளடக்கிய 10000 மாணவர்கள், ஆளுக்கு ஐயாயிரம் ரூபாயளவில் செலவளித்து வாங்கிய பொருட்களையும் சுமந்துகொண்டு நாடு முழுவதிலுமிருந்த 28 இராணுவ முகாம்களுக்கு பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் புறப்பட்டுச் சென்றனர்.

    மே மாதம் 22ம் திகதி காலை 10.30க்கு முன்பு அந்தந்த முகாம் பொறுப்பதிகாரிகளின் முன்னிலையில் வந்து நின்ற மாணவர்களுக்கு அப்பொழுதிலிருந்து அசௌகரியமான விடயங்களையே அனுபவிக்க நேர்ந்தது. இக் கட்டுரையை எழுதும் இக் கணத்தில் இராணுவப் பயிற்சி ஆரம்பித்து மூன்று நாட்கள் கடந்துவிட்டன. இம் மூன்று தினங்களில் மட்டும் இராணுவ முகாம்கள் சிலவற்றில் நடந்திருக்கும் சம்பவங்கள் சிலவற்றை உங்கள் முன்வைக்கிறேன். மற்றவற்றின் தரங்களை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம்.

    காலி, பூஸா இராணுவ முகாமுக்குச் சென்ற மாணவர்களுக்கு புதுமையானதொரு அனுபவம் கிடைத்தது. முகாமினுள் நுழைந்த பிற்பாடு சிறைக் கைதிகளைப் போல கையில் தட்டுடனும், கோப்பையுடனும் அவர்கள் பகலுணவுக்காக வரிசையில் அழைத்துச் செல்லப்பட்டனர். பெற்றோர்கள் வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மாணவ மாணவிகள் சிறைக்கைதிகளைப் போல பகலுணவைச் சாப்பிடத் தயாராகினர். அன்றிரவு பத்து மணியாகியும் கூட மாணவ மாணவிகளுக்கு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப் பட்டிருக்கவில்லை. எனவே வெள்ளைப் படுக்கை விரிப்புக்களையும், வெள்ளைத் தலையணை உறைகளையும் எடுத்துச் சென்றிருந்த மாணவர்களுக்கு நள்ளிரவுக்குப் பிற்பாடுதான் அவற்றை விரித்துப் படுக்கக் கிடைத்தது.

    22ம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு உறங்கச் சென்ற மாணவர்களுக்கு அதற்கு ஒரு மணித்தியாலத்தின் பின்னர் எழும்பும்படி கட்டளையிடப்பட்டது. அத்தோடு விழித்தெழுந்த மாணவர்கள் அவசர அவசரமாகத் தயாராகி, அலரி மாளிகைக்குச் செல்வதற்காகக் காத்திருந்த பேரூந்தில் ஏறுவதற்கு முண்டியடித்தனர். விடிகாலை 4 மணிக்கு மாணவர்களை ஏற்றிக் கொண்ட பேரூந்து பூஸாவிலிருந்து வெளிக் கிளம்பியது. விடிகாலையில் பயணத்தை ஆரம்பித்த நேரம் தொடக்கம் அலரி மாளிகையைச் சென்றடையும்வரை மாணவர்களுக்கு தண்ணீர்ச் சொட்டொன்று கூடக் கொடுக்கப்படவில்லை. அலரி மாளிகையில் பகலுணவுக்காக ஒரு சோற்றுப் பார்சல் கிடைத்த போதிலும் அதை உடனே சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. அலரி மாளிகையில் ஜனாதிபதியும் உயர் கல்வி அமைச்சரும்  கலந்துகொண்ட நிகழ்ச்சி நிறைவுற்று மாணவர்கள் மீண்டும் பூஸா நோக்கிப் பயணிக்க ஆரம்பித்ததோடு,  களுத்துறையில் வைத்துத்தான் அவர்களுக்கு பகலுணவைச் சாப்பிட அனுமதி கிடைத்தது. காலையிலிருந்து பசியிலிருந்த அவர்கள் அலரி மாளிகையில் கிடைத்த சோற்றுப் பார்சல்களைத் திறந்து பார்க்கையில் அவை மிகவும் கெட்டுப் போயிருந்தன.

    தாங்க முடியாப் பசி காரணமாக சில மாணவர்கள் அக் கெட்டுப் போன சோற்றைச் சாப்பிட்டனர். இன்னும் சிலர் பசியிலேயே இருந்தனர். அவர்களுக்கு மீண்டும் இரவு பத்து மணிக்குப் பிறகே அடுத்த வேளை உணவு கிடைத்தது.

    'நாங்கள் பல்கலைக் கழக மாணவ மாணவிகளுக்கு கரண்டியாலும், முட்கரண்டியாலும் சாப்பிடக் கற்றுக் கொடுப்போம்' என பெருமைக் கதைகள் பேசிய அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க பூஸா மாணவர்களுக்கு கெட்டுப் போன உணவை உண்ணக் கொடுத்து அந் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தது அவ்வாறுதான்.

    பூஸா இராணுவ முகாம் மாணவர்கள் அவ்வாறு 'ஒழுங்கு'படுத்தப்படுகையில் திருகோணமலை க்ளீஃபன்பர்க் இராணுவ முகாமுக்குச் சென்ற மாணவர்களுக்கு அதற்குச் சற்றும் குறைவில்லாத அனுபவமொன்று கிடைத்தது. இம் முகாமில் இராணுவப் பயிற்சி பெற அழைக்கப்பட்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கை 1200க்கும் அதிகமாக இருந்தது. அவ்வளவு பேரும் பாவிப்பதற்காக முகாம் எல்லையில்  இருந்த கழிப்பறைகளின் எண்ணிக்கை நான்கு மட்டுமே. மாணவர்களின் எண்ணிக்கையை கழிப்பறைகளின் எண்ணிக்கையால் பிரித்துப் பார்த்தால் வியப்பைத் தரும் ஒரு விடை கிடைக்கிறது. அதாவது முந்நூறு மாணவர்கள் ஒரு கழிப்பறையைப் பாவிக்க வேண்டும். ஒரு மாணவர் 5 நிமிடங்கள் ஒரு கழிப்பறையைப் பாவிப்பாரானால் கூட முந்நூறு பேருக்கும் அச் செயலைச் செய்ய 1500 நிமிடங்கள் எடுக்கும். 1500 நிமிடங்கள் எனப்படுவது 25 மணித்தியாலங்கள். அதாவது ஒரு நாளும் இன்னுமொரு மணித்தியாலமும்.

    25 மணித்தியாலங்கள் வரிசையிலிருந்து கழிப்பறை செல்லச் சந்தர்ப்பம் கிடைக்கும் எவருக்கும் இரவு நேரங்களில் கழிப்பறை செல்ல முடியாது. ஏனெனில் இக் கழிப்பறைகள் நான்கும் அவர்கள் தங்குமிடத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலேயே அமைந்திருக்கின்றன. அதன் பிரகாரம் திருகோணமலை இராணுவ முகாமுக்கு பயிற்சிக்காகச் சென்ற மாணவர்களுக்கு இப் பயிற்சிக் காலத்தில் கழிப்பறை செல்வதைத் தவிர வேறெதுவும் செய்ய நேரம் மிச்சமிருக்காது. 25 மணித்தியாலங்கள் வரிசையிலிருந்து கழிப்பறை செல்லும் மாணவர்களுக்கு முகம், கை,கால் கழுவவென 3 தண்ணீர்த் தாங்கிகள் மாத்திரமே இருக்கின்றன. அதன்படி ஒரு தண்ணீர்த் தாங்கியிலிருந்து 400 மாணவர்கள் முகம், கை,கால் கழுவிக் கொள்ளவேண்டும்.

    அமைச்சர் கூறிய படி மாணவர்களுக்கு கழிப்பறை செல்லும் ஒழுங்கைக் கற்றுக் கொடுப்பது இவ்வாறுதான். இராணுவ முகாம் பயிற்சியைப் பெறப் போயிருக்கும் எனது தம்பி 'வெளிக்குச் செல்ல' இவ்வளவு துயருருவதை எனது பாட்டி அறிவாரானால் அவர் அக்கணமே நெஞ்சடைத்து மரணித்துப் போகக் கூடும். எனவே இவ் விடயங்களை அவர் அறியாமலே இருக்கட்டும்.

    திருகோணமலை மாணவர்களுக்கு கழிப்பறை செல்லும் ஒழுங்கை அவ்வாறு கற்றுக் கொடுக்கையில், அம்பாறை இராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சியெடுக்கும் மாணவர்கள் வேறொரு விதத்தில் 'ஒழுங்கி'னைக் கற்றுக் கொண்டனர். 24ம் திகதி இராணுவப் பயிற்சியின் போது அவ்விடத்துக்கு காட்டு யானைகள் வரத் தொடங்கின. யானைகள் வருவதைக் கண்டு மாணவர்கள் அஞ்சினர். அப்பொழுது பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த இராணுவ அதிகாரி உடனே கட்டளையிட்டார்.

    'ஓடுங்கள்'

    இராணுவ அதிகாரியின் கட்டளையின் பின்னர் மாணவர்கள் யானைகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக அங்குமிங்கும் ஓடினர். வேலிகளிலிருந்த முட்கம்பிகளும் குத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பான இடம் தேடி மரண பயத்தோடு ஓடினர். அதன் இறுதிப் பெறுபேறானது இருபதுக்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்தவர்களாக மாறியமையே.

    மாணவர்களுக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சியின் மூன்றாம் நாள் முடிவில் இன்னும் மாணவ மாணவிகள் அனேகர் நோயாளிகளாக மாறியிருக்கின்றனர். உடற்பயிற்சியின் போது மயக்கமுற்று வீழ்ந்த மாணவிகளின் எண்ணிக்கை கொஞ்சநஞ்சமல்ல. மின்னேரியா இராணுவ முகாமில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மாணவர் ஒருவரைப் பாம்பு தீண்டியதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இராணுவ முகாம்கள் இரண்டு, மூன்றுக்குள் 3 நாட்களுக்குள் நடைபெற்ற, நானறிந்த சம்பவங்கள் சிலவற்றையே நான் இங்கு எழுதியிருக்கிறேன். 28 முகாம்களுக்குள் நடைபெற்றுள்ள சம்பவங்கள் பல இன்னும் இருக்கின்றன. 3 வாரங்கள் முடிவுறுகையில் இன்னும் என்னென்னவெல்லாம் நடந்திருக்கும்? டை, கோட் உடுத்து, முட்கரண்டியால் சாப்பிட்டு, ஆங்கிலத்தில் கதைக்கும் தம்பியைக் காணக் காத்திருக்கும் பாட்டியிடம் நான் இதையெல்லாம் எப்படிச் சொல்வது?

    இராணுவ முகாமுக்குள் என்னென்ன நடைபெற்றாலும் அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு ஊருக்கு வரும் தம்பிக்கு நாளை பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்குமா என்பதுவும் கேள்விக்குறியே. பாட்டியென்றால், தம்பி இராணுவப் பயிற்சிக்குப் பிற்பாடு பட்டமொன்றோடுதான் வீட்டுக்கு வருவார் என எண்ணியிருக்கிறார். எனினும் இப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுத்திருப்பது பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை அல்லாமல், உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்லத் தகுதியானவர்கள் எனக் கருதப்படக் கூடிய மாணவர்கள் மட்டுமே. நாளைய தினம் Z வெட்டுப் புள்ளி கிடைத்த பிற்பாடு, இவ்வாறு இராணுவப் பயிற்சியைப் பெற்றுக் கொண்ட அனேக மாணவர்களுக்கு நிச்சயமாக பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காமலிருக்கும். எனது தம்பியும் கூட அக் கூட்டத்தில் இருக்கக் கூடும். அவ்வாறெனில் பாட்டியின் நிலை என்னவாகும்?

    இவையெல்லாவற்றையும் சிந்தித்தபடி நான் மீண்டும் வீட்டுக்கு வந்தேன். நான் வீட்டுக்கு வருகையில் பாட்டி மிகப் பாடுபட்டு வெள்ளைக் கேன்வஸ் சப்பாத்துக்களிரண்டைக் கழுவிக் காய வைத்தபடியிருந்தார்.

    ' யாருக்கு இந்தச் சப்பாத்து பாட்டி?'

    'உன்னோட தாத்தாவுக்குத்தான்.'

    'ஏன் தாத்தாவும் இராணுவப் பயிற்சிக்குப் போகப் போறாரோ?'

    அப்பொழுது தாத்தா முற்றத்துக்கு வந்தார்.

    'ஆமாம் மகனே. இப்ப தம்பிகளுக்கு இராணுவப் பயிற்சி கொடுத்த பிறகு அதிபர்களுக்கு இராணுவப்பயிற்சி கொடுக்கப் போறாங்களாம். அதுக்குப் பிறகு ஆசிரியர்களுக்கு.. அதுக்குப் பிறகு பள்ளிப் பிள்ளைகளுக்கு.. அதுக்குப் பிறகு பெற்றோருக்கு..அதுக்குப் பிறகு எங்களுக்குத்தானே.. இப்பவே தேவைப்படுறதையெல்லாம் ஒழுங்குபடுத்திக் கொண்டா பிறகு தொந்தரவில்லைதானே?'

- அஸங்க சாயக்கார
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# உயிர்மை
# திண்ணை

9 comments:

JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்) said...

காலத்துக்கேற்ற தகவல்களை தரமாக பகிர்கின்றமைக்கு நன்றி நண்பா. தொடரட்டும் உங்கள் பணி

mahendran said...

ITHIL ORU MOODU MANTHIRAM IRUKIRATHU. ANTHA MANTHIRAM VIRAIVIL VELLY VARUM. KATHU IRUPOAM. M.MAHENDRAN.CANADA

அமரன் said...

ரிஷான்..

நிகழ்கால நிஜங்களை நிழல்படுத்தும் இது போன்ற பதிவுகள் அவசியமானவை.

மொழிபெயர்த்துக் கொடுத்தமைக்கு நன்றி.

பிரான்சில் பதினெட்டு வயது கடந்த ஒவ்வொரு குடிமகனும் குறிப்பிட்ட காலம் இராணுவப் பயிற்சி பெறல் வேண்டும். அப்படியான ஒரு ஒழுங்கு நடவடிக்கையாக இது இருக்கக் கூடும்.

இருந்தாலும் எந்த ஒரு இக்கட்டான நிலையையும் சமாளித்து போராடும் தீரத்தைக் கொடுக்கும் இராணுவப் பயிற்சியாகவே இது தோன்றுகிறது. இதன் பின்னணியில் வேறு எண்ணங்கள் மறைந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்றாலும் கட்டுக்கோப்பு காணாமல் போனது சகிக்க முடியவில்லை.

Agape Tamil Writer said...

அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

M.Rishan Shareef said...

அன்பின் ஜாவிட் ரயிஸ்,

//காலத்துக்கேற்ற தகவல்களை தரமாக பகிர்கின்றமைக்கு நன்றி நண்பா. தொடரட்டும் உங்கள் பணி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !

M.Rishan Shareef said...

அன்பின் மகேந்திரன்,

//ITHIL ORU MOODU MANTHIRAM IRUKIRATHU. ANTHA MANTHIRAM VIRAIVIL VELLY VARUM. KATHU IRUPOAM.//

ஆமாம் நண்பரே. காத்திருப்போம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

M.Rishan Shareef said...

அன்பின் அமரன்,

//ரிஷான்..

நிகழ்கால நிஜங்களை நிழல்படுத்தும் இது போன்ற பதிவுகள் அவசியமானவை.

மொழிபெயர்த்துக் கொடுத்தமைக்கு நன்றி.

பிரான்சில் பதினெட்டு வயது கடந்த ஒவ்வொரு குடிமகனும் குறிப்பிட்ட காலம் இராணுவப் பயிற்சி பெறல் வேண்டும். அப்படியான ஒரு ஒழுங்கு நடவடிக்கையாக இது இருக்கக் கூடும்.

இருந்தாலும் எந்த ஒரு இக்கட்டான நிலையையும் சமாளித்து போராடும் தீரத்தைக் கொடுக்கும் இராணுவப் பயிற்சியாகவே இது தோன்றுகிறது. இதன் பின்னணியில் வேறு எண்ணங்கள் மறைந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்றாலும் கட்டுக்கோப்பு காணாமல் போனது சகிக்க முடியவில்லை.//

கருத்துக்கு நன்றி நண்பரே.

இங்குள்ள முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு நல்லொழுங்கைக் கற்றுக் கொடுப்பதல்ல. அதன் பின்னாலிருக்கிறது மறைவான உள்நோக்கம்.

தற்பொழுது நாட்டில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தைரியமாக அரசை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் பல்கலைக்கழக மாணவர்களே!

இராணுவத்துக்கு அடிபணிந்தவர்களாக, அவர்களை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்தால், எதிர்காலத்தில் அரசைக் கேள்வி கேட்க படித்தவர்கள் எவரும் இல்லை அல்லவா?

அரசின் உள் நோக்கம் அதுதான்.

இது இப் பயிற்சியில் அண்மையில் நடந்த அசம்பாவிதமொன்று..பாருங்கள்

http://inioru.com/?p=21850

த. எலிஸபெத் said...

உள்ளத்தை உருக்கும் விடயத்தை விளக்கியிருக்கிறீர்கள், கல்விச்சமூகத்தையும் இந்த அரசியல் கலாச்சாரம் முட்டாள்களாக்கிக் கொண்டிருப்பதுதான் வேதனையான விடயம்...

M.Rishan Shareef said...

அன்பின் த.எலிஸபெத்,

//உள்ளத்தை உருக்கும் விடயத்தை விளக்கியிருக்கிறீர்கள், கல்விச்சமூகத்தையும் இந்த அரசியல் கலாச்சாரம் முட்டாள்களாக்கிக் கொண்டிருப்பதுதான் வேதனையான விடயம்.//

நிச்சயமாக சகோதரி. எதிர்கால அறிஞர்களே இப்பொழுதே அரசின் பேச்சுக்குத் தலையாட்டும் பொம்மைகளாக மாற்றும் பயிற்சியே இது.

கருத்துக்கு நன்றி சகோதரி !