Wednesday, May 11, 2022

இலங்கையில் கலவர அதிர்வுகளைக் கிளப்பியிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ராஜினாமா - எம். ரிஷான் ஷெரீப்


    
கடைசியில், இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது பதவியை நேற்று மே மாதம் ஒன்பதாம் திகதி ராஜினாமா செய்து விட்டார். இலங்கையில் எழுந்துள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் எதிரொலியாக, நாட்டின் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எதிராகக் கிளம்பிய பாரிய அழுத்தத்துக்கு மத்தியில் இந்தத் தீர்மானத்தைப் பிரதமர் எடுத்திருக்கிறார். இலங்கையின் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் பல தடவைகள் பதவி வகித்துள்ள மஹிந்த ராஜபக்‌ஷ தனது நீண்ட கால அரசியல் வாழ்க்கையை அவரே எதிர்பார்த்திராத ஒரு கணத்தில், எதிர்பார்த்திராத விதத்தில் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஏற்கெனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்து விட்டதாக நாடு முழுவதும் நான்கு தடவைகள் வதந்திகள் கிளம்பியிருந்த போதிலும், இப்போதுதான் அந்தத் தகவல் அவரது உத்தியோகபூர்வ கடிதத்தின் மூலம் உண்மையாகியிருக்கிறது.

    கடந்த வாரம் பொதுமக்கள் எழுச்சிப் போராட்டமானது, அரசாங்கம் ஒன்று கூடும் பாராளுமன்றத்தைத் தைரியமாக முற்றுகையிட்டமையும், நாடு தழுவிய ஹர்த்தாலும் இந்த ராஜினாமாவிற்கான பிரதான காரணம் என்று கூறலாம். அத்தியாவசிய உணவுகள், மருந்துகள் தட்டுப்பாடுகளின் காரணமாக நாளாந்தம் பொதுமக்கள் பலரும் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலை கண்டு அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்காக இந்தியா வழங்கிய பில்லியன்கணக்கான கடன்தொகையில் எழுபத்தைந்து சதவீதமளவு பணத்தைச் செலவழித்து இரும்பு, உருக்கைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளமை கண்டு கொந்தளித்துப் போன சட்டத்தரணிகளும், பல்கலைக்கழக மாணவர் பேரணியும், பொதுமக்களும்தான் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டிருந்தார்கள்.

 

   
அவ்வாறு முற்றுகையிட்ட மக்களை பல நாடுகளில் தடை செய்யப்பட்டதும், பல நூறு டாலர்கள் பெறுமதியானதுமான கொரியத் தயாரிப்பான N 500–CS Gas Hand Grenade வகை கண்ணீர்ப் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தி அரசாங்கம் தாக்கியது. 2019-2020 காலப்பகுதியில் சிலியிலும், 2020 இல் போர்ட்லன்டிலும் பயன்படுத்தப்பட்ட இந்த வகை கண்ணீர்ப் புகைக்குண்டுகளால் பெரும்பாலானோர் பார்வையிழந்துள்ளதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன. இலங்கையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வேளையில் பலரும் உடனடியாக மயங்கி விழுந்ததைக் காண முடிந்தது. இந்த வகைக் குண்டுத் தாக்குதல்களால் தோலில் கடுமையான எரிச்சல்களோடு ஆழமான காயங்களும், கண் பார்வையிழப்பு, சுவாசப் பிரச்சினை, மண்டையோட்டில் எலும்பு முறிவுகள் போன்றவையும் ஏற்படுவதனால் திடீர் மரணங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்திருப்பதோடு, குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் நீண்ட கால பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்திருக்கிறது.

    மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுகள், மருந்துகள், எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, பொதுமக்களின் பட்டினியைப் போக்குவதற்காக வெளிநாடுகள் வழங்கும் நிதியுதவிகளை இவ்வாறாக இரும்பும், உருக்கும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளும் கொள்வனவு செய்வதற்காகவா செலவழிக்க வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்ததோடு, பொதுமக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரியும் மறுநாள் மே மாதம் ஆறாம் திகதி நாடு முழுவதும் ஹர்த்தால் நடைபெற்றது. நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தமது வீடுகளுக்குள் முடங்கி இந்த ஹர்த்தாலில் பங்கேற்றார்கள். சர்வதேச அல்ஜசீரா தொலைக்காட்சி சேவையானது, ‘ராஜபக்‌ஷேக்களைத் துரத்த மொத்த இலங்கை மக்களும் வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள்’ என்று இந்த ஹர்த்தாலைக் குறித்து தெரிவித்ததைத் தொடர்ந்து சர்வதேச ஊடகங்களில் பிரதான செய்தியாக இந்த ஹர்த்தால் மாறியிருந்தது.

    அதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக நாடு முழுவதும் அவசர கால சட்டத்தை அமுல்படுத்திய நிலையிலேயே மஹிந்த ராஜபக்‌ஷ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால், இந்த ராஜினாமாவுக்கு முன்பாக, தனக்கு இப்போதும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்ட, ஆட்களைத் திரட்டி கொழும்பு, கண்டி போன்ற பிரதான நகரங்களில் அவர் செய்துள்ள ஒரு காரியத்தை காலத்துக்கும் மக்கள் மறக்க மாட்டார்கள்.


    
அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு சில மணித்தியாலத்துக்கு முன்பு, தனது கட்சியைச் சேர்ந்தவர்களையும், தனது ஆதரவாளர்களையும் சந்தித்து பிரதமராக தனது இறுதி உரையை ஆற்றியதோடு அதில் இன்று தான் மிக முக்கியமான ஒரு தீர்மானத்தை எடுக்கப் போவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து அரசாங்கத்துக்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். பேரூந்துகளும், வாகனங்களும் எரிக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்களின் இருப்பிடங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் நிலவும் இவ்வாறான கலவரச் சூழல் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஏற்பாடு என்றும், அதனால் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறே அமைதியான பொதுமக்கள் போராட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்கள் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவும் தெரிவித்திருக்கிறார்.

    இவ்வாறாக, பொதுமக்களுக்கு எதிராக எவ்வளவுதான் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதிலும் இன்று தைரியமாகப் போராடிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் மூலமாக ஒரு உண்மை வெளிப்பட்டிருக்கிறது. சர்வாதிகாரம் மீதும், இலங்கையைத் தீவிரவாதத்திலிருந்தும், யுத்தங்களிலிருந்தும் மீட்டதாக மார்தட்டிக் கொண்டிருக்கும் ‘ராஜபக்‌ஷேக்கள்’ எனும் அரசியல் குடும்பத்தின் மீதும் பொதுமக்களுக்கு இருந்த பேரச்சத்தை கடந்த பல மாதங்களாக இலங்கையில் உக்கிரமடைந்துள்ள நிதி நெருக்கடியும், இவ்வாறான தாக்குதல்களும் முழுவதுமாக நீக்கியிருக்கின்றன என்பதுவே அது.

 

   
பயம் நீங்கிய பொதுமக்கள் புதிய அரசியல் உத்வேகத்தையும், வலிமையையும் தற்போது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாகத் திரண்டெழுந்து பலம் வாய்ந்த அரசாங்கத்துக்கும், அதிகாரத்துக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் அத்திவாரத்தையே அசைக்க அவர்களால் முடிந்திருக்கிறது. இவ்வாறாக அரசியல்ரீதியாக சுறுசுறுப்பாகவும், விழுப்புணர்வோடுமுள்ள குடிமக்களையே ஜனநாயகத்தின் நிஜ ஆதாரமாகவும், உரிமையாளர்களாகவும் குறிப்பிடலாம். உண்மையில் தமது வாக்குகள் மூலம் பாராளுமன்றத்துக்கு ஆட்சியாளர்களை அனுப்பும் அவர்கள் வெறும் வாக்காளர்கள் மாத்திரமல்ல. வாக்களிப்பதோடு, நாட்டின் அரசியலில் பங்குகொள்ளும் உரிமையையும் அவர்கள் இவ்வாறாகக் கோருகிறார்கள். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் தமது கடமையைச் செய்யத் தவறும்போது தைரியமாகவும், நேரடியாகவும் அதனைத் தட்டிக் கேட்டு, பதவி விலகுமாறு அவர்களைக் கோருகிறார்கள்.

    அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை மீதான விவாதத்தை இன்று புதன்கிழமை நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், இந்த வாரம் பிரதமர் பதவி வெற்றிடமாவதைத் தொடர்ந்து உடனடியாக அமைச்சரவையும் கலைவதோடு, அனைத்து அமைச்சுப் பதவிகளும் கூட செயலிழந்து விடுகின்றன. ஆகவே புதிய பிரதமர் ஒருவரின் கீழ், புதிய அமைச்சரவையொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டியிருக்கிறது. வரலாற்றில் பதியப்படப் போகும் மாபெரும் அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்தியவாறு இலங்கையின் மக்கள் எழுச்சிப் போராட்டம் முதன்முறையாக இப்போது ஒரு விடியல் கீற்றைக் கண்டிருக்கிறது.


______________________________________________________

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 10.05.2022கட்டுரையை ஒலி வடிவில் கேட்க

No comments: