இலங்கையின் தேசிய கீதத்துக்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது. 1951 ஆம் ஆண்டு முதல், அமைச்சரவையால் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசிய கீதத்தை புகழ்பெற்ற இந்தியக் கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிக் கொடுக்க, அவரது சாந்தி நிகேதனில் கல்வி கற்ற இலங்கையைச் சேர்ந்த சிங்கள இசைக்கலைஞரான ஆனந்த சமரகோன் சிங்களத்தில் மொழிபெயர்த்தார். 1952 ஆம் ஆண்டில் அந்தப் பாடல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அறிஞரும், பண்டிதருமான புலவர் மு.நல்லதம்பியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அன்று முதல் பாடப்பட்டு வந்த அந்தத் தேசிய கீதத்துக்கு 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க ஆட்சியில் எதிர்ப்பு கிளம்பியது.
நாட்டில் அரசுக்கு எதிரான அரசியல் ஊர்வலங்கள், தொழிலாளர் வேலை நிறுத்தங்கள், இனவாத கலகச் செயற்பாடுகள், வெள்ளம், மண் சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஆகியவை தோன்றும்போதெல்லாம் அவை அனைத்துக்கும் காரணம் ‘நமோ நமோ மாதா’ என்று தொடங்கும் அந்தப் பாடல்தான் எனும் நியாயமற்ற கருத்தொன்று தலை தூக்கியிருந்தது. தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்குப் பிறகு 1961 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதமானது, 'ஸ்ரீலங்கா மாதா' என வரிகள் மாற்றப்பட்டே பாடப்பட்டது. இதைக் குறித்து மிகுந்த கவலைக்குள்ளாகியிருந்த ஆனந்த சமரகோன் பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மரணிப்பதற்கு முன்னர் Times of Ceylon பத்திரிகைக்கு கட்டுரையொன்றை எழுதியிருந்த அவர் அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
'தேசிய கீதத்தின் தலை அறுத்துப் போடப்பட்டுள்ளது. அதன் காரணமாக பாடல் அழிந்தது மாத்திரமல்லாமல் பாடலாசிரியனின் ஜீவிதமும் அழிந்து போயுள்ளது. நான் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகியிருக்கிறேன். என்னைப் போன்றதொரு நேர்மையான இசைக் கலைஞனுக்கு இவ்வாறானதொன்றைச் செய்த நாட்டில் இனிமேலும் வாழ வேண்டியிருப்பது மிகவும் துரதிஷ்டமானது. இதை விடவும் மரணம் சுகமானது.'
இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், பல்லாயிரக்கணக்கான மக்களின் போராட்டத்தினிடையே இன்று தேசிய கீதம் பற்றி எழுத நேர்ந்ததற்குக் காரணம் இருக்கிறது. கடந்த 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கடற்கரை போராட்டத் திடலில் பல்லாயிரக்கணக்கான போராளி மக்களின் பேராதரவோடு தேசிய கீதமானது தமிழில் பாடப்பட்டது. மக்களின் முன்னிலையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதைக் கேட்டதும், அதைப் பாட வேண்டாம் என்று ஒரு பௌத்த பிக்கு அந்த இடத்தில் தனது எதிர்ப்பினைத் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்த முற்பட்டார். உடனடியாக செயற்பட்ட அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பிக்குவிற்கு பல விடயங்களைத் தெளிவுபடுத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். ‘நாம் ஒரு தாய் மக்கள், அன்பால் சகல பேதங்களையும் இல்லாதொழிப்போம்’ என்ற அர்த்தம் கொண்ட தேசிய கீதத்தைச் சிங்கள மொழியில் பாடியவாறே தமிழ் பேசும் மக்களைத் தமது தாய்மொழியில் அதைப் பாட விடாமல் செய்வது என்னவிதமான அறம் என்பது அந்த பௌத்த பிக்குவுக்கும், தமிழில் பாடுவதை எதிர்க்கும் பெரும்பாலானோருக்கும் தெரியவில்லை.
பல தசாப்த காலமாக, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற சுதந்திர தின விழாக்களிலும், ஏனைய தேசிய நிகழ்வுகளிலும், உத்தியோகபூர்வ விழாக்களிலும் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டிருக்கிறது. இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மை இனத்தவர்களாக இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரைக் குறிப்பிடலாம். இந்தத் தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வசிக்கும் பிரதேசங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் தேசிய கீதமானது எப்போதும் தமிழிலேயே பாடப்பட்டு வந்தது.
இதை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை. எனவே 2010 ஆம் ஆண்டு அவரது ஆட்சியில், அமைச்சரவை அறிக்கை மூலமாக தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை செல்லுபடியற்றதாக்கி சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதத்தைப் பாடத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. மஹிந்த ராஜபக்ஷவின் அந்த முடிவை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி வன்மையாகக் கண்டித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு 2015 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்தும், தனது கட்சியிலிருந்தும், இனவாதிகளிடமிருந்தும் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் வழங்கி தேசிய கீதத்தைத் தமிழில் பாட அனுமதி வழங்கினார். தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மீண்டும் தேசிய கீதத்தை இலங்கையின் இரண்டாவது தேசிய மொழியான தமிழ்மொழியில் பாடுவதை முழுமையாகத் தடை செய்தார்.
ஒருவரால் தனது தாய் நாட்டின் மீதுள்ள இயல்பான அபிமானத்தின் அடிப்படையில், அதை நிர்ணயிக்கும் விதமாகப் பாடப்படும் தேசாபிமான உணர்வுகளைக் கொண்ட பாடலாக ஒரு நாட்டின் தேசிய கீதத்தைக் குறிப்பிடலாம். இலங்கையில் தேசிய ரீதியாக ஏதேனும் வைபவங்கள் நடைபெறும்போதெல்லாம் தேசிய கீதம் பாடப்படுவது வழமையாகவிருக்கிறது. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே அர்த்தத்தைக் கொண்ட தேசிய கீதம் உள்ள போதிலும், அவ்வாறான நிகழ்வுகளில் சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததுமே உத்தரவிட்டமை தமிழ் பேசும் மக்களின் மனம் நோகக் காரணமாயிற்று. இலங்கையில் தேசிய கீதத்தை விடவும், அது பாடப்படும் மொழிக்கேற்பவே நாட்டின் அமைதி, சமாதானம், தேசிய ஒற்றுமை ஆகியவை நிலைத்திருப்பதான ஜனாதிபதியின் நம்பிக்கை அதன் மூலமாக வெளிப்பட்டிருந்தது.
நாட்டின் ஜனாதிபதியேயானாலும், கௌரவத்துக்குரிய பௌத்த பிக்குவேயானாலும், இவ்வாறான இனவாதக் கருத்தைக் கொண்டவர்களாக அவர்கள் இருக்கும்போது அவர்களுக்கு எதிராக பொதுமக்கள் தற்போது வெகுண்டெழுந்துள்ளமை இங்கு பாராட்டத்தக்கது. தமிழ் பேசும் சிறுபான்மை இனத்தவர்கள் தமது தாய்மொழியில் தேசிய கீதத்தைப் பாடுவதைத் தடுப்பது என்பது அவர்களது உரிமைகளைப் பறித்தெடுத்து அவர்கள் மீது பிரயோகிக்கும் அடையாளத் தாக்குதலாகும். இந்த நாட்டில் அவர்களுக்கு உரிமையில்லை என்று பலவந்தமாக, நாட்டை விட்டுப் போகச் சொல்லும் தூண்டுதலாகும்.
இந்த மக்கள் எழுச்சி போராட்டத்தின் முடிவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு புதியதொரு ஆட்சி அமைக்கப்படும்பொழுது தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதற்கான உறுதியானதும், நிரந்தரமானதுமான தீர்மானம் எட்டப்பட வேண்டும். அனைவரும் போராடிப் பெறும் அந்த வெற்றியில் தமிழ் பேசும் மக்களின் மிகப் பெறுமதியான உரிமைகளில் ஒன்றான இந்தத் தீர்வானது, காலாகாலத்துக்கும் எவராலும் மாற்றப்பட முடியாத ஒன்றாக எப்போதும் இருத்தல் வேண்டும்.
______________________________________________________
No comments:
Post a Comment