கடந்த சில நாட்களில் இலங்கையில் மிக முக்கியமான அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, இரண்டு தினங்கள் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும் நாட்டில் வன்முறைகள் வெடித்தன. வீடுகளும், வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டதோடு, உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன. தெருக்களில் பல இராணுவ வாகனங்கள், ஆயுதந்தரித்த படையினரோடு உலா வந்து கொண்டிருந்ததோடு, அரச கட்டளைகளை மீறும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளும் அதிகாரம் இராணுவத்துக்கும், காவல்துறைக்கும் வழங்கப்பட்டிருந்தது. கொழும்பு காலிமுகத்திடல் ‘கோட்டாகோ’ கிராமத்தில் அமைதியாகப் போராடிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் உடனடியாக அவ்விடத்திலிருந்து நீங்க வேண்டும் என்று காவல்துறை ஒலிபெருக்கி வழியாக அறிவித்ததுமே, அருட்சகோதரிகளும், பௌத்த பிக்குகளும் பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்துகளும் நேராத வண்ணம் காவல்துறையும், இராணுவமும் பிரவேசிக்கக் கூடிய வழிகளில் காவல் தேவதைகளாக இரவு முழுவதும் அமர்ந்திருந்ததைக் காண முடிந்தது.
அதிகபட்ச அதிகாரங்களையுடைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி, பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு, முப்படைகள் மற்றும் போலிஸ் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்டங்களை இயற்றும் திறன் ஆகிய அனைத்தையும் கைவசம் வைத்திருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷவால் ஏவி விடப்பட்ட அந்த வன்முறைகளைத் தடுக்க உடனடியாக எவ்வித முயற்சிகளையும் எடுக்காமலிருந்ததோடு, பொதுமக்களுக்கு ஆதரவாகவோ, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவோ எவ்வித உரையையும் ஆற்றாமல் மறைந்திருந்தார். பிறகு, எதிர்க்கட்சிகளினதும், சர்வதேசத்தினதும் அழுத்தம் காரணமாக இரண்டு நாட்கள் கழித்து தொலைக்காட்சி வழியாக மக்களுக்கு ஆற்றிய உரையில், புதிய பிரதமர் ஒருவரையும், புதிய அமைச்சரவையொன்றையும் தான் நியமிக்கப் போவதாகத் தெரிவித்தார். நாட்டை திவாலாக்கி, நெருக்கடிக்குள்ளும் பஞ்சத்துக்குள்ளும் தள்ளியதற்கும், அண்மைய வன்முறைகளுக்கும் எவ்வித வருத்தத்தையும், மன்னிப்பையும் ஒரு ஜனாதிபதியாக அவர் கோரவில்லை. வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் மீது, தான் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மாத்திரம் தெரிவித்தார்.
என்றாலும், வன்முறைகளுக்கு முழுமையாகப் பொறுப்புக் கூற வேண்டிய அவரது சகோதரர் குடும்பத்தோடு திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருக்கிறார். அந்தக் குடும்பம் கப்பல் வழியாக வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முற்படுவதாக அறிந்து கொண்டதுமே நூற்றுக்கணக்கான மீனவர்கள் தமது படகுகளோடு கப்பலைச் சூழ்ந்து மறித்து நின்று அவர்களைத் தப்பிச் செல்லவிடாமல் செய்தார்கள். அதேவேளை, பொதுமக்கள் மீது வன்முறையை ஏவி விட்ட மஹிந்த ராஜபக்ஷ மீதும், அவரது கூலிப்படை மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் வரலாற்றில் முதற்தடவையாக மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பல அரசியல்வாதிகளுக்கும், பிரமுகர்களுக்கும் விசாரணைகள் முடியும்வரை வெளிநாடுகளுக்குச் செல்ல நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பிரதமர் இல்லாத நிலையில் இவ்வளவும் நடந்து கொண்டிருப்பதைக் கண்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கிணங்க, மிக நீண்ட அரசியல் அனுபவத்தைக் கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க கடந்த பன்னிரண்டாம் திகதி இலங்கையின் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஜனாதிபதி, ரணிலைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இருக்கிறது. கடந்த ஆட்சியிலும் பிரதமராகப் பதவி வகித்துத் தோல்வியுற்றிருந்த ரணில், ராஜபக்ஷ குடும்பத்தின் மிக நீண்ட கால நெருங்கிய நண்பர் என்பதனால், என்னதான் வெளிப்பார்வைக்கு ராஜபக்ஷ குடும்பத்தின் குற்றங்கள் மீது, தான் உக்கிரமாக இருப்பது போல அவர் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்கிடையில் நட்பு ரீதியான மென்மையான அணுகுமுறையே இருந்து வருகிறது. இது ராஜபக்ஷ குடும்பத்துக்கே சாதகமாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே, மக்களால் எப்போதும் தோல்வியுற்ற அரசியல் தலைவராகவே பார்க்கப்படும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இலங்கையின் மீட்பரென்றும், இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் அவர் தீர்த்து வைப்பார் என்றும் கருத முடியாது. அவர், இலங்கையின் சீரழிந்த அரசியலமைப்பில் நெடுங்காலமாக இருந்து வரும் ஒருவர் என்பது தவிர அவர் மீது பொதுமக்களுக்கு விஷேட வெறுப்போ, விருப்போ இல்லை. அவரையும், மஹிந்த ராஜபக்ஷவையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். என்றாலும், ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றதை பொதுமக்கள் கடுமையாக எதிர்க்காமல் இருப்பதற்கு முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன.
அவசரமாகவும், காலம் தாழ்த்தாமலும், இலங்கையில் ஓர் அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்ற இக்கட்டான நிலைமை முதன்மையான காரணி. இலங்கையில் பிரதமரோ, அரசாங்கமோ இல்லாத நிலைமை நீடித்தால், உணவு, மருந்து, எரிபொருள், மின்சாரம் என இலங்கை மக்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள் அனைத்தும் இன்னும் தீவிரமடையும். நாடு முழுவதும் வன்முறைகள் மேலோங்கி எவரும் தமக்குத் தேவையானவற்றைக் கொள்ளையடிக்க முற்படும் வாய்ப்புகள் அதிகரித்ததால், மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை என்பது அடுத்த முக்கிய காரணியாக இருந்தது. எனவே இவ்வாறான இக்கட்டான நேரத்தில், திவாலாகிப் போயுள்ள நாட்டைப் பொறுப்பேற்க தைரியமாகவும், நம்பிக்கையோடும் முன்வரும் ஒருவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டிய கட்டாயம் உருவானது.
இவ்வாறான நிலைமையில், நாட்டை மீண்டும் சாதாரண நிலைமைக்குக் கொண்டு வருவதை நாட்டிலுள்ள ஏனைய அரசியல்வாதிகளை விடவும் ரணிலால் மாத்திரமே சிறப்பாகச் செய்ய முடியும் என்பது மக்களின் நம்பிக்கையாகவிருக்கிறது. எதையும் பூசி மெழுகி மறைக்காமல், அடுத்த இரண்டு மாதங்களுக்கு நாட்டின் நெருக்கடி நிலைமை படுமோசமாக இருக்கும் என்று அவர் பதவியேற்ற பின்னர் மக்களுக்கு ஆற்றிய உரையில் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். அவருக்கு சர்வதேசத்திடமிருக்கும் வரவேற்பையும், நம்பிக்கையையும் பயன்படுத்தித்தான் அவர் இந்தச் சிக்கலைத் தீர்க்கக் கூடும். அனைத்து நாடுகளுடனும் நெருக்கத்தையும், சிறந்த நட்பையும் பேணி வரும் அவரால் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிடமிருந்தும் கடனுதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறான கடனுதவிகளாலும், அவசர மருத்துவ உதவிகளாலும் நாட்டைச் சில மாதங்களுக்குள் மீட்டு விட முடியும். அது இக்கட்டான இந்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க மிகப் பயனுள்ளதாக அமையும்.
என்றாலும், இதன் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தற்காலிகத் தீர்வு மாத்திரமே கிடைக்கும் என்பதையும் மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். தற்போதும் இலங்கையைத் தாங்க முடியாதளவு சர்வதேசக் கடன்கள் அழுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இன்னுமின்னும் கடனாளியாக ஆவதும், நாட்டின் இடங்கள் வெளிநாடுகளுக்கு வழங்கப்படுவதும் தொடர்ந்தும் நீடித்துக் கொண்டேயிருந்தால் அது எதிர்காலத்தில் இலங்கைக்கு சாதகமாக அமையுமா என்பது குறித்தும் மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இலங்கையின் மீட்சிக்கு நிரந்தரத் தீர்வு வேண்டுமானால், நாட்டுக்குள் உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும். இலஞ்சம், ஊழல், இன மத பேதமற்ற அரசியல்வாதிகளாலும், சட்டத்தை மதித்து நேர்மையாக நடக்கக் கூடிய பொதுமக்களாலும் மாத்திரமே அதைச் செய்ய முடியும். அவ்வாறான நீண்ட காலத் திட்டத்தில், பிரதமர் ரணிலின் செயற்பாடுகளில்தான் ரணிலின் பிரதமர் பதவி நிலைப்பது தங்கியிருக்கிறது. எனவே, புதிய பிரதமர் வந்ததுமே மக்கள் எழுச்சிப் போராட்டம் கலைந்து விடும் என்ற அரசின் எதிர்பார்ப்பைப் பொய்ப்பிக்கும் வகையில் தற்போதும் தொடர்ந்தும் மக்கள் எழுச்சிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது.
______________________________________________________
No comments:
Post a Comment