Saturday, April 9, 2022

இலங்கையில் தீவிரமாகும் ‘மக்கள் எழுச்சி’ போராட்டம் - எம். ரிஷான் ஷெரீப்

    இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வரும், அமைச்சருமான நாமல் ராஜபக்‌ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் ஒன்றாகப் பதவி விலகியிருக்கிறார்கள். உடனடியாக அமைச்சுகளைப் பொறுப்பேற்கவும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியை முடிவுக்குக் கொண்டு வரவும் தன்னுடன் இணையுமாறு ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரியிருக்கிறார். இவ்வாறாக இலங்கை அரசியல் வரலாற்றில் புதியதொரு மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது இந்த மக்கள் எழுச்சி.

    மக்கள் எழுச்சி போராட்டம் தொடங்கியதன் பிறகு ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி முதன்முதலாக பாராளுமன்றம் கூடியதும் பாராளுமன்றத்துக்குச் செல்லும் வழியில் மக்கள் ஒன்று கூடத் தொடங்கினார்கள். இதனால் அச்சமுற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இரவு வேளையில் பாராளுமன்றத்தின் பின்வாசல் வழியாக வெளியேற நேர்ந்தது. சாகும்தருவாயிலுள்ள நாயின் உடலிலிருந்து உண்ணிகள் மெதுவாக அகன்று விடுவதைப் போல, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் அரசியல் வாழ்க்கை முடியப் போவதை அறிந்து கொண்ட கூட்டணிக் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்கள். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் சில தினங்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இவ்வளவு காலமும் இல்லாத அளவுக்கு இலங்கை அரசியலில் இவ்வாறான பாரிய மாற்றம் ஏற்பட, இலட்சக்கணக்கான பொதுமக்கள் ஒன்றாகத் திரண்ட மக்கள் எழுச்சிதான் காரணமாகும். கடந்த வாரம் முதல் இலங்கையில் மாத்திரமல்லாமல் சர்வதேசம் முழுவதும் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக தாம் வசிக்கும் இடங்களின் பிரதான நகரங்களில் பொதுமக்கள் இரவும், பகலும் வெயிலிலும், மழையிலும் ஒன்று திரண்டிருக்கிறார்கள். சர்வதேச ஊடகங்களின் பிரதான செய்திகளில் இந்த மக்கள் எழுச்சியும், இலங்கை ஜனாதிபதிக்கெதிரான கோஷங்களும் இடம்பெற்றிருக்கின்றன.


    என்னதான் அவசர கால சட்டத்தை பிரகடனப்படுத்தியிருந்தும், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை விதித்திருந்தும், சமூக வலைத்தளங்களைத் தடை செய்திருந்தும் அனைத்து சமூகங்களையும், மதங்களையும் சேர்ந்த மக்கள் ஒன்றாக, அன்று பிறந்த குழந்தைகளைக் கூட கைகளில் ஏந்தியவாறு இரவும், பகலுமாக தெருவிலிறங்கி கோஷங்களை எழுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த மக்கள் அனைவருமே சுயேச்சையாகத்தான் ஒன்று திரண்டிருக்கிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். எந்த அரசியல் கட்சியையோ, அமைப்பையோ, இனத்தையோ, சமூகத்தையோ சார்ந்தவர்களாக எவருமில்லை. சுயேச்சையான இந்த மக்கள் போராட்டத்தைத் தமது கட்சியின் போராட்டமாகச் சித்தரித்துக் கொள்வதற்காக தெருக்களில் நடைபெறும் போராட்டங்களில் கலந்துகொள்ள வந்த அமைச்சர்களையும், எதிர்க்கட்சி அமைச்சர்களையும், பௌத்த பிக்குகளையும் பொதுமக்கள் கூச்சலிட்டு, விரட்டியடித்திருக்கிறார்கள். இவ்வாறானதொரு பிரமாண்டமானதும், ஒருமித்ததுமான மக்கள் எழுச்சி இதுவரை இலங்கையில் நிகழ்ந்ததேயில்லை.

    உண்மையில், உயிர் வாழ்வதற்காக மக்கள் படும் சிரமங்கள்தான் பொதுமக்களை இவ்வாறு ஒன்றுகூடச் செய்திருக்கின்றன. அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள அனுபவிக்க வேண்டியிருக்கும் இன்னல்கள்தான் அரசாங்கத்துக்கு எதிராக அவர்களைக் கிளர்ந்தெழச் செய்திருக்கின்றன. அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகுவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்பைப் பொய்ப்பித்து ஜனாதிபதி அதே அமைச்சர்களை அழைத்து வேறு பிரதானமான அமைச்சுப் பொறுப்புகளை அவர்களுக்கு வழங்கியுள்ளமை மக்களை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர்களினதும், நெருங்கிய உறவினர்களினதும், நண்பர்களினதும் குடும்பங்கள் இரவோடிரவாக வேறு நாடுகளுக்குத் தப்பித்துப் போய் விட்டதுமே, அவர்கள் அவ்வளவு காலமும் கொள்ளையடித்த மக்கள் சொத்துக்களையும் களவாக எடுத்துச் சென்றுள்ளார்களா என்ற கேள்வி மக்களுக்குள் எழுந்துள்ளது. இதற்காகவா கோடிக் கணக்கான மக்கள் தெருவிலிறங்கிப் போறாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.

    ஆகவே மக்கள் ஒன்றாகத் திரண்டு ஜனாதிபதியினதும், பிரதமரினதும், அமைச்சர்களினதும் வீடுகளையும், பாராளுமன்றத்தையும் முற்றுகையிட்டிருக்கிறார்கள். இவற்றைக் கண்டு இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், அரசியல்வாதிகளும், அவர்களுக்கு சார்பான அதிகாரிகளும் இன்று பயந்து போயிருக்கிறார்கள். எந்தளவுக்கென்றால், மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்து பதவி விலகியுள்ள ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் நாமல் ராஜபக்‌ஷ, பசில் ராஜபக்‌ஷ, சமல் ராஜபக்‌ஷ, சசீந்திர ராஜபக்‌ஷ ஆகியோர் புதிய அமைச்சரவையில் தாம் பதவிகள் எவற்றையும் ஏற்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஜனாதிபதியும் உடனடியாக அவசர கால சட்டத்தை நீக்கியிருக்கிறார்.

   தற்போதைய ஜனாதிபதியையும், பிரதமரையும், அவர்களது அடிவருடிகளான அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரையும் முற்றுமுழுதாக பதவிகளிலிருந்து அகற்றி விட்டு, பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, தொழில்நுட்பம் உட்பட அனைத்து பிரதான அமைச்சுகளிலும், துறைகளிலும் அறிவும், நிபுணத்துவமும் கொண்ட தகுதி வாய்ந்த இளைஞர்களைப் பதவியில் அமர்த்தத்தான் மக்கள் இவ்வளவு தூரம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு காலமும் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து, பொதுச்சொத்துக்களை தமது ஊழல்களுக்குப் பயன்படுத்தி, மோசடி செய்து முறையற்ற விதத்தில் செல்வத்தைக் குவித்து, நாட்டைக் கடனுக்குள்ளாக்கிக் கறுப்புப் பணத்தை சம்பாதித்து இலங்கையை வறுமைக் கோட்டுக்குள் தள்ளியிருக்கும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உட்பட அனைவரையும் சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை வழங்கி அவர்களது அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கிய பிறகுதான் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கும் இடமளிக்க வேண்டும் என்பதுதான் மக்கள் எழுச்சியின் தற்போதைய இலக்காக இருக்கிறது.

    இலங்கையில் இன்று தீவிரமாகியிருக்கும் இந்த ‘மக்கள் எழுச்சி’ போராட்டமானது, மக்களை இந்த நெருக்கடிக்குள் தள்ளிய அரசாங்கத்துக்கும், அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் எதிரான போராட்டம் ஆகும். காவல்துறையாலும், இராணுவத்தாலும் எவ்வேளையிலும் கைது செய்யப்படக்கூடுமான, சித்திரவதை செய்யப்படக்கூடுமான ஒரு சூழ்நிலையில் பொதுமக்கள் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தெருவிலிறங்கியும், வீடுகளிலும், வாகனங்களிலும் கறுப்புக் கொடியைத் தொங்க விட்டும் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.



    இலங்கையில் இன்று தெருக்கள் முழுதும் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளமானது, இன்னும் பெருக்கெடுத்து வழிந்தோடி ஊழல் பெருச்சாளிகளை விரைவில் இல்லாதொழிக்கும் என்று நம்பலாம். அந்த வெள்ளத்தில் அனைத்து அழுக்குகளும் கழுவப்பட்டுப் போய் நாடே தூய்மையாகி விடும். இந்த மக்கள் எழுச்சிக்குப் பிறகு, ஜனநாயகமும், ஊடக சுதந்திரமும், மனித உரிமைகளும் பேணப்படக்கூடிய நாடு உருவாகும். தமது உரிமைகளுக்கு எதிரான சூழ்ச்சிகளை இனங்கண்டு அடக்குமுறையாளர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கும் தைரியமுள்ள மக்கள் உருவாகுவார்கள். இந்த மாற்றங்கள் உடனடியாக ஏற்படா விட்டாலும், வருங்காலத்தில் அது நிச்சயமாக நடக்கும். இன்று போராடிக் கொண்டிருக்கும் அனைத்து மக்களினதும் சந்ததிகள் அன்று அவ்வாறான உரிமைகளையும், சந்தோஷத்தையும், நிம்மதியையும் நிச்சயமாக அனுபவிப்பார்கள்.

    ஜனநாயகத்திற்காக பொதுமக்கள் ஒன்று திரண்டிருக்கும் இந்தப் போராட்டம் ஆனது, இலங்கை போன்ற ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளுள்ள, பலவீனமான ஆட்சியுள்ள, மோசடிகளும், ஊழல்களும், சர்வாதிகாரமும் நிறைந்த, இனவாதத்தைப் பரப்பி மக்களிடையே குரோதத்தை வளர்க்கும் அனைத்து நாடுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கக் கூடும்.

________________________________________________________________________________


mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 07.04.2022



இந்தக் கட்டுரையை ஒலி வடிவில் கேட்க







Wednesday, April 6, 2022

இலங்கை ஜனாதிபதியின் சர்வாதிகாரப் போக்கு - எம். ரிஷான் ஷெரீப்

    இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவைப் பதவி விலகக் கோரி அனைத்துப் பொதுமக்களும் ஒன்று திரண்டு நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த மார்ச் 31 ஆம் திகதி முன்னிரவில் கொழும்பு, மிரிஹானையிலுள்ள ஜனாதிபதி மாளிகையைச் சூழவும் பொதுமக்கள் தமது கைக் குழந்தைகளையும் சுமந்து கொண்டு மெழுகுதிரிகளையும், ஜனாதிபதியைப் பதவி விலகக் கோரும் பதாகைகளையும் ஏந்திக் கொண்டு அமைதியாகப் போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஆயுதங்களோ, தடிகளோ இருக்கவில்லை. எந்தக் கட்சியையும் சாராமல் சுயமாக ஒன்று சேர்ந்த அந்த மக்கள் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும், துப்பாக்கி வேட்டுகளையும் பயன்படுத்தியது இலங்கை காவல்துறை. ஜனாதிபதியின் இல்லத்துக்குச் செல்லும் பாதைக்குக் குறுக்காக ஒரு பேரூந்து நிறுத்தப்பட்டு அதை இனந்தெரியாத ஒருவர் பற்ற வைக்கும் காணொலிகளும், போலிஸ் வாகனமொன்றைப் பற்ற வைக்கும் காணொலிகளும் சர்வதேச ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவத் தொடங்கின. உடனடியாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு 'தீவிரவாதிகள் ஒன்று கூடித் தாக்குதல் நடத்தினர்' என்று அறிவிக்க, காவல்துறையும், இராணுவமும் அங்கிருந்த மக்களைக் கண்மூடித்தனமாகச் சுடவும், தாக்கவும், கைது செய்யவும் தொடங்கின. அந்த வாகனங்களைப் பற்ற வைக்கும் போதோ, அவை பற்றியெரியும்போதோ காவல்துறையோ, இராணுவமோ அவற்றை அணைக்க எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

   
ஒரு நாளைக்கு பதினைந்து மணித்தியாலங்களுக்கும் மேலான மின்சாரத் தடை காரணமாக மருத்துவமனைகளில் அவசர சத்திரசிகிச்சைகள் பலவும் கைபேசி வெளிச்சத்தில்தான் செய்யப்படுகின்றன எனும்போது இலங்கையில் தற்போது மக்கள் எதிர்கொண்டிருக்கும் நிலைமையின் தீவிரம் உங்களுக்கு விளங்கும். பெற்றோல், டீசல், சமையல் எரிவாயு இல்லாமல் நாட்டில் எதுவும் இயங்குவதில்லை. போதாதற்கு அத்தியாவசிய உணவுகளின் தட்டுப்பாடு மக்களின் கழுத்தை பட்டினியால் நெறித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் மக்கள் இவ்வாறேனும் அமைதியான போராட்டங்களை முன்னெடுக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். தற்போது தெருக்களில் ஒன்றுகூடும் பொதுமக்களின் மனங்களில் ஒரேயொரு நோக்கம்தான் இருக்கிறது. பட்டினியற்ற, சுமுகமாக உயிர் வாழத் தேவையான சூழலுடன் கூடிய, வரிசைகளில் பொதுமக்கள் விழுந்து மரணிக்காத அமைதியான நாடொன்றுதான் அவர்களது இலக்கு.

    இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடிக்கு முதலில் பொறுப்புக் கூற வேண்டியவர் நாட்டின் ஜனாதிபதிதான். உண்மையில் கோத்தாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக ஆக்க 69 இலட்சம் வாக்குகளையளித்த மக்களிடையே ஜனாதிபதி மீது மூன்று விதமான நம்பிக்கைகள் இருந்தன. அவர்தான் முப்பதாண்டு கால யுத்தத்தை வென்றார் என்பது ஒன்று. இரண்டாவது, சிங்கப்பூரை ஒப்பிட்டு நகர அபிவிருத்தி தொடர்பாக அவர் முன்வைத்த வாக்குறுதிகள். மூன்றாவது அவர் முன்னர் அரசியல்வாதியாக இருக்கவில்லை என்பதால் தைரியமாகவும், நேர்மையாகவும் ஆட்சி நடத்துவார் என்பது.

    ஒரு நாட்டை ஆளுவதற்கு இந்தத் தகுதிகள் போதுமானதா என்று மக்கள் அப்போது யோசிக்கவில்லை. ராஜபக்‌ஷ குடும்பத்தின் அரசியல் கொள்கை இனவாதத்தையும், மத வெறியையும் பரப்பி சர்வாதிகார ஆட்சியை மேற்கொள்வதல்லாமல் நாட்டை முன்னேற்றுவது அல்ல என்பதை அப்போது மக்கள் அறிந்திருக்கவில்லை. அந்தக் குடும்பத்தின் பொருளாதாரக் கொள்கை என்பது இயன்றளவு ஊழல்களைச் செய்து தமது குடும்பத்துக்குத் தேவையான சொத்துகளைச் சேர்த்துக் கொள்வதுதான் என்பதையும் மக்கள் அறிந்திருக்கவில்லை. இதுவரை ஒரு சதம் கூட பாடுபட்டு உழைத்துச் சம்பாதித்திராத அந்தக் குடும்பத்தின் வாரிசு ஒருவர் கடந்த மாதம் மக்கள் பணத்தில் முப்பத்தைந்து இலட்சம் ரூபாய்களைச் செலவழித்து ஓவியமொன்றை வாங்கியிருக்கிறார் எனும்போது இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான மூல காரணம் உங்களுக்கு விளங்கும்.

    ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு வருட காலத்துக்குள் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டிருந்த கொலைகாரர்களும், ஊழல்வாதிகளுமான அரசியல்வாதிகள் அனேகமானவர்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததோடு, அவர்களுக்கு உயர் பதவிகளையும் வழங்கியுள்ளார். இவ்வாறாக ஜனாதிபதி மீது வைத்திருந்த நம்பிக்கைகள் அனைத்தும் இப்போது முழுமையாகப் பொய்த்துப் போயுள்ள நிலைமையிலேயே மக்கள் தெருவில் இறங்கியிருக்கிறார்கள்.

    இம்மாதம் மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதிலுமுள்ள இலட்சக்கணக்கான பொதுமக்கள் தெருவிலிறங்கி போராட்டம் நடத்தப் போகும் தகவல் தெரிய வந்தவுடனேயே இரண்டாம் திகதி மாலை ஆறு மணியிலிருந்து திங்கட்கிழமை காலை ஆறு மணி வரை ஜனாதிபதி நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்திருந்தார். நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அனைத்து சமூக வலைத்தளங்களையும் முடக்கினார். தொடர்ந்து தனக்கெதிராகக் கிளம்பியுள்ள இவ்வாறான எதிர்ப்புகளைக் கண்டு பதற்றமுற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ இம் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசர கால சட்டத்தை நாட்டில் பிரகடனப்படுத்தி அதிவிஷேட அரசாங்க அறிவித்தலொன்றை வெளியிட்டதோடு அந்தச் சட்டத்தைப் பிரயோகித்து அறுநூறுக்கும் அதிகமான பொதுமக்களைக் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இந்த அவசர கால நிலைமையின் போது மக்கள் ஒன்று கூடுவதற்கான, கருத்துகளைத் தெரிவிப்பதற்கான, ஒரு குழுவாக சேர்வதற்கான, நடமாடுவதற்கான, தொழில் புரிவதற்கான உரிமைகளும், சமயம், கலாசாரம், மொழி ஆகியவற்றுக்கான உரிமைகளும் மட்டுப்படுத்தப்படுகின்றன. அத்தோடு பிடியாணையின்றியே எவரையும் கைது செய்யும் அதிகாரமும், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரமும் காவல்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சந்தேக நபர்களை எவ்வளவு காலமும் தடுத்து வைக்கலாம், சந்தேக நபர்களின் வாக்குமூலங்களை சாட்சிகளாகப் பயன்படுத்தலாம், தேடுதல் ஆணையில்லாமலே எந்த இடத்திலும், எந்தக் கட்டடத்திலும் தேடுதல்களை காவல்துறை மேற்கொள்ளலாம், எவரினதும் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை அரச கட்டுப்பாட்டில் எடுக்கலாம் ஆகியவற்றோடு சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளையும், தேவையான விசாரணைகளை மேற்கொள்ளவும் இராணுவப் பாதுகாப்புப் படைக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. அத்தோடு சட்ட மா அதிபரின் அனுமதியின்று சந்தேக நபர்களைப் பிணையில் செல்ல அனுமதிக்கவோ, விடுதலை செய்யவோ நீதவானுக்கு அதிகாரமில்லை போன்ற சர்வாதிகார விதிமுறைகள் அந்த அதிவிஷேட அரசாங்க அறிவித்தலில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

    இலங்கை குறித்து சர்வதேசத்திலிருந்து எழுந்திருக்கும் அழுத்தங்கள் மற்றும் தனக்கு எதிரான மக்களின் எதிர்ப்பைத் தடுத்து நிறுத்தவே ஜனாதிபதியால் இவ்வாறெல்லாம் செய்யப்படுகின்றன என்பது எவருக்கும் விளங்கும். இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாகவே இயக்கங்களாலும், அரசியல்கட்சிகளாலும் வழிநடத்தப்பட்ட இலட்சக்கணக்கான தேசப்பற்று மிக்க இளைஞர்கள் இலங்கை அரசின் தீவிரவாத முத்திரையின் கீழ் உயிர்ப் பலி கொடுக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

    உண்மையில் தேசப்பற்று மிக்க இன்றைய இளைஞர் தலைமுறைக்கு இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளையும், நெருக்கடிகளையும் தாங்கிக் கொள்ள முடியாதிருக்கிறது. வருங்காலத்தில் தேசத்தைப் பொறுப்பேற்கக் காத்திருப்பவர்கள் அவர்கள். பல தசாப்தங்களாக இலங்கை இழந்து கொண்டிருக்கும் இளைஞர் சக்தி, அவர்களது பலம், உத்வேகம் ஆகியவற்றின் காரணமாகத்தான் ஊழல் மிகுந்த முதிய அரசியல்வாதிகள் இப்போதும் இலங்கையை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்து விடவில்லை. எனவேதான் தெருவிலிறங்கி தமது தாய்நாட்டை தற்போதைய ஆட்சியிலிருந்து மீட்க அமைதியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் மீண்டும் மீண்டும் இளைஞர்களைப் பலி கொடுக்க நேர்ந்திருக்கும் கொடூரமான நிலைமையானது, இனியும் ஜனாதிபதியின் இந்த சர்வாதிகாரப் போக்கால் நேருவதற்கு இடமளிக்கக் கூடாது.

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 05.04.2022

புகைப்படங்கள் - shutterstock 


இந்தக் கட்டுரையை ஒலி வடிவில் கேட்க






Sunday, April 3, 2022

இந்தியாவின் ஆதிக்கத்துக்கு உள்ளாகுமா இலங்கை? - எம். ரிஷான் ஷெரீப்

    இந்த வாரம் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயஷங்கர் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரதானமான ஆறு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளமை மிக முக்கியமான மாற்றத்தை இலங்கையில் ஏற்படுத்தப் போகிறது என்று எதிர்வு கூறலாம். அந்த ஆறு உடன்படிக்கைகளாலும் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு இடையூறும், அச்சுறுத்தலும் ஏற்படும் என்று சில ஊடகங்கள் தவறாகச் சித்தரித்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த ஆறு ஒப்பந்தங்களையும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்.

1. இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள முறைமையை அமுல்படுத்துதல்.

2. கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை

3. யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள அனலை தீவு, நெடுந்தீவு மற்றும் நைனா தீவு ஆகிய மூன்று தீவுகளிலும் கலப்பு மின்சக்தித் திட்டங்களை அமுல்படுத்துதல்.

4. இலங்கையில் மீன்பிடித் துறைமுகங்கள் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பை நல்குதல்.

5. காலி மாவட்டத்திலுள்ள இருநூறு பாடசாலைகளில் பிரத்தியேகமான கல்வி மென்பொருளுடன் கூடிய ஸ்மார்ட் அட்டைகளோடு நவீன கணினி ஆய்வு கூடங்களை ஸ்தாபித்தல்.

6. வெளிநாட்டு சேவைக்கான சுஷ்மா ஸ்வராஜ் நிலையம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிலையம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

    இவற்றுள் இரண்டாவது உடன்படிக்கையான கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது, இந்திய அரசாங்கத்தின் ஆறு மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியோடு இலங்கையில் நிறுவப்படவுள்ளது. இதன் மூலம் இந்திய உளவு விமானங்கள் இலங்கை வானத்தைப் பயன்படுத்தும். இதை இலங்கையின் கடல் மற்றும் வான் பாதுகாப்பை இந்தியாவுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்வதாகக் கருதலாம். கடற்பரப்பில் பாதிப்புக்குள்ளாகும் கப்பல்களின் பாதுகாப்பை சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைய உறுதிப்படுத்தவும், இப்பிராந்தியத்தியத்திற்குள் பாதிப்புக்குள்ளாகும் கப்பல்கள் தொடர்பான தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கும் இந்த நிலையமானது மிகவும் அவசியமானதாகும். மூன்றாவது உடன்படிக்கையை முன்பே இலங்கை சீனாவுடன் மேற்கொண்டிருந்தது. இப்போது சீனாவுடனான ஒப்பந்தத்தை முறித்து, அப்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்தியாவிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைப்பதன் மூலம் சீனாவைக் கோபித்துக் கொள்ள நேரிடும் என சர்வதேச சமூகம் குரலெழுப்புகிறது. நான்காவது உடன்படிக்கையின் மூலம் இலங்கையிலுள்ள அனைத்து மீன்பிடித் துறைமுகங்களையும் இந்தியா எவ்விதத் தடங்கலும் இல்லாமல் அணுகலாம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    

    உண்மையில் இந்த உடன்படிக்கைகளைக் கடந்த ஆட்சியில் செய்திருந்தால் தற்போது இலங்கையை ஆளுபவர்கள் இந்திய விஜயத்தையும், இந்த உடன்படிக்கைகளையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருந்திருப்பார்கள். பௌத்த பிக்குகள் கூட தெருவிலிறங்கி ஆர்ப்பாட்டங்களைச் செய்திருப்பார்கள். எது எவ்வாறானாலும், இந்த ஆறு உடன்படிக்கைகளாலும் இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கு ஒருபோதும் எவ்விதமான ஆபத்தும் ஏற்படாது என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்திருக்கிறது. என்றாலும் இந்த ஆறு உடன்படிக்கைகளாலும் பேராபத்து இலங்கையைச் சூழும் என்று இலங்கையிலுள்ள இந்திய விரோத சக்திகள் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறிக் கொண்டேதான் இருக்கின்றன.

    இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியானதும், இக்கட்டானதுமான சூழ்நிலையில் இலங்கை போன்ற எந்தவொரு சிறிய நாட்டிற்கும் பலம் மிக்க அண்டை நாடொன்றின் அரவணைப்பு அத்தியாவசியமானதாகும். கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் தனித்த தீவான இலங்கையை மீட்டெடுக்கவும், பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுவிக்கவும் எந்த நாடாவது உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்ற நிலையில் அதை அருகிலேயே இருக்கும் இந்தியா செய்ய முன்வந்திருப்பது பாராட்டப்பட வேண்டியதுவும், வரலாற்று முக்கியத்துவம் மிக்கதுமான நிகழ்வாகும். இன்றைய நிலையில் சிறந்த வளர்ச்சியை எட்டியுள்ள நாடாகக் கருதப்படக் கூடிய இந்தியா போன்ற ஆளுமை மிக்க நாடொன்று இலங்கைக்குப் பாதுகாப்பளிப்பதையும், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவதையும் இவ்வாறாக உறுதி செய்து விட்டால், சீனா போன்ற தந்திரமான நாடுகள் எளிதில் இலங்கையிடம் வாலாட்டாது. அண்மைக்காலமாக இலங்கையில் சீனாவானது மிகுந்த நெருக்கடியான சூழ்நிலைகளை ஏற்படுத்தி வருகிறது.

    கடந்த 2005 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் இந்தியாவையும், மேற்கு நாடுகளையும் கையாளுவதற்காகவும், உள்நாட்டுப் பிரச்சினைகளிலும், வர்த்தகத்திலும், பொருளாதாரத்திலும் சீனாவையே சார்ந்திருந்தது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில் சீனாவுடன் நெருக்கமான உறவு பேணப்பட்டதோடு, அப்போது நாட்டில் சீனாவால் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கியிருந்தது. பிறகு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் அவர் சீனாவை இலங்கையுடன் அவ்வளவாக நெருங்க விடவில்லை. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ சீனாவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி இலங்கையின் அரசியல், அபிவிருத்தி, சமூக, பொருளாதார, இராணுவ விடயங்களில் சீனாவைச் சார்ந்திருக்கத் தொடங்கியதே சீனாவின் செல்வாக்கு இலங்கையில் மேலோங்கி இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறியதற்கு காரணம் என்று கூறலாம். இதை ‘ராஜபக்‌ஷேக்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சீனாவின் செல்வாக்கு இலங்கையில் மேலோங்கி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது’ என்றும் கூறலாம்.



    எனவே இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகையை இலங்கை அரச தலைமைகள் அனைத்தும் தக்க தருணத்திலான பேருதவியாகவே பார்க்கின்றன. இலங்கையின் பொருளாதார சீர்குலைவை சீரமைக்க இந்தியா தொடர்ந்தும் உதவி செய்யும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அண்மையில் இந்திய கடனுதவிக்குப் பிறகு நிகழ்ந்த இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமான கலந்துரையாடல் குறித்தும், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆகியவற்றிலான ஒத்துழைப்பு, மீன் பிடித்தலிலுள்ள பிரச்சினைகள் ஆகியவை குறித்தும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார். அத்தோடு இலங்கையிலுள்ள பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் அமைச்சர் கலந்துரையாடினார். இவற்றுள் முக்கியமான ஒரு நிகழ்வாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேசியதைக் குறிப்பிடலாம். இதுவரை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்த போது எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்துப் பேசியதில்லை. தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ பதவி விலக நேர்ந்தால், அடுத்த ஜனாதிபதியாக வரும் வாய்ப்பு எதிர்க்கட்சித் தலைவருக்கே உள்ள சூழ்நிலையில் அவருடனான சந்திப்பு அண்மைய இந்திய உடன்படிக்கைகளைப் பலப்படுத்தும் என்று நம்பலாம்.

    இந்தியா உதவி செய்வதாலும், புலம்பெயர்ந்துள்ளவர்களிடம் இலங்கை அரசு உதவிகள் எதிர்பார்ப்பதாலும் இலங்கைத் தமிழர்கள் உட்பட சிறுபான்மை சமூகத்துக்கு ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறது. இந்தியா செய்யும் நிதியுதவிகள் மூலம் நிறுவப்படவிருக்கும் நிலையங்கள் சிறுபான்மையினர் செறிந்து வாழும் இடங்களில் அமைக்கப்படவிருப்பதால் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அதிகளவான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் சாத்தியம் அதிகம். அவ்வாறே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்துள்ளவர்களில் அநேகமானவர்கள் தமிழர்கள் என்பதால், அவர்கள் இலங்கையில் தொழில்முயற்சிகளில் முதலீடு செய்ய முன்வரும்போது அவற்றிலும் அதிகமான தொழில்வாய்ப்புகள் தமிழர்களுக்கு வழங்கப்படக் கூடும். அத்தோடு இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளில் புலம்பெயர்ந்தவர்களின் ஆளுமை மேலோங்கும்.

    இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான, நெருக்கடியான சூழ்நிலையில் அயல் நாடான இந்தியா இவ்வாறாகவாவது உதவி செய்வதை வரவேற்க வேண்டும். இலங்கையில் தற்போது தட்டுப்பாடாக இருக்கும் உணவு, எரிபொருள், மருந்து, மின்சாரம் போன்ற அத்தியாவசிய விடயங்களில் இந்தியா தலையிட்டு உதவி செய்ய முன்வருவதைப் பாராட்ட வேண்டும். மருந்துத் தட்டுப்பாட்டின் காரணமாக இலங்கையின் அரசாங்க மருத்துவமனைகளில் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதைக் கேள்விப்பட்டு அது குறித்துக் கேள்வியெழுப்ப இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுந்த துணிச்சல் கூட இலங்கையின் அமைச்சர்களுக்கு இருக்கவில்லை. ஆகவே பொதுமக்கள் இப்போது தம்மை ஆளுவது யார் என்பதைப் பார்ப்பதில்லை. தம்மை யார் ஆதிக்கத்துக்குள்ளாக்கப் போகிறார்கள் என்றெல்லாம் யோசிப்பதில்லை. தம்மை நிம்மதியாகவும், சந்தோஷமாகவும், பட்டினியின்றியும் யார் வாழச் செய்யப் போகிறார்கள் என்பதை அறியத்தான் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 01.04.2022

புகைப்படங்கள் - shutterstock 


இந்தக் கட்டுரையை ஒலி வடிவில் கேட்க