Wednesday, April 6, 2022

இலங்கை ஜனாதிபதியின் சர்வாதிகாரப் போக்கு - எம். ரிஷான் ஷெரீப்

    இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவைப் பதவி விலகக் கோரி அனைத்துப் பொதுமக்களும் ஒன்று திரண்டு நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த மார்ச் 31 ஆம் திகதி முன்னிரவில் கொழும்பு, மிரிஹானையிலுள்ள ஜனாதிபதி மாளிகையைச் சூழவும் பொதுமக்கள் தமது கைக் குழந்தைகளையும் சுமந்து கொண்டு மெழுகுதிரிகளையும், ஜனாதிபதியைப் பதவி விலகக் கோரும் பதாகைகளையும் ஏந்திக் கொண்டு அமைதியாகப் போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஆயுதங்களோ, தடிகளோ இருக்கவில்லை. எந்தக் கட்சியையும் சாராமல் சுயமாக ஒன்று சேர்ந்த அந்த மக்கள் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும், துப்பாக்கி வேட்டுகளையும் பயன்படுத்தியது இலங்கை காவல்துறை. ஜனாதிபதியின் இல்லத்துக்குச் செல்லும் பாதைக்குக் குறுக்காக ஒரு பேரூந்து நிறுத்தப்பட்டு அதை இனந்தெரியாத ஒருவர் பற்ற வைக்கும் காணொலிகளும், போலிஸ் வாகனமொன்றைப் பற்ற வைக்கும் காணொலிகளும் சர்வதேச ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவத் தொடங்கின. உடனடியாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு 'தீவிரவாதிகள் ஒன்று கூடித் தாக்குதல் நடத்தினர்' என்று அறிவிக்க, காவல்துறையும், இராணுவமும் அங்கிருந்த மக்களைக் கண்மூடித்தனமாகச் சுடவும், தாக்கவும், கைது செய்யவும் தொடங்கின. அந்த வாகனங்களைப் பற்ற வைக்கும் போதோ, அவை பற்றியெரியும்போதோ காவல்துறையோ, இராணுவமோ அவற்றை அணைக்க எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

   
ஒரு நாளைக்கு பதினைந்து மணித்தியாலங்களுக்கும் மேலான மின்சாரத் தடை காரணமாக மருத்துவமனைகளில் அவசர சத்திரசிகிச்சைகள் பலவும் கைபேசி வெளிச்சத்தில்தான் செய்யப்படுகின்றன எனும்போது இலங்கையில் தற்போது மக்கள் எதிர்கொண்டிருக்கும் நிலைமையின் தீவிரம் உங்களுக்கு விளங்கும். பெற்றோல், டீசல், சமையல் எரிவாயு இல்லாமல் நாட்டில் எதுவும் இயங்குவதில்லை. போதாதற்கு அத்தியாவசிய உணவுகளின் தட்டுப்பாடு மக்களின் கழுத்தை பட்டினியால் நெறித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் மக்கள் இவ்வாறேனும் அமைதியான போராட்டங்களை முன்னெடுக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். தற்போது தெருக்களில் ஒன்றுகூடும் பொதுமக்களின் மனங்களில் ஒரேயொரு நோக்கம்தான் இருக்கிறது. பட்டினியற்ற, சுமுகமாக உயிர் வாழத் தேவையான சூழலுடன் கூடிய, வரிசைகளில் பொதுமக்கள் விழுந்து மரணிக்காத அமைதியான நாடொன்றுதான் அவர்களது இலக்கு.

    இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடிக்கு முதலில் பொறுப்புக் கூற வேண்டியவர் நாட்டின் ஜனாதிபதிதான். உண்மையில் கோத்தாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக ஆக்க 69 இலட்சம் வாக்குகளையளித்த மக்களிடையே ஜனாதிபதி மீது மூன்று விதமான நம்பிக்கைகள் இருந்தன. அவர்தான் முப்பதாண்டு கால யுத்தத்தை வென்றார் என்பது ஒன்று. இரண்டாவது, சிங்கப்பூரை ஒப்பிட்டு நகர அபிவிருத்தி தொடர்பாக அவர் முன்வைத்த வாக்குறுதிகள். மூன்றாவது அவர் முன்னர் அரசியல்வாதியாக இருக்கவில்லை என்பதால் தைரியமாகவும், நேர்மையாகவும் ஆட்சி நடத்துவார் என்பது.

    ஒரு நாட்டை ஆளுவதற்கு இந்தத் தகுதிகள் போதுமானதா என்று மக்கள் அப்போது யோசிக்கவில்லை. ராஜபக்‌ஷ குடும்பத்தின் அரசியல் கொள்கை இனவாதத்தையும், மத வெறியையும் பரப்பி சர்வாதிகார ஆட்சியை மேற்கொள்வதல்லாமல் நாட்டை முன்னேற்றுவது அல்ல என்பதை அப்போது மக்கள் அறிந்திருக்கவில்லை. அந்தக் குடும்பத்தின் பொருளாதாரக் கொள்கை என்பது இயன்றளவு ஊழல்களைச் செய்து தமது குடும்பத்துக்குத் தேவையான சொத்துகளைச் சேர்த்துக் கொள்வதுதான் என்பதையும் மக்கள் அறிந்திருக்கவில்லை. இதுவரை ஒரு சதம் கூட பாடுபட்டு உழைத்துச் சம்பாதித்திராத அந்தக் குடும்பத்தின் வாரிசு ஒருவர் கடந்த மாதம் மக்கள் பணத்தில் முப்பத்தைந்து இலட்சம் ரூபாய்களைச் செலவழித்து ஓவியமொன்றை வாங்கியிருக்கிறார் எனும்போது இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான மூல காரணம் உங்களுக்கு விளங்கும்.

    ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு வருட காலத்துக்குள் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டிருந்த கொலைகாரர்களும், ஊழல்வாதிகளுமான அரசியல்வாதிகள் அனேகமானவர்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததோடு, அவர்களுக்கு உயர் பதவிகளையும் வழங்கியுள்ளார். இவ்வாறாக ஜனாதிபதி மீது வைத்திருந்த நம்பிக்கைகள் அனைத்தும் இப்போது முழுமையாகப் பொய்த்துப் போயுள்ள நிலைமையிலேயே மக்கள் தெருவில் இறங்கியிருக்கிறார்கள்.

    இம்மாதம் மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதிலுமுள்ள இலட்சக்கணக்கான பொதுமக்கள் தெருவிலிறங்கி போராட்டம் நடத்தப் போகும் தகவல் தெரிய வந்தவுடனேயே இரண்டாம் திகதி மாலை ஆறு மணியிலிருந்து திங்கட்கிழமை காலை ஆறு மணி வரை ஜனாதிபதி நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்திருந்தார். நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அனைத்து சமூக வலைத்தளங்களையும் முடக்கினார். தொடர்ந்து தனக்கெதிராகக் கிளம்பியுள்ள இவ்வாறான எதிர்ப்புகளைக் கண்டு பதற்றமுற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ இம் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசர கால சட்டத்தை நாட்டில் பிரகடனப்படுத்தி அதிவிஷேட அரசாங்க அறிவித்தலொன்றை வெளியிட்டதோடு அந்தச் சட்டத்தைப் பிரயோகித்து அறுநூறுக்கும் அதிகமான பொதுமக்களைக் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இந்த அவசர கால நிலைமையின் போது மக்கள் ஒன்று கூடுவதற்கான, கருத்துகளைத் தெரிவிப்பதற்கான, ஒரு குழுவாக சேர்வதற்கான, நடமாடுவதற்கான, தொழில் புரிவதற்கான உரிமைகளும், சமயம், கலாசாரம், மொழி ஆகியவற்றுக்கான உரிமைகளும் மட்டுப்படுத்தப்படுகின்றன. அத்தோடு பிடியாணையின்றியே எவரையும் கைது செய்யும் அதிகாரமும், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரமும் காவல்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சந்தேக நபர்களை எவ்வளவு காலமும் தடுத்து வைக்கலாம், சந்தேக நபர்களின் வாக்குமூலங்களை சாட்சிகளாகப் பயன்படுத்தலாம், தேடுதல் ஆணையில்லாமலே எந்த இடத்திலும், எந்தக் கட்டடத்திலும் தேடுதல்களை காவல்துறை மேற்கொள்ளலாம், எவரினதும் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை அரச கட்டுப்பாட்டில் எடுக்கலாம் ஆகியவற்றோடு சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளையும், தேவையான விசாரணைகளை மேற்கொள்ளவும் இராணுவப் பாதுகாப்புப் படைக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. அத்தோடு சட்ட மா அதிபரின் அனுமதியின்று சந்தேக நபர்களைப் பிணையில் செல்ல அனுமதிக்கவோ, விடுதலை செய்யவோ நீதவானுக்கு அதிகாரமில்லை போன்ற சர்வாதிகார விதிமுறைகள் அந்த அதிவிஷேட அரசாங்க அறிவித்தலில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

    இலங்கை குறித்து சர்வதேசத்திலிருந்து எழுந்திருக்கும் அழுத்தங்கள் மற்றும் தனக்கு எதிரான மக்களின் எதிர்ப்பைத் தடுத்து நிறுத்தவே ஜனாதிபதியால் இவ்வாறெல்லாம் செய்யப்படுகின்றன என்பது எவருக்கும் விளங்கும். இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாகவே இயக்கங்களாலும், அரசியல்கட்சிகளாலும் வழிநடத்தப்பட்ட இலட்சக்கணக்கான தேசப்பற்று மிக்க இளைஞர்கள் இலங்கை அரசின் தீவிரவாத முத்திரையின் கீழ் உயிர்ப் பலி கொடுக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

    உண்மையில் தேசப்பற்று மிக்க இன்றைய இளைஞர் தலைமுறைக்கு இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளையும், நெருக்கடிகளையும் தாங்கிக் கொள்ள முடியாதிருக்கிறது. வருங்காலத்தில் தேசத்தைப் பொறுப்பேற்கக் காத்திருப்பவர்கள் அவர்கள். பல தசாப்தங்களாக இலங்கை இழந்து கொண்டிருக்கும் இளைஞர் சக்தி, அவர்களது பலம், உத்வேகம் ஆகியவற்றின் காரணமாகத்தான் ஊழல் மிகுந்த முதிய அரசியல்வாதிகள் இப்போதும் இலங்கையை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்து விடவில்லை. எனவேதான் தெருவிலிறங்கி தமது தாய்நாட்டை தற்போதைய ஆட்சியிலிருந்து மீட்க அமைதியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் மீண்டும் மீண்டும் இளைஞர்களைப் பலி கொடுக்க நேர்ந்திருக்கும் கொடூரமான நிலைமையானது, இனியும் ஜனாதிபதியின் இந்த சர்வாதிகாரப் போக்கால் நேருவதற்கு இடமளிக்கக் கூடாது.

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 05.04.2022

புகைப்படங்கள் - shutterstock 


இந்தக் கட்டுரையை ஒலி வடிவில் கேட்க






No comments: