Wednesday, April 13, 2022

இலங்கையிலிருந்து தப்பிச் செல்லும் ராஜபக்‌ஷவின் உறவுகள் - எம். ரிஷான் ஷெரீப்

     இலங்கையில் ராஜபக்‌ஷ குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றும் போதெல்லாம் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பிரதான பதவிகளை வழங்கி வந்ததுதான் தொடர்ந்தும் நடந்து கொண்டிருந்தது. தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தார். கடந்த வாரம் கலைக்கப்பட்ட அமைச்சரவையில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பசில், சமல், நாமல் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தார்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடியானது ராஜபக்‌ஷ குடும்பம் அதிகாரத்திலிருந்த காலப்பகுதி முழுவதும் அவர்கள் செய்த ஊழல்களினதும், மோசடிகளினதும் விளைவாகும் என்பது மக்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது.

            ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு மக்களிடையே சரிவது இது முதற்தடவையல்ல. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் தோல்வியுறுவதற்கு அவரது காலத்தில் இடம்பெற்ற ஊழல்களும் காரணமாக இருந்தன. அந்தக் குடும்பத்தின் ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல்களையும், பண மோசடிகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் அந்தக் குடும்பத்தின் சொத்துக்கள் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் மிதமிஞ்சியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நாமல் ராஜபக்‌ஷ கத்தார் தேசத்திலுள்ள ALBG எனும் நிறுவனத்தின் நிதி இயக்குனராகப் பதவி வகிக்கிறார். இலங்கையானது டாலர்கள் இல்லாமல் திவாலாகியுள்ள நிலைமையில் இலங்கையிலிருந்த டாலர்கள் எங்கே போயிருக்கும் என்பதற்கு இது ஒரு சாட்சியாகும்.


    2015 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்த சீர்திருத்தங்களை நிறைவேற்றத் தவறியதோடு, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் மீள்வருகைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தன. அப்போது இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியிலும் ராஜபக்‌ஷ குடும்பமே உள்ளதாக இப்போதும் குற்றம் சாட்டப்படும் நிலையில் அதைக் குறித்து தெளிவானதும், விரிவானதும், வெளிப்படையானதுமான விசாரணையை மேற்கொள்ள அரசாங்கம் தயங்கி வருவது அந்தக் குற்றச்சாட்டை உண்மைப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

        2019 ஆம் ஆண்டில் கடுமையான சிங்கள தேசியவாத பாதையில் பயணித்த கோத்தாபய ராஜபக்‌ஷ பேரினவாதத்தைத் தூண்டும் விதத்தில் நடந்து நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வழிவகுத்தார். அந்தப் பேரினவாத செயற்பாடு பலனளித்ததால், தேர்தலில் வென்று ஜனாதிபதியானதுமே இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள முக்கிய விடயங்களை நீக்கி, ஜனாதிபதிக்கு மேலதிக நிறைவேற்று அதிகாரங்களை வழங்கும் வகையில் இருபதாவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து அனைத்து அதிகாரங்களையும் தன் வசமாக்கியுள்ளார்.

    இவ்வாறாக ஜனாதிபதி தனது அதிகாரங்களைப் பலப்படுத்தி, பாராளுமன்றத்தைப் பலவீனப்படுத்தியுள்ளதோடு சர்வ அதிகாரங்களோடும் நாட்டை மிகவும் தன்னிச்சையான திசையில் இப்போது வரை வழிநடத்தி வருகிறார். இவையனைத்தும் மக்களுக்குத் தெரிய வந்துள்ள நிலையில், அந்தக் குடும்பத்தின் மீது மக்கள் கடும்வெறுப்பைக் காட்டிக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரதமரும், ஜனாதிபதியும் தவிர்ந்த ஏனைய ராஜபக்‌ஷ குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் இரகசியமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.


          உலகத் தலைவர்களின் இரகசிய சொத்து விபரங்களை அம்பலப்படுத்தும் புலனாய்வான பண்டோரா பேப்பர்ஸ் எனும் ஆவணத்தில் குற்றவாளியாக இடம்பெற்றுள்ளவரும், இலங்கைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் உறவினருமான நிருபமா ராஜபக்‌ஷ கடந்த வாரம் இலங்கையிலிருந்து அவ்வாறு இரகசியமாக வெளியேறியுள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷ இலங்கை ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் நீர்வழங்கல் பிரதியமைச்சராகக் கடமையாற்றிய நிருபமா ராஜபக்‌ஷவும், கணவரான திருக்குமார் நடேசனும் அமெரிக்கா, நியூஸிலாந்து, பிரித்தானியா போன்ற நாடுகளில் எட்டு நிறுவனங்களை ஆரம்பித்துள்ளதையும், அவர்களது வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் வைப்பிலடப்பட்டுள்ள 160 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறித்தும் பண்டோரா பேப்பர்ஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அம்பலப்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து இலங்கையில் கண்துடைப்பான விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அரசியல் தலையீடுகளின் காரணமாக இதுவரை எந்தத் தீர்ப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையிலேயே அவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

    அவரைப் போலவே ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரும், அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவருமான நிஸ்ஸங்க சேனாதிபதியும் இலங்கையை விட்டு இரவோடிரவாக தப்பித்துச் சென்றிருக்கிறார். மிதக்கும் ஆயுதக்களஞ்சியசாலைக்கு அனுமதி வழங்கியமை மற்றும் 355 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றமை போன்ற வழக்குகளில் சிக்கியிருந்த நிஸ்ஸங்கவை, கோத்தாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானதும் வழக்குகளிலிருந்து விடுவித்தார். தொடர்ந்து அவர் ஜனாதிபதியோடு நெருங்கிய தொடர்பைப் பேணி வந்ததோடு, தற்போது ஜனாதிபதிக்கு எதிரான கோஷங்கள் வலுக்கத் தொடங்கியுள்ள நிலைமையில் தனது குடும்பத்தோடு நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இவர்கள் விமான நிலையத்தினூடாகச் செல்லும் போது, மேலிட உத்தரவின் கீழ் விமான நிலையத்திலுள்ள தானியங்கி கேமராக்கள் எதுவும் செயற்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

        மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பால் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிர்வரும் பதினெட்டாம் திகதி வரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறே தற்போது நாட்டை விட்டுச் செல்ல முடியாத நிலையிலுள்ள அமைச்சர்கள் பலரும் தமது குடும்பத்தினரோடு நாட்டிலுள்ள முன்னணி ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கிறார்கள். என்றாலும் இலங்கையில் தற்போது நிதியமைச்சரோ, மத்திய வங்கி ஆளுநரோ, செயலாளரோ இல்லாத நிலையிலும் கடந்த வாரமும் 119 பில்லியன் ரூபாய்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன.

        இவ்வாறான செயற்பாடுகள் மக்களை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளன. எனவே மக்கள் எழுச்சிப் போராட்டத்துக்கு தினந்தோறும் அதிகளவான பொதுமக்கள் சேர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். அந்தப் போராட்ட வளையங்களுக்குள் இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிள்களில் முகமூடியணிந்த இனந்தெரியாத நபர்கள் ஆயுதங்களை ஏந்தியவாறு வலம்வந்து பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பதும் நடந்து வருகிறது. அவ்வாறான ஆயுததாரிகளைத் தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு ஆபத்து நேராதவாறு பாதுகாத்த போலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ள பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஒன்றாக குரலெழுப்பியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கண்டு, பொதுமக்களின் இந்தப் போராட்டத்தில் வன்முறைகளைப் பிரயோகிக்காதிருக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் மக்களை ஒடுக்க அரசாங்கம் வன்முறையைப் பிரயோகிக்கிறதா என்பதைத் தாம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அந்த அலுவலகம் எச்சரித்திருக்கிறது.

    கடந்த மாதம் வரைக்கும், ராஜபக்‌ஷ குடும்பமானது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தாம் வாழ்ந்து வரும் சுகபோக வாழ்க்கையை புகைப்படங்களாகவும், காணொலிகளாகவும் சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். நாடு முழுவதும் பஞ்சமும், நெருக்கடியும், பட்டினியும் மேலோங்கியிருக்கும் நிலையில் அந்தக் குடும்பத்தின் இவ்வாறான செயற்பாடுகள் பொதுமக்களை மேலும் அவர்களை வெறுக்கச் செய்ததோடு, போராட்டங்களை மேற்கொள்ளவும் தூண்டியிருக்கின்றன. அந்தப் போராட்டங்கள் இப்போது வலுத்து வருகின்றன. ஜனாதிபதி அவர்களுக்கு மத்தியில் ஆயுததாரிகளை அனுப்பி விட்டு தைரியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். காரணம், அவர் ஆட்சிக்கு வந்தவுடனே அவருக்கு சார்பாக திருத்தியமைத்த சட்டத்தின் பிரகாரம் சர்வ அதிகாரங்களும் இப்போதும் அவர் வசம் மாத்திரமே இருக்கின்றன.

________________________________________________________________________________


mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 12.04.2022


No comments: