Saturday, April 23, 2022

மரணத் தருவாயில் இலங்கையின் அரச மருத்துவமனைகள் - எம். ரிஷான் ஷெரீப்

 

   
மருந்துகளாலோ, சத்திர சிகிச்சைகளாலோ நிவாரணம் பெற்று உயிர் பிழைக்க வேண்டும் என்றுதானே மக்கள் மருத்துவமனைகளை நாடுகிறார்கள்? அப்படிப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் இலங்கையில் தினந்தோறும் புதிதுபுதிதாக மருத்துவமனைகளை நாடிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் இல்லையென்பதால் அந்த மக்களை மரணிக்க விடுவதன்றி வேறு வழியற்ற நிலைமையில் தற்போது இலங்கை உள்ளது.

    ஒரு நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது என்றால் சாதாரண தலைவலி மாத்திரை, முதலுதவி மருந்துகள் போன்றவை தட்டுப்பாடாக இருக்கும் என்றுதான் பொதுவாக ஏனைய நாடுகள் கருதுகின்றன. ஆனால் இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் மருந்துத் தட்டுப்பாடானது தலைவலி மாத்திரையிலிருந்து அவசர சிகிச்சை மருந்துகள் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் வரை வியாபித்திருக்கிறது. இந்த நிலைமையும், இதன் விளைவுகளும் சர்வதேச ஊடகங்களில் காட்டப்படுவதில்லை. இலங்கையிலுள்ள எந்தவொரு அரச மருத்துவமனைக்கு எந்த வேளையில் சென்று பார்த்தாலும் பிளாஸ்டர்கள், கையுறைகள், சிறுநீர்க் குழாய்கள், மயக்க மருந்துகள் முதல் நீரிழிவு, இரத்த அழுத்தம், மாரடைப்பு, விஷக்கடிகள், நீர்வெறுப்பு போன்ற நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் வரை இல்லை, ஆய்வு கூட இயந்திரங்கள் வேலை செய்யவும், அறுவை சிகிச்சைகள் செய்யவும் தேவையான பொருட்களோடு மின்சாரமுமில்லை, அவசரத்துக்கு ஆம்பூலன்ஸ், ஜெனரேட்டர்களை இயக்க டீசல் இல்லை, குடிக்கவோ சுத்திகரிக்கவோ தேவையான தண்ணீரில்லை போன்ற புலம்பல்களைத் தற்போது நீங்கள் கேட்கலாம்.    எவருக்கேனும் விபத்தோ, மாரடைப்போ ஏற்பட்டால் அரசாங்க மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதில் அர்த்தமில்லை என்ற நிலைமையே தற்போது காணப்படுகிறது. பிரசவத்தில் சிக்கலுள்ள பெண்களுக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்யக் கூட வழியில்லை. குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் நுரையீரல் வளர ஊக்குவிக்கும் மருந்து, ஆன்ட்டிபயாடிக்ஸ், அவசர சிகிச்சை மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள் உட்பட நானூறுக்கும் அதிகமான அத்தியாவசியமான மருந்துகளுக்கு தற்போது பாரிய தட்டுப்பாடு இலங்கையில் நிலவி வருகிறது. புற்றுநோய், தலசீமியா, சிறுநீரக வியாதிகள் போன்ற தொற்றாநோய்களுக்கான மருந்துகளின் தட்டுப்பாடு பல வாரங்களாக நீடித்திருக்கும் நிலையில் எண்ணிலடங்காத பல நோயாளிகள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியான மின்சாரத் தட்டுப்பாட்டால் குளிர்சாதன வசதியின்றி கையிருப்பில் இருக்கும் ஊசி மருந்துகளும், ஏனைய மருந்துகளும் கூட வீணாகக் கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன. ஆய்வுகூட பரிசோதனைகளுக்குத் தேவையான இரசாயனப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. சுகாதார அமைச்சு கூடிய விரைவில் இந்தப் பொருட்களையும், மருந்துகளையும், சத்திர சிகிச்சை உபகரணங்களையும் அரச மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெருவிலிறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    ‘அரச மருத்துவமனைகளில்தானே மருந்துகளில்லை, தனியார் மருத்துவமனைகளில் மருந்துகளை வாங்கலாமே’ என்று யோசிப்பீர்கள். அரச மருத்துவமனைகளில் மருந்துகள் தீர்ந்ததும் அயலிலிருக்கும் மருந்தகங்களிலிருந்தும், தனியார் மருத்துவமனைகளிலிருந்தும்தான் அந்த மருந்துகள் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தப்படுகின்றன. மருந்துகள் எனப்படுபவை எவராலும் அதிக காலத்துக்கு களஞ்சியப்படுத்தி வைக்க முடியாதவை என்பதோடு எளிதில் தீர்ந்து விடக் கூடியவை என்பதால், தனியாரின் கையிருப்பில் இருப்பவையும் வெகுவிரைவாகத் தீர்ந்து வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் மருந்துத் தட்டுப்பாட்டால் நிகழும் மரணங்களின் எண்ணிக்கை கொவிட், சுனாமி மற்றும் போர்க்காலங்களில் ஏற்பட்ட மரணங்களை விடவும் அதிகமாகும் என்று இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்திருக்கிறது எனும்போது நிலைமையின் தீவிரம் உங்களுக்கு விளங்கும்.    மருந்துத் தட்டுப்பாடானது கண்கூடாக நேரடியாகக் காணக்கூடிய இவ்வாறான அபாய நிலைமைகளை ஏற்படுத்துவது போலவே மறைமுகவாகவும் மக்களினதும், சமூகத்தினதும் நீண்ட கால ஆரோக்கியத்தில் பாரியளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. உதாரணத்துக்கு ஒரு சில விடயங்களைக் குறிப்பிடுகிறேன். சிறு குழந்தைகளுக்கு செலுத்தப்படும் சொட்டு மருந்துகளினதும், தடுப்பூசிகளினதும் தட்டுப்பாட்டால், இலங்கையில் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போலியோ, காச நோய் போன்றவை மீண்டும் தலைதூக்கத் தொடங்கும். மின்சாரத் தடை காரணமாக கடைகளில் இயங்காத நிலையிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் கெட்டுப்போன உணவுகளை மக்கள் உட்கொள்வதால் உணவு நஞ்சாகி மீண்டும் வாந்திபேதி பரவும். அவ்வாறான சூழ்நிலையில் மருந்துகளும், சேலைனும் இல்லாத நிலையில் அந்த நோயாளிகளைப் பிழைக்க வைப்பது கடினம். அவ்வாறே பாலியல் நோய்களும் இனி இலங்கையில் வேகமாக அதிகரிக்கும். பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு வீழ்ந்துள்ள நிலைமையில் பணத்துக்காக மாத்திரமல்லாமல் மருந்துக்காகவும், ஒரு ரொட்டித் துண்டுக்காகவும் கூட உடலை விற்க வேண்டிய நிலைமைக்கு மக்கள் இன்று தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆகவே அதுவும் இலங்கையில் அதிகரிக்கும்.

    அடுத்ததாக, இந்த நெருக்கடிகளால் நாடு முழுவதும் மக்களிடையே பரவலாக ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் இங்கு குறிப்பிட வேண்டும். தமது பெற்றோரை, குழந்தைகளை மருந்தில்லாமல் சாகக் கொடுத்து விட்டோம் என்ற உணர்வு ஒருவருக்குத் தோன்றுவது எவ்வளவு கொடூரமானது. அவ்வாறாக உணவுகளும், மருந்துகளுமில்லாமல் தமது கண்முன்னே தமது உறவுகளைச் சாகக் கொடுத்து விட்டோமே என்ற மன உளைச்சலில் பலரும் தற்கொலையை நாடி வருகிறார்கள். இந்த நிலைமை மேலும் அதிகரிக்கும்.


    ஒரு நாட்டின் சுகாதார சேவை சீர்குலைந்தால் பொதுவாக இவ்வாறெல்லாம் ஏற்படுவது இயல்புதான் என்றாலும், ஒரு நாட்டில் மருந்துத் தட்டுப்பாட்டால் நோயாளிகள் மரணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது, அந்த நாட்டின் நிர்வாகத் திறனின்மையையே குறிக்கிறது. ஒரு நாட்டிற்கு இந்த நிலைமை தற்செயலாகவோ, மிக அண்மையிலோ ஏற்படக் கூடிய ஒன்றல்ல. இலங்கையில் இவ்வாறான நிலைமை ஏற்படும் என்பது ஒரு வருடத்துக்கு முன்பே அரசாங்கத்துக்கும், ஆளுபவர்களுக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது என்றபோதிலும், அரசாங்கம் மருந்துகளுக்குத் தேவையான பணத்தை அப்போது ஒதுக்கி வைக்கத் தவறி விட்டது. அதன் பலிகடாக்களாக தற்போது நாட்டு மக்கள் ஆகியிருக்கிறார்கள். உயிர் வாழ்வதற்கான உரிமையையும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறார்கள். மேலைத்தேய நாடுகளில் இவ்வாறு நேர்ந்திருந்தால் அந்த நாடுகளின் நீதிமன்றம் அதற்குக் காரணமானவர்களை கூண்டிலேற்றியிருக்கும்.

    இலங்கையிலோ, இப்போதும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியும், அமைச்சர்களும் தமது பதவிகளையும், சொத்துகளையும் பாதுகாக்கக் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர இந்த அபாய நிலைமையைக் குறித்து யாரும் பேசுவதாக இல்லை. இத்தனைக்கும் மருத்துவ நிபுணர்களாக இருந்து அமைச்சர்களான கணிசமானோர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எவருமே மக்கள் நலனைக் குறித்து கவலைப்படுவதாகவோ இதைக் குறித்துப் பேசுவதாகவோ இல்லை. இப்படிப்பட்ட ஆளுபவர்களையோ, அமைச்சர்களையோ, இந்த நிலைமைக்குக் காரணமானவர்களையோ எதிர்த்துக் கேட்க யாருமற்ற காரணத்தால் இப்போதும் மக்களின் உயிர்களோடு விளையாடி அவர்களைப் பரிதவிக்க விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருக்கிறது அரசாங்கம்.

______________________________________________________

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 22.04.2022

No comments: