Wednesday, April 20, 2022

இலங்கையின் ஏப்ரல் புரட்சி - எம்.ரிஷான் ஷெரீப்

  

 
இலங்கையில், கொழும்பு கடற்கரையில் ஏப்ரல் ஒன்பதாம் திகதி பொதுமக்கள் ஒன்று கூடி ஆரம்பித்துள்ள போராட்டம் இப்போது வரை நீண்டு கொண்டேயிருக்கிறது. இப்படியொரு போராட்டம் ஆரம்பிக்கப்படப் போவதை அறிந்து கொண்ட அரசாங்கம், வழமையாக சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வழங்கும் இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பதிலாக இந்த வருடம் ஒன்பதாம் திகதியே அனைவருக்கும் ஒரு வாரம் விடுமுறை வழங்குவதாக அறிவித்து அனைவரையும் ஊர்களுக்குப் போக உத்தரவிட்டிருந்தது. கொழும்புதான் தலைநகரம் என்பதால், நாடு முழுவதிலுமுள்ள மக்கள் கொழும்புக்கு வந்து தங்கி பணி புரிந்து வருகிறார்கள். அரசின் அந்த உத்தரவுக்குப் பிறகு மக்கள் கொழும்பிலிருந்து தமது சொந்த ஊர்களுக்குப் போவதற்குப் பதிலாக, சொந்த ஊர்களிலிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றாகத் திரண்டு கொழும்புக்கு வந்து கொழும்பில் இருந்தவர்களோடு சேர்ந்து கடற்கரையில் தங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கவேயில்லை.

    ஆகவே போராளிகள் மத்தியில் அரசாங்கம் வாடகைக்கு எடுத்த குண்டர்களை அனுப்பி பொதுமக்களை அச்சுறுத்துவதோடு, வாகனங்களை எரித்தல், போலிஸுக்கும், இராணுவத்துக்கும், பொதுமக்களுக்குமிடையே கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தல், இணையத்தொடர்பையும், சமூக வலைத்தளங்களையும் முடக்குதல், இனக் கலவரங்களைத் தூண்ட முற்படுதல், அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்புதல் போன்ற பல முட்டுக்கட்டைகளை அரசாங்கம் பொதுமக்களின் போராட்டத்தை நிறுத்துவதற்காகப் போட்டுக் கொண்டேயிருக்கிறது. இவற்றையெல்லாம் கண்டு மக்கள் பின்வாங்குவார்கள் என்பதுவே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    என்றாலும் மக்கள் பின்வாங்குவதாக இல்லை. ஆரம்பத்திலிருந்தே அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளைக் கேட்டுக் கேட்டு ஏமாந்து இன்று பஞ்சத்துக்கும், பட்டினிக்கும் மத்தியில் தெருவில் நிற்கும் மக்களின் இந்தப் போராட்டம் தாமதமாகத்தான் தொடங்கப்பட்டிருக்கிறது என்றாலும், இது முடிவுக்கு வருவதாக இல்லை. இதுவரை காலமும் அரசாங்கம் பிரயோகித்து வந்த அனைத்து சர்வாதிகாரங்களையும், திணித்தல்களையும் மக்கள் பொறுத்துக் கொண்டே வந்தார்கள். மக்கள் பொறுமையாக இருக்க இருக்க அரசாங்கமும் தொடர்ந்து மக்களைத் தாக்கிக் கொண்டே வந்தது. அது மக்களைத் தரையில் வீழ்த்தி கழுத்தை நெரிக்கும்போதுதான் ‘நமது அரசாங்கமே நம்மைக் கொல்லப் பார்க்கிறது’ என்பது மக்களுக்கு உரைத்தது. அந்தப் புள்ளியில்தான் மக்கள் ஒன்றாகத் திரண்டு எழுந்திருக்கிறார்கள்.



    கொழும்பு கடற்கரையில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் போராட்டமானது எந்தவொரு அரசியல் கட்சியாலோ, தனி நபராலோ ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. நூறு சதவீதம் முழுமையாக மக்கள் தமது சுயவிருப்பின் பேரில் நாடு முழுவதிலுமிருந்து சுயேச்சையாகவே கிளம்பி வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். ஏழை, பணக்காரன், படித்தவன், பாமரன் போன்ற பேதங்களற்று, இன, மத, ஜாதிபேதமற்று மக்கள் அனைவரும் அடைமழைக்கு மத்தியிலும் இரவும், பகலும் ஒன்றாகச் சேர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடமே இப்போது சிறுவர்களுக்கான பள்ளிக்கூடம், நூலகம், மருத்துவ நிலையம் போன்றவற்றை உள்ளடக்கிய ‘கோட்டா கோ’ எனும் மாதிரி கிராமமாக உருமாறியிருக்கிறது. அந்தக் கிராமத்தில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல மொழிகளைப் பேசுபவர்கள் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் ஒன்றாக, ஒற்றுமையாகத் திரண்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்திருக்கும் அந்தப் போராட்டக்களம் மக்களால் மிகவும் சுத்தமாகவே பேணப்பட்டு வருவதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

    ஒற்றுமை, சுய ஒழுங்கு, விடாமுயற்சி, கொடை போன்றவற்றை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொதுமக்கள் இறுக்கமாகப் பற்றியிருக்கிறார்கள். மக்கள் இந்தளவு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அந்தப் போராட்டக் களத்துக்குத் தேவையான பொருட்களை, உணவுகளை, கூடாரங்களை, முதலுதவிப் பொருட்களை, சேவைகளை என தம்மால் இயன்ற அனைத்தையும் இலவசமாக வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவையனைத்தும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைத்தவை. மக்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்களுக்காக இலவசமாக வாதாட சட்டத்தரணிகளும், சிகிச்சையளிக்க மருத்துவர்களும் மக்களுடன் சேர்ந்து காத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் இவ்வாறு செய்யத் தூண்டியது எது? கடந்த ஓரிரு வாரங்களாகத் தொடரும் அந்தப் போராட்டத்தின் மூலம் மக்கள் இதுவரை சாதித்தது என்ன?

    மக்கள் தமது அடிமை நிலையிலிருந்து மீண்டு, இலங்கை அரசியல் அமைப்பை மாற்றத்தான் ஒன்றாகத் திரண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவைப் பெற்றிருந்த அரசு தற்போது தனது பெரும்பான்மை ஆதரவையும், செல்வாக்கையும் இழந்திருக்கிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான முக்கிய புள்ளியான மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலைப் பதவி விலகச் செய்து இலங்கையின் சிரேஷ்ட பொருளியல் நிபுணர்களில் ஒருவரான கலாநிதி நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டதில் முக்கிய பங்கு அந்தப் போராட்டத்துக்கு இருக்கிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவையும் தவிர்த்து உயர்பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்த அந்தக் குடும்பத்திலிருந்த ஏனைய அனைவரும் பதவிகளை இழந்திருக்கிறார்கள். அமைச்சர்களான ஊழல் பேர்வழிகளும், மோசடி அரசியல்வாதிகளும் பகிரங்கமாகவும், சுதந்திரமாகவும் மக்கள் மத்தியில் நடமாட முடியாத சூழ்நிலை இன்று உருவாகியிருக்கிறது. ஜனாதிபதி முக்கியமானவர்களை நேரில் சந்தித்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்தப் போராட்டத்தினால் கிடைத்த இந்த வெற்றிகள் அனைத்துமே பிரதான வெற்றியை நோக்கி எடுத்து வைக்கும் சில எட்டுகள் மாத்திரம்தான். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும், ஜனாதிபதி கோத்தாபயவினதும் பதவிகள் பறிக்கப்பட்டு, ராஜபக்‌ஷ குடும்ப ஆட்சியிலிருந்து இலங்கை முழுமையாக மீண்டு, பொதுமக்களுக்கு உரித்தான ஒழுங்கானதும் நேர்மையானதுமான ஜனநாயக ஆட்சி உருவாகும் நாளைத்தான் மக்கள் முழுமையான வெற்றியை அடைந்த நாளாகக் கருதுவார்கள்.


    அத்தோடு ராஜபக்‌ஷ ஆட்சியில் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும், எண்ணற்ற மனிதர்களுக்கும் என்னவானது என்பது குறித்த விசாரணை நேர்மையாக நடைபெற்று குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். ஆகவே, அந்தப் போராட்டம் வெற்றியடைந்து தம்மை அடிமைகளாக வைத்திருக்கும் ராஜபக்‌ஷ ஆட்சி பதவியிறங்கியதுமே மக்களின் அடுத்த போராட்டம் தொடரப் போகிறது. அது நாட்டில் கொள்ளையடித்த அனைத்து சொத்துகளையும் ராஜபக்‌ஷ குடும்பத்திடமிருந்தும், ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்தும் மீட்டெடுக்கும் போராட்டம். அதிலும் வென்றால், அத்தனை சொத்துகளும் மீண்டும் திரும்பக் கிடைத்தால் மாத்திரம்தான் இலங்கைக்கும், இலங்கை மக்களுக்கும் முழுமையான மீட்சி கிடைக்கும்.

    இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் எப்போது முழுமையான வெற்றி பெறும் என்பது இந்த மக்கள் போராளிகளுக்குத் தெரியாது. அது இன்றோ நாளையாகவோ இருக்கக் கூடும். பல ஆண்டுகள் கூட கழியலாம். அந்தப் போராட்டத்தின் முதல் எட்டு தோல்வியடையக் கூடும். பத்தாயிரமாவது எட்டு கூட தோல்வியடையக் கூடும். ஆனால் எப்போதாவது வெற்றியளிக்கும் ஒரு தருணம் வந்தே தீரும். அன்று இந்தப் போராளிகள் எவரும் உயிருடன் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அந்தப் போராட்டத்தின் வெற்றியை அவர்களது சந்ததிகள் நிம்மதியாக அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஆகவேதான் தாம் தொடங்கிய போதிருந்த போராட்டத்தின் வீரியத்தை நீர்த்துப் போக விடாமல் இப்போது வரை, இந்தத் தருணம் வரை அந்த மக்கள் போராளிகள் பேணிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆசியாவினதும், இலங்கையினதும் வரலாற்றில் இந்த ஏப்ரல் 2022 இற்கு ஒரு அழுத்தமானதும், காத்திரமானதும், பெருமையானதுமான இடமிருக்கும். இந்தக் கால கட்டத்தில் நாமும் அந்தப் போராளிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுவே பெருமிதம் தருகிறது, அல்லவா?

________________________________________________________________________________

mrishansh@gmail.com

 

நன்றி - இந்து தமிழ்திசை நாளிதழ் 18.04.2022







No comments: